இறைவனின் முடிச்சு - கவிக்கோ-பெட்டகம் சிந்தனை
இறைவனின் முடிச்சு - கவிக்கோ கவிக்கோ அப்துர் ரஹ்மான் [ பாலுறவில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து ஒன்றென உணர்கின்றனர். இதுவும் ஏகத்துவத்தை - எ...
கவிக்கோ அப்துர் ரஹ்மான்
[ பாலுறவில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து ஒன்றென உணர்கின்றனர். இதுவும் ஏகத்துவத்தை- எல்லாம் ஒன்று என்பதை - நுட்பமாக உணர்த்தும் சான்றாகும். ]இஸ்லாம் திருமணத்தை இருவருக்கு மட்டுமே உரிய தனிப்பட்ட நிகழ்வாகக் கருதவில்லை. அதை வெறும் சமூக நிகழ்வாகவும் கருதவில்லை. அதை ஒரு வழிபாடாகவே மதிக்கிறது.
இறைவன் திருமறையில் 'உங்களில் வாழ்க்கைத் துணையின்றி இருப்பவர்களுக்குத் திருமணம் செய்து வையுங்கள்'(24ஃ32) என்று ஆணையிடுகிறான். இறைவன் ஆணையை நிறைவேற்றுவது வழிபாடாகும்.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் திருமணத்தைச் சமய ஒழுக்கமாகவே கருதுகிறார்கள். 'திருமணம் வழிமுறை எவர் அதைப் புறக்கணிக்கிறவர் என்னைச் சார்ந்தவரல்லர்' (புகாரி 5063) என்பது இறைத் தூதர் வாக்கு.
திருமணத்தை இறைநம்பிக்கைக்கு அடுத்த நிலையிலுள்ள சிறந்த நற்செயலாக இமாம்கள் குறிப்பிடுகின்றனர்.
திருமணத்தை அரபு மொழியில் 'நிகாஹ்' என்று கூறுகின்றனர். திருமணத்தை இஸ்லாம் ஓர் ஒப்பந்தமாகவே கருதுகிறது. திருமண ஒப்பந்தம் என்பது அரபியில் "அஃ(க்)துஸ் ஸவாஜி வல்ஃகிரான'; என்பதே இச்சொல்லின் மூலப்பொருளாகும்.'முடிச்சு' என்ற பொருள் திருமணத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புலப்படுத்துகிறது. இரண்டு கயிறுகளை ஒரு முடிச்சு எப்படி இணைக்கிறதோ அப்படி ஆணையும் பெண்ணையும் இணைப்பது திருமணம். உண்மையில் ஆணும் பெண்ணும் இரண்டு கயிறுகள் அல்லர். அவர்கள் ஒரே
'கயி'றாகவே இருந்தனர். படைப்பு அவர்களைப் பிரித்தது. அதாவது ஒரே கயிறாக இருந்தது அறுக்கப்பட்டது. அவ்வாறு அறுக்கப்பட்ட கயிறு திருமணத்தின் மூலம் மீண்டும் இணைக்கப்படுகிறது. 'அவன் வாகனங்களையும் பூமியையும் படைத்தவன். அவனே உங்களிலிருந்து உங்கள் இணைகளைப் படைத்தான்' (42ஃ11) என்று திருமறை கூறுகிறது. வானங்களையும் பூமியையும் படைத்தவனே ஆண்-பெண் இணைகளைப் படைத்தான் என்பது ஆழ்ந்த பொருள் உள்ள வசனமாகும்.'வானமும் பூமியும் தொடக்கத்தில் ஒன்றாகவே இருந்தன. பின்னர் இறைவன் அவற்றைப் பிரித்தான். (தொடக்கத்தில்) வானங்களும் பூமியும் இணைந்திருந்தன. பின்னர் அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்' (21ஃ30) என இறைவன் திருமறையில் இதனைக் குறிப்பிடுகிறான்.
இதைப் போலவே ஆணும் பெண்ணும் கூடத் தொடக்கத்தில் ஒன்றாகவே இருந்தனர். படைப்பின் போது இறைவனே அவர்களைப் பிரித்தான். 'இறைவன்தான் உங்களை ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதன் துணையைப் படைத்தான் (7ஃ189)' என்ற திருமறை வசனம் இதை உணர்த்துகிறது.
