வாழைப்பூ கட்லெட் தேவையானவை: வாழைப்பூ & 1 (ஆய்ந்தது), உருளைக் கிழங்கு & 2 (பெரியது), பொட்டுக்கடலை & 50 கிராம், பிரட் துண்டுகள...
வாழைப்பூ கட்லெட்
தேவையானவை: வாழைப்பூ & 1 (ஆய்ந்தது), உருளைக் கிழங்கு & 2 (பெரியது), பொட்டுக்கடலை & 50 கிராம், பிரட் துண்டுகள் & 4, இஞ்சி & சிறிய துண்டு, பூண்டு & 6 பல், பச்சை மிளகாய் & 2, தனி மிளகாய்தூள் & 1 டீஸ்பூன், கரம் மசாலா தூள் & 1 டீஸ்பூன், மஞ்சள்தூள் & அரை டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு, கறி வேப்பிலை, கொத்துமல்லி (பொடியாக நறுக்கியது) & சிறிது.
செய்முறை: வாழைப்பூவை நன்கு ஆய்ந்து மிக்ஸியில் பொடி செய்து கொள்ளவும். பொட்டுக்கடலையை நன்கு பொடிக்கவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பிரட் துண்டுகளை நீரில் நனைத்து ஒட்டப் பிழிந்து உதிர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் நைசாக அரைத்து கொள்ளவும். இப்போது எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து மிளகாய்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு போட்டு நன்கு பிசறவும். கறிவேப்பிலை, கொத்துமல்லித்தழை போடவும் (தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் இரண்டையும் சேர்த்துக் கொள்ளலாம்). எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து, விரும்பிய வடிவத்தில் வடை போல் தட்டி எண்ணெயில் பொரிக்கலாம். அல்லது தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கலாம். இது மாலை நேரத்துக்கான, சத்து மிகுந்த டிபன்.
வாழைப்பூ கட்லெட்: வாழைப்பூவின் துவர்ப்பு சுவை பிடிக்காதவர்கள், உருளைக்கிழங்கின் அளவைக் கூட்டிக்கொள்ளலாம்.கட்லெட்டை வேகவைக்கும்போது, அடுப்பை ஸிம்மில் வைத்து, நிதானமாக வேகவிடுங்கள். இல்லையென்றால், வெளியே சிவந்திருக்கும். உள்ளே அப்படியே வேகாமல் இருக்கும்.
----------------------------------------------------------------------------------------
நூல்கோல் வடை
தேவையானவை: நூல்கோல் & 2, பொட்டுக்கடலை மாவு & 1 கப், பச்சை மிளகாய் & 3, இஞ்சி & 1 துண்டு, பெரிய வெங்காயம் & 3, கறிவேப்பிலை & சிறிது, பூண்டு & 10 பல், உப்பு, எண்ணெய் & தேவைக்கேற்ப, கடுகு & தாளிக்க.
செய்முறை: நூல்கோலை தோல் சீவி துருவி, தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, நறுக்கிய எல்லாவற்றையும் அதில் கொட்டி உப்பு சேர்த்து வதக்கவும். நூல்கோலையும் அதில் சேர்த்து தண்ணீர் விடாமல் வதக்கி, காய் வெந்ததும் பொடித்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து 1 நிமிடம் கிளறி இறக்கவும். இதில் கொத்து மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிப் போட்டு, காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு, சிவக்க வேக வைத்தெடுங்கள். வடையாகத் தட்டாமல், அப்படியே உதிராகவும் பரிமாறலாம். இந்த நூல்கோல் புட்டு, சூடாக சாப்பிட சுவை அள்ளும்.
நூல்கோல் வடை: கலவை இளக்கமாக இருந்தால் பொட்டுக்கடலைப் பொடியை அதிகமாகப் போட்டுக்கொள்ளுங்கள். நூல்கோல் பிடிக்காதவர்களையும் சாப்பிட வைக்கும் இதன் ருசி.
---------------------------------------------------------------------------------------------
கொய்யா பர்ஃபி
தேவையானவை: நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் & 5, சர்க்கரை & மூன்றரை கப், வெண்ணெய் & கால் கப், சிட்ரிக் ஆசிட் & 1 கிராம், உப்பு & அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) & 5.
செய்முறை: பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும். நன்கு கெட்டிப்பட்டதும் நெய் பூசிய ஒரு தட்டில் கொட்டி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இப்பொழுது சூடான கொய்யா பர்ஃபி தயார்.
கொய்யா பர்ஃபி: மிகவும் கனிந்துவிட்ட கொய்யா பழங்களை வீணாக்காமல், இந்த முறையில் பர்ஃபி செய்யலாம். சூப்பர் டேஸ்ட்!
--------------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment