நீங்களும் கலெக்டர் ஆகலாம்! ஆலோசனை தருகிறார் வெற்றி மங்கை அழகாக மட்டுமின்றி அறிவுப்பூர்வமாகவும் பேசுகிறார் 27 வயது ஜனனி சவுந்தர்யா. ...

நீங்களும் கலெக்டர் ஆகலாம்!
ஆலோசனை தருகிறார் வெற்றி மங்கை
அழகாக மட்டுமின்றி அறிவுப்பூர்வமாகவும் பேசுகிறார் 27 வயது ஜனனி சவுந்தர்யா.
"ஒவ்வொரு புது வருஷமும் ஏதாவது நல்ல காரியத்தை தொடங்கனும்னு சொல்வாங்க. அந்த வகையில், கடந்த 2010 ஜனவரி 1-ம் தேதி நல்ல காரியமாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கு தயாராவதற்காக தனியார் பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்தேன். `இதுதான் முதல் முயற்சி, அதுவே கடைசி முயற்சியும்' என்று எண்ணி படித்தேன். அப்போது படிப்பே எனது வேலையாக இருந்தது. எனது அந்த உழைப்புக்கு அரசு தந்திருக்கும் அங்கீகாரம்தான் சப்-கலெக்டர் (வருவாய் கோட்டாட்சியர்) என்கிற பதவி...'' என்கிற ஜனனி சவுந்தர்யாவின் சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை. தற்போது சென்னை முகப்பேர்-அயப்பாக்கத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட டி.என்.பி. எஸ்.சி. குரூப்-1 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று மாநில அளவில் பதினோராவது இடத்தை பெற்றதன் மூலம் சப்-கலெக்டர் என்கிற வருவாய் கோட்டாட்சியர் பதவியைப் பெற உள்ளார் ஜனனி சவுந்தர்யா. இந்த வெற்றிக்கு அவர் தன்னை எப்படியெல்லாம் தயார்படுத்திக் கொண்டார்? நாம் அவரை அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடியதில் இருந்து...
முதல் முயற்சியே வெற்றியாகும் என்று எதிர்பார்த்தீர்களா?
"இல்லை. கலெக்டர் ஆக வேண்டும் என்பது என் சின்ன வயது கனவு. அதனால், இத்தேர்வின் மூலம் எப்படியாவது சப்-கலெக்டர் ஆகிவிட வேண்டும் என்று கடுமையாக உழைத்துப் படித்தேன். இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் வேறு ஏதாவது பதவிதான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தமிழகம் முழுவதும் 13/4 லட்சம் பேர் குரூப்-1 தேர்வை எழுதினர். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1300 பேர். அதிலிருந்து முதன்மைத் தேர்வுக்கு தேர்வானவர்கள் 129 பேர். இதிலிருந்து நேர்முகத் தேர்வுக்கு என்னையும் சேர்த்து அழைக்கப்பட்டவர்கள் 61 பேர். இந்த வருடம் முதல் 13 இடத்தில் வந்தவர்கள் வருவாய் கோட்டாட்சியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டனர். நானும் அதில் ஒருத்தி.
அரசுப் பணி உங்கள் சின்ன வயது கனவா?
ஆமாம். ஐ.ஏ.எஸ். ஆவதுதான் எனது லட்சியமாக இருந்ததால் பள்ளியில் படிக்கும்போதே பொது அறிவு கேள்விகளை தேடிப்பிடித்து படிக்க ஆரம்பித்து விட்டேன். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்போது அங்கு நடைபெறும் எல்லாப் போட்டிகளிலும் கலந்து கொள்வேன். பொது அறிவுத் தகவல்களை படிப்பதில் எனக்கு எப்போதுமே ஒரு ஆர்வம் உண்டு. நீ கலெக்டர் ஆக வேண்டும் என்று அப்பாவும் அடிக்கடி ஊக்கப்படுத்தினார். இந்த நேரத்தில், குரூப்-1 எழுதும் வாய்ப்பு கிடைத்ததால் அதை பயன்படுத்திக்கொண்டேன். பதவி உயர்வுகளின் மூலம் இன்னும் 10 ஆண்டுகளில் கலெக்டர் ஆகிவிடுவேன் என்று நம்புகிறேன்.
குரூப்-1 தேர்வுக்கு எப்படி தயாரானீர்கள்?
திட்டமிட்டுப் படித்தாலே போதும். தினமும், வாரம்தோறும், மாதம்தோறும் என்று பாடங்களை தனித்தனியாகப் பிரித்து படிக்க வேண்டும். இப்படி படிப்பதால் விரைவில் பாடத்திட்டங்கள் முழுவதையும் படித்துவிட முடியும். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தேர்வை எழுதி முடிக்கும் வகையிலும் என்னை தயார்படுத்திக் கொண்டேன்.