இந்த வசனத்தில் இடம் பெற்றிருக்கும் 'நஃப்ஸ்' என்ற செல்லுக்குப் பெரும்பாலும் ஆன்மா என்றே பொருள் கொண்டாலும் அதற்கு 'மூலப்பொருள்' என்ற பொருளும் உண்டு. அப்பொருளின் அடிப்படையில் பார்த்தால் மனிதர்கள் அனைவரும் ஒரே மூலப் பொருளால் படைக்கப்பட்டவர்கள் என்று அறிந்து கொள்ளலாம்.'இறைவன் உங்களிலிருந்தே உங்களுக்கு மனைவியரை உண்டாக்கினான் (16ஃ72) என்ற திருமறை வசனம் ஆணிலிருந்தே பெண் படைக்கப்பட்டாள் என்ற உண்மையை உணர்த்துகிறது. இறைவன் முதலில் ஆதத்தைப் படைத்தான். பின்னர் அவருடைய விலா எலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தான் என்ற பைபிளின் கருத்து ஆணிலிருந்தே பெண் படைக்கப்பட்டாள் என்பதைக் குறியீட்டு மொழியில் உணர்த்துகிறது.
ஆணும் பெண்ணும் ஒன்றாக இருந்து பிரிந்ததால் தான் ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு உண்டாகிறது. பிரிந்தவர் கூடினால் பேரின்பம். இல்லற இன்பத்தின் ரகசியம் இதுதான். படைப்புக்காகப் பிரிக்கப்பட்டவர்கள் பிரிந்தே இருக்கக் கூடாது என்பதால் தான் இறைவன் ஆண்களையும் பெண்களையும் திருமணம் செய்து கொள்ளச் சொல்லுகிறான்.
பிரிக்கப்பட்டவர் இணைக்கப்பட வேண்டும் என்பது இயற்கை. அதனால் தான் இஸ்லாம் துறவறத்தை வற்புறுத்துவதில்லை. நேர்முகமும் (Positive) எதிர்முகமும் (Negative) இணைந்தால் தான் மின்சாரம். ஆணும் பெண்ணும் இணைந்தால் தான் சம்சாரம்.ஒரே மாதிரியான கயிறுகளைத்தான் இலகுவாக முடிச்சுப் போட்டு இணைக்க முடியும். இத்தகைய இணைப்புத்தான் உறுதியாக இருக்கும் நீடிக்கும்.
பொருத்தமானவர்கள் திருமணம் செய்து கொண்டால் தான் அந்த உறவு நீடிக்கும். மணமகனுக்கு மணப்பெண் பற்றித் தெரிந்திருக்க வேண்டும். அதைப் போலவே மணப்பெண்ணுக்கும் மணமகன் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.
'மணமகன் மணமகளைப் பார்த்துக் கொள்ளட்டும், ஏனெனில் அது உங்கள் இருவரிடையேயும் நட்பையும் இணக்கத்தையும் ஏற்படுத்தக் கூடும் (திர்மிதீ, நஸாயீ) என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாக்கு.திருமணச் சடங்கு என்பது வெறும் புற முடிச்சுத்தான். ஆண் பெண்ணுக்கிடையே ஏற்படும் நட்பும் இணக்கமும் தான் அக முடிச்சு; உண்மையான முடிச்சு.
புற முடிச்சை அவிழத்துவிடலாம். அகமுடிச்சை அவிழ்ப்பது அவ்வளவு எளிதல்ல. நட்பால் இணைபவாருடைய உறவே நீடிக்கும். ஆனால் பெரும் பாலான திருமணங்கள் வெறும் புற முடிச்சாக மட்டும் இருப்பதால் தான் அவை தோல்வியில் முடிந்துவிடுகின்றன.
'காதல் ஒருவனைக் கைப்பிடித்து, அவன் காரியம் யாவிலும் கைகொடுப்பது தான் பெண்களுக்கு அறம்' என்று பொதுவாகக் கூறுவார்கள். ஆனால் இஸ்லாம் இதை ஏற்பதில்லை.கணவன் தவறு செய்தால் மனைவி அதை ஆதரிக்க வேண்டியதில்லை என்று இஸ்லாம் கூறுகிறது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யாருக்கேனும் திருமணம் செய்து வைத்தால் 'இறைவன் இவர்கள் இருவரையும் நல்ல விஷயங்களில் ஒன்று சேர்ப்பானாக' என்றே வாழ்த்துவார்கள்.கணவன் தீமை செய்கிறான் என்றால் அச்செயலில் மனைவி ஒத்துழைக்க வேண்டிய அவசியமில்லை. அவ்வாறே மனைவி தீமை செய்யும் போதும் கணவன் அதை ஆதரிக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே திருமணம் என்பது கணவன் மனைவியை எல்லாச் செயல்களிலும் இணைக்கும் முடிச்சல்ல. அது இருவரையும் நல்ல செயல்களில் மட்டுமே இணைக்கும் வினோத முடிச்சாகும்.
