சிறகமைப்புக் கூட்டு இலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நெற் பொறி போன்ற மலர்களையும், நீள் சதுரக்காய்கள...
சிறகமைப்புக் கூட்டு இலைகளையும், முட்டை வடிவச் சிற்றிலைகளையும், இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நெற் பொறி போன்ற மலர்களையும், நீள் சதுரக்காய்களையும் உடைய மர வகையைச் சேர்ந்ததாகும் புன்கு.
இது நடுத்தர மர வகையைச் சேர்ந்தது. இது விரைவில் அழியாது. இதன் பட்டை ஒழுங்கற்று மொக்கும், மொண்டுமாக நல்ல தடிப்புடன் இருக்கும். புன்கு மரத்தின் நிழல் உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுத்து உடல் சூட்டைத் தணிக்கும். இலை, பூ, காய், விதை, வேர், நெய் மருத்துவக் குணம் உடையது.
வேர்ப்பட்டைச் சாறு, நோயை விரட்டி, உடலைத் தேற்றவும் சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யவும் உடலிலுள்ள தாதுக்கள் அழுகுவதைத் தடுக்கவும் பயன்படுகின்றது. தமிழகம் எங்கும் எல்லா வகையான மண்ணிலும், சாலை ஓரங்களிலும் தானாகவே வளரக் கூடியது.
வேறு பெயர்கள்: புங்க பூந்தி, காஞ்சத்தம், காஞ்சகம், பிறகி, நியோமஞ்சரிபுசுப்பம், மதுமறுசம், மந்காசம், யாப்பிறியோலாச புசுப்பம், மணிப்புன்கு, பொன்னாங்காய், பூவுந்தி.
ஆங்கிலத்தில்: Pongamia glopbra; Beni; Fabaceae
புன்கு, புளி, மா, வேம்பு, கறிவேம்பு இலை வகைக்கு 10 கிராம் எடுத்து, சுக்கு, மிளகு, சீரகம், இந்துப்பு வகைக்கு 3 கிராம் எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி, 100 மில்லியளவு இரண்டு வேளை குடித்து வர மாந்தம், உடல் உள் சூடு, பித்தக் காய்ச்சல் குணமாகும். குழந்தைகளுக்கு 12 வயது வரை 30 மில்லியளவு காலையில் மட்டும் ஒருவேளை கொடுக்கலாம்.
புன்கு பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து நெய்யில் வறுத்துப் பொடி செய்து 1 சிட்டிகையளவு 2 வேளை தேனில் 150 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, மதுமேகம், மதுமேக இரணங்கள் குணமாகும். பித்தத்தை குறைக்கும். இரத்தம் சுத்தமாகும். (புகை, போகம், புளி, மீன், கருவாடு நீக்கி விடவும்).
புன்கு பூ, புளியம் பூ, பூண்டு, சீரகம், நன்னாரி வேர், வெப்பாலை அரிசி, வசம்பு வகைக்கு 50 கிராம் எடுத்து இடித்து 1 லிட்டர் பசும்பாலில் கலந்து, அத்துடன் 1 லிட்டர் நல்லெண்ணெய் சேர்த்துக் சிறுதீயில் பதமாகக் காய்ச்சி வடிகட்டி 1 தேக்கரண்டியளவு காலையில் மட்டும் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர சகலவிதமான கரப்பானும், தோல் நோயும் குணமாகும்.
புன்குமரப் பட்டையை இடித்து 500 கிராம் எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டு 1 லிட்டராக வற்றக் காய்ச்சி, வடிக்கட்டி அத்துடன் நல்லெண்ணெய் 300 கிராம், கடுக்காய்த்தூள் 50 கிராம் சேர்த்து கலந்து சிறு தீயில் பதமாகக் காய்ச்சி கசடைக் கையில் உருட்டினால் ஒட்டாமல் மெழுகு போல வரும் வேளையில் வடிகட்டி ஒரு கரண்டி எண்ணெயை வாயில் விட்டு கொப்பளிக்க பல் ஈறு இடுக்குகளில் சீழ் வடிவது நிற்கும்.
நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் வகைக்கு கைப்பிடியளவு எடுத்து இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவு வற்றக் காய்ச்சி வடிகட்டிய நீரில் மேலே சொன்ன எண்ணெயை 5 சொட்டு விட்டு வாய் கொப்பளிக்க, சொத்தைப் பல், பல் ஆட்டம், பல் வலி நீங்கும்.
இதே எண்ணெயை, நாய் வேளையின் விதையை அரைத்துக் கலந்து மீண்டும் காய்ச்சி உடலில் மேல் பூச்சாகப் பூசி 1 மணிநேரம் கழித்து சீயக்காய் தூளோ அல்லது அரப்புத்தூளிலோ தேய்த்துக் குளிக்க குணமாகும். (இந்த சமயத்தில் இரசாயன முறையில் தயாரிக்கப்படும் ஷாம்பு வகைகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.)
புன்கு வேர், சிற்றாமணக்கு வேர், சங்கன் வேர் வகைக்கு 40 கிராம், கடுகு ரோகினி 10 கிராம், வாதரசு (வாதமடக்கி) வேர்ப்பட்டை 20 கிராம், இடித்துப் பொடியாக்கி விளக்கெண்ணெய் 2 லிட்டரில் போட்டு அத்துடன் பூண்டுச் சாறு அரை லிட்டர் சேர்த்து 15 நாட்கள் சூரியப்புடம் வைத்து வடிகட்டி பின்னர் காலையில் மட்டும் 1 தேக்கரண்டி அளவு குடித்துவர, எல்லாவிதமான தோல் நோய்களும், கரப்பான், சொறி, சிரங்கு, புண், புரைகள் குணமாகும்.
புங்க மரத்தின் சமூலத்தைப் கைப்பிடியவு எடுத்து பாலில் அரைத்து நெல்லிக்காயளவு 2 வேளை சாப்பிட புண், புரை நோய், சூலை, அரையாப்புக் கட்டி கரையும். புங்க கொழுந்து, வாழைப் பூ அளவு எடுத்து பிட்டவியலாக அவித்துப் பிசைந்து பிழிந்து 1 தேக்கரண்டியளவுடன் சிறிது தேன் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு பேதி கண்டால் நிற்கும்.
புங்க இலையை கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி குடிக்க தலை நோய், வலி நோய் குணமாகும். புங்க இலையை நீரிலிட்டுக் காய்ச்சி வீக்கங்களுக்கு நீராவியால் உடலை வியர்க்கச் செய்யலாம். இதன் சாறை எடுத்து மூக்கில் சில துளிகள் விட தலை வலி, காக்கை வலி தணியும். இதன் வேரை காடி விட்டு அரைத்து தேள் கடிக்குப் பூசலாம், நெறிக்கட்டிகள், வீக்கம், கீல்வாதம் முதலியவைகளுக்கும் வெளிப்பூச்சாகப் பூசலாம்.
Post a Comment