கைமணம்! ஸ்பெஷல்! புழுங்கலரிசி புட்டு தேவையானவை: புழுங்கல் அரிசி -& ஒரு கப், வெல்லம் & முக்கால் கப், நெய், தேங்காய் துருவல், முந்தி...

கைமணம்!
ஸ்பெஷல்!
புழுங்கலரிசி புட்டு
தேவையானவை: புழுங்கல் அரிசி -& ஒரு கப், வெல்லம் & முக்கால் கப், நெய், தேங்காய் துருவல், முந்திரி & தலா ஒரு டேபிள்ஸ்பூன், துவரம் பருப்பு & ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு & தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை சிறிது சிறிதாக வெறும் கடாயில் சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் ரவையாக பொடித்துக் கொள்ளவும். வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதித்ததும், வடிகட்டி கெட்டி பாகாகக் காய்ச்சவும். துவரம்பருப்பை முக்கால் பதத்தில் வேக வைக்கவும். பொடித்த ரவையில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து வெது வெதுப்பான நீர் ஊற்றி பிசறி ஒரு வெள்ளைத் துணியில் மூட்டை கட்டி ஆவியில் வேக விடவும். வெந்ததும் கட்டிகள் இல்லாமல் நன்றாக தேய்த்துக் கொள்ளவும். இத்துடன் வெல்லப்பாகு, துவரம்பருப்பு, சிறிது ஏலக்காய்த்தூள் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய் துருவலை லேசாக வறுத்துக் கொட்டவும். நெய்யில் முந்திரியை தாளித்துக் கொட்டி மீதியுள்ள ஏலக்காய்த்தூளையும் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் உதிர் உதிராகிவிடும்.
________________________________________
பிளாக் பீன்ஸ் சுண்டல்

தேவையானவை: பிளாக் பீன்ஸ் & ஒரு கப், காய்ந்த மிளகாய் & 3, தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் & தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: பிளாக் பீன்ஸ் பருப்பை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். தேங்காய் துருவலுடன் மிளகாய், உப்பு, நான்கு கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், மீதி கறிவேப்பிலையை போட்டு தாளித்து, வெந்த பருப்பு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். விருப்பப்பட்டால் சிறிது மல்லித்தழையை நறுக்கித் தூவலாம்.
________________________________________
நவதானிய குணுக்கு
தேவையானவை: ராஜ்மா, சோயா பீன்ஸ், கொள்ளு, கோதுமை, பச்சைப்பயறு, கொண்டைக்கடலை, வேர்க்கடலை, கறுப்பு உளுந்து & தலா ஒரு டீஸ்பூன், அரிசி & 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் & 4, காய்ந்த மிளகாய் & 3, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லித்தழை & சிறிது, எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: எல்லா தானியங்களையும் முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் தண்ணீரில் நன்றாக அலசி வடிய விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து எண்ணெயில் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும். நவராத்திரிக்கு கொடுக்க சத்தான குணுக்கு!
________________________________________

கொள்ளு வெஜிடபிள் சுண்டல்
தேவையானவை: கொள்ளு & அரை கப், பொடியாக நறுக்கிய கேரட் & கால் கப், பொடியாக நறுக்கிய பீன்ஸ், குடைமிளகாய், உருளைக்கிழங்கு & தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் (காய்ந்த மிளகாயை லேசாக வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்) & அரை டீஸ்பூன், கடுகு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் & தலா கால் டீஸ்பூன், எண்ணெய் & ஒரு டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை & சிறிது.
செய்முறை: கொள்ளை முதல்நாள் இரவே லேசாக வறுத்து ஊற வைக்கவும். மறுநாள் சிறிது உப்பு சேர்த்து காய் பக்குவத்தில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, பெருங் காயத்தூள் தாளித்து வேக வைத்துள்ள கொள்ளைச் சேர்க்கவும். இத்துடன் வேக வைத்த காய்கறி, மஞ்சள்தூள், மிளகாய்தூளை சேர்த்து லேசாக கிளறி, கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
________________________________________

சோயாபீன்ஸ் பனீர் சுண்டல்
தேவையானவை: சோயாபீன்ஸ் & ஒரு கப், துருவிய பனீர் & அரை கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் & ஒரு டீஸ்பூன், மல்லித்தழை & சிறிது, எண்ணெய் & ஒரு டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: சோயாபீன்லை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், வெந்த சோயா பீன்ஸை போடவும். பிறகு துருவிய பனீர், சிறிது உப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் கிளறி கடைசியில் மல்லித்தழை தூவி இறக்கவும்.
________________________________________

தட்டைப்பயறு சுண்டல்
தேவையானவை: தட்டைப் பயறு & ஒரு கப், தனியா, எண்ணெய் & தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 3, தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் & தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & அரை டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது, உப்பு & தேவையான அளவு.
செய்முறை: பயறை வறுத்து முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். தனியா, மிளகாய், தேங்காய் துருவலுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, பெருங் காயத்தூள் தாளித்து வேக வைத்த பயறை போடவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்துக் கிளறி இறக்கவும். தேவையெனில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளலாம்.
________________________________________

புதினா&பாசிப்பயறு சுண்டல்
தேவையானவை: பாசிப்பயிறு & ஒரு கப், நறுக்கிய புதினா, மல்லித்தழை & தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் & 2, காய்ந்த மிளகாய் & 1, இஞ்சி & ஒரு துண்டு, கடுகு, உளுந்து, எண்ணெய் & தாளிக்க தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை முதல்நாள் இரவே ஊறப் போடவும். காலையில் நீரை வடித்து, பயிறை வடிதட்டில் கொட்டி மூடி வைக்கவும். மாலையில் சுண்டல் செய்யும்போது பயிறு முளை கட்டியிருக்கும். புதினா, மல்லித்தழை, பச்சைமிளகாய், இஞ்சி எல்லா வற்றையும் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். முளைவிட்ட பயறை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு முக்கால் பதத்தில் வேக வைக்கவும். வெந்ததும் உப்பு, அரைத்த விழுதைச் சேர்த்துக் கிளறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாயைப் போட்டு தாளித்து, சுண்டலில் கொட்டிக் கிளறவும். தேவைப் பட்டால் தேங்காய் துருவலை தூவி அலங்கரிக்கலாம்.
________________________________________
பட்டர் பீன்ஸ் சுண்டல்
தேவையானவை: பட்டர் பீன்ஸ் & ஒரு கப், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, தேங்காய் துருவல் & தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 3, பொடியாக நறுக்கிய மல்லித்தழை, கறிவேப்பிலை & சிறிதளவு, எண்ணெய் & ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் & தலா கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: பட்டர் பீன்லை சிறிது உப்பு சேர்த்து வேக வைக்கவும். தனியா, மிளகாய், அரை டீஸ்பூன் உளுந்து, கடலைப்பருப்பை சிறிது எண்ணெய் விட்டு லேசாக வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மீதி உளுந்து, பெருங்காயத்தூள் தாளித்து வேக வைத்த பீன்ஸ், பொடித்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிது உப்பு போட்டுக் கிளறவும். கடைசியில் மல்லித்தழை, கறிவேப்பிலை, தேங்காய் துருவலைச் சேர்த்து கிளறி இறக்கவும்.
Post a Comment