தேங்காய்ப்பால் பாயசம்--சமையல் குறிப்புகள்
தேங்காய்ப்பால் பாயசம் தேவையான பொருட்கள் முற்றின தேங்காய் - 1 பச்சரிசி - 4 டேபிள் ஸ்பூன் வெல்லம் (நறுக்கியது) - 1 கப் சுக்குப்பொடி - 1 சிட...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_23.html
தேங்காய்ப்பால் பாயசம்
தேவையான பொருட்கள்
முற்றின தேங்காய் - 1
பச்சரிசி - 4 டேபிள் ஸ்பூன்
வெல்லம் (நறுக்கியது) - 1 கப்
சுக்குப்பொடி - 1 சிட்டிகை
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு - 4
திராட்சை - 4
பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை
செய்முறை
* பூத்துருவலாகத் துருவிய தேங்காய்த் துருவலில் பாதியளவை மிக்சியில் போட்டு சிறிது நீருடன் அரைத்து உலோக வடிகட்டியில் போட்டு முதல் பால், பிறகு இரண்டாம் பால் என்று பிழிந்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* மீதமுள்ள தேங்காய்த் துருவலுடன், ஒரு மணி நேரம் ஊற வைத்த பச்சரிசியை மிக்சியில் போட்டு சற்று அரைத்து மேலும் இரண்டாம் தேங்காய்ப்பால் சேர்த்து மிக நைசான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் நெய் ஊற்றி, முந்திரிப் பருப்பு, திராட்சை வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
* பிறகு அதே பாத்திரத்தில் மெல்லிய தீயில் அரைத்த விழுது, 4 கப் நீர் சேர்த்து நன்கு வேகும் வரை மெல்லிய தீயிலேயே கிளறவும்.
* அரிசி நன்கு வெந்தவுடன் தண்ணீருடன் கொதிக்க விட்டு தூசு நீங்க வடிகட்டிய வெல்ல நீர், முதல் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு ஒரு கொதி விடவும்.
* பிறகு சுக்குப்பொடி, நெய்யில் வடித்த முந்திரி திராட்சை போட்டு இரு விரல்களுக்கு நடுவே பச்சைக் கற்பூரத்தை நெரித்துப் போட்டு பரிமாறவும்.
குறிப்பு
* தேங்காய், பச்சரிசி அரைத்த விழுதைக் கொதிக்க விடுகையில் அடிபிடித்து விடாமல் இருக்க அடுப்பை மெல்லிய தீயில் எரிய விடுவது அவசியம்.
* ரெடிமேடாக கடைகளில் கிடைக்கும் தேங்காய்ப் பாலையும் உபயோகிக்கலாம்.
குறிப்பு
பால் சேர்த்துச் செய்யும் பாயசத்தின் சுவையிலிருந்து வேறுபட்டு, இயற்கை இனிப்புகளுடன் கூடிய தேங்காய்ப்பால் பாயசம் அதீத சுவையுடன் நாவின் சுவை மொட்டுகளுக்கு விருந்து படைக்கும்.
தேங்காய்ப்பால் பாயசத்துக்கு சுக்குப் பொடி சிறிதளவு சேர்த்தோமானால் அது பாயசத்தை கமகமக்க வைப்பதுடன் நம் வயிற்றுக்கும் சொக்குப் பொடி போட்டு அஜீரணத்தைப் போக்கி வாயுத் தொல்லை இல்லாமல் தடுக்கும்.
சுக்குப் பொடிக்கு உணவை எளிதில் ஜீரணிக்க வைக்கும் சக்தி உண்டு. காலையில் இஞ்சி, மதியத்தில் சுக்கு, இரவில் கடுக்காய் உண்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் நம் முன்னோர்.
கீர், பாயசம், பிர்ணி போன்ற சுவைகளில் இருந்து வேறுபட்டு தனித்துவமான சுவையுடன் கூடிய தேங்காய்ப்பால் பாயசத்திற்கு பச்சைக் கற்பூரத்தை நெரித்துச் சேர்ப்பது ஒரு புது மணத்தை கொடுக்கும். வாருங்கள் வேறுபட்ட சுவையுடனும், மணத்துடனும் கூடிய தேங்காய்ப்பால் பாயசம் விருந்து படைக்கும்.
*****************************************************************

Post a Comment