தான் தாயாகும்போதுகூட பெண்கள் ரொம்ப பயப்படுறதில்ல. ஆனா, தன் மக உண்டாகி, தாய் வேறா பிள்ளை வேறா பிரியுற வரைக்கும் பரிதவிச்சுப் போயிடுறா ஒவ்வொரு பெண்ணும். 
அதுலயும் இன்னிக்கு இருக்குற அம்மாக்கள் பலருக்கும் மக சூட்டு வலியில துடிக்கிறாளா.. பிரசவ வலியானு தெரியுறதில்ல. வலியில துடிக்கிற பிள்ளைக்கு என்ன செய்யணும்னும் தெரியுறதில்ல. அதைத்தான் இங்க சொல்லித் தந்திருக்கேன்.. கவனமா கேட்டுக்குங்க! இந்த வைத்தியத்தை செஞ்சு வலி நின்னுட்டா அது பிரசவ வலி கிடையாது. வலி நிக்கலைன்னா, பிள்ளைய டாக்டர்கிட்ட கூப்பிட்டுட்டுப் போய்டலாம்.
அடிவயிற்று வலி, நீர்க்கட்டு விலக.. புள்ளைத்தாச்சிப் பொண்ணுங்க சிலருக்கு ஏழாம் மாசம் நெருங்குறப்பவே சில உபாதைகளும் வந்துரும். அதுல முக்கியமானது சூலைவலிங்கிற அடிவயித்து வலி. ஒரு பாத்திரத்துல ஒரு கைப்பிடி அளவுக்குப் பெருந்துத்தி இலை போட்டு, அதுகூட ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம், சீரகம் ஒரு ஸ்பூன், பசும்பால் கால் லிட்டர், தண்ணி அரை லிட்டர் சேர்த்து, மூடி, அடுப்புல வச்சி கொதிக்க விடணும். நல்லா ஆவி வந்ததும் அடுப்பை அணைச்சிட்டு இறக்கிடணும். பாத்திரம் சூடு தாங்குற அளவுக்கு வந்ததும், அப்படியே அடிவயித்துக்கு கீழ வச்சி ஆவி பிடிச்சா, அடிவயித்து வலி போயிரும். இதுக்கு இன்னொரு வைத்தியமும் இருக்கு. ஒரு டேபிள்ஸ்பூன் ஓமத்தோட 5 வெத்திலை, 3 பூண்டு பல்லு எடுத்துக்கணும். வெறும் கடாயில ஓமத்தைப் போட்டு வறுத்துக்கணும். அது நல்லா பொரிஞ்சு வெடிச்சதும் வெத்தலையை பிய்ச்சுப் போடணும். தோலு உரிக்காம பூண்டை நசுக்கிப் போட்டு 5 நிமிஷம் வதக்கணும். இதுல ஒண்ணரை டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா வத்துற வரைக்கும் காய்ச்சணும். இதுகூட 50 கிராம் பனைவெல்லம்.. இல்லைன்னா, நெல்லிக்காய் அளவு பசுவெண்ணெய்.. சேர்த்து, கலக்கிக் குடிக்கணும். சுரீர்னு வலிச்ச சூலை வலி நின்னுரும். நீர்க்கட்டு வராமலும் பாதுகாக்கும் இந்த பானம். குழம்பு வடகத்தை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து கடாயில போட்டுப் பொரிச்சிக்கணும். இதுல ஒரு டம்ளர் தண்ணிய விட்டு அரை டம்ளரா காய்ச்சி, சூடு ஆறினதும் குடிக்கணும். இப்படி குடிச்சா நீர்க்கட்டு விலகி, உடல் வீக்கமும் உருண்டோடிரும்.
அரிசி வேக வச்ச தண்ணிய (கூழா ஆறதுக்கு முன்னால) அரை டம்ளர் அளவுக்கு எடுத்துக்கணும். இதுகூட ஒரு நெல்லிக்காய் அளவு பசு வெண்ணெய சேர்த்துக் கலந்து, ஆறினதும் ஒருநாள் விட்டு ஒருநாள் குடிச்சிட்டு வந்தா.. எந்தத் தொல்லையும் எப்பவும் இருக்காது. |
Post a Comment