இதயத்தின் நண்பன் `பாதாம்' பாதாம் பருப்பானது, ஒமேகா 3:6 எனப்படும் நல்ல கொழுப்புச் சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலில் நல...

இதயத்தின் நண்பன் `பாதாம்'
பாதாம் பருப்பானது, ஒமேகா 3:6 எனப்படும் நல்ல கொழுப்புச் சத்தின் மூலம் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நம் உடலில் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் வல்லவன். ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும் நல்லவன். எலும்புகளை வலுப்படுத்தும் சிநேகிதன். நம் புத்தியை கூர்மைப்படுத்தும் புத்திமான். நம் தோலை பளபளப்பாக்கி ஆரோக்கியமாக்க வல்ல சக்தி படைத்தவன்.
குறைந்த அளவில் சாப்பிட்டாலே நிறைந்த பலன் தரும் சக்தி வாய்ந்த பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு சிறிது நேரம் வைத்து தோலுரித்து விழுதாக மிக்சியில் அரைத்து உபயோகிக்கையில் சுவைமிக்கதாக எளிதில் ஜீரணிக்கத் தக்கவையாக ஆகின்றன.
பாதாம் சூப்
தேவையான பொருட்கள்
பாதாம் - 100 கிராம்,
பால் - 1 கப்,
உப்பு - 1 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
காய்கறி ஸ்டாக் செய்ய
கேரட், கோஸ், பீன்ஸ், நூல்கோல், காலிபிளவர் (நறுக்கியது) - 1 கப்
செலரி - சிறிதளவு
தண்ணீர் - 4 கப்
ஒயிட் சாஸ் செய்ய
வெண்ணை - 50 கிராம்
சோள மாவு - 50 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
பால் - 2 கப்
செய்முறை
காய்கள் மற்றும் செலரியை 4 கப் தண்ணீரில் போட்டு மிதமான தீயில் நன்கு கொதிக்கவிட்டு, ஒரு உலோக வடிகட்டியில் போட்டு, வடிகட்டி வடிந்த நீரை `காய்கறி ஸ்டாக்` ஆக எடுத்துக் கொள்ளவும்.(வேக வைத்த காய்களை பொரியல், கூட்டு போன்றவற்றிக்கு
உபயோகிக்கவும்.)அடிகனமான ஒரு வாணலியில், வெண்ணை ஊற்றி, அது உருகியவுடன் குளிர்ந்த பாலில் நன்கு கரைத்த மைதா மாவு, சோளமாவுக் கலவையைச் சேர்த்து கெட்டியாகிவிடாத அளவிற்கு கிளறிவிட்டுக் கொண்டே இருக்கவும். சற்றே கெட்டியானதும் `ஒயிட் சாஸாக' எடுத்துக் கொள்ளவும். தேவையானால் 1 கப் தண்ணீர் சேர்க்கலாம்.
பாதாம் பருப்புகளை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைத்து, தோலை உரித்து விழுதாக மிக்சியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
பாலைக் கொதிக்க வைத்து அதில் பாதாம் விழுதைச் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பாதாம் விழுது பாலில் நன்கு வெந்த வாசம் வந்தவுடன் காய்கறி ஸ்டாக், ஒயிட் சாஸ், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும்.
குறிப்பு
நல்ல சுவையுடன் கூடிய இந்த சூப்பை ஒரு கப் குடித்தாலே வயிறு நிரம்பும் வண்ணம் இருக்கும்.
பாதாம் பருப்பின் சத்துக்கள், காய்கறி சத்துக்கள், பாலின் சக்தி, வெள்ளை மிளகுத்தூளின் சுவை, வெண்ணையின் மிதமான கொழுப்பு ஆகியவை சேர்ந்த இந்த `பாதாம் சூப்` சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த முழு உணவாகும்.
Post a Comment