மேலும், கடந்த 15 வருடத்திற்கான குரூப்-1 கேள்விகளையும் படித்தேன். குரூப்-1 தேர்வில் இந்திய அரசியல், வரலாறு கேள்விகள் அதிகம் இடம்பெறும் என்பதால் அதில் சிறப்புக் கவனம் செலுத்தினேன். இவற்றோடு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான கேள்விகளையும் படித்தேன். இந்த தேர்வுக்கான அடிப்படையே 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான அரசு பாடநூல்கள்தான். அவற்றையும் படிக்க வேண்டும். இவற்றோடு பிளஸ்-2 வகுப்பிற்குரிய தாவரவியல், விலங்கியல், வரலாறு பாடங்களிலும் கவனம் செலுத்தினேன். எதிர்பார்க்கும் வேலை வேண்டும் என்றால் நிறைய மார்க் வாங்க வேண்டும். அதற்கு நிறைய படித்தால்தான் முடியும்.
நடப்பு செய்திகளுக்கு எந்த வகையில் முக்கியத்துவம் கொடுத்தீர்கள்?
பொது அறிவு கேள்விகளோடு நாட்டு நடப்புகளையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் செய்தித்தாள்களை தினமும் படிக்க வேண்டும். குரூப்-1 தேர்வில் கேட்கப்படும் 20 சதவீத கேள்விகள் தமிழ்நாடு தொடர்பான கேள்விகளே. தமிழ் செய்தித்தாளை தினமும் படிப்பதால் அந்த கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க முடியும். ஆங்கில செய்தித்தாள் மூலம் தேசிய அளவிலான தகவல்களை அதிகம் அறிந்து கொள்ளலாம். மேலும், அரசு அமல்படுத்தும் திட்டங்கள் தொடர்பாகவும் கேள்விகள் கேட்பார்கள் என்பதால், அந்த திட்டங்கள் பற்றிய முழுமையான விவரம் அடங்கியுள்ள தமிழ்நாடு அரசு இணையதளம் மற்றும் விக்கிபீடியா தகவல்களையும் ஆன்லைன் வழியாக படிக்க வேண்டும். இதற்காக நான் மொபைல் இன்டர்நெட்டைக் கூட அதிக அளவில் பயன்படுத்தி இருக்கிறேன்.
நேர்முகத்தேர்வு அனுபவம் எப்படி இருந்தது?
என்னுடன் நேர்முகத் தேர்வுக்கு தேர்வானவர்கள் அனைவரும் சீனியர்கள் என்பதால் எனக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. என்னுடன் வந்தவர்களில் பாதி பேர் அரசு பணிகளில் இருந்தார்கள். மற்றவர்கள், ஏற்கனவே தேர்வு எழுதிய அனுபவம் பெற்றிருந்தார்கள். ஆனால், நான்தான் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று நேர்முகத்தேர்வுக்கு வந்திருந்தேன். என்னாலும் முடியும் என்று நம்பியதால் ஆரம்பத்தில் இருந்த பயம் விலகிப்போனது.
ஒரு அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும்?
இதே கேள்வியை நேர்முகத் தேர்விலும் என்னிடம் கேட்டார்கள். அரசு கொண்டு வரும் நலத்திட்டப் பணிகள் மக்களை முழுமையாக சென்றடையும் வகையில் ஒவ்வொரு அதிகாரிகளும் பணியாற்ற வேண்டும். ஒரு மாவட்டம் வளர்ச்சி அடைந்தால், மாநிலம் தானாக வளர்ச்சி பெற்றுவிடும். மேலும், அதிகாரிகள் நேர்மையானவர்களாகவும் செயல்பட வேண்டும்.
இந்த வெற்றிக்காக தியாகம் செய்தது?
சென்னையில் 7 வருடங்களாக பங்கு வர்த்தக நிறுவனம் ஒன்றில் பார்த்து வந்த மாதம் 30 ஆயிரம் சம்பளம் தந்த மேலாளர் வேலை.
அரசுப் பணி எல்லோருக்கும் சாத்தியமா?
கண்டிப்பா. விடாமுயற்சியுடன் திட்டமிட்டு படித்தால் நீங்களும் அரசு அதிகாரி ஆகலாம்.
வருங்கால அதிகாரிகளுக்கு உங்களது அறிவுரை...
தெய்வத்தால் முடியாத செயல் என்றாலும்கூட, முயற்சி செய்தால் அதில் வெற்றி பெறலாம். இதை நான் சொல்லவில்லை. திருவள்ளுவர் சொன்னது...'' என்கிற ஜனனி சவுந்தர்யாவின் பேச்சில் பல அரசு அதிகாரிகளை உருவாக்கும் `பவர்' தெரிகிறது.
