கோதுமை பாதாம் கீர் தேவையானவை: முழு சம்பா கோதுமை - அரை கப், பாதாம் பருப்பு - 25, பால் - 2 கப், வெல்லம் - அரை கப், குங்குமப்பூ, ஏலக்காய் - ...
கோதுமை பாதாம் கீர்
தேவையானவை: முழு சம்பா கோதுமை - அரை கப், பாதாம் பருப்பு - 25, பால் - 2 கப், வெல்லம் - அரை கப், குங்குமப்பூ, ஏலக்காய் - சிறிதளவு.
செய்முறை: சம்பா கோதுமையையும் பாதாம் பருப்பையும் முந்தின நாள் இரவே தனித் தனியே ஊற வைக்கவும். ஊறிய கோதுமையை மிக்ஸியில் அரைத்து, வடிகட்டி 2 கப் அளவுக்கு பால் எடுக்கவும். பாதாம் பருப்பைத் தோலுரித்து, பொடியாக நறுக்கி, சிறிது பாலை விட்டு அரைத்துக் கொள்ளவும். கோதுமை பாலில் அரைத்த பாதாம் விழுதைக் கலக்கி சாதாரண பாலுடன் சேர்த்து நன்றாகக் கிளறி காய்ச்சவும்.
எல்லாம் சேர்ந்து வந்ததும் குங்குமப் பூவை கரைத்து ஊற்றி ஏலக்காயை தட்டிப் போடவும். இதில் வெல்லத்தை பொடித்துப் போட்டு, தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி கலக்கவும். ஃப்ரிட்ஜில் வைத்துப் பரிமாறவும்.
கோதுமை பாதாம் கீர்: வெல்லத்துக்கு பதிலாக சர்க்கரையும், பனங்கல்கண்டும் சம அளவு சேர்த்துச் செய்தால் சுவையும் மணமும் நன்றாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
தேங்காய்ப்பால் மிளகாய் கறி 
தேவையானவை: கெட்டியான தேங்காய்ப் பால் - அரை கப், சின்ன வெங்காயம் - ஒரு கப், பச்சைமிளகாய் - 50 கிராம், வெல்லம் - சிறு துண்டு, பெருங்காயத்தூள், கடுகு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, உப்பு - தேவையான அளவு, புளி - நெல்லிக்காய் அளவு, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பச்சைமிளகாயை நீளவாக்கிலும் வெங்காயத்தை சின்னதாகவும் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, பச்சைமிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு, மிதமான தீயில் வதக்கவும். நன்றாக வதங்கியதும் புளியைக் கரைத்து விட்டு உப்பு, பெருங்காயத்தூள், வெல்லம் போட்டு கொதிக்க விடவும். எல்லாம் சேர்ந்து கெட்டியாக வரும்போது அடுப்பை அணைத்து, சூடு ஆறியதும் தேங்காய்ப் பாலை விட்டு கலக்கவும்.
இட்லி, தோசைக்கு பொருத்தமான சைட் டிஷ்!
தேங்காய்ப்பால் மிளகாய் கறி: தேங்காய்ப்பாலுடன் சிறிது கசகசாவை அரைத்து சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
----------------------------------------------------------------------------
பிஸ்கட் பர்ஃபி 
தேவையானவை: பிஸ்கட் தூள் - கால் கப், பால் - 3 கப், சர்க்கரை - 2 கப், தேங்காய் துருவல் - அரை கப், நெய் - சிறிது, பொடித்த முந்திரி - கால் கப்.
செய்முறை: முந்திரியை சிறிது பால் விட்டு அரைக்கவும். பிஸ்கட் தூளில் பாதி அளவு எடுத்து அடி கனமான கடாயில் போட்டு பால், சர்க்கரை, தேங்காய் துருவல், முந்திரி விழுது சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். பர்ஃபி போல் ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும்.
தாம்பாளத்தில் நெய் தடவி சிறிது பிஸ்கட் தூளை சமமாக தூவவும். அதில் பர்ஃபியை கொட்டி உடனே மீதம் உள்ள பிஸ்கட் தூளை பரவலாக தூவி சமப்படுத்தவும். லேசாக ஆறியதும் துண்டுகள் போடவும்.
பிஸ்கட் பர்ஃபி: பாதாம், பிஸ்தா, அக்ரூட் போன்ற நட்ஸ் வகைகளிலும் இதைச் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
Post a Comment