ஏக்கருக்கு 45 மூட்டை நெல்... எப்படி சாத்தியம்?"
''ஒ ற்றை நாற்று நடவு முறையில் 'கட்டிமேடு' ஜெயராமன் என்பவர் ஏக்கருக்கு 45 மூட்டை அறுவடை செய்திருக்கிறார் என்று ஜூலை 25 தேத...

''ஒற்றை நாற்று நடவு முறையில் 'கட்டிமேடு' ஜெயராமன் என்பவர் ஏக்கருக்கு 45 மூட்டை அறுவடை செய்திருக்கிறார் என்று ஜூலை 25 தேதியிட்ட 'பசுமை விகடன்' இதழில், செய்தி வெளியாகியிருக்கிறது. இத்தகைய மகசூலைப் பெற, என்ன மாதிரியான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவிரும்புகிறேன்'' என்று செம்பூண்டி கிராமத்தில் இருந்து ஆர்.லோகநாதன் கேட்டுள்ளார். இவருக்கு 'கட்டிமேடு' ஜெயராமன்பதில் தருகிறார்.
''உண்மையில், அது ஒரு ஏக்கரில் எடுக்கப்பட்ட மகசூல் அல்ல. ஒரு ஏக்கர் மற்றும் 16 சென்ட் நிலத்தில் எடுக்கப்பட்ட மகசூல். அதைக் குத்துமதிப்பாக 'ஒரு ஏக்கர்' என்று பிறரிடம் சொன்னது, அப்படியே பசுமை விகடனிலும் வெளியாகி விட்டது. எது எப்படியிருந்தாலும், விளைச்சலைப் பொறுத்தவரை குறைவில்லை.
சரி, தொழில்நுட்ப விஷயங்களைப் பார்ப்போம். ஒரு ஏக்கர் 16 சென்ட் நிலத்துக்கு இரண்டு கிலோ விதை நெல் தேவைப்பட்டது. 10 லிட்டர் நீருடன் 50 மில்லி பஞ்சகவ்யா கலந்த கரைசலில் இரவு முழுக்க விதைகளை ஊற வைத்து விதை நேர்த்திசெய்தேன். பிறகு, வழக்கம்போல விதைகளை தண்ணீரில் ஊறவைத்து மூன்றாம் கொம்பாக... அதாவது மூன்றாம் நாள் நாற்றங்காலில் விதைத்தேன். 16-ம் நாள் நாற்றுகளைப் பறித்தெடுத்து, 25 லிட்டர் நீர் மற்றும் 250 மில்லி பஞ்சகவ்யா கலந்த கரைசல் தயாரித்து, நாற்றின் வேர்களை அதில் நனைத்தெடுத்து நடவு செய்தேன். அடுத்த பத்தாம் நாள், 10 லிட்டர் அமுதக் கரைசலை பாசன நீரில் கலந்துவிட்டேன். அதற்கடுத்த பத்தாம் நாள், 10 லிட்டர் நீரில் 300 மி.லி. பூச்சிவிரட்டி கலந்து தெளித்தேன் (ஒரு ஏக்கருக்குப் பத்து டேங்க்). நடவு செய்த ஒரு மாதம் கழித்து 10 லிட்டர் நீர் மற்றும் 300 மி.லி பஞ்சகவ்யா கலந்த கரைசலைத் தெளித்தேன் (ஏக்கருக்கு பத்து டேங்க்). இரண்டாவது மாதம் மீண்டும் இதே அளவு பஞ்சகவ்யா தெளித்தேன். இவைதான் நான் பயன்படுத்திய தொழில்நுட்பங்கள். இதன் மூலம் 45 மூட்டை நெல்லை அறுவடை செய்தேன்.கடந்து நான்கு ஆண்டு காலமாக இயற்கை வழி விவசாயம் செய்து வருவதால் என்னுடைய நிலம் வளமுடன் இருக்கிறது. வளம் குறைந்த நிலமுள்ளவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை அமுதக் கரைசலை பாசன நீரில் கலந்து விடலாம்.'' தொடர்புக்கு: அலைபேசி-94433-20954.
Post a Comment