தேவைப்படும் பொருட்கள்: (முதலில் பிஷ் மசாலா தயாரிக்க வேண்டும்) * கெட்டியான மீன்- 500 கிராம். * மிளகாய்த்தூள்- ஒரு மேஜைக்கரண்டி. * மஞ்சள் தூ...

தேவைப்படும் பொருட்கள்:
(முதலில் பிஷ் மசாலா தயாரிக்க வேண்டும்)
* கெட்டியான மீன்- 500 கிராம்.
* மிளகாய்த்தூள்- ஒரு மேஜைக்கரண்டி.
* மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி.
* இஞ்சி, பூண்டு அரைப்பு- ஒரு மேஜைக்கரண்டி.
* எலுமிச்சை சாறு- ஒரு தேக்கரண்டி.
* வெஜிடபிள் ஆயில்- வறுப்பதற்கு.
(அனைத்து பொருட்களையும் ஒன்றாக்கி, மீனில் பூசி எண்ணையில் அதிகம் வெந்து போகாத அளவிற்கு வறுத்து வையுங்கள்)
* பெ.வெங்காயம் நீளவாக்கில் நறுக்கியது- இரண்டு கப்.
* இஞ்சி, பூண்டு நறுக்கியது- ஒரு மேஜைக் கரண்டி.
* கேரட் சிறியதாக நறுக்கியது- இரண்டு கப்.
* குடை மிளகாய் சிறிதாக நறுக்கியது- இரண்டு மேஜைக்கரண்டி.
* ப.மிளகாய் வட்டமாக நறுக்கியது- இரண்டு தேக்கரண்டி.
* மிளகாய்த்தூள்- ஒரு தேக்கரண்டி.
* மல்லிபொடி- ஒரு தேக்கரண்டி.
* மிளகுதூள்- ஒரு தேக்கரண்டி.
* கறிமசால் தூள்- ஒரு தேக்கரண்டி.
* மல்லிஇலை, கறிவேப்பிலை, புதினா சிறிதாக நறுக்கியது- ஒரு கப்.
* தக்காளி சிறிதாக நறுக்கியது- இரண்டு மேஜைக்கரண்டி.
* கொதி நீர்- முக்கால் கப்.
* தேங்காய்ப்பால்- ஒரு கப்.
* வெஜிடபிள் ஆயில்- இரண்டு மேஜைக்கரண்டி.
(பெரிய பாத்திரம் ஒன்றில் எண்ணையை சூடாக்கி விட்டு அதில் இஞ்சி- பூண்டு நறுக்கியதை தாளிக்க வேண்டும். அத்தோடு பெ.வெங்காயத்தைக் கொட்டி தாளிக்கவும். அதில் கேரட், குடை மிளகாய், ப.மிளகாய், மிளகாய்த்தூள் ஆகியவைகளையும் சேர்த்து தாளியுங்கள். பின்பு மல்லித்தூள், மிளகுத்தூள், கறிமசால் தூள், இலை வகைகளில் பாதியை சேர்த்து கிளறுங்கள். கொதிநீர் ஊற்றி அடிப்பகுதியில் பிடிக்காத அளவிற்கு கிளறிவிட்டு, தேங்காய்ப்பாலும் சேருங்கள். அதில் மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக போட்டு உடைந்து போகாத அளவிற்கு லேசாக கிளறிவிட்டு, வற்றும் வரை வைத்து இறக்குங்கள்.
சாதம் தயாரிப்பு
தேவைப்படும் பொருட்கள்:
* பிரியாணி அரிசி- இரண்டு கப்.
* நெய்- 50 கிராம்.
* கிஸ்மிஸ்- இரண்டு மேஜைக்கரண்டி.
* முந்திரி பருப்பு- இரண்டு மேஜைக்கரண்டி.
* பெ.வெங்காயம் நறுக்கியது- ஒரு கப்.
* கிராம்பு- ஆறு.
* கருவாப்பட்டை- நான்கு துண்டுகள்.
* ஏலக்காய்- ஐந்து.
* ஜாதிபத்ரி- நான்கு.
* கொதி நீர்- நான்கு கப்.
* உப்பு- தேவைக்கு.
* எலுமிச்சை சாறு- ஒரு மேஜைக்கரண்டி.
* கறிமசால் தூள்- அரைத்தேக்கரண்டி.
செய்முறை:
அரிசியை 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து, தண்ணீரை வடிய வையுங்கள்.
அடிப்பகுதி கெட்டியான பெரிய பாத்திரத்தில் பாதி அளவு நெய்யை ஊற்றுங்கள். அதில் கிஸ்மிஸ், முந்திரி பருப்பு போன்றவைகளை வறுத்தெடுக்கவும். பின்பு அதில் பெ.வெங்காயத்தைக் கொட்டி தாளித்து பாதியை எடுத்துவிட்டு மீதியை நன்றாக வறுக்கவும். வறுத்த வெங்காயத்தை, முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் பழத்துடன் சேர்த்து தனியாக அடைத்து வையுங்கள்.
- மீதம் இருக்கும் நெய்யையும் பாத்திரத்தில் விடுங்கள். அதில் கிராம்பு, பட்டை, ஏலக்காய், ஜாதிபத்ரி போன்றவைகளை சேருங்கள். கொதித்த நீர், தனியாக வைத்திருக்கும் வறுத்த முந்திரி கலவை, தண்ணீர் வடிந்த அரிசி போன்றவைகளை சேர்த்து கிளறுங்கள். கொதித்து வரும்போது உப்பு, எலுமிச்சை பழச்சாறு, கறிமசால் தூள் ஆகியவைகளை சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கிளறிவிட்டு, லேசான தீயில் வேகவையுங்கள். அரிசி நன்றாக வேகுவதற்கு முன்பே தீயை அணைத்துவிட்டு, பாத்திரத்தை நன்றாக மூடிவிடவேண்டும்.
- பரந்த பாத்திரம் ஒன்றில் நெய்யை தடவி, அதில் வெந்திருக்கும் சாதத்தில் பாதியைக் கொட்டி சமன் படுத்துங்கள். அதில் மீன் கூட்டில் பாதி அளவைக் கொட்டி சமன் செய்யுங்கள். அதற்கு மேல் சிறிதளவு இலை வகைகளையும், வறுத்த முந்திரி பருப்பு- கிஸ்மிஸ்சில் சிறிதளவும் தூவுங்கள். அதற்கு மேல் மீதமுள்ள சாதம், மீதமுள்ள மீன் கூட்டு, இலைகள், முந்திரி பருப்பு, கிஸ்மிஸ் போன்றவைகளை சேர்த்து விட்டு, தோசைக் கல்லை சூடாக்கி அதில் அந்த பாத்திரத்தை ஒரு மணிநேரம் வைத்திருங்கள். அரை மணிநேரம் கழித்து எல்லாம் கலந்துவரும் அளவிற்கு பரிமாறுங்கள்.
Post a Comment