ஜனனி சவுந்தர்யா பி.எஸ்சி., எம்.ஏ., எம்.பி.ஏ., முடித்துள்ளார். இவரது தந்தை எஸ்.ராமமூர்த்தி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். அம்மா சாந்தி குடும்பத் தலைவி. ஜனனி ஐஸ்வர்யா, ஜனனி சவுபாக்யா என்ற இரு சகோதரிகளும் உள்ளனர்.
***
ஜனனி சவுந்தர்யா... மனம் திறந்து...
லட்சியம் - கலெக்டர் ஆவது

நிறைவேறிய ஆசை - சப்-கலெக்டர் ஆனது
நிறைவேறாத ஆசை - பங்கு வர்த்தகத்தில் ஆராய்ச்சி செய்ய நினைத்தது
சந்திக்க விரும்பும் வி.ஐ.பி. -முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.
பொழுதுபோக்கு - மெல்லிசை கேட்பது, புத்தகங்கள் படிப்பது
உங்களிடம் பிடித்தது - நினைத்ததை செய்து முடிப்பது
பிறரிடம் எதிர்பார்ப்பது - செய்யும் வேலையை சிறப்பாக செய்யுங்கள்
கடவுள் நேரில் வந்தால்... - இந்தியா வல்லரசாக வேண்டுவேன்
அடிக்கடி வரும் கனவு - கலெக்டராக வேலை பார்ப்பது போன்று
படித்த பொன்மொழி - லட்சியம் இல்லாத வாழ்க்கை, ஒளியில்லாத விளக்கைப் போன்றது
***
குரூப்-2 எழுதப் போறீங்களா?
ஜுலை 30-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது. அந்த தேர்வு எழுதுபவர்கள் வெற்றிபெற ஜனனி சவுந்தர்யா தரும் டிப்ஸ்...
* "நாட்டு நடப்பு தகவல்களை அப்டேட் ஆக தெரிந்து வைத்திருங்கள்.
* புதிதாய் எழுத வருபவர்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். அந்த ஆர்வத்தோடு சிறப்பாக படித்தால் மற்றவர்களைக் காட்டிலும் எளிதில் வெற்றிபெற்றுவிடலாம். தனியாக படிப்பதைவிட, 3 அல்லது 4 பேர் சேர்ந்த குழுவாக படிக்க வேண்டும். மேலும், நல்ல பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவது அவசியம். அப்போதுதான், நம்மைவிட எத்தனைபேர் திறமைசாலிகளாக இருக்கிறார்கள், நாம் என்ன நிலைமையில் இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
* டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளில் எந்த பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும் என்கிற விவரம் டி.என்.பி.எஸ்.சி. வெப்சைட்டிலேயே உள்ளது. அது பலருக்கும் தெரிவதில்லை. பாடத்திட்டங்களை தேர்வு செய்வதற்கு முன்பாக அதைப் பார்ப்பது நல்லது.
* படிக்கும் விஷயங்களை நுனிப்புல் மேய்வது போன்று மேலோட்டமாக படிக்கக்கூடாது. ஆழ்ந்து படிக்க வேண்டும். உதாரணமாக, அண்மையில் உலகில் எங்கேனும் மிகப்பெரிய அளவில் பூகம்பம் நடந்திருந்தால், அதுபற்றி கேள்வி கேட்கும்போது எத்தனை ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது என்று கூட கேட்பார்கள். அதனால், முழு விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
* பொது அறிவு கேள்விகளை மட்டும் தேடிப்பிடித்து படிக்காமல் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும். பொது அறிவில் அதிகப்பட்சம் 75 மார்க்தான் எடுக்க முடியும். அதனால், பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் தரும்போது கட்-ஆப் மார்க்கை தாண்டி வெற்றிபெற முடியும்.
* மாதிரி வினாத்தாள்களை படிக்கும்போது, எந்த கேள்விகளுக்கு விடை தெரியவில்லையோ, அந்த பாடப்பகுதியை திரும்பத் திரும்ப படித்து தெரிந்து கொள்வது அவசியம். பொதுத்தமிழில் அதிக மதிப்பெண் பெற 6-10ம் வகுப்பு இலக்கண புத்தகங்கள் உதவும்.
* 3 மணி நேரத்தில் தேர்வை எழுதி முடிக்க வீட்டிலேயே அடிக்கடி மாதிரி தேர்வு எழுதி பழகிக்கொள்ள வேண்டும். இதற்கான மாதிரி வினாக்கள், பொது அறிவு நூல்கள் விற்கப்படும் கடைகளிலேயே கிடைக்கின்றன.
நீங்களும் வெற்றிபெற என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!''
Post a Comment