ஹெல்த் இன்ஷூரன்ஸ்: என்ன பாலிசி எடுக்கலாம்? ஆண்டொன்று போனால், வயதொன்று கூடும்தான். உடல் உபாதைகளும் அப்படியே. ஆனால், 'ஹெல்த் இன்ஷூரன்ஸ்’...
ஹெல்த் இன்ஷூரன்ஸ்: என்ன பாலிசி எடுக்கலாம்?

ஆண்டொன்று போனால், வயதொன்று கூடும்தான். உடல் உபாதைகளும் அப்படியே. ஆனால், 'ஹெல்த் இன்ஷூரன்ஸ்’ இருந்தால் மருத்துவச் செலவுகளைக் கணிசமாகத் தவிர்க்க முடியும்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி போலவேதான் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியும். ஆனால், இதில் முதிர்வுத் தொகை கிடையாது.
எதிர்பாராத விபத்து, திடீர் மாரடைப்பு என ஏதேனும் நிகழ்ந்தால், அதற்கு செலவு ஆகும் சமயத்தில் அந்தக் குடும்பத்தின் பொருளாதாரத்தையே தகர்த்துவிடும். அதில் இருந்து உங்களைப் பாதுகாக்கவே இந்த ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி. சில ஆயிரங்கள் செலவு செய்து ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்தால், எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும்போது... அதை சம்பந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனமே பார்த்துக்கொள்ளும்.
தனிநபர் பாலிசி, குடும்பம் முழுமைக்குமான பாலிசி (ஃப்ளோட்டர்), குரூப் பாலிசி (நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு எடுப்பது) என மூன்று விதங்களில் ஹெல்த் பாலிசி கிடைக்கிறது.
தனிநபர் பாலிசியைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஒரு லட்ச ரூபாய்க்கான பாலிசி எடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அனைவருக்கும் ஒரே நேரத்தில் மருத்துவச் செலவு வருவது அரிது. தனித்தனியே ஒரு லட்சம் பாலிசி எடுத்தவர்களில் திடீரென ஒருவருக்கு விபத்து ஏற்பட்டு, மூன்று லட்ச ரூபாய் செலவாகிறது என்றால், ஒரு லட்சம் வரைக்கும்தான் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கொடுக்கும். மீதம் உள்ள பணத்தை நீங்கள்தான் கையில் இருந்து செலவழிக்க வேண்டும். ஃப்ளோட்டர் பாலிசியாக இருந்தால், குடும்பத்தில் விபத்து ஏற்பட்ட நபருக்கு மட்டும் மூன்று லட்சம் செலவு ஆனாலும், மொத்த செலவையும் இன்ஷூரன்ஸ் நிறுவனமே கொடுத்துவிடும். அதே ஆண்டில் குடும்பத்தில் உள்ள வேறு ஒருவருக்கு ஒரு லட்சம் மருத்துவச் செலவு வந்தால், அதையும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் கொடுத்துவிடும்.
வயதானவர்களுக்கு, ஏற்கெனவே நோய் இருப்பவர்களுக்கு புதிய ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எளிதில் கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும், மருத்துவச் சோதனைகள் இருக்கும். ஆனால், குரூப் பாலிசியில் வயதான பெற்றோர்களைச் சேர்க்க முடியும்.
ப்ரீமியம் எப்படி கணக்கிடுறார்கள்?
பாலிசிதாரரின் வயது, மது அருந்துபவரா, புகை பிடிப்பவரா, ஏற்கெனவே இருக்கும் நோய்கள்... இவற்றை வைத்துத்தான் ப்ரீமியம் கணக்கிடப்படும். சில பாலிசிகளில் கூடுதல் வசதிகளைப் (ரைடர்) பொறுத்தும் கணக்கீடு செய்வார்கள்.
ஹெல்த் இன்ஷூரன்ஸ் தேர்ந்தெடுக்கும்போது திட்டத்தில் உள்ள பயன்கள் என்ன என்பதை முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். எப்படிப்பட்ட செலவுகளுக்கு க்ளைம் பண்ணலாம்? எதற்கெல்லாம் க்ளைம் செய்ய முடியாது? முதல் வருடத்தில் எந்த நோய்களுக்கு காப்பீடு அளிக்கப்படாது? எந்த வயது வரை மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும்? ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு எத்தனையாவது ஆண்டில் இருந்து காப்பீடு அளிக்கப்படும்? (சில கம்பெனிகள் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று வெவ்வேறு கால அளவு நிர்ணயித்திருப்பார்கள்). எந்தெந்த மருத்துவமனைகளுடன் நெட்வொர்க் செய்யப்பட்டுள்ளது? வீட்டுக்கு அருகில் உள்ள மருத்துவமனையுடன் நெட்வொர்க் செய்யப்பட்டு உள்ளதா? கேஷ்லெஸ் சிஸ்டம் எனப்படும் பணம் இல்லா சிகிச்சை பெறும் வசதி உள்ளதா? வேறு ஏதாவது கூடுதல் பயன் உள்ளதா? க்ளைம் செய்வது எப்படி என்ற கையேட்டை வழங்கி உள்ளதா என்பதை எல்லாம் பார்ப்பது அவசியம்.
நான்கு பொதுத் துறை ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும், 15-க்கும் மேற்பட்ட தனியார் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை வழங்குகின்றன.
லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது ஆரம்பத்தில் என்ன ப்ரீமியமோ, அதே ப்ரீமியம்தான் பாலிசி முடியும் வரை செலுத்திக்கொண்டு இருப்போம். ஆனால், ஹெல்த் இன்ஷூரன்ஸின் ஆயுட்காலம் ஒரு வருடம் மட்டுமே. ஒரு சில கம்பெனிகள் மட்டுமே இரண்டு வருட பாலிசியை வைத்திருக்கின்றன. ஒரு வருடம் முடிந்து பாலிசியைப் புதுப்பிக்கும் பட்சத்தில், நமக்கு ஒரு வயது அதிகமாகி இருக்கும். மேலும், கடந்த வருடத்தில் ஏதாவது க்ளைம் வாங்கி இருந்தால், இந்த வருடம் ப்ரீமியம் அதிகமாக செலுத்த வேண்டி இருக்கும்.
விதிவிலக்குகள் -
விதிமுறைகள்
க்ளைம் வாங்குவது எப்படி?
டி.பி.ஏ. என்றால் என்ன?
கவனிக்க வேண்டிய விஷயங்கள்...
- அடுத்த இதழில்...
சந்தான கிருஷ்ணன்.
துணை மேலாளர்,
ஓரியன்டல் இன்ஷூரன்ஸ் கம்பெனி.
''ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் வங்கிகளுடன் ஒப்பந்தம் போட்டிருப்பதால், வங்கி கணக்கு இருந்தாலே குறைந்த பிரீமியத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுக்க முடியும். உதாரணத்துக்கு நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் ஃப்ளோட்டர் பாலிசி எடுத்தீர்கள் என்றால் 4,000 ரூபாய்க்கு மேல் ப்ரீமியம் செலுத்தவேண்டி இருக்கும். ஆனால் வங்கி மூலம் எடுக்கும் போது சுமார் 1,750 ரூபாய்க்குள் அந்த ஃப்ளோட்டர் பாலிசியை எடுத்துவிடலாம். ஓரியன்டல் ஜெனரல் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஓரியன்டல் பேங்க் ஆஃப் காமர்ஸுடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது'' என்றார்.
உங்கள் வங்கிக்கு செல்ல நேரம் குறித்துவிட்டீர்களா?
Post a Comment