30 வகை ஊறுகாய் ரெசிபி ! சமையல் குறிப்பு

30 வகை ஊறுகாய் ரெசிபி ! 'ஊறுகாய்' என்றதுமே... பசிக்காத வயிற்றுக்கும் பசி எடுக்கும்; ருசிக்காத உணவும்... ருசிக்கும். அதனால்தான் பெரு...

30 வகை ஊறுகாய் ரெசிபி ! 'ஊறுகாய்' என்றதுமே... பசிக்காத வயிற்றுக்கும் பசி எடுக்கும்; ருசிக்காத உணவும்... ருசிக்கும். அதனால்தான் பெரும்பாலானவர்களின் வீட்டு சமையல் அறையில் ஜம்மென்று இடம்பிடித்து உட்கார்ந்திருக்கிறது ஊறுகாய் ஜாடி! வெயில் 'சுள்'ளென்று சுட்டெரிக்கும்போதே.... வடாம், ஊறுகாய் என்றெல்லாம் தயாரித்து வைத்துக் கொண்டால், அடுத்து வரும் அடை மழைக் காலத்தை அட்டகாசமாக சமாளித்துவிடலாம், சமையல் சிம்பிளாக இருந்தாலும்! ''ஊறுகாய் ரொம்ப நாள் கெடாம இருக்கணும்னா, கட்டாயம் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்துக்கணும். அதேபோல், தூள் உப்புக்குப் பதிலா... கல் உப்பு சேர்த்தா, காலமெல்லாம் சுவையும் மாறாம இருக்கும். அப்புறம்... தாளிக்கறதுக்கு நல்லெண்ணெய் பயன்படுத்தினா, டேஸ்ட் சூப்பரோ... சூப்பர்தான்!'' ---------------------------------------------------------------------- 'மீல் மேக்கர் 65’ செய்ய முடியுமா..? உப்புக் கலந்த தண்ணீரில் மீல் மேக்கரை பத்து நிமிடம் ஊற வைத்து... பிறகு, அவற்றைத் தனியாக எடுத்து நன்றாகப் பிழிந்து கொள்ளவும். கலந்து வைத்துள்ள மசாலாத்தூளில் மீல் மேக்கரைத் தோய்த்து எண்ணெயில் போட்டு, பொரித்து எடுத்தால்... 'மீல் மேக்கர் 65’ எனும் சூப்பர் டிஷ் ரெடி! தயிர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும். ----------------------------------------------------------------------- பலாக்கொட்டை ரோஸ்ட் சாப்பிட்டிருக்கிறீர்களா? பலாக்கொட்டைகளை வேக வைத்து தோல் நீக்குங்கள். அதனுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகப் பிசறிக் கொள்ளுங்கள். கடாயில் எண்ணெய் விட்டு, பிசறிய பலாக்கொட்டைகளைச் சேர்த்து வறுத்தெடுங்கள். அபாரமான டேஸ்ட்டுடன் அசத்தல் ரோஸ்ட் ரெடி! ------------------------------------------------------------------- சுவையான மோர்க் குழம்பு தயாரிக்க வேண்டுமா? தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து... அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து இந்தக் கலவையைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கியதும், அடுப்பை அணைக்கவும். உடனே, மோரைச் சேர்த்து நன்கு கலக்கி விட, ருசியான மோர்க்குழம்பு தயார். தேவைப்பட்டால்... வெண்டைக்காய், பரங்கிக்காய் என்று சேர்த்தும் தயாரிக்கலாம். ------------------------------------------------------------------ தக்காளி ஊறுகாய் தேவையானவை : தக்காளி - ஒரு கிலோ, காய்ந்த மிளகாய் - 150 கிராம், வெந்தயம், கடுகு - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு. தாளிக்க : கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்து... நான்காக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் மூடி வைக்கவும். அடுத்த நாள், அதனை வெயிலில் வைத்து எடுக்கவும். அடுத்தடுத்த நாட்களில், நறுக்கிய தக்காளியை 'பிளாஸ்டிக்’ பேப்பர் மேலே பரப்பிக் காய வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். தக்காளியில் உள்ள தண்ணீர் உலர்ந்ததும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தக்காளியின் மேல் தெளித்துக் காய விடவும். பாத்திரத்தில் இருக்கும் மொத்த தண்ணீரும் தீரும் வரை இதேபோல் செய்து, தக்காளியை நன்கு உலர்த்தி, காயவைத்து எடுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். கடுகையும் வெந்தயத்தையும் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். காய வைத்த தக்காளியுடன் வறுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து... மஞ்சள்தூள், பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி ஆறவைக்கவும். பிறகு, ஈரமில்லாத பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும். இந்த ஊறுகாய் 3 மாதம் வரையிலும் கெடாது. ------------------------------------------------------------------------ காய்கறி ஊறுகாய் தேவையானவை : நறுக்கிய கேரட் - அரை கப், பாகற்காய் - கால் கப், பீன்ஸ் - கால் கப், பஜ்ஜி மிளகாய் - கால் கப், பச்சை மிளகாய் - 100 கிராம், பெங்களூர் கத்திரிக்காய் - கால் கப், காய்ந்த மிளகாய் - 100 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், வினிகர் - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : காய்ந்த மிளகாய், கடுகு இரண்டையும் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வெந்தயத்தை வறுத்துக் கொள்ளவும். நறுக்கிய காய்கறிகளுடன் பொடித்த கடுகு, பொடித்த மிளகாய், மஞ்சள்தூள், உப்பு ஆகியவற்றை பெரிய பாட்டிலில் சேர்த்து நன்கு குலுக்கிக் கலந்து கொள்ளவும். பிறகு அவற்றுடன் எலுமிச்சம் பழச் சாறு, வினிகர் விட்டுக் கலந்து கொள்ளவும். பின்னர் பெருங்காயத் தூள், கடுகு எண்ணெய் சேர்த்துக் கலந்துகொள்ளவும். காய்கறிகள் அந்தக் கலவையில் நன்கு கலக்கும் வரை ஊறவிட்டு, பிறகு ஊறுகாயைப் பயன்படுத்தலாம். இதனை காற்றுப் புகாத பாட்டிலில் வைத்து மூன்று மாதங்கள் வரை பயன்படுத்தலாம். --------------------------------------------------------------- புளி - இஞ்சி ஊறுகாய் தேவையானவை: நார் இல்லாத இஞ்சி - கால் கிலோ, பச்சை மிளகாய் - 50 கிராம், புளி, பொடித்த வெல்லம் - தலா 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : புளியை அரை கப் தண்ணீரில் ஊறவைத்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். இஞ்சியை நன்றாகக் கழுவி சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து, நன்றாகக் கொதிக்க விடவும். இஞ்சி நன்கு வெந்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் பொடித்த வெல்லத்தைப் போட்டுக் கிளறி இறக்கி ஆறவிட... புளி - இஞ்சி ஊறுகாய் 'கமகம’வென ரெடி ---------------------------------------------------------------------- பிளம்ஸ் ஊறுகாய் தேவையானவை: நறுக்கிய பிளம்ஸ் பழம் - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயப்பொடி - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய பிளம்ஸ் பழங்களை அதில் சேர்க்கவும். லேசாக வதங்கியதும்... உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து நன்கு வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, ஆறவிடவும். இரண்டு வாரம் வரை கெடாமல் இருக்கும். ---------------------------------------------------------------------------------- மாங்காய் திடீர் ஊறுகாய் தேவையானவை : தோலுடன் சேர்த்து பொடியாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 5, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : பச்சை மிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய மாங்காயுடன் பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்க் கலவையில் சேர்த்துக் கலக்கவும். இந்த திடீர் ஊறுகாய் இரண்டு, மூன்று நாட்கள் வரை கெடாமல் இருக்கும். --------------------------------------------------------------------- பச்சை மிளகாய் - எலுமிச்சை ஊறுகாய் தேவையானவை: எலுமிச்சம்பழம் - 10, இஞ்சி - 100 கிராம், பச்சை மிளகாய் - 50 கிராம், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: எலுமிச்சம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியைக் கழுவி, நீளமானத் துண்டுகளாக நறுக்கவும். கண்ணாடி பாட்டிலில் நறுக்கிய எலுமிச்சம் பழத்துண்டுகள், நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாயுடன் உப்பு, மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து பாட்டிலை நன்கு குலுக்கவும். ஒரு வாரம் வரை, இரண்டு மூன்று முறை பாட்டிலைக் குலுக்கவும். அப்போதுதான் எல்லாப் பொருட்களும் ஒன்றாகக் கலந்து நன்றாக ஊறி, ஊறுகாய் சுவையாக இருக்கும். இதை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ---------------------------------------------------------------------------- நெல்லிக்காய் ஊறுகாய் தேவையானவை: நெல்லிக்காய் - 20, வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நெல்லிக்காயை நன்றாகக் கழுவி, ஆவியில் இரண்டு நிமிடம் வேக வைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... அதில் வேக வைத்த நெல்லிக்காய்களை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், மஞ்சள் தூள், உப்பு, வெந்தயப்பொடி சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும். 