ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்! ஆரோக்கியத்துக்கு ஆறு டிப்ஸ்! பொதுவான சில பிரச்னைகள் வரும்போது அவற்றை சமாளிக்க, சத்தான சூப் மற்றும் கஞ்சி வகைக...
ஆயுள் வளர்க்கும் ஆயுர்வேதம்!
ஆரோக்கியத்துக்கு ஆறு டிப்ஸ்!
பொதுவான சில பிரச்னைகள் வரும்போது அவற்றை சமாளிக்க, சத்தான சூப் மற்றும் கஞ்சி வகைகளை வீட்டிலேயே தயாரிப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
ஒல்லியாக இருக்கும் சர்க்கரை நோய்க்காரர்கள் சரியான சாப்பாடு இல்லாவிட்டால் சுலபத்தில் மயங்கி விழுந்து விடுவார்கள். அவர்களுக்கு சத்தான ஆகாரமாக மதிய வேளையில் கோதுமை அல்லது அரிசிக் கஞ்சி தரலாம். வழக்கமான கஞ்சியாக இல்லாமல் இதை சத்துள்ள உணவாக தயாரிக்க முடியும்.
நொய் அரிசி அல்லது உடைத்த கோதுமை ஒரு கப் எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும். இந்த ஒரு கப் அரிசி அல்லது கோதுமையுடன் பத்து கப் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக சுண்டும் அளவுக்கு இதைக் கொதிக்கவிட வேண்டும். அப்போது அரிசி அல்லது கோதுமை குழைந்து தண்ணீரில் சமமாகக் கலந்திருக்கும்.
பூண்டு, இஞ்சி இரண்டையும் விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து, அதை நெய் அல்லது எண்ணெயில் தாளிக்கவும். இப்படி தாளிக்கும்போது அதில் கொஞ்சம் மிளகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துக் கொள்ளவும். தாளித்த இந்தக் கலவையை கஞ்சியில் கலக்க வும். போதுமான உப்பு சேர்த்தால், சத்து கஞ்சி தயார்.
வெயில் காலங்களில் ஏற்படும் நா வறட்சி மற்றும் உடம்பு சரியில்லாதபோது ஏற்படும் தாகத்தைப் போக்க ஒரு சுவையான பானம் தயாரிக்கும் டிப்ஸ் இதோ...
இதற்கு தேவையான பொருட்கள்... உலர்ந்த கறுப்பு திராட்சை பத்து, அவல் பொரி மூன்று டீஸ்பூன், தேன் ஒரு டீஸ்பூன், நன்னாரி வேரைக் காயவைத்து அரைத்த பொடி ஒரு டீஸ்பூன்.
திராட்சையை ராத்திரியே தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் இதை நன்றாக நசுக்கி ஜூஸ் மாதிரி ஆக்கி... அதில் அவல் பொரியையும், நன்னாரி வேர் பொடியையும் கலக்க வேண்டும். மூன்று மணி நேரம் இதை ஊறவைத்த பிறகு, இதில் தேன் கலந்து குடித்தால் நா வறட்சி பறந்து போகும்.
சிலருக்கு நோய்வாய்ப்பட்டிருக்கும் நேரத்தில் சரியாக பசி எடுக்காது. சாப்பிடும் உணவும் செரிக்காது. இவர்களுக்கு பசியைத் தூண்டிவிடவும், சாப்பிட்ட உணவை சீக்கிரமே ஜீரணிக்க வைக்கவும் ஒரு சூப் இருக்கிறது.
இரண்டு முருங்கைக் காய்களை எடுத்து சாம்பாருக்கு வெட்டுவதுபோல துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இந்த முருங்கைக் காயை தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேக விடவும். முருங்கைக் காய் ரொம்பவும் குழைந்து விடாமல், அதனுள்ளே இருக்கும் சதைப்பற்றான பகுதி தண்ணீரில் கரை யாமல், அப்படியே இருக்கும்படி மிதமாக வேகவிட்டு எடுக்க வும்.
