உயில் என்றால் என்ன? அதை எப்படி எழுதுவது?

‘‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக் க...

‘‘அவர் ரொம்பத் தங்கமான மனுஷர்பா... தன்னால் யாருக்கும் எந்தத் தொந்தரவும் வந்துடக் கூடாதுனு நினைக்கும் மனிதர். பழிபாவத்துக்கு அஞ்சி நடக்கக் கூடியவர்’’ என்று ஊரே கொண்டாடிய பொள்ளாச்சி ராமசாமி கடந்த மாதம் இறந்து போனார். அவருடைய காரியங்கள் முடிந்து, சொத்துகளை யார் பராமரிப்பது என்ற யோசனை வந்தபோது, குடும்ப வக்கீல் ஓர் உயிலைக் கொண்டுவந்து கொடுத்தார். உயிலைப் பிரித்துப் படித்த குடும்பத்தினர் மனநிறைவோடு ராமசாமியை நினைத்துக் கொண்டனர். யாருக்கும் எந்த மனவருத்தமும் இல்லாமல், எல்லோரையும் திருப்திப்படுத்தும் விதமாக உயிலை எழுதியிருந்தார். தன்னுடைய மறைவுக்குப் பிறகு யாருக்கும் எந்தப் பிரச்னையும் எழக்கூடாது என்று நினைத்த ராமசாமிக்கு, எண்ணத்தை ஈடேற்ற உதவியாக இருந்தது உயில்! உயில் என்றால் என்ன? ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்). உயில் என்பதே உறவுகளைச் சிதறவிடாமல் பார்த்துக்கொள்ளும் கவசம்தான். அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை. உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்பதால் எழுதிவிடுவது நல்லது. சிவில் கோர்ட்டில் போய்ப் பார்த்தால் எத்தனை வழக்குகள் குடும்பச் சொத்து தொடர்பாக நடந்து கொண் டிருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அந்த அளவுக்கு உறவுகளுக்குள் விரிசலை உண்டாக்கி விடும். சொத்துக்களை முறையாகப் பிரித்து உயில் எழுதிவிட்டால் பிரச்னை ஏதுமில்லை. ‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா. உயில் எழுதவேண்டிய அவசியத்தைத் தெரிந்து கொண்டுவிட்டோம். அதை எப்படி எழுதுவது? அதில் உள்ள நுணுக்கங்களைப் பற்றி அறிந்துகொள்ள வக்கீலைத்தான் நாடவேண்டுமா? ரிஷிகேஷ் ராஜாவிடமே கேட்டபோது, ‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை. உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும். உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’ என்றவர், உதாரணமாக ஒரு வடிவத்தைச் சொன்னார். ‘எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன். கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம். உதாரணத்தைச் சொன்ன ரிஷிகேஷ் ராஜா, ‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார். உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார். உயில் அமல்படுத்துநராக ஒருவரை நியமிப்பது அவசியம். உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்களை உயில் அமல்படுத்துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார். உயில் எழுதப்பட்டிருந்தாலும் சில நேரங்களில் சிக்கல் ஏற்பட்டு கோர்ட் படியேறுகிறார்களே... மூத்த மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார், இளைய மகன் தன் பெயரில் ஒரு உயிலைக் காட்டுகிறார். இரண்டுமே ஒரிஜினலாக வேறு இருக்கிறது. அதுபோன்ற சூழலில் என்ன செய்வது? இதுபற்றி ஒரு வழக்கறிஞரிடம் கேட்டபோது, ‘‘அப்படிப்பட்ட சூழலில் கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் செல்லுபடியாகும். ஒருவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் உயில் எழுதலாம். ஆனால், கடைசியாக