தேவையானவை பாசுமதி அரிசி - 1 கப் வெண்ணை/ எண்ணை - 8 டேபிள் ஸ்பூன் வெங்காயம் - 2 முட்டைக்கோஸ் - 50 கிராம் கேரட் - 2 குடமிளகாய் (பச்சை, மஞ்சள்...

தேவையானவை
பாசுமதி அரிசி - 1 கப்
வெண்ணை/ எண்ணை - 8 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
முட்டைக்கோஸ் - 50 கிராம்
கேரட் - 2
குடமிளகாய் (பச்சை, மஞ்சள், சிவப்பு) - தலா 1
வெள்ளை மிளகுத்தூள் - ½ டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
சைவ அஜினமோட்டோ - 1 சிட்டிகை
சோயா சாஸ் - ½ டீஸ்பூன்
சில்லி வினிகர் - ½ டீஸ்பூன்
சில்லி சாஸ் - ½ டீஸ்பூன்
நறுக்கிய வெங்காயத்தாள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - 1½ டீஸ்பூன்
செய்முறை
* அடிகனமான வாணலியில் 4 டேபிள் ஸ்பூன் வெண்ணை அல்லது எண்ணையை ஊற்றி லேசான தீயில் பாசுமதி அரிசியை சற்று வாசனை வர வறுக்கவும்.
* வறுத்த அரிசியை குக்கரில் இட்டு 1½ கப் தண்ணீர் ஊற்றி 2 விசில் விட்டதும் உதிரி உதிரியாக சமைத்து தனியே எடுத்து வைக்கவும்.
* அனைத்துக் காய்களையும் நீட்டமாக, மிக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.
* அடிகனமான பெரிய வாணலியில் வெண்ணை அல்லது எண்ணை ஊற்றி இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து சிறிது வதக்கவும்.
* பிறகு அரிந்த காய்கள், வெள்ளை மிளகுத்தூள், உப்பு சேர்த்து வாணலியில் போட்டு வாணலியை கைகளால் குலுக்கியபடி காய்களை அரை வேக்காடாக வதக்கவும். பின்பு வடித்த பாசுமதி அரிசி சாதம், சோயா சாஸ், சில்லி வினிகர், சில்லி சாஸ், சைவ அஜினமோட்டோ ஆகியவற்றைச் சேர்த்து அரிசி சாதம் உடையாமல் நன்கு கலந்து சிறிது வதக்கி அடுப்பை அணைக்கவும்.
* பொடியாக அரிந்த வெங்காயத்தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
இளம் பருவத்தினரின் `பேவரேட்' உணவு வகையான `வெஜிடபிள் பிரைடு ரைஸ்` தன்னகத்தே பல பச்சைக் காய்களின் சத்தையும், சக்தியையும் அடக்கி உள்ள சாத வகையாகும். அடுப்பை நன்கு பெரியதாக எரியவிட்டு வாணலியை உயர்த்திப் பிடித்து (டாஸ் செய்தாற்போல்) குலுக்கி பச்சைக் காய்களை அரை வேக்காடாக வதக்கி செய்யப்படும் வெஜிடபிள் பிரைடு ரைஸ் பச்சைக் காய்கறிகளின் பெரும்பாலான சத்தை தன்னிடத்தே தக்க வைத்துக் கொள்கிறது.
வெங்காயத்தின் நார்ச்சத்து, முட்டைக்கோசின் வைட்டமின் `சி' சத்து, கேரட்டின் வைட்டமின் `ஏ` சத்து, குடமிளகாய்களின் வைட்டமின் `ஈ' மற்றும் `கே` சத்து அனைத்துப் பச்சைக்காய்களின் மினரல்கள், இஞ்சியின் செரிமான சக்தி, கெட்ட கொழுப்பை குறைக்க வல்ல பூண்டின் சக்தி, மிளகுத் தூளின் செரிமான சக்தி, பாசுமதி அரிசியின் எனர்ஜி மற்றும் தனிப்பட்ட மணமும் நிறைந்த `வெஜிடபிள் பிரைடு ரைஸ்` தயாரிப்பது மிக மிக சுலபம்.
அரை வேக்காடாக காய்களை வதக்குவதால், காய்களின் சத்து அதிகம் பாழாவதில்லை என்பதுடன், செய்வது மிக விரைவாக முடியும் என்பது சமைப்பவர்களுக்கான போனஸ் செய்தி.
Post a Comment