கூழ் வற்றல் தேவையான பொருட்கள்: பச்சரிசி & 5 கப், பச்சை மிளகாய் & 15, உப்பு & 3 டேபிள்ஸ்பூன், மாவு ஜவ்வரிசி & 1 கப், பெருங்...

கூழ் வற்றல்
தேவையான பொருட்கள்: பச்சரிசி & 5 கப், பச்சை மிளகாய் & 15, உப்பு & 3 டேபிள்ஸ்பூன், மாவு ஜவ்வரிசி & 1 கப், பெருங்காயப் பொடி & 1 டீஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை முந்தின நாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலை கிரைண்டரில் நைஸாக அரைத்து, 2 டேபிள்ஸ்பூன் உப்பு போட்டு நன்றாக கரைத்து வைக்கவும். இந்த மாவு இரண்டு நாட்கள் புளிக்க வேண்டும். இந்த இரு நாட்களிலும், இரண்டு வேளையும் மாவை நன்றாக கையினால் கலக்கி வைக்க வேண்டும். கலக்கி வைக்காமல் அப்படியே வைத்தால் ஒரு வாடை வந்து விடும். மூன்றாம் நாள் ஒரு அடிகனமான பாத்திரத்தில் 10 கப் தண்ணீர் எடுத்து அடுப்பில் வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் உப்பு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக அரைத்து தண்ணீருடன் சேர்க்கவும். அது கொதித்ததும் ஜவ்வரிசியை போடவும். 10 நிமிடத்தில் ஜவ்வரிசி வெந்து மேலே வந்துவிடும்.
பிறகு, அரைத்து வைத்து புளித்த மாவினை நன்றாக தோசைமாவு பக்குவத்திற்கு கரைத்துக்கொண்டு, அந்த மாவை கொதிக்கும் தண்ணீரில் கொட்டி கட்டியில்லாமல் கிளறவேண்டும். மாவு வெந்தவுடன் அடுப்பை அணைத்து மூடிவைக்க வேண்டும். தொட்டால் கையில் ஒட்டாமல் இருக்கவேண்டும். அதுதான் பக்குவம். பின்னர் வத்தல் அச்சில் போட்டு பிளாஸ்டிக் ஷீட்டில் நீள நீளமாகப் பிழிந்து விடவும். நன்கு காய்ந்தபின் பொரித்துப் பாருங்கள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அப்படியே சாப்பிடுவார்கள்.
கூழ் வற்றல்: கலர் கலராக வற்றல் வேண்டும் என நினைப்பவர்கள், சில தக்காளிகளை மிக்ஸியில் அடித்து வடிகட்டி, தண்ணீரில் (10 கப் அளவு வருவது போல) சேர்த்து கொதிக்க வைக்கலாம். பச்சை நிறம் வேண்டுமென்றால் புதினாவை அரைத்து வடிகட்டி சேர்க்கலாம். மணமும் நிறமும் பிரமாதமாக இருக்கும்.
Post a Comment