பருப்பு உருண்டை குழம்பு தேவையானவை & உருண்டைக்கு: கடலைப்பருப்பு & அரை கப், துவரம் பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் ...

பருப்பு உருண்டை குழம்பு
தேவையானவை & உருண்டைக்கு: கடலைப்பருப்பு & அரை கப், துவரம் பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் & 3, சோம்பு & அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் & கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு & ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை & ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & தேவையான அளவு. குழம்புக்கு: பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 3, மிளகாய்தூள் & இரண்டரை டீஸ்பூன், தனியாதூள் & ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், புளி & எலுமிச்சை அளவு, பூண்டு & 10 பல், கறிவேப்பிலை, மல்லித்தழை & தலா சிறிதளவு, உப்பு & தேவையான அளவு. தாளிக்க: சோம்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: உருண்டைக்கான பருப்புகளை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பிறகு, காய்ந்த மிளகாய், சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். உருண்டைக் கென கொடுத்துள்ள மற்ற பொருட் களையும் சேர்த்துப் பிசைந்து ஒன்றாக உருட்டிக்கொள்ளுங்கள். இவற்றை ஆவியில் அரைவேக்காடாக வேகவைத்துக் கொள்ளுங்கள். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு (தோலுரித்து, ஒன்றிரண்டாக நசுக்கியது) சேர்த்து வதக்குங்கள். இத்துடன் தக்காளி சேர்த்து, சிறிது நேரம் வதக்கி, புளித்தண்ணீரையும் ஊற்றுங்கள். அதில் மிளகாய்தூள், தனியாதூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.
குழம்பு நன்கு கொதிக்கும்போது, செய்து வைத்திருக்கும் பருப்பு உருண்டைகளை அதில் போடுங்கள். 10 நிமிடம் கொதிக்கவிட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்குங்கள்.
குறிப்பு: நீர்க்க இருக்கும் இந்தக் குழம்பு, குழைவான சாதத்துக்கு நன்றாக இருக்கும். இதையே கெட்டியாக வைக்க விரும்புபவர்கள், 2 டேபிள்ஸ்பூன் தேங்காய் துருவலுடன் 5 முந்திரிப்பருப்பு வைத்து மைய அரைத்து, கடைசியில் சேர்த்து இறக்குங்கள். சூப்பரான கெட்டிக் குழம்பு கிடைக்கும்.
Post a Comment