ஆட்டுக்கால் குழம்பை ஏற்ற நபிகள் நாயகம் ""வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் வ...

ஆட்டுக்கால் குழம்பை ஏற்ற நபிகள் நாயகம்
""வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் விருந்தாகும்,'' என்று நபிகள் நாயகம் கூறினார்.
ஒரு ஏழையின் வீட்டில் நிக்காஹ் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அவர், தன் பக்கத்து வீட்டிலுள்ள செல்வந்தர் ஒருவரையும் தன் வீட்டு திருமணத்தில் பங்கேற்று, விருந்துண்டு செல்லுமாறு அழைக்கிறார். அந்த செல்வந்தர், ""இது ஏழை வீட்டு கல்யாணம் தானே, அங்கே நாம் ஏன் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன இருந்து விடப் போகிறது. மேலும், அங்கு சென்றால், தனக்கு அவமானமல்லவா ஏற்படும் என நினைக்க கூடாது. நபிகள் நாயகத்துக்கு ஒருமுறை ஏழை ஒருவர், ஆட்டுக்கால் குழம்பை கொடுத்தார். அதை அன்போடு ஏற்றுக் கொண்டார் நாயகம். இதுபோல் செல்வந்தர்கள் வீட்டு விருந்துக்கும், ஏழைகள் அவசியம் அழைக்கப்பட வேண்டும்.
நல்லது நடக்கட்டும்
"நல்ல விஷயங்கள் என் வாழ்வில் நடக்கட்டும்' என ஒவ் வொரு மனிதனும் நினைக்கிறான். அது தவறல்ல. ஆனால், இதே நினைப்பு பிறரைப் பொறுத்த வரை வருகிறதா என்றால் பலரிடமும் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு திருமண விழாவில் கூட மணமக்கள் கருத்தொருமித்து பல்லாண்டு வாழ வேண்டும் என யாரும் மனதார வாழ்த்துவதில்லை. ஏதோ ஒரு கடமையாக அதை செய்து விட்டு வருகிறார்கள்.
யாராவது , ""எனக்கு நோய் வரட்டும், நான் கடன் சுமையில் உழல தயாராகஉள்ளேன்,'' என் றெல்லாம் சொல்வார்களா? ""பணம் குவியட்டும், நோயற்ற வாழ்வு கிடைக்கட்டும், என் குழந் தைகள் நன்றாக படிக்கட்டும்,''என்று தானே நினைப்பார்கள். இதே நிலை பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைக்க வேண்டும்.
""தான் விரும்பியதை தன் சகோதரனுக்கும் விரும்புவதை அல்லது தான் விரும்பியதை தன் அண்டை வீட்டுக்காரனுக்கு விரும்பும் வரை உங்களில் ஒருவன் ஈமான் கொண்டவனாக ஆக முடியாது,'' என்று நபிகள் நாயகம் சொல்கிறார். நல்லதையே நினைப்போம்... நமக்கு மட்டுமல்ல, பிறருக்கும் சேர்த்து.
நோயாளிக்கு ஆறுதல்
நோயாளிக்கு ஆறுதல் சொல்வதன் மூலம், நோயாளி மட்டுமின்றி, நலம் விசாரிப்பவரும் பலன் பெறுவார் என்கிறது இஸ்லாம். நபிகள் நாயகத்திடம் இது குறித்து தோழர் ஒருவர் கேட்ட போது, ""யார் ஒருவர் நோயாளியை நலம் விசாரிக்கிறாரோ, அவர் சொர்க்கத்து கிர்பாவில் இருந்து நீங்காமல் இருக்கிறார்,''என்றார்.
"கிர்பா' என்றால் "சொர்க்கத்தின் பழம்' எனப் பொருள். இது மட்டுமல்ல. ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமை நலம் விசாரித்தால், காலை முதல் மாலை வரை 70 ஆயிரம் மலக்குகள் அவர் மீது எழுபதாயிரம் முறை "ஸலவாத்' கூறுவார்கள். இரவில் நலம் விசாரித்தால், மறுநாள் காலை வரை ஸலாவத் சொல்வார்கள்.
""பசித்தவருக்கு உணவளியுங்கள், நோயாளியை நலம் விசாரியுங்கள், கைதியை விடுதலை செய்யுங்கள்,'' என்கிறார் நாயகம். அது மட்டுமல்ல. மறுமை நாளில் அல்லாஹ் நம்மிடம், ""ஆதமின் மகனே! நான் நோயுற்ற போது என்னை நீ விசாரிக்கவில்லையே என கேட்பான். அதற்கு நாம், ""இறைவா! நீயோ அகிலத்தின் அதிபதியாக உள்ளாய். அப்படியிருக்க, நான் உன்னை எப்படி நலம் விசாரிப்பேன்,'' என்போம்.
அதற்கு அல்லாஹ், ""என்னுடைய அடியான் (பக்தி செலுத்துபவர்) நோயுற்றான் என்பதை நீ அறியவில்லையா? நீ அவனை நலம்விசாரிக்கவில்லை. அவனை நீ நலம் விசாரித்திருந்தால் என்னை நீ பெற்றிருப்பாய்,'' என்று கூறுவான். இதன் பொருள் புரிகிறதா? இப்பூமியில் வாழும் ஒவ்வொரு உயிருக்குள்ளும் இறைவன் வாழ்கிறார் என்பது தான். இனியேனும், நோயாளிகளுக்கு ஆறுதல் கிடைக்கும் வகையில், மனதார ஆறுதல் சொல்லுங்கள். இறைவனின் கருணையைப் பெறுங்கள்.
Post a Comment