5 நிமிடம் கழித்து மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி எடுக்கவும். ஆறியதும், அந்தக் கலவையில் எலுமிச்சம் பழச்சாறு விட்டு நன்கு கலந்துகொள்ள... விட்டமின் 'சி’ நிறைந்த நெல்லிக்காய் ஊறுகாய் ரெடி! இந்த ஊறுகாய் ஒரு வாரம் வரைதான் கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைத்தால், கூடுதலாக சில நாட்கள் இருக்கும். ------------------------------------------------------------------------ நாரத்தங்காய் ஊறுகாய் தேவையானவை : நாரத்தங்காய் - 10, பொடித்த மிளகாய்த்தூள் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை : நாரத்தங்காயை கழுவி, துடைத்து சுருள் சுருளாக நறுக்கி... அதனுள் கல் உப்பை அடைத்து ஊறுகாய் ஜாடியில் வைக்கவும். நாரத்தங்காயின் தோல் தடிமனாக இருப்பதால் நன்கு ஊறுவதற்கு 3 நாட்கள் ஆகும். நன்கு ஊறியதும், அதை தனியாக எடுத்து வெயிலில் காய வைக்கவும். ஈரம் போகக் காய்ந்ததும் மீண்டும் பாத்திரத் தில் இருக்கும் உப்புத் தண்ணீரிலேயே போடவும்; மீண்டும் காயவைக்கவும். தோல் நன்றாக ஊறும்வரை இதேபோல் செய்யவும். பிறகு வெந்தயத்தை வறுத்து, மிளகாய்த்தூளுடன் சேர்த்து... ஊறவைத்த நாரத்தங்காயில் பிசறி நன்றாகக் கலந்து வைக்கவும். எல்லாம் ஒன்றாகக் கலந்து வாசம் வந்ததும் பயன்படுத்தலாம். ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். ------------------------------------------------------------------------- மாகாளி ஊறுகாய் தேவையானவை: மாகாளிக் கிழங்கு - அரை கிலோ, விரலி மஞ்சள் - ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் - 10, வறுத்த வெந்தயம் - அரை டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாகாளிக் கிழங்கினை நன்றாகக் கழுவி, தோல் நீக்கி... நடுவில் இருக்கும் வேரை எடுத்துவிட்டு, சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும். காய்ந்த மிளகாயுடன் விரலி மஞ்சள், வறுத்த வெந்தயம், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர் விட்டு அரைத்து, அந்த விழுதினை நறுக்கிய மாகாளிக் கிழங்குடன் சேர்ந்து நன்கு கலந்து கொள்ளவும். இறுதியாக, எலுமிச்சம்பழச் சாற்றை சேர்த்துக் கலந்து சில நாட்கள் ஊறவிட்டால்... ஊறுகாய் ரெடி! இதனை ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். -------------------------------------------------------------------- ஓமம் - மாங்காய் ஊறுகாய் தேவையானவை: நீளவாக்கில் மெல் லியதாக நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 15 அல்லது 20, கீறிய பச்சை மிளகாய் - 4, ஓமம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் (அல்லது) கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: நறுக்கிய மாங்காயுடன் உப்பு சேர்த்து ஒரு பாத்திரத்தில் இட்டு நன்கு கலக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு ஓமம் சேர்த்துப் பொரிக்கவும். அதனுடன் கீறிய பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி மாங்காய் - உப்புக் கலவையில் சேர்த்து நன்கு கிளற... ஓமம் - மாங்காய் ஊறுகாய் உடனடியாக சுவைக்க ரெடி! இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். -------------------------------------------------------------------------- மாங்காய் இஞ்சி ஊறுகாய் தேவையானவை: மாங்காய் இஞ்சி - 200 கிராம், பச்சை மிளகாய் - 5, எலுமிச்சம்பழம் - 2, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காய் இஞ்சியை மண் போகக் கழுவி, மெல்லிய வட்டங்களாக நறுக்கிக் கொள்ளவும். நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை நறுக்கிய இஞ்சியுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சம் பழத்திலிருந்து சாறு பிழிந்து, அதையும் சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் முழுக்க ஊறவிட... சிம்பிள் மாங்காய் இஞ்சி ஊறுகாய் ரெடி! தயிர் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். இரண்டு வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். ------------------------------------------------------------------------------- பச்சை மிளகு ஊறுகாய் தேவையானவை : பச்சை மிளகு - 250 கிராம், எலுமிச்சம்பழம் - 10, உப்பு - தேவையான அளவு. செய்முறை : பச்சை மிளகினை காம்பிலிருந்து உதிர்த்துக் கழுவி... ஈரம் போகக் காய விடவும். எலுமிச்சம் பழத்தை நறுக்கிச் சாறு எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச்சாற்றில் பச்சை மிளகு, உப்பு சேர்த்து நன்கு குலுக்கி வைக்கவும். மிளகில் எலுமிச்சை சாறு ஊறி, ருசியாக இருக்கும். இது தயிர்சாதத்துக்கு தொட்டுக் கொள்ள சூப்பர் ஊறுகாய்! இரண்டு வாரங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். --------------------------------------------------- மாங்காய் தோல் ஊறுகாய் தேவையானவை : மாங்காய் தோல் - அரை கப், வறுத்துப் பொடித்த மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், எண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை: தோல் தடிமனாய் உள்ள 7-8 மாங்காய்களை துண்டுகளாக நறுக்கி, கல் உப்பு சேர்த்து குலுக்கி வைக்கவும். அது, இரண்டு நாட்கள் ஊறியதும்... வெயிலில் காயவைத்து எடுத்து வைக்க... மாங்காய் தோல் ரெடி! சரியான அளவில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, அதில் மாங்காய் தோலைப் போட்டு வேக விடவும். வெந்ததும், தண்ணீரை வடிகட்டி விடவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அதில் சேர்த்துக் கலந்த பிறகு, பொடித்த மிளகாயையும் சேர்த்து ஒருமுறை நன்கு கலந்து கொள்ளவும். மாங்காய்த் தோலை பூஞ்சணம் பிடிக்காமல் 'ஸ்டாக்’கில் 6 மாதம் வரை வைத்திருக்க... இந்த திடீர் ஊறுகாயை எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ----------------------------------------------------------------- துருவிய மாங்காய் ஊறுகாய் தேவையானவை: புளிப்பு மாங்காய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மாங்காயை தோல் சீவி, கேரட் துருவியில் துருவிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து மாங்காய்த் துருவலைச் சேர்க்கவும். சிறிது வதங்கியதும்... மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கிக் கிளறவும். கடைசியாக, பொடித்த வெல்லம் சேர்த்துக் கிளறி இறக்கவும். இரண்டு வாரங்கள் கெடாமல் நன்றாக இருக்கும். ------------------------------------------------------ பூண்டு ஊறுகாய் தேவையானவை : தோல் உரித்த பூண்டு - ஒரு கப், கடுகுப்பொடி - 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய். உப்பு - தேவையான அளவு செய்முறை : தோலுரித்த பூண்டுடன் மிளகாய்த்தூள், கடுகுப்பொடி, உப்பு, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு, நல்லெண்ணெய் விட்டு, மீண் டும் ஒருமுறை எண்ணெய் சீராக பரவுமாறு கலந்து வைக்கவும். பூண்டு அந்தக் கலவையில் ஊற ஊற, ஊறுகாய் சுவையுடன் இருக்கும். ஒரு மாதம் கெடாமல் இருக்கும் இந்த ஊறுகாய். ----------------------------------------------------------- ஊறவைத்த எலுமிச்சை ஊறுகாய் தேவையானவை : எலுமிச்சம் பழம் - 25, மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்து அரைத்த வெந்தயப்பொடி - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை : எலுமிச்சம்பழத்தை எட்டுத் துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து குலுக்கி வைக்கவும். இப்படி, தினமும் குலுக்க... அவை உப்பில் நன்கு ஊறி மிருதுவாக மாறும். இதற்கு, எலுமிச்சம் பழம் அதிக சாறு உள்ள பழமாக இருப்பது அவசியம். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து ஊறவைத்த எலுமிச்சம்பழம் சேர்த்துக் கிளறவும். பிறகு மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறி இறக்கவும். எலுமிச்சம் பழம் நன்கு ஊறிஇருப்பதால், அதிக நேரம் அடுப் பில் வைத்திருக்கத் தேவையில்லை. இந்த ஊறுகாயை மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்த முடியும். ----------------------------------------------------- மாவடு ஊறுகாய் தேவையானவை : மாவடு - ஒரு கிலோ (கீழே விழுந்த மாவடு கூடாது), கடுகுத்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டேபிள்ஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன், விளக்கெண்ணெய், கல் உப்பு - தேவையான அளவு. செய்முறை : மாவடுவை நன்றாகக் கழுவி, தண்ணீர் இல்லாமல் துடைத்து துணியில் பரப்பி 2 மணி நேரம் காய விடவும். ஊறுகாய் ஜாடியில் மாவடுக்களைப் போட்டு, விளக்கெண்ணெய் விட்டுக் குலுக்கவும். பிறகு, கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு குலுக்கவும். இதேபோல் நான்கு நாட்களுக்குத் திரும்பத் திரும்பக் குலுக்கவும். அப்போது மாங்காயுடன் உப்பு சேர்வதால், ஜாடிக்குள் நிறைய தண்ணீர் பிரிந்து வந்திருக்கும். ஜாடியில் உள்ள மாவடுக்களை வெளியே எடுத்து வேறொரு ஜாடியில் போடவும். மாவடு ஊறிய ஜாடியிலிருக்கும் தண்ணீரை வடிகட்ட வேண்டும். இன்னொரு ஜாடியில் உள்ள மாவடு உடன் கடுகுத்தூள், மிளகாய்த்தூள், வெந்தயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து... வடிகட்டி வைத்துள்ள உப்பு நீரையும் விட்டு நன்கு குலுக்கி வைத்து விட்டால் மாவடு ஊறுகாய் உங்கள் நாவில் எச்சில் ஊறவைக்கும். இது மூன்று மாதங்கள் வரை கெடாமல் இருக்கும். ---------------------------------------------------------- ஆவக்காய் ஊறுகாய் தேவையானவை : முற்றிய புளிப்பு மாங்காய் - 10, வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 கப், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : புளிப்பு மாங்காயை நடுவில் இருக்கும் ஓட்டுடன் சேர்த்து நறுக்கி, ஒவ்வொரு துண்டையும் நன்றாகத் துடைத்துக் கொள்ள வேண்டும். கடுகு, உப்பு இரண்டையும் சில மணி நேரம் வெயிலில் காயவைத்து, தனித்தனியாகப் பொடித்துக் கொள்ள வேண்டும். மாங்காய் தவிர, மற்ற பொருட்கள் அனைத்தையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். வாயகன்ற ஒரு ஜாடியில் மாங்காய் துண்டுகளை ஒரு கை போடவும். கலந்து வைத்திருக்கும் பொடிக் கலவையை அதன்மீது ஒரு 'லேயர்’ தூவவும். மீண்டும் மாங்காய் துண்டுகள் ஒரு 'லேயர்’, பொடிக்கலவை ஒரு 'லேயர்’ என மாற்றிமாற்றிப் போடவும். கடைசியில், நல்லெண்ணெய் விட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் கிளறி விடவும். ஜாடியின் வாய்ப்பகுதியை வெள்ளைத் துணியால் மூடி இறுகக் கட்டிவிட வேண்டும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்த ஆரம்பிக்கலாம். 2-3 மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ------------------------------------------------------------------ மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய் தேவையானவை : தோல் சீவிப் பொடியாக நறுக்கிய மாங்காய் இஞ்சித் துண்டுகள் - அரை கப், மாங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : மாங்காய் இஞ்சியுடன், மாங்காய், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து... அரைத்த மாங்காய் - இஞ்சி விழுதையும் சேர்த்துக் கிளறினால், சுவையான மா இஞ்சி - மாங்காய் ஊறுகாய் ரெடி! இதனை, ஒரு மாதம் வரையிலும் வைத்திருந்து பயன்படுத்தலாம். ----------------------------------------------------------------------- வெங்காய ஊறுகாய் தேவையானவை : சின்ன வெங்காயம் - கால் கிலோ, காய்ந்த மிளகாய் - 10, புளி - 25 கிராம், கடுகு - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து, கழுவி எண்ணெய் விட்டு வதக்கவும். ஆறியதும், அதனுடன் காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து... அரைத்த விழுது சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் போது, இறக்கி ஆறவைத்து, ஈரமில்லாத பாட்டிலில் சேமித்து வைக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ------------------------------------------------------------------------- ஸ்டஃப்டு