நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலுள்ள ஒரு முக்கியமான பொருள் கடுகு ஆகும். கடுகு இல்லாமல் சமையலே இல்லை என்று சொல்லுமளவுக்கு எல்லா உணவுப் பொருட்...

நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலுள்ள ஒரு முக்கியமான பொருள் கடுகு ஆகும். கடுகு இல்லாமல் சமையலே இல்லை என்று சொல்லுமளவுக்கு எல்லா உணவுப் பொருட்களிலும் இது சேர்க்கப்படுகிறது. சமையலறை வி.ஐ.பி. என்று சொல்லுமளவுக்கு அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது. அளவில் மிகச்சிறியது என்றாலும், இதன் பயனோ மிகப்பெரிது. கடுகு தாளிக்கப்படாத உணவு மணமும், சுவையும் பெறுவதில்லை என்பது உண்மை. கடுகானது உணவில் மட்டுமின்றி மருத்துவத்துறையிலும், தொழில் துறையிலும் வெகுவாகப்பயன்படுகிறது. தாவரப்பிரிவில் இது மணமூட்டும் பொருளாகக் கருதப்படுகிறது.
நாம் பொதுவாக சமையலில் சிறிய கருப்பு வகை கடுகைப் பயன்படுத்துகிறோம். ஆனால், மூன்று வகையான கடுகு காணப்படுகிறது.
1. கருப்புக்கடுகு அல்லது உண்மையான கடுகு தாவரவியலில் இது பிராஸிக்கா நிக்ரா எனப்படுகிறது.
2. வெள்ளைக் கடுகு, இதன் தாவரவியல் பெயர் பிராஸிக்கா ஆல்பா என்பதாகும்.
3. இந்தியக் கடுகு அல்லது பிரவுன் கடுகு இதன் தாவரவியல் பெயர் பிராஸிக்கா ஜன்சியே என்பதாகும்.
பல்வேறு மொழிப் பெயர்கள்
ஆங்கிலம் - மஸ்டர்ட், காஷ்மீர் - ஆஸ§ர், சமஸ்கிருதம் - சர்ஷபா, பிரஞ்சு - மவுடர்டெ நாயிரெ, இந்தி - பனார்ஸி - ராய், ஜெர்மன் - ஸ்க்பார்சாரிஸென்ப், பெர்ஸியன் - ஸார் - ஸாப், சுவீடன் - செனப், வங்காளம் -கிருஷ்ணராய், இத்தாலி - செனபெசிந்தி- அஹ§ர், குஜராத் - ராய், தெலுங்கு - அவலு, மலையாளம் - கடுகா, கன்னடம் - கரிசஸியே, ஜப்பான் - ஷிரோ-கராஷி, சீனா-சேய்க், ஸ்பெயின்- மொஸ்டஸா.
தமிழ்பெயர்கள்
ஆய்சூரி, இசிகர், இரேசக்குணா, கசவம், நத்தை, சூக்கும் பத்திரம், தந்துகம், உரோசனி, கடிப்பகை, விசித்தி.
பொருளாதாரப்பயன்கள்
1. இது உணவில் மணமூட்டப் பயன்படுகிறது.
2. கடுகிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
3. கடுகுப்பொடி தயாரிக் கப்பட்டு மணமூட்டப் பயன்படுகிறது.
4.ஊறுகாய் பொடி தயாரிக்கப்படுகிறது.
5. கடுகு எண்ணெய் மருத்துவத்திலும், சோப்பு தயாரிக்கவும் பயன்படுகிறது.
6. பிண்ணாக்கு கால் நடை உணவாகப் பயன்படுகிறது.
7. கடுகு தழைகளும் உணவாகப் பயன்படுகிறது?
8. கடுகானது சில பொருட்களைப் பாதுகாக்கும் பாதுகாப்பானாகப் பயன்படுகிறது.
9. ஒயின் தயாரிப்புத் தொழிலில் நுரைத்தல் முறையில் கடுகு பயன்படுகிறது.
10. அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் கடுகு எண்ணெய் பயன்படுகிறது.
குணங்கள்
கடுகு உஷ்ணத்தைக் கூட்டும், வாயுவை வெளியேற்றும். பித்தம், கபம், வாதம் என்ற மூன்று தோசங்களையும் நீக்கும். மூட்டுவலியைக் குறைக்கும். தோல்நோயைக் குணப்படுத்தும்.
மருத்துவக் குணங்கள்
1. கடுகை அரைத்து நீரில் கலந்து விஷம் சாப்பிட்டவர்களுக்குக் கொடுக்க விஷம் வாந்தியாகி வெளியே வந்து விடும்.
2. கடுகை அரைத்து கீழ் வாத வலி உள்ள இடத்தில் தடவ வலி தீரும்.
3. இருசொட்டு கடுகுஎண்ணெய் சந்தன் எண்ணெய் கலந்து முகப்பருவில் போட்டு வர முகப்பரு மாறும்.
4. கால் ஸ்பூன் கடுகு, சிறு துண்டு சுக்கு, 5 கிராம் சாம்பிராணி இவைகளை இடித்து சிறிதளவு ஆமணக்கு எண்ணெய் விட்டு குழைத்துப் பூச தலைவலி தீரும்.
5. பாத வெடிப்பில் சிறிதளவு கடுகு எண்ணெய் தேய்த்து சுடுநீர் ஒற்றடம் கொடுக்க பாத வெடிப்புத் தீரும்.
6. 5 கிராம் கடுகு, கடுக்காய் ஒன்று. கருஞ்சீரகம் 5 கிராம். திப்பிலி இவைகளை இடித்து காலை, மாலை உணவுக்குப்பின் அரை ஸ்பூன் தின்று வெந்நீர் குடித்து வர மூலவாயு தீரும்.
7. ஒரு அவுன்ஸ் வீதம் கடுகு எண்ணெய் எள் எண்ணெய் எடுத்து ஒரு துண்டு சிற்றரத்தை துண்டைச் சேர்த்து சூடாக்கி சிறிதளவு கற்பூரத்தூளைச் சேர்த்து குளிக்கும் முன் முதுகில் தடவி வெந்நீரில் குளித்து வர முதுகு வலி தீரும்.
8. ஐந்து துளி வீதம் கடுகு எண்ணெய், எருக்கு இலைச்சாறு இரண்டடையும் கலந்து தேள் கொட்டிய இடத்தில் தடவ வலி தீரும்.
9. கடுகுப் பொடி, மஞ்சள் பொடி இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டுக் குழைத்து தோல் நோய் மேல் பூசி வர தோல் நோய் மறையும்.
10. சிறிதளவு கடுகு, ஒரு துண்டு பெருங்காயம், சிறிதளவு முருங்கைப்பட்டை மூன்றையும் சேர்த்தரைத்து கால் மூட்டு வீக்கம் உள்ளஇடத்தில் பற்றுப் போட வீக்கம் வடிந்து விடும்.
Post a Comment