'பாசம்' என்ற சொல்லுக்கு அன்பு, கயிறு என்ற இரண்டு பொருளுண்டு, 'பாசம்' என்பதன் மூலப் பொருள் கயிறு என்பது தான். இருவருக்கிடையே ஏற்படும் அன்பு அவர்கள் இருவரையும் கட்டிப் போடுவதால் அன்பைப் பாசம் என்றனர்.பாசம் என்ற சொல்லைப் பொதுவாக அன்பு என்ற பொருளில் பயன்படுத்தலாம் என்றாலும் அச்சொல் தாய் சேய்க்கிடையே உள்ள அன்பை மட்டும் உணர்த்தும் கலைச் சொல்லாகப் பயன்படுகிறது.
எனவே பாசம் என்பது இரண்டு உயிர்களை ஒன்றாகக் கட்டிப்போடும் முடிச்சாகும். இந்த முடிச்சு அவிழ்க்க முடியாத முடிச்சாகும். உறவுகளை 'பந்தம்' என்கிறொம். 'பந்தம்' என்பதற்கும் கயிறு, கட்டுதல் என்பதே பொருள்களாகும்.உறவுகள் இருவகை. ஒன்று இரத்த பந்தம், மற்றொன்று திருமண பந்தம். இந்த இருவகை பந்தங்களையும் இறைவனே ஏற்படுத்துகிறான் என்று திருமறை கூறுகிறது. 'அவனே மனிதனை நீரிலிருந்து படைத்தான். பின்னர் இரத்த சமபந்த உறவுகளையும் திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான்.' 25ஃ54
இரத்த பந்தம் என்பது இயற்கையாகவே அமைவது. திருமண உறவு என்பது அவ்வகையானதல்ல. அது உண்டாக்கப்படுவது. எனவே தான் அது முடிச்சு எனப்படுகிறது. இரத்த பந்தம் இயற்கையானதாயினும் திருமண பந்தமே ஆழமானது. ஏனெனில் அது இறைவன் போடும் முடிச்சு.
ஆணின் விலா எலும்பிலிருந்து பெண் படைக்கப்பட்டாள் ஆதலின் 'கணவன் தன் தாய் தந்தையை விட்டு விட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர்' என்று பைபிள் கூறுகிறது.'திருமண உறவு மற்ற எதனையும் விட நட்பை அதிகரிக்கிறது' (மிஷ்காதுல் மஸாபீஹ் 13ஃ1ஃ3) என்ற இறைத்தூதர் வாக்கு பைபிளின் கருத்தை உறுதிபட்படுத்துகிறது.
இரத்த பந்தமில்லாமல் அன்பு உண்டாவதென்பது வியப்பிற்குரியது. அத்தகைய பந்தத்தை ஏற்படுத்த இறைவன் பாலுணர்வை வைத்திருக்கிறான். இந்தப் பாலுணர்வே ஆண் பெண்ணுக்கிடையே இரத்த பந்தத்தை விட ஆழமான அன்பை உண்டாக்குகிறது. இதைத் திருமறை இவ்வாறு விளக்குகிறது.
'(உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மன நிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்து, உங்களுக்கிடையில் அன்பையும் கருணையையும் ஆக்கியிருப்பதும் அவனுயை சான்றுகளில் ஒன்றாகும். சிந்தித்து உணரக் கூடிய சமூகத்தார்க்கு இதில் நிச்சயமாகச் சான்றுகள் உள்ளன' (30ஃ21)
ஆண் பெண் இருவருக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கும் பாலுணர்வை இறைவனே ஏற்படுத்தினான் என்று இந்த வசனம் உணர்த்துகிறது. அதனால் பாலுணர்வு அருவருக்கத் தக்கதல்ல என்பதை உணரலாம்.
அதுமட்டுமல்ல, பாலுணர்வால் உண்டாகும் அன்பு - அதாவது காதலும் இழிவானதல்ல என்பதை அறியலாம்.ஆண் பெண்ணுக்கிடையே இறைவன் அன்பை ஏற்படுத்துவது சான்றுகளில் ஒன்று என்றும் இந்த வசனம் உணர்த்துகிறது.
இரத்த பந்தமற்றவர்களிடத்தில் ஏற்படும் அதிசயமான உறவு இறைவனின் மகத்துவத்தையும், படைப்பின் ரகசியத்தையும், வாழ்வின் அர்த்தத்தையும் உணர்த்துவதாக இருக்கிறது.
அது மட்டுமல்ல, இந்த உறவு ஏகத்துவத்திற்கும் சான்றாக இருக்கிறது.
சிலர் நம்புவது போலக் கடவுளர்கள் பலவாக இருந்து ஆண் ஒரு கடவுளையும் பெண் ஒரு கடவுளையும் வணங்குபவர்களாக இருந்தால் இருவருக்கிடையே காதல் என்ற உறவு ஏற்படுவது அரிது.
இறைவன் ஒருவனாக இருந்தால் தான் எந்த ஆணையும் எந்தப் பெண்ணையும் இணைக்க முடியும். பாலுறவில் ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து ஒன்றென உணர்கின்றனர். இதுவும் ஏகத்துவத்தை - எல்லாம் ஒன்று என்பதை - நுட்பமாக உணர்த்தும் சான்றாகும், காதல் என்பது இறைவன் போடும் முடிச்சு. அதனால்தான் இரத்த பந்தத்தைவிட உறுதியாக இருக்கிறது.பாலுணர்வு இல்லையேல் ஆண் பெண் இணைப்பு இல்லை. ஆண் பெண் இணைப்பு இல்லையேல் மக்கட் பெருக்கம் இல்லை. மக்கட் பெருக்கம் இல்லையேல் உலகம் இல்லை.
உலகம் நீடித்து இயங்குவதற்கே இறைவன் ஆணுக்கும் பெண்ணுக்கும் முடிசுப் போடுகிறான்.
'அவன் உங்களை ஒரே மூலப் பொருளிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய இணையையும் படைத்தான். அவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான்' (4ஃ1) என்ற திருமறை வசனம் இதனை உணர்த்துகிறது.
ஒரு பொருளைக் கயிற்றால் கட்டும் போதும் முடிச்சுப் போடுகிறேம். திருமணம் என்ற முடிச்சு இருவரைக் கட்டிப் போடுகிறது. இந்தக் கட்டிப் போடுவது என்பது கட்டுப்பாடாக அமைகிறது.
ஒரு மாட்டை ஒரு முளையடித்துக் கட்டிப் போடுகிறோம். அதனால் அந்த மாடு கயிறு அனுமதிக்கும் எல்லை வரை உள்ள புல்லைத்தான் மேய முடியும். அதற்கு அப்பால் சென்று மேய முடியாது.
நடத்தை சரியில்லாத பையனுக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்பது பொதுவான நம்பிக்கை. அதனால்தான் திருமணத்தைக் 'கால் விலங்கு' என்று கூறுகிறார்கள். விலங்கு என்பதும் முடிச்சே பொருள்களைப் பாதுகாக்கவும் நாம் அவற்றைக் கட்டி முடிச்சுப் போடுகிறோம்.திருமணம் ஆண் பெண் ஒழுக்கத்தைப் பாதுகாக்கிறது.
'இளைஞர்களே உங்களில் வசதி வாய்ப்பு உள்ளவர்கள் திருமணம் செய்து கொள்ளுங்கள், ஏனெனில் திருமணம் (தீய) பார்வையைத் தடுக்கிறது. கற்பைப் பாதுகாக்கிறது' (புகாரி 5066) என்பது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாக்கு.திருமணத்தை முடிச்சு என்று கூறுவதன் மூலம் இன்னொரு பொருளும் குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
கணவனும் மனைவியும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்டால் அவர்கள் பிரிந்து விடுவது நல்லது. அதாவது அவர்களைக் கட்டி இணைத்த திருமணம் என்ற முடிச்சை அவிழத்துக் கொள்ளலாம்.
Jazaakallaah khairan - 'சிந்தனை சரம்'
Post a Comment