எழுதப்பட்ட உயில்தான் சட்டப்படி செல்லும்’’ என்றார். உயில் இல்லாமல் போனால் தோன்றக்கூடிய நிலை குறித்து வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகி சகுந்தலா சுந்தரம் கூறுகையில், ‘‘உயில் எழுதி வைக்காமல் ஒருவர் இறந்துபோனால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி (அவர் சார்ந்திருக்கும் மதத்துக்கு ஏற்ப) வாரிசுகள் அனைவருக்கும் சொத்து பிரிக்கப்படும். இறந்தவர், தனது வாரிசுகளில் ஒருவருக்கு மட்டும் கூடுதலாக சொத்தைக் கொடுக்க நினைத்திருந்தாலும், உயில் எழுதாவிட்டால் அதற்கான வாய்ப்பு இல்லை. சொத்தை தர்ம காரியங்களுக்குச் செலவு செய்ய விரும்பி இருந்தாலும் அதுவும் நடைபெறாது’’ என்றார். தன்னுடைய கணவர் உயில் எழுதி வைக்காததால் தான் படும் சிரமங்கள் குறித்துச் சொன்ன யுவராணி, ‘‘என்னை இரண்டாவது மனைவியாகத் திருமணம் செய்துகொண்ட என் கணவர், 1999&ல் இறந்து போனார். எனக்கு இரு மகள்கள் உள்ளனர். முதல் மனைவியும் எனது கணவரது குடும்பத்தினரும், சொத்தில் எங்களுக்குச் சேரக்கூடிய பங்கைக் கொடுக்காமல் மாதம் 1,000 ரூபாய் மட்டும் கொடுத்து வந்தனர். பிறகு, அந்தப் பணத்தையும் சரியாகக் கொடுக்கவில்லை. வேறுவழியில்லாமல் 2004&ல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். என் கணவர் முறையாக உயில் எழுதி, அதில் எங்கள் பங்கைப் பற்றிச் சொல்லியிருந்தால் இத்தனை கஷ்டங்கள் வந்திருக்காது’’ என்றார். உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது! சொத்து மட்டும் அல்ல. வீட்டுக் கடன், குழந்தைகளின் எதிர்காலப் படிப்புக்-கான செலவு போன்ற எதிர்கால பணச்சிக்கல்களைப் பற்றியும், அவற்றைத் தீர்ப்பதற்கான வழி-முறைகள் பற்றியும் குடும்பத்தினர் அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கும். பெரும்பாலான குடும்பத் தலைவர்கள், தாங்கள் மேற்கொள்ளும் பொருளாதாரச் செயல் களையும், எதிர்கொள் ளும் பணச்சிக்கல்களையும் தங்கள் குடும்பத்தி னரிடம் முழுமையாகத் தெரிவிப்பதில்லை. உயில் எழுதாமல் இறந்துபோகிற பட்சத்தில், அவரது குடும்பம் எதிர்பாராத சுமைகளைத் தாங்கவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படும். அதைத் தவிர்க்க கண்டிப்பாக உயில் எழுத வேண்டும். இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்! நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும். உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. வங்கி நாமினி, உயில் வாரிசு, என்ன வித்தியாசம்? வங்கிக் கணக்கில் நாமினியாக ஒருவரைக் குறிப்பிடுவது என்பது கணக்கு வைத்திருப்பவர் இறக்கும்போது, அந்தக் கணக்கில் உள்ள பணத்தை யாரிடம் வழங்குவது என்பதை மட்டுமே குறிக்கும். மேலும், நாமினிக்கு வங்கிப் பணம் வந்தபிறகு, அந்த பணத்தின்மீது இறந்து போனவரின் வாரிசுகளுக்கு உரிமை உண்டு. ஆனால், ‘தான் இறந்த பிறகு, சொத்துகள் யாருக்குச் சேரவேண்டும்’ என்று குறிப்பிட்டு வாரிசை நியமிப்பது உயில். அதன்மூலம் இறந்தவரின் அனைத்து உடமைகளுக்கும் ஒருவர் வாரிசாக நியமிக்கப்பட்டபின், அந்தச் சொத்து வாரிசுக்கு மட்டுமே சொந்தம். எனவே, வங்கி நாமினியை விட, உயில் வாரிசு மிக முக்கியத்துவம் பெறுகிறார். உயில்கள் பலவிதம்! குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும். மிகச் சிறிய உயில்கள் டெல்லியைச் சேர்ந்த பிமல் ரிஷி, 1995&ல் ‘எல்லாம் மகனுக்கே! (All to son) என்று எழுதியதுதான் மிகச் சிறிய உயில். 