உணவே மருந்து : வேப்பம்பூ இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமர...
உணவே மருந்து : வேப்பம்பூ
இந்த உலகில் எத்தனையோ வகையான மரங்களும், செடி கொடிகளும் இருந்தாலும்... அவை எல்லாம் வேப்பமரத்துக்கு ஈடாகாது. வேப்பமரத்திலிருந்து கிடைக்கும் வேப்பிலை, வேப்பம்பூ, வேப்பங்கொட்டை, வேப்ப எண்ணை, வேப்பம்பட்டை என அனைத்தும் நமக்கு உணவாக... மருத்துவப் பொருட்களாக பயன்படுகின்றன.
பொதுவாகவே, தமிழ் மருத்துவத்தில் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப, அந்தந்த சூழலுக்கு ஏற்ப... உணவுப் பழக்க வழக்கமும் மாறும். தட்ப வெப்பநிலைக்கு அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகளையே நாம் சாப்பிட வேண்டும். கோடை காலம் ஆரம்பிக்கும் இந்த சித்திரை மாதத்தில் வேப்பம்பூ பூத்து... காற்றில் ஒருவித நறுமணத்தை பரப்பிக் கொண்டிருக்கும். கிருமி நாசினியான வேப்பம்பூவில் பல மருத்துவ குணங்கள் பொதிந்துள்ளன.
வெயில் காலத்தில் ஏற்படும் நாவறட்சி, தோல் வியாதி, அரிப்பு, வயிற்றுப்பிரட்டல் போன்ற பிரச்சினைகளுக்கு வேப்பம்பூ சிறந்த மருந்தாகின்றது. கபம், பித்தம் சம்பந்தப்பட்ட வியாதிகளை வேப்பம்பூ கட்டுப்படுத்தும்.
குடலில் தங்கியுள்ள கிருமிகளை அழிக்கும் ஆற்றல் வேப்பம்பூவுக்கு உண்டு. பாங்காக்கில் உள்ள தேசிய புற்று நோய் ஆராய்ச்சி நிறுவனம், `புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை வேப்பம்பூ அழிக்கும் தன்மை வாய்ந்தது' எனக் கண்டறிந்து நிரூபித்துள்ளனர். `அரோமா தெரபி' எனப்படும் சிகிச்சையில் மன அமைதியையும், சாந்தமான மனநிலையை உண்டாக்க வேப்பம்பூவை பயன்படுத்துகின்றனர்.
கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும் வேப்பம்பூவை சேகரித்து, நிழலில் உலர்த்தி வைத்து, அதை சில வாரங்கள் பயன்படுத்தலாம். பழங்காலத்தில் வேப்பம்பூ பச்சடி சமைத்து சாப்பிட்டனர். இப்போதும் சித்திரை மாதத்தில் கிராமங்களில் வேப்பம்பூ பச்சடி சாப்பிடுகின்றனர். நீங்களும் தயாரித்து சாப்பிடுங்கள்.
வேப்பம்பூ பச்சடி:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
புளி - சிறிய எலுமிச்சை அளவு (அல்லது வேகவைத்த சிறிய மாங்காய்)
வெல்லம் - 2 மேஜைக்கரண்டி
கடுகு, காய்ந்த மிளகாய் - தாளிக்கும் அளவுக்கு
எண்ணை - ஒரு தேக்கரண்டி.
செய்முறை:
புளியை கரைத்து வெல்லம் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். வேப்பம்பூவை சிறிது நெய்விட்டு நன்கு வதக்கி கலந்து விடவும். கடுகு, காய்ந்தமிளகாய் இரண்டையும் சேர்த்து தாளித்து வேப்பம்பூவில் விடவும்.
புளிக்கு பதிலாக வேக வைத்த மாங்காயில் வெல்லம் கலந்தும் செய்யலாம்.
வேப்பம்பூ ரசம்:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 50 கிராம்
வேக வைத்த துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி(கரைத்துக் கொள்ளவும்)
புளி - சிறிய எலுமிச்சை அளவு
ரசப்பொடி - 2 தேக்கரண்டி
கடுகு, சீரகம், கறிவேப்பிலை - தாளிக்க
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
புளியைக் கரைத்து, ரசப்பொடி கலந்து நன்றாக கொதிக்க விடவும். அதில் பருப்பு, தண்ணீரை சேர்த்து, வேப்பம்பூவை வதக்கி, அதில் கலந்து... பின்னர் தாளிக்கவும். உப்பு, பெருங்காயம் கலந்து இறக்கவும். இதை சாப்பாட்டிற்கு முன்னால் சூப்பாகவும் குடிக்கலாம்.
