வீட்டுக்குறிப்புக்கள்..கிச்சன் கிளினிக்
கிச்சன் கிளினிக் ஒ ரு குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்குவதே சமையல் அறையில்தான். இது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அதில் நாம் கவனமாக...


ஒரு குடும்பத்தின் ஆரோக்கியம் தொடங்குவதே சமையல் அறையில்தான். இது அனைவருக்கும் தெரிந்ததுதான் என்றாலும் அதில் நாம் கவனமாக இருக்கிறோமா, எப்போதும்?
நம் சமையல் அறையைக் கவனமாகவும் கச்சிதமாகவும் எப்படிப் பராமரிக்கலாம்?
சமையலறை சுவருக்கு அடிக்கிற பெயின்ட், பதிக்கிற டைல்ஸ் எல்லாம் வெள்ளை நிறத்தில் 'பளீர்’ என இருக்கட்டும். அப்போதுதான், அறையில் படியும் தூசி, எண்ணெய்ப் பிசுக்கு போன்றவை கண்ணுக்குத் தெரியும். உடனுக்குடன் அதை சுத்தம் செய்யவும் முடியும்.
சமையலறைப் பொருட்களை வைக்கும் ஸ்டோர் ரூமுக்கு நீல நிற பெயின்ட் அடித்தால் பூச்சிகள் அண்டாது. நீல நிறம் என்றால், பூச்சிகளுக்கு அலர்ஜி.
'ரெக்ஸின் ஷீட்’ வாங்கி வீட்டு ஷெல்ஃப்களில் விரித்துவைக்கலாம். அலமாரியும் அழுக்குஆகாது; பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். அவ்வப்போது மிகச் சுலபமாக சுத்தம் செய்துவிடலாம்.
சிறிதளவு தண்ணீரில் வினிகரைக் கலந்து ஷெல்ஃபைத் துடைத்தால் எறும்புத் தொல்லை இருக்காது.
கேஸ் ஸ்டவ்வில் உள்ள பர்னர் ஹீட்டரில் இருந்து பி.டி.எஃப்.இ. (பாலிடெட்ரா ஃப்ளோரோ எத்திலின்) என்ற நச்சு வெளியாகிறது. முடிந்த வரை ஸ்டெயின்லெஸ் ஸ்டீல், டைட்டானியம், செராமிக் பாத்திரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இதன் தீவிரத்தைக் குறைக்கலாம். எக்ஸாஸ்ட் ஃபேனைப் பொருத்திவிட்டால் சமையல் அறையில் தேங்கி நிற்கும் நச்சு வாயுவும் போயே போச்சு.
ஃப்ரிஜ், மிக்ஸி, மைக்ரோவேவ் போன்ற எலெக்ட்ரானிக் பொருட்களைச் சுத்தம்செய்ய, அரை டம்ளர் தண்ணீரில் சிறிது டூத் பேஸ்ட்டைப் போட்டுக் கரைக்கவும். இந்தத் தண்ணீரில் ஒரு ஸ்பாஞ்சை நனைத்துப் பிழிந்து பொருட்களைத் துடைக்கவும். பிறகு தண்ணீரில் அலசிக் கழுவிய பிறகு, உலர்ந்த துணியில் துடைத்தால் பொருட்கள் சூப்பர் சுத்தம்.
ஃப்ரிஜ்ஜில், சமைத்த பொருட்களைத் திறந்துவைக்கும்போது, கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அந்தப் பொருட்களில் ஒட்டிக்கொள்ளும். அதனால், மூடிவைப்பதே நல்லது. ஒரு வெங்காயத்தை இரண்டாக வெட்டி ஃப்ரிஜ்ஜில் வைப்பதும் உத்தமம். வெங்காயம் பாக்டீரியாக்களை இழுக்கும் ஆற்றல் பெற்றது. ஓர் எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி வைத்துவிட்டால், வெங்காய வாசமும் வீசாது.
எண்ணெய் ஊற்றிவைக்கும் பாட்டில்களில் பிசுக்கு ஏறியிருந்தால், பாட்டிலைத் தண்ணீர் ஊற்றி இறுக மூடி, அரிசி மாவைப் பயன்படுத்தி சுத்தம் செய்யுங்கள். பிறகு உலர்ந்த துணிகொண்டு துடைத்தால் பிசுபிசுப்பு போயே போச்சு.
தேங்கிய தண்ணீரும் இருட்டும்தான் புழு, வண்டு, கரப்பான் பூச்சிகள் குடியிருக்கக் காரணம். எப்போதும் சமையலறையை வெளிச்சமாகவும், ஈரம் இல்லாமலும் வைத்துக்கொள்ளுங்கள்.
சமையலறையில் ஆங்காங்கே ஜாதிக்காயைப் போட்டுவைத்தால், கரப்பான் பூச்சிகள் நெருங்காது.
அரிசியில் வரும் வண்டு, புழுக்களை விரட்ட, புதினா, காய்ந்த கறிவேப்பிலையைக் காயவைத்துத் தூளாக்கி, 5 கிலோ அரிசிக்கு 25 கிராம் அளவில் போட்டுவைக்கலாம். சமையலும் சுவையாக இருக்கும்.
பயறு வகைகளை அப்படியே வைக்காமல், மிதமான சூட்டில் வறுத்து, ஆறவைத்து டப்பாக்களில் அடைக்கலாம். புழு, பூச்சிகள் வராமல் நெடுநாள் இருக்கும்.
ரவை, மைதா போன்ற மாவுப் பொருட்களில் நாலைந்து கிராம்புகளைப் போட்டுவிடுங்கள். புழு, பூச்சிகள் குட்பை சொல்லிக் கிளம்பிவிடும்!
Post a Comment