தென்னிந்திய சமையல்! அச்சு முறுக்கு முறுக்கு தேவையானவை: பச்சரிசி & 2 கப், வறுத்து அரைத்த உளுத்த மாவு & முக்கால் கப், சர்க்கரை ...

தென்னிந்திய சமையல்!
அச்சு முறுக்கு முறுக்கு
தேவையானவை: பச்சரிசி & 2 கப், வறுத்து அரைத்த உளுத்த மாவு & முக்கால் கப், சர்க்கரை & ஒன்றரை ஆழாக்கு, எள் & ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறவைத்த அரிசியை நன்கு கழுவி, கிரைண்டரில் போட்டு, மாவு நைஸாக அரைபட்டதும் அதனுடன் சர்க்கரையையும் சேர்த்து நன்கு அரைத்தெடுங்கள். பிறகு, மாவை எடுத்து அதனுடன் எள்ளைச் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். தோசை மாவை விட, சற்று நீர்த்த பக்குவத்தில் இந்த மாவு இருக்கவேண்டும். எண்ணெயைக் காயவைத்து, அதற்குள் அச்சு முறுக்குக் கரண்டிகளை (அச்சு மட்டும் எண்ணெய்க்குள் இருக்கும்படி) போட்டு, சிறிது நேரம் சூடாக்குங்கள். பிறகு, ஒவ்வொரு கரண்டியாக எடுத்து, அதன் முக்கால் பாகம் மட்டும் மாவுக்குள் மூழ்குமாறு, கரண்டியை மாவில் தோய்த்தெடுங்கள். தோய்த்த வேகத்தில் காயும் எண்ணெயில் போடவேண்டும்.
முறுக்கு பாதி வெந்ததும், அதுவாகவே அச்சிலிருந்து பிரிந்துவிடும். அப்படிப் பிரியவில்லை என்றாலும், ஒரு சிறிய கரண்டியால் எடுத்துவிட்டால், விழுந்து விடும். ஒவ்வொரு கரண்டியையும் மாவில் நனைத்து, நனைத்து எடுத்து, எண்ணெயில் விட்டெடுங்கள். ஒவ்வொரு முறையும் 4 அல்லது 5 முறுக்குகள் (வாணலியைப் பொறுத்து) போடலாம். அடுப்பை மிகக் குறைந்த தீயில் வைத்து அச்சு முறுக்குகளை வேகவிட்டெடுங்கள். கரகரப்பான, ருசியான இந்த அச்சு முறுக்கு, கேரளத்தவருக்குப் பிடித்தமான ஸ்நாக்ஸ்.
குறிப்பு: அதிகமான தீயில் வைத்து வேகவைத்தால், மாவில் சர்க்கரை சேர்த்திருப்பதால், முறுக்கு சிவந்துவிடும். கேரளாவில் இது இன்னொரு முறையிலும் செய்யப்படுகிறது. மைதாமாவைக் கரைத்து, அதில் முட்டையை அடித்து, பேக்கிங் சோடா, சர்க்கரை சேர்த்துக் கலந்தும் அச்சு முறுக்கு செய்யலாம்.
--------------------------------------------------------------------------------------------
Post a Comment