தேவையானவை கூடை தட்டின பொடி - 1/4 கிலோ (இது மீனோட பேருதான்) தக்காளி - 1/4 கிலோ சின்ன வெங்காயம் - 1/4 கிலோ பூண்டு - 1 மஞ்சள் தூள் - 1/2 டீஸ்ப...

தேவையானவை
கூடை தட்டின பொடி - 1/4 கிலோ
(இது மீனோட பேருதான்)
தக்காளி - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
பூண்டு - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
தனியாத் தூள் - 3 டீஸ்பூன்
புளி - ஒரு எலுமிச்சை அளவு
நல்லெண்ணை - ஒரு குழிக்கரண்டி
கடுகு - ஒரு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
வெந்தயம் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - ஒரு டீஸ்பூன்
சீரகம் - ஒரு டீஸ்பூன்
செய்முறை
அப்படியே நெத்திலி மீன் குழம்பு போல்தான். ஆனால் புளித்தண்ணி கரைச்சு விடறதுக்கு முன்னால் மிளகு, சீரகம் அரைச்சு கரைச்சு விடணும். மத்தபடி எல்லாம் அதேமாதிரி செய்முறை தான். கடைசியா குழம்பு கொதிக்கிறப்போ கூடை தட்டின பொடியை அள்ளிப்போட்டு ரெண்டு கொதி கொதிக்கவிட்டு இறக்கணும். உடம்பு, கைகால் வலிக்கு இந்தப் பொடி மீன் குழம்பு வச்சு சாப்பிட்டு பாருங்க, வலியெல்லாம் பறந்தே போயிடும்.
குறிப்பு:
`ஆமா கூடை தட்டின பொடி, கூடை தட்டின பொடின்றீங்களே?' அப்படின்னா என்ன சார்ன்னுதானே கேக்கிறீங்க. கடல்ல மீன் பிடிச்சிட்டு வர்றப்போ பெரிய மீன்களுக்கு இடையில மாட்டுற பொடி மீன்கள் தான் அவை. கடைசியா கூடையைத் தட்டுறப்போ அது வந்து விழுகிறதால அதுக்கு அந்தப் பேர். அந்த கூ.த.பொ. கிடைக்கலன்னா சுதும்பு, சங்கரா, மத்தி, வாளை போன்ற மீன் வகைகளை சேர்த்துக்கலாம். எல்லாமே குழம்புக்கு நல்லாருக்கும்.
கிராமப்புறங்களில் கருவாட்டுக்குழம்பு என்றால் ஒரு பிடி பிடிக்கும் ஆட்கள் இப்போதும் இருக்கிறார்கள். அதிலும் மொச்சைக்கொட்டை சேர்த்த கருவாட்டுக் குழம்பு என்றால் ருசிக்கு கேட்கவே வேண்டாம். இந்த வாரம் மீன், கருவாட்டுக் குழம்பு பக்கம் வருவோம்.
இந்தக் குழம்பு அப்படியே கத்தரிக்காய், முருங்கைக்காய், மொச்சைக் குழம்பு போலத்தான். தேவையான பொருட்களுடன் 1/4 கிலோ கருவாடு சேர்க்கணும். தாளிச்ச பிறகு கருவாடைப் போட்டு வதக்கி விட்டு மொச்சை சேர்க்கலாம். பிடிக்குமென்றால் மொச்சைக்கு முன்பாக கத்தரிக்காய், முருங்கைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளலாம். மற்ற செய்முறை எல்லாம் மொச்சைக் குழம்பு மாதிரிதான்.
குறிப்பு:
கருவாட்டை முதலிலேயே சேர்த்து வதக்காமல், கடைசியாக குழம்பு கொதிக்கும் போதும் போடலாம். அது ஒருவித ருசியாக இருக்கும். இந்தக் குழம்புக்கு ஓலை வாளைக் கருவாடு, சுதும்புக் கருவாடு ஆகிய இரண்டும் செம டேஸ்ட்டா இருக்கும்.
கருவாட்டைப் பதப்படுத்துறதுக்காக அதில் உப்பு, சுண்ணாம்பு சேர்ப்பாங்க. எனவே கருவாடை நன்றாக கழுவிவிட்டு பயன்படுத்த வேண்டும். கருவாட்டைக் கழுவுறதுக்குன்னு ஒருமுறை இருக்கு. இரண்டு கைகளுக்கிடையில் கருவாட்டை வச்சுகிட்டு கைத்தட்டுற மாதிரி தட்டணும். அப்போ அதில் ஒட்டி இருக்கிற அதிகப்படியான உப்பும், சுண்ணாம்பும் உதிர்ந்துவிடும். அதுக்கப்புறம் சொரசொரப்பான கல் அல்லது தரையில் நல்லாத் தேச்சுட்டு நிறைய தண்ணி ஊற்றி கழுவி எடுத்துடணும்.
இந்த முறைப்படி கழுவினாத்தான் கருவாட்டில் இருக்கிற உப்பும், சுண்ணாம்பும் நீங்கி குழம்பு வைக்கிறதுக்கு நல்லாயிருக்கும்.
Post a Comment