மிளகாய் ஊறுகாய் தேவையானவை : இளம் பச்சை நிற மிளகாய் (பெரியது) - 20, கடுகு - 50 கிராம், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - கால் கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை : மிளகாயின் காம்பு நீக்கி, இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கடுகைப் பொடித்து, அதனுடன் உப்பு, சோம்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒவ்வொரு மிளகாயின் உள்ளே வைத்து அடைத்துக் கொள்ளவும். பிறகு அவற்றை ஒரு ஜாடியில் போட்டு, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலந்து, குலுக்கி வைக்கவும். அவையெல்லாம் ஒன்றாகக் கலந்து, நன்றாக ஊற... மிளகாயின் காரமும் எலுமிச்சையின் புளிப்பும் கலந்து மிகுந்த சுவையுடன் இருக்கும். காற்றுப்புகாத, ஈரமில்லாத ஜாடியில் வைத்திருந்தால், ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம். ------------------------------------------------------------------- புளியங்காய் ஊறுகாய் தேவையானவை : இளம் புளியங்காய் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 15, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், வறுத்த வெந்தயப்பொடி - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : புளியங்காயைக் கழுவித் துடைத்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இடித்து, பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும்.தேவைப்படும்போது, இதில்இருந்து சிறிது எடுத்து சிறிது தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை சேர்த்து வதக்கி, வெந்தயப்பொடியைச் சேர்த்து நன்கு கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி சேமிக்கவும். ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். -------------------------------------------------------------------- காய் - கனி ஊறுகாய் தேவையானவை: துருவிய ஆப்பிள் - கால் கப், துருவிய கேரட் - கால் கப், துருவிய பரங்கிக்காய் - கால் கப், புளி - 25 கிராம், காய்ந்த மிளகாய் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: துருவிய கேரட், பரங்கிக்காய், காய்ந்த மிளகாய், புளி, உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து துருவி வைத்துள்ள ஆப்பிள் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறி... அரைத்த காய்கறி விழுதைச் சேர்த்து மீண்டும் சுருள வதக்கி இறக்கவும். இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்று சுவை கலந்து இருப்பதால் வித்தியாசமாக இருக்கும். இதனை ஒரு மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ----------------------------------------------------------------------------- எலுமிச்சை திடீர் ஊறுகாய் தேவையானவை : எலுமிச்சம் பழம் - 10, நறுக்கிய பச்சை மிளகாய் - கால் கப், நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : எலுமிச்சை பழத்தைக் கழுவி, கொதிநீரில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும். பிறகு, வெளியே எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கி... கால் கப் தண்ணீர் விடவும். நறுக்கிய எலுமிச்சம் பழம் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி, இறக்கவும். இந்த திடீர் ஊறுகாயை அதிக பட்சம் ஒரு வாரம் வைத்திருந்து பயன்படுத்தலாம். ----------------------------------------------------------------------------- பச்சை மிளகாய் ஊறுகாய் தேவையானவை: பச்சை மிளகாய் - 200 கிராம், கடுகுத்தூள், ஆம்சூர்பொடி (டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் கடுகுப்பொடி, மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து... ஈரமில்லாத பாட்டிலில் போட்டு, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார். இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும். ------------------------------------------------------------------------------- மிளகாய் வடை ஊறுகாய் தேவையானவை : பச்சை மிளகாய் - 250 கிராம், காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம் - 2 டீஸ்பூன், கறுப்பு உளுந்து - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : காய்ந்த மிளகாயை அரை மணிநேரம் ஊறவைக்கவும். கறுப்பு உளுந்து, வெந்தயம் இரண்டையும் தனியாக அரைமணி நேரம் ஊறவைக்கவும். பிறகு பச்சை மிளகாய் ஊறவைத்த காய்ந்த மிளகாய், உளுந்து, வெந்தயம், உப்பு, தயிர் இவற்றுடன் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இந்த விழுதை சிறிய கரண்டியில் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து 'பிளாஸ்டிக் ஷீட்’டில் இடவும். ஈரம் போக வெயிலில் காயவைக்கவும். நன்கு காய்ந்தவுடன், ஈரமில்லாத, காற்றுப்புகாத டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம். தேவைப்படும்போது எண்ணெயில் இட்டுப் பொரித்து... சாப்பாட்டுக்குத் தொட்டுக் கொள்ளலாம். மிளகாய் வடையை இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். ----------------------------------------------------------------------- கதுப்பு மாங்காய் ஊறுகாய் தேவையானவை : சதைப்பற்றுள்ள புளிப்பு மாங்காய் - 2, காய்ந்த மிளகாய் - 50 கிராம், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், கடுகு - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை : மாங்காயை தோல் நீக்காமல் பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும். அவ்வப்போது நன்றாக குலுக்கி விடவும். அதில் தண்ணீர் பிரிந்து வந்ததும், மாங்காய் கதுப்புகளை மட்டும் எடுத்து... வெயிலில் காயவைக்கவும். இதே போன்று 2 நாட்கள் செய்யவும். (மாங்காயில் சிறிது ஈரம் இருக்க வேண்டும்; மொட மொடப்பாக காய வைக்கக்கூடாது.) வெறும் கடாயில் வெந்தயத்தை வறுத்துப் பொடிக்கவும். கடுகையும், மிளகாயையும் வெயிலில் காயவைத்து தனித்தனியாக பொடிக்கவும். காய வைத்துள்ள மாங்காயில் கடுகுப்பொடி, வெந்தயப்பொடி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும். இந்த ஊறுகாய்க்கு எண்ணெய் தேவை இல்லை. இரண்டு, மூன்று மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். -------------------------------------------------------------------------- வெந்தய மாங்காய் ஊறுகாய் தேவையானவை : மாங்காய் - 2, வறுத்துப் பொடித்த வெந்தயம் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை : மாங்காயை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயப்பொடி சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் சேர்த்துக் கலந்து பரிமாறவும். உடனடியாக செய்யக்கூடிய இந்த ஊறுகாயை அதிகபட்சம் ஒரு வாரம் வரை வைத்திருக்கலாம். --------------------------------------------------------------------- மாம்பழ ஊறுகாய் தேவையானவை : மாம்பழம் - 3, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், எலுமிச்சம் பழச்சாறு - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை : மாம்பழத்தை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், தாளித்து மாம்பழத்தில் சேர்க்கவும். இறுதியாக, எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ள மாம்பழ ஊறுகாய் ரெடி! சாம்பாருக்கும், தயிர் சாதத் துக்கும் சரியான ஜோடி, இந்த ஊறுகாய்! ---------------------------------------------------------------------- கிடாரங்காய் ஊறுகாய் தேவையானவை : பழுத்த கிடாரங்காய் - 2, மிளகாய்த்தூள் - 50 கிராம், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு செய்முறை : கிடாரங்காயை பொடிப்பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய கிடாரங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பாதிக்குப் பாதியாக வதங்கியதும் மிளகாய்த்தூள், பொடித்த வெல்லம் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை கிளறி இறக்கவும். இது, ஒன்றிரண்டு மாதங்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.

Related

30 நாள் 30 வகை சமையல் 8105385996636590142

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item