வாரம் ஒரு தடவை இந்த ரசத்தை நம் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புழு, பூச்சிகள் அழியும். பசியின்மை, வயிற்றுக் கோளாறுகள் நீங்கும், ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
வேப்பம் பூ ரசம்-2
தேவையான பொருட்கள்: நிழலில் காய வைத்த வேப்பம் பூ-1 கைப்பிடி, தனியா, துவரம் பருப்பு-தலா 1 மேஜைக்கரண்டி, காய்ந்த மிளகாய்_8, பெருங்காயத்தூள்- ½ டீஸ்பூன், எண்ணெய்-1 மேஜைக்கரண்டி, கடுகு- ½ டீஸ்பூன், நெய்-2 டீஸ்பூன், புளி-ஒரு எலுமிச்சை அளவு, உப்பு-சுவைக்கேற்ப.
செய்முறை: வாணலியில் எண்ணெய் சூடானதும், தனியா, துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். இதில் 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு, புளி சேர்த்து சிம்மில் கொதிக்க விடவும். இதில் நெய்யில் கடுகு தாளித்து, வேப்பம் பூவை சிவக்க வறுத்துப் போட்டு கீழே இறக்கி வைக்கவும்.
வேப்பம்பூ துவையல்:
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 100 கிராம்
புளி - நெல்லிக்காய் அளவு
காய்ந்த மிளகாய் - 4
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம், உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணை - 2 தேக்கரண்டி.
செய்முறை:
வாணலியில் வேப்பம்பூ, புளி, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். உளுத்தம்பருப்பைத் தவிர்த்து, மற்ற அனைத்தையும் நன்கு அரைத்து, பின்பு உளுத்தம்பருப்பை `நறநற'வென அரைத்து சுவையுங்கள். இதை சுடுசாதம் அல்லது இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
வேப்பம்பூ துவையல்:2
தேவையானவை: உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் & 5, புளி & கொட்டைப் பாக்கு அளவு, வெல்லம் & கொட்டைப்பாக்கு அளவு, வேப்பம்பூ & கால் கப், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: சிறிது எண்ணெய் விட்டு உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும். வேப்பம்பூவை தனியாக சிறிது எண்ணெய் ஊற்றி கருப்பாக நிறம் மாறும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வறுத்த பருப்பு, மிளகாய், வேப்பம்பூ, புளி, உப்பு, வெல்லம் எல்லாவற்றையும் சேர்த்து நைஸாக அரைத்து எடுக்கவும். இந்த துவையல் உடம்புக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை செய்து சாப்பிட்டால் பித்தம் சேராது. உணவில் வேப்பம்பூ சேர்க்க நினைப்பவர்கள், சுவையான இந்தத் துவையல் செய்யலாம்.
வேப்பம்பூ பொடி...
தேவையான பொருட்கள்:
காய்ந்த வேப்பம்பூ - 200 கிராம்
உளுத்தம் பருப்பு - 50 கிராம்
கொத்தமல்லி - 50 கிராம்
காய்ந்த மிளகாய் - 6 முதல் 8
உப்பு, பெருங்காயப் பொடி - தேவையான அளவு
செய்முறை:
எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து, அரைத்து பொடி செய்து கலந்து கொள்ளவும். சூடான சாதத்தில் ஒன்று அல்லது இரண்டு கரண்டி பொடியை தூவி, சிறிது நெய் கலந்து சாப்பிட்டால் பித்த நோய்களான வாய்க்கசப்பு, வாந்தி, மயக்கம் போன்றவை நீங்கும்.
வேப்பம்பூ உருண்டை...
தேவையான பொருட்கள்:
வேப்பம்பூ - 2 மேஜைக்கரண்டி
வெல்லம் - சிறிய நெல்லிக்காய் அளவு.
செய்முறை:
வேப்பம்பூவை சிறிது நெய் விட்டு வறுத்து, பொடியாக்கி, வெல்லத்துடன் சேர்த்து உருண்டை செய்து கொள்ளவும். வாரம் ஒரு முறை குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றுப்பூச்சி நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். (வேப்பம்பூ பதப்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலான கடைகளில் கிடைக்கும்)
Post a Comment