காய் பிடிக்காத மரத்துக்கு 'கடப்பாரை' வைத்தியம்!--விவசாயக்குறிப்புக்கள்
காய் பிடிக்காத மரத்துக்கு 'கடப்பாரை' வைத்தியம்! ஒவ்வொரு உழவரும் ஓர் ஆராய்ச்சியாளரே என்பதைக் கண்முன்னே காட்டிக் கொண்டிருக்கும் நம்மவ...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5306.html
காய் பிடிக்காத மரத்துக்கு 'கடப்பாரை' வைத்தியம்!
ஒவ்வொரு உழவரும் ஓர் ஆராய்ச்சியாளரே என்பதைக் கண்முன்னே காட்டிக் கொண்டிருக்கும் நம்மவர்களில் ஒருவர்... திருவண்ணாமலை மாவட்டம், பெண்ணாத்தூர், முன்னோடி இயற்கை உழவர் கோதண்டராமன். இவருடைய ஆராய்ச்சியில் முக்கியமான மூன்று அம்சங்களை இங்கு குறிப்பிடப் போகிறேன்.
தண்ணீருக்குள் கண் சிமிட்டும் அடையாளக் குறி!
முதலாவதாக... ஒற்றை நாற்று நடவு...
நாற்றுகளை குறிப்பிட்ட இடத்தில் நடுவதற்காக குறியிடுவது அவசியம். இதற்காக குறியிடும் கருவியை (மார்க்கர்) நடவுக்கு முன்னதாக நிலத்தில் இழுப்பார்கள். அதன் பிறகு, தண்ணீர் விட்டு நடவு செய்தால், பயிரின் வளர்ச்சி வழக்கத்தைவிட நன்றாக இருக்கும். ஆனால், குறியிடும் கருவியைப் பயன்படுத்திய பின் நீர் பாய்ச்சும்போது பெரும்பாலும் கோடுகள் அழிந்து, எந்த இடத்தில் நடுவது என்ற குழப்பம் வந்துவிடுகிறது. ஆனால், கோதண்டராமனின் நிலத்தில் இந்தக் கோடுகள் அழியாது நின்று அடையாளம் காட்டுகின்றன! அது எப்படி...? முதலில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு, மண்ணானது பதமாக இருக்கும்போது குறியிடும் கருவி இழுக்கப்படுகிறது. பிறகு, மெதுவாக தண்ணீர் விடப்படுவதால் கோடுகள் அழியாமல் தண்ணீருக்குள் நின்று கண் சிமிட்டுகின்றன. அதன் மீது நடப்படும் நாற்றுகள், பச்சை மாறாமல் வளர்கின்றன. இப்படியில்லாமல், உலர்ந்த நிலத்தில் நடப்படும் போது, வாடி, அதன் பிறகே துளிர்க்கின்றன நாற்றுகள்.
நெல்லி காய்க்கா விட்டால் ஒட்டு!
இரண்டாவது ஆராய்ச்சி... இவருடைய நிலத்தில் இருக்கும் நெல்லி மரங்கள்...
இரண்டு ஆண்டுகள் கடந்தும் சில மரங்களில் காய் பிடிக்கவில்லை. அம்மரங்களை தரையிலி ருந்து இரண்டடி உயரம் விட்டு, மீதிப் பாகத்தை வெட்டிவிட்டார். கிடைத்த கிளை, குச்சி, தழை களைத் துண்டு துண்டாக வெட்டி அடிமரத்தைச் சுற்றி மூடாக்கு போட்டிருக்கிறார். வெட்டப்பட்ட மரம் பக்கவாட்டுகளில் துளிர்விடும்போது... ஏற் கெனவே காய்ப்பில் இருக்கும் மரங்களின் நுனித் துளிர்களை வெட்டி வந்து, அதில் ஒட்டிவிடப் போகிறார். இதன் மூலம் எல்லா மரங்களிலும் மகசூல் மழை கொட்டப்போகிறது.
நிலத்துக்கும் சூரிய ஒளி அறுவடை!
மூன்றாவது... பல வகை மரங்கள்....
புதிதாக மரக்கன்றுகள் நடவு செய்தபோது பல வகை மரங்களையும் கலந்து நடவு செய்தார். ஓரங்களில் முங்கில்... உட்பகுதியில் சப்போட்டா, நெல்லி, பப்பாளி, முருங்கை, அத்தி என்று அனைத்தையும் பயிர் செய்துள்ளார். இப்படி பல வகையினையும் கலந்து பயிர் செய்யும்போது போதுமான இடைவெளி கிடைத்து, சூரிய ஒளியை நிலத்தில் சேர்க்கின்றன. இதன் மூலம்... நிலத்தில் உள்ள தாதுக்களுக்கும் சூரியஒளி சீராகச் சென்று சேர்ந்து, அவற்றை வளமாக்குகின்றன. ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு பருவத்தில் காய்ப்புக்கு வருவதால் ஆண்டு முழுக்க அறுவடை. இதனால், விரைவிலேயே தொடங்கும் வருவாய், தொடரவும் செய்கிறது. பண்ணை ஆட்களுக்கோ தொடர்ந்து வேலை இருக்கிறது.
கடப்பாரை வைத்தியம்!
