சமையல் டிப்ஸ்... டிப்ஸ்...
தோசை முறுகலாக வார்த்தால், பிய்ந்து போகிறதா? பிரெட் துண்டில் லேசாக எண்ணெய் ஊற்றி தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு வார்த்துப் பாருங்கள். எத்...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_5021.html
தோசை முறுகலாக வார்த்தால், பிய்ந்து போகிறதா? பிரெட் துண்டில் லேசாக எண்ணெய் ஊற்றி தோசைக்கல்லில் தேய்த்துவிட்டு பிறகு வார்த்துப் பாருங்கள். எத்தனை மெல்லியதாக வார்த்தாலும் தோசை கிழியாது. இப்படி பிரெட் துண்டால் தேய்த்தால், தோசைக்கல்லில் எண்ணெய்ப் பிசுக்கு ஒட்டாது. பிரெட் துண்டில் ஒருமுறை எண்ணெய் ஊற்றினால் போதும்.
துவையலை மிக்ஸியில் அரைக்கும்போது பருப்புகள் சரியாக அரைபடவில்லையா? பருப்பு, மிளகாய் வற்றலை வறுத்ததும் அவற்றை சிறிது தண்ணீரில் ஊற வைத்து விடுங்கள். (புளி சேர்ப்பதானால் அதையும் ஊறவைக்கலாம்). பத்து நிமிடம் கழித்து எடுத்து அரைத்தால் சீக்கிரமாகவும் நைஸாகவும் அரைபடும். சாம்பார், மிளகுக்குழம்பு, குருமா போன்றவற்றுக்கு மசாலா அரைக்கும்-போது, மசாலா பொருட்களையும் இதேபோல ஊறவைத்து அரைக்கலாம்.
வெண் பொங்கல் மீந்து விட்டதா? அதை மிக்ஸியில் போட்டு சில நொடிகள் அரைத்து எடுங்கள். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது வடகமாகப் பொரித்து சாப்பிடலாம். அல்லது நறுக்கிய வெங்காயத்துடன் சிறிது மைதாமாவும் சேர்த்துப் பிசைந்து பக்கோடாவாகப் பொரித்து சாப்பிடலாம்.
அடைக்கு மாவு அரைக்கும்போது, வேகவைத்த இரண்டு உருளைக்-கிழங்குகளை சேர்த்து அரைத்து அடை சுட்டுப் பாருங்கள். அதன் சுவையில் மயங்கி தினம் தினம் அடை கேட்டு அடம் பிடிப்பார்கள் குழந்தைகள். இப்படி உருளைக்--கிழங்கை சேர்ப்பதால் அடையை முறுகலாகவும் சுட்டெடுக்கலாம்.
அரிசி மாவு, மைதா, கோதுமை மாவு போன்றவற்றை தோசைக்குக் கரைக்கும்போது கட்டி தட்டுகிறதா? அதைத் தவிர்க்க எளிமையான வழி இதோ.. மிக்ஸி ஜாரில் வெண்ணெய் எடுக்க உபயோகிக்கும் வட்டமான பிளேடை பொருத்தி, அதில் மாவு வகைகளைப் போட்டு, சிறிது மோர் மற்றும் உப்பு சேர்த்து சில நிமிடங்கள் சுற்றினால் மாவு கட்டி தட்டாது.
Post a Comment