1967&ல் செக் நாட்டைச் சேர்ந்த கால் டவுச் எழுதிய உயிலில் ‘எல்லாம் மனைவிக்கே!’ (All to Wife) என்று எழுதியிருந்தார். வாரிசு மைனராக இருந்தால்..? உயிலில் குறிப்பிடப்படும் வாரிசு, 18 வயதுக்கு உட்பட்ட மைனராக இருந்தால், அவருக்கு காப்பாளர் ஒருவரை நியமிக்க வேண்டும். அவரே வாரிசின் சொத்துக்குப் பாதுகாவலராகத் திகழ்வார். எதிர்காலத்தில், பாதுகாவலருக்கு இறக்கக்கூடிய நிலை ஏற்படுமாயின், மேலும் ஒரு பாதுகாவலரை நியமிப்பது நல்லது. உயில் எப்போது செல்லாமல் போகும்? குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை. சில டெக்னிக்கலான வார்த்தைகள்! Will - உயில் (விருப்ப ஆவணம்) Testator - உயில் எழுதியவர் Executor - உயில் அமல்படுத்துநர் Codicil - இணைப்புத் தாள்கள் Attested - சரிபார்க்கப்பட்டது. Probate - -நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.. Beneficiary, Legatee - வாரிசு Intestate - உயில் எழுதாமல் இறந்து போனவர் Succession Certificate - வாரிசு சான்றிதழ் Hindu Succession Act - இந்து வாரிசு உரிமைச் சட்டம் Muslim personal Act - முஸ்லிம் தனிநபர் சட்டம் Guardian - காப்பாளர் Witness - சாட்சி ‘காமெடி’ உயில் கனடா நாட்டு வழக்கறிஞரான சார்லஸ் மில்லர், ‘தான் இறந்து 10 ஆண்டுகளுக்குள், எந்த பெண்மணி அதிக பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறாளோ, அவள்தான் தனது மொத்த சொத்துகளுக்கும் வாரிசு’ என்று உயில் எழுதி வைத்தார். சார்லஸின் வாரிசுகள், உயில் போலியானது என்று நிராகரிக்க முயற்சித்தனர். ஆனால், முடியவில்லை. இறுதியில், மொத்த சொத்து, நான்கு பெண்மணிகளுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது! ‘ஆன் லைன்’ உயில் உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை. புகழ்பெற்றவர்களின் உயில்கள்! பிரெஞ்சுப் பேரரசரான நெப்போலியன், தனக்கு உதவிய போர் தளபதிகள், போர்வீரர்களுக்கு சொத்தில் ஒரு பங்கைப் பிரித்துக் கொடுத்தார். பாத்திரங்கள், கரண்டிகள், பெட்டிகள், மேஜைகள், ஆடைகள், புத்தகங்கள், போர்வாள்கள், துப்பாக்கிகள் போன்று, தன் வாழ்நாளில் பயன்படுத்திய எல்லா பொருட்களையும் தன் உயிலில் குறிப்பிட்டார். மறைந்த தொழில் அதிபர் எம்.பி. பிர்லாவின் மனைவி பிரியம்வதா தன் 5,000 கோடி ரூபாய் சொத்துக்கள் அனைத்தையும் குடும்ப நண்பரும், ஆடிட்டருமான ஆர்.எஸ்.லோதா பெயருக்கு எழுதிவிட்டார்! ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் திருபாய் அம்பானி உயில் எழுதி வைக்காததால் அவருடைய மகன்களான முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் தாயார் கோகிலா பென் அம்பானி தலைமையில், நிதி ஆலோசகர்களின் உதவியுடன், ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனங்களைப் பிரித்துக்கொள்ள வேண்டியதாயிற்று. உயில் பரிசு! ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஆல்பிரெட் நோபல் 1867&ல் டைனமைட் எனும் வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். அதை விற்றதன் மூலம் கோடிக்கணக்கான பணம் சம்பாதித்தார். இந்த டைனமைட் வெடிமருந்தைப் பயன்படுத்தி ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 1888&ல் இவர் இறந்தபோனதாக நினைத்து, பிரெஞ்சு பத்திரிகை ஒன்று, இவரது டைனமைட் கண்டுபிடிப்பை மனதில் கொண்டு, ‘மரணத்தின் வியாபாரி’ என்பது போன்ற கடுமையான வார்த்தைகளைக் கொண்டு விமர்சித்தது. இச்செய்தியைப் படித்த ஆல்பிரெட், தனது கண்டுபிடிப்பால் ஏற்பட்ட கொடுமைகளை எண்ணி மனம் வருந்தினார். ‘தன் வாழ்நாளில் சம்பாதித்த சொத்துகள் முழுவதையும் திரட்டி, அதிலிருந்து கிடைக்கும் வட்டியை ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், சமூக சேவை அல்லது உலக அமைதி போன்ற துறைகளில் முன்னிலை வகிப்போருக்கு பரிசு வழங்க வேண்டும்’ என்று உயில் எழுதினார். அதுதான் இப்போது பிரபலமாக இருக்கும் நோபல் பரிசு! சென்னைவாசிகளுக்கு உயில்! சென்னை, மும்பை, கொல்கத்தா நகரங்களில் வசிப்பவர்கள் உயில் எழுதும்போது முக்கியமான ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். வாரிசுகளுக்குச் சொத்தை சம பங்காகப் பிரிக்காமல், தன் விருப்பப்படி உயில் எழுதியிருந்தால், கோர்ட் அனுமதியுடன்தான் அதைச் செல்லுபடியாக்க முடியும். மற்ற ஊர்களைப் போல உயில் எழுதியவரின் மறைவுக்குப் பிறகு, அந்த உயிலில் சொன்னபடி சொத்தை வாரிசுகள் பிரித்துக்கொள்ள முடியாது. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த அட்வகேட் கண்ணனிடம் கேட்டபோது, ‘‘சென்னைக்கு வெளியே எங்கு சொத்துக்கள் இருந்தாலும் சென்னை விலாசத்தைக் குறிப்பிட்டு உயில் எழுதிவிட்டால், அதை கோர்ட்டில் தாக்கல் செய்தால்தான் செல்லுபடியாகும். இதை புரொபேட் (Probate) என்பார்கள். சென்னை ஹைகோர்ட்டில் உயிலில் சொல்லப்பட்டிருக்கும் சொத்தின் மதிப்பில் 3% கட்டணமாகச் செலுத்தி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். உயிலில் சாட்சியாகக் கையெழுத்துப் போட்டவர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது கோர்ட்டுக்கு வந்து, ‘இந்த உயில் என் முன்னிலையில் நேர்மையாக, நாணயமாக யாருடைய தூண்டுதலும் இல்லாமல் சொந்த விருப்பத்தின்படி எழுதப்பட்டதுதான்’ என்று சொல்ல வேண்டும். கூடவே, ஒரிஜினல் உயில், அதை எழுதியவரின் இறப்புச் சான்றிதழ், சொத்துகளுக்கான ஆதாரங்கள் போன்றவற்றை இணைத்துக் கொடுக்கவேண்டும். அதோடு சமமாகப் பிரிக்கப்படாததால், யாருக்காவது எதிர்ப்பு இருந்தால் அவர்களை எதிர்தரப்பாக மனுவில் சேர்க்க வேண்டும். கோர்ட் விசாரணைக்குப் பிறகு, சொத்தின் மதிப்பு பற்றிய தகவலுக்காக கலெக்டர் அலுவலகத்துக்கு அனுப்பப்படும். சப் ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் அவர்கள் சரி பார்ப்பார்கள். அதன்பிறகு, உரிய கட்டணத்தைச் செலுத்தி உயிலைச் செல்லுபடியாக்கிக் கொள்ள முடியும்’’ என்றார். சென்னையிலேயே வாழ்ந்தாலும் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு இந்த புரொபேட் தேவையில்லை என்பது கண்ணன் சொன்ன கூடுதல் தகவல்!

Related

உங்களுக்கு உதவும் சட்டங்கள் 7803093775343088082

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item