இதே பெண்ணாத்தூர் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், கோயிலுக்கு உடைப்பதற்காக கொண்டு சென்ற தேங்காய், முளை விட்டிருப்பதைக் கண்டார். அந்தத் தேங்காயை அப்படியே திருப்பி எடுத்து வந்து தோட்டத்தில் நட்டு வைத்தார். கன்று வளர்ந்து மரமாகிப் பல ஆண்டுகளாகியும் காய்ப் பிடிக்கவில்லை. கடப்பாரையால் மரத்தைச் சுற்றி வரிசையாகக் குழிகள் போட்டார். அக்குழி களில் பஞ்சகவ்யாவை ஊற்றினார். என்ன ஆச்சர்யம்... மரம் காய்க்கத் தொடங்கிவிட்டது!
உள்ளூருக்குப் பயிற்சி இல்லையா?
திருநெல்வேலியில் ஜூலை 9, 10 மற்றும் 11 தேதிகளில் இயற்கை வேளாண்மை களப்பயிற்சிக்கு 'பசுமை விகடன்' ஏற்பாடு செய்திருந்தது. பயிற்சி நடைபெற்ற பண்ணைக்குரியவர் 'தச்சை' கணேசராஜா. அனைத்துப் பொருத்தங்களும் பார்த்து, அவருடைய தந்தை யாரின் பெயரை இணைத்து 'நல்லமுத்து இயற்கை வாழ் வியல் ஆராய்ச்சி மையம்' என்று அப்பயிற்சியின்போது பண்ணைக்குப் பெயர் சூட்டி னோம்.
களப்பயிற்சியின் சிறப்பு பற்றி கேள்விப்பட்ட உள் ளூர்வாசிகள், ''வெளியூர்ல இருந்தெல்லாம் வந்து பயிற்சி எடுத்துக்கிட்டு போறாங்க... உள்ளூர்ல இருக்கற எங்களுக்குக் கிடையாதா?'' என்று கணேசராஜாவிடம் ஆதங்க விண்ணப்பத்தை முன் வைக்க... அவரே ஒரு பயிற்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டார். ஆகஸ்ட் 22, 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்ற அப்பயிற்சிக்காக மீண்டும் அந்தப் பண்ணைக்குச் சென்றபோது... சில மாற்றங்கள் கண்களை ஈர்த்தன.
அடர்ந்து நிற்கும் அசோலா...
பண்ணையில் நுழைந்ததும் நம் கவனத் தை ஈர்த்தவை... புதிதாக முளைந்திருந்த அசோலா வளர்ப்புத் தொட்டிகள். முந்தைய பயிற்சியின் போது நாலடிக்கு எட்டடி பாத்தி ஒன்றை அமைத்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. ஒரே மாதத்தில் அதைப் போல இரண்டு பங்கு நீளத்தில் நான்கு பாத்திகளில் அசோலாவை அடர்த்தியாக வளர்த்திருந்தனர்.
இந்த அசோலாவை தினம் தினம் சேகரித்து தென்னை மற்றும் நெல்லி மரங்களுக்கு இட்டுப் புதைக்கிறார்கள். அசோலா பாத்தியில் ராக் (பாறை) ஃபாஸ்பேட் போடுவதற்குப் பதிலாக, பாறைத் தூளையே போடுகிறார்கள். அதாவது, ராஜஸ்தான் போன்ற இடங்களிலிருந்து வரவழைக்கப்படும் ராக் பாஸ்பேட்டுக்குப் பதிலாக, நம் ஊர்களில் ஆழ்குழாய் கிணற்றுக்காக தோண்டும் போது கிடைக்கும் பாறை மண்ணை போடுகிறர்கள்.
அடி மரத்துக்கு தண்ணீர் பாய்ச்சினால்...
அடுத்த மாற்றம்... தென்னைக்குத் தண்ணீர் பாய்ச்சுவது. முன்பு, மரங்களைச் சுற்றிச் சதுர மாகச் செதுக்கிவிட்டு, சதுரம் முழுக்க தண்ணீர் பாய்ச்சியிருந்தனர். சொட்டுநீர் ஏற்பாடுகளும் இருந்தன. ''அடிமரத்தில் தண்ணீர் பாயக்கூடாது. நீரிலிருந்து தாது உப்புக்களை எடுக்கும் வேர்க ளுடைய நுனியானது, மரத்தின் விரிந்த மட்டை நுனிக்கு நேர் கீழே இருக்கின்றன'' என்று விளக்கி யிருந்தோம். தற்போது, எல்லா தென்னை மரத்துக்கும் நான்கு அடிக்கு அப்பால் வட்டமாக குழி எடுத்து தண்ணீர் விடப்படுகிறது. மட்டை, பாளை, பண்ணாடை எல்லாம் மரத்தடியிலேயே விடப் படுகிறது. இப்போது மரங்களில் புதிய பாளைகள் வந்த வண்ணம் உள்ளன. மட்டைகளில் பசுமை கொஞ்சுகிறது.
'இது தென்னைக்கு மட்டும்தானா அல்லது எல்லா மரங்களுக்கும் பொருந் துமா?' என்றொரு கேள்வி அப்போது எழுப்பப் பட்டது. 'அடிமரத்தை ஒட்டி மரத்தைத் தாங்கும் வேர்கள் மட்டுமே உள்ளன. எனவே மரத்தடி உலர்ந்தே இருக்க வேண்டும். மரத்தடி நனையும்போது பிஞ்சுகள் உதிர்கின்றன' என்பது அனைத்துக்கும் பொதுவான விதி என்பதை விளக்கியபோது... அனைத்து உழவர் களும் அதைக் குறித்துக் கொண்டனர்.

Post a Comment