இரண்டு டம்ளர் மோர் எடுத்து, வேகவைத்த முருங்கைக் காயை அதில் போடவும். இதில் மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், வாய்விடங்கப் பொடி அரை டீஸ்பூன், திப்பிலி வேர்ப் பொடி அரை டீஸ்பூன் (இவை இரண்டும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து, இந்தக் கலவையை ஸ்டவ்வில் மிதமான சூட்டில் பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
எல்லா பொடிகளும் நன்றாக மோரில் கரைந்த பிறகு ஸ்டவ்விலிருந்து இதை எடுக்கவும். அப்போது கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை களைப் போட்டால் வாசம்மிக்க, சுவையான, பசியைத் தூண்டுகிற சூப் ரெடி!
தானியங்களின் கலவையைக் கொண்டு காய்ச்சப்படும் ஒரு கஞ்சி, அறுசுவை உணவை விட சத்துமிக்கது.
அரிசி அரை கப், கோதுமை அரை கப், மக்காச் சோளம் அரை கப், பாசிப்பருப்பு அரை கப் என நான்கு தானியங்களையும் கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையில் 32 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவிட வேண்டும். சேர்த்த தண்ணீர் பாதியாக சுண்டும் அளவுக்கு இதைக் காய்ச்ச வேண்டும். அப்போது எல்லா தானியங்களும் குழைந்து தண்ணீரில் சமமாக கலந்திருக்கும்.
மாதுளம்பழ விதை இரண்டு கப் எடுத்து, மிக்ஸியில் போட்டு ஜூஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஜூஸை அப்படியே சூடாக இருக்கும் கஞ்சியில் கலக்க வேண்டும். பிறகு, அதில் இரண்டு டீஸ்பூன் மிளகுப் பொடி சேர்த்து, தேவையான அளவு உப்பு கலந்து சூடாகக் குடிக்க, உடம்புக்கு தெம்பு கூடும்.
சிலர் நாள் முழுக்க விரதம் இருப்பார்கள். விரதத்தின் முடிவில் சோர்ந்து விடுவார்கள். இந்த சோர்விலிருந்து அவர்கள் விடுபட இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிடும். விரதத் தின்போது பலரும் காபி மட்டும் குடித்து உடலை இன்னும் கெடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு பதிலாக அவர்கள் ஸ்பெஷல் சத்து பால் அயிட்டம் ஒன்றைக் காய்ச்சிக் குடிக்கலாம்.
ஏலக்காய் அரை டீஸ்பூன் நசுக்கி எடுத்துக் கொள்ளவும். ஜாதிக்காயை பவுடராக்கி கால் டீஸ்பூன், பிஸ்தா பருப்பு பவுடர் அரை டீஸ்பூன், ஒரு சிட்டிகை குங்குமப்பூ ஆகிய வற்றை எடுத்துக் கொள்ளவும். இரண்டு கப் பசும்பாலில் நான்கு கப் தண்ணீர் கலந்து அதில் இந்த எல்லா பொடிகளை யும் போட்டு நன்கு காய்ச்சவும். இதில் சேர்த்த நான்கு கப் தண்ணீரும் ஆவியாகும் அளவுக்கு மிதமான சூட்டில் சுண்டக் காய்ச்ச வேண்டும். பிறகு, இதில் போதுமான சர்க்கரை சேர்த்து மிதமான சூட்டில் குடிக்கவும்.
விரதம் இருக்கும் நாளில் இந்தப் பாலை இரண்டு, மூன்று தடவை குடித்தால் போதும்... விரதத்தால் உடலில் ஏற்படும் நீர் இழப்பை இது பெருமளவு ஈடு செய்து விடும். அதோடு சோர்வும் தெரியாது.
முள்ளங்கியில் செய்யப்படும் ஒருவகை சட்னி ரொம்ப ஆரோக்கியமான உணவு.
வெள்ளை முள்ளங்கியை சாம்பாருக்கு அரிவதுபோல சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் எடுத்துக் கொள்ளவும். இதை இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கரைகிற அளவுக்கு வேகவிடவும். பாசிப்பருப்பு ஒரு கப் எடுத்து அதைத் தனியாக வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, இஞ்சியும், பூண்டும் சேர்த்து அரைத்த விழுதை ஒரு டீஸ்பூன் எடுத்து அதை ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, வதக்கவும். பிறகு, இதில் வேகவைத்த முள்ளங்கி மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து, பதினைந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். போதுமான அளவு உப்பு சேர்த்து, எடுக்கும்போது கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்தால் சுவையான முள்ளங்கி சட்னி ரெடி!
Post a Comment