ஏற்றம் தரும் ஏஜென்ட் வாய்ப்பு !--வேலை வாய்ப்புகள்
பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர் பெரிய படிப்பு படித்தவர்கள்தான் வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும் என்பதில்லை. பத்தாம், பன்னிரண்டாம் வக...

பணத்தைப் பெருக்கும் மந்திரத் தொடர்
பெரிய படிப்பு படித்தவர்கள்தான் வேலைக்குப் போய் சம்பாதிக்க முடியும் என்பதில்லை. பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்தவர்களையும் கை நிறைய சம்பாதிக்க வைக்கிறது... நிதி சம்பந்தப்பட்ட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களில் ஏஜென்ட்டாகப் பணிபுரியும் வாய்ப்பு. அதற்கு நானே சிறந்த உதாரணம். இன்று நிதி ஆலோசகராக இருக்கும் நான், ஆரம்பத்தில் போஸ்ட் ஆபீஸ் ஆர்.டி. ஏஜென்ட்டாகத்தான் வாழ்க்கையைத் தொடங்கினேன் என்று ஏற்கெனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். முழு நேரப் பணிக்குச் செல்ல இயலாதவர்கள், பட்டதாரிகள், பத்தாம் வகுப்பு வரை படித்தவர்கள் என பலருக்கும் பொருத்தமானது இந்த ஃபைனான்ஷியல் ஏஜென்ட் வேலை. இதற்கு ஒரே முதலீடு... பேச்சுத் திறமைதான். இந்த நிதி சார்ந்த வேலைகளுக்கு எப்படி ஏஜென்ட் ஆவது என விவரமாகவே பார்ப்போம்.
தபால் நிலைய ஆர்.டி. ஏஜென்ட் சென்ற இதழில் சொன்னதுபோல சிறுவாடுக்கு அடுத்ததாக பெண்கள் ஆர்வத்துடன் சேமிப்பது... தபால் நிலைய ஆர்.டி. (RD - Recurring Deposit)! நகரம், கிராமம் என்று எங்கும் இதைப் பாதுகாப்பான முதலீடாகப் பெண்கள் கருதுகிறார்கள். இந்த நம்பிக்கையை பலமாகக் கொண்டு ஆர்.டி. ஏஜென்ட் ஆகலாம். பெண்கள் மட்டுமே ஆர்.டி ஏஜென்ட்டாக முடியும் என்பது தனிச் சிறப்பு. இதற்கான கல்வித் தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு, வயது வரம்பு 18-க்கு மேல். உங்களின் மாவட்ட ஆட்சியரகம் அல்லது மாநகராட்சி தலைமை அலுவலகம் போன்ற இடங்களில் இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது. இணையதளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, சிறுசேமிப்பு இணை இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதில் நூறு ரூபாய் ஆர்.டி. அக்கவுன்ட் ஒன்றுக்கு, நான்கு ரூபாய் ஏஜென்ட் கமிஷனாக கிடைக்கும். மாநில அரசு ஊக்கத் தொகையும் வழங்குகிறது. பெண்களை சுயமாக சம்பாதிக்க ஊக்குவிக்க கொண்டு வந்த திட்டம் இது.
ஸ்டாண்டர்டைஸ்டு ஆத்தரைஸ்டு சிஸ்டம் (எஸ்.ஏ.எஸ்.)
இந்தத் திட்டத்தில் ஆண்களும் ஏஜென்ட் ஆகலாம். என்.எஸ்.சி. சான்றிதழ், தபால் நிலைய மாதச் சேமிப்புத் திட்டம், டைம் டெபாசிட், வங்கிச் சேமிப்பு கணக்கு போன்ற பல திட்டங்களுக்கும் ஏஜென்ட்டாக பணிபுரியும் வாய்ப்பு இதில் உண்டு. முதலீட்டுத் தொகையில் ஒரு சதவிகிதம் கமிஷனாகக் கிடைக்கும். மாநில அரசும் ஊக்கத் தொகையாக 0.5% வழங்குகிறது. இதற்கும் கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு, வயது வரம்பு 18-க்கு மேல்.
பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்ட் (பி.பி.எஃப்.)
மேலே சொன்ன எஸ்.ஏ.எஸ். ஏஜென்ட்டாக ஒரு வருட அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே பி.பி.எஃப். ஏஜென்ட் ஆக முடியும். அதே கல்வி மற்றும் வயது வரம்புதான் இதற்கும். எஸ்.ஏ.எஸ். ஏஜென்ட் என்பதற்கான சான்றிதழ், வயது, முகவரிச் சான்றுடன் சிறு சேமிப்பு இணை இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கமிஷன்... ஒரு சதவிகிதம்.
இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்!
இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டுக்கான கல்வித் தகுதி, பன்னிரண்டாம் வகுப்பு. வயது வரம்பு 18-க்கு மேல். இன்ஷூரன்ஸ் என்பது லைஃப் மற்றும் ஜெனரல் என இரண்டு பிரிவுகளில் உள்ளது. இன்ஷூரன்ஸ் நிறுவனம் வழங்கும் நூறு மணி நேர பயிற்சியை முடித்தவர்கள், லைஃப் மற்றும் ஜெனரல் என இரண்டு பிரிவு இன்ஷூரன்ஸுக்கும், 50 மணி நேர பயிற்சியை முடித்தவர்கள் ஏதாவது ஒரு பிரிவு இன்ஷூரன்ஸுக்கும் ஏஜென்ட்டாக பணிபுரியலாம். எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் நீங்கள் ஏஜென்ட்டாக விரும்புகிறீர்களோ, அவர்களிடம் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொள்ளலாம். இதில் முக்கியமான விஷயம், ஒரு நேரத்தில் ஏதாவது ஒரு இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு மட்டுமே ஏஜென்ட் டாகப் பணிபுரிய முடியும். இதில் 2 - 3.5% வரை கமிஷன் தொகை கிடைக்கும்.
இப்போது மக்களிடையே இன்ஷூரன்ஸ் பற்றிய விழிப்பு உணர்வு அதி கரித்து வருவதும், தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் வருகை அதிகரித்திருப்பதும் ஏஜென்ட் பணிக்கான வாய்ப்புகளை இன்னும் பிரகாசமாக்கியுள்ளன!
- பணம் பெருகும்...
ஜெயஸ்ரீ, திருப்பூர்:
''நான் கடந்த எட்டு வருடங்களாக ஆர்.டி. ஏஜென்ட்டாகப் பணியாற்றுகிறேன். வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் இதற்காகச் செலவழிக்கிறேன். கொஞ்சம் பேச்சுத் திறமை இருந்தால் போதும்... இதில் வெற்றி காணலாம். இதன் மூலம் என்னால் திருப்தியாக சம்பாதிக்க முடிகிறது, என் வீட்டுத் தேவைகளை கவனிக்க முடிகிறது என்பதுடன், மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதும், விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதும்... மனதளவில் எனக்குத் திருப்தியையும் தருகிறது.''
Thanks-AV
Post a Comment