30 வகை காம்பினேஷன் ரெசிபி - 30 நாள் 30 வகை சமையல்

30 வகை காம்பினேஷன் ரெசிபி 'ஜோடி பொருத் தம் சரியாக அமைய வேண்டும்’ என்பது மண வறைக்கு மட்டுமல்ல... சமையலறைக்கும் அட்சரசுத்தமாக பொருந்...

30 வகை காம்பினேஷன் ரெசிபி

'ஜோடி பொருத் தம் சரியாக அமைய வேண்டும்’ என்பது மண வறைக்கு மட்டுமல்ல... சமையலறைக்கும் அட்சரசுத்தமாக பொருந் தும். இட்லி - சாம்பார், பூரி - மசாலா என்றெல்லாம் ருசியோடு உணரப்பட்ட காம்பினேஷன்களை அடித்துக் கொள்ளவே முடியாது.  இதே போல பல வகையான 'ஜோடி அயிட்ட'ங்களை, '30 வகை காம்பினேஷன் ரெசிபி’ என்ற பெயரில் வழங்கி இருக்கிறார் சமையல் கலை நிபுணர் ..
''குழல் புட்டு - பயறு கறி, குருணை அரிசி உப்புமா - கொத்சு போன்ற சுவை யான அயிட்டங்களுடன், இடியாப்பம் - தேங்காய்ப்பால் மாதிரியான வயிற்றுக்கு இதம் அளிக்கும் காம்பினேஷன்களையும் தந்திருக்கிறேன். இவற்றையெல்லாம் செய்து பரிமாறினால், உறவு வட்டத்தில் நீங்கள்தான் பெர்மனன்ட் கிச்சன் குயின்'' என்று உற்சாகப்படுத்தும் பத்மாவின் ரெசிபிகளை, கண்ணையும் மனதையும் கவரும் விதத்தில் அலங்கரித்திருக்கிறார் செஃப் ..
 வற்றல் குழம்பு
தேவையானவை: புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சுண்டைக்காய் வற்றல் - 20, சாம்பார் பொடி - மூன்று டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,  காய்ந்த மிளகாய் - ஒன்று, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியில் 500 மில்லி தண்ணீர் விட்டு கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண் ணெய் விட்டு கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து... சுண்டைக்காய் வற்றல், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து, சாம்பார் பொடியும் போட்டு வறுக்கவும். அதில் புளிக் கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
குறிப்பு: இதே முறையில் கத்திரிக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், கொத்தவரங்காய் வற்றலிலும் குழம்பு தயாரிக்கலாம்.
 வடகம் - சுட்ட அப்பளம் - டாங்கர் பச்சடி
தேவையானவை: அரிசி வடகம், அப்பளம், உப்பு - தேவையான அளவு, தயிர்  - ஒரு கப், உளுந்து - ஒரு கப், கடுகு, சீரகம் பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 200 மில்லி.
செய்முறை: உளுந்தை தண்ணீர் விடாமல் மிக்ஸியில் நைஸாக அரைத்து, தயிருடன் கலந்து, உப்பு சேர்க்கவும். கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்த்து, சீரகத்தை அப்படியே சேர்க்கவும். இதனை நன்கு கலந்தால்... டாங்கர் பச்சடி ரெடி! அடுப்பை மிதமான தீயில் வைத்து அப்பளத்தை தணலில் காட்டி சுட்டு தனியே எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வடகத்தை பொரித்து தனியே எடுத்து வைக்கவும்.
குறிப்பு: வற்றல் குழம்பும் சுட்ட அப்பளமும், டாங்கர் பச்சடியும் நாக்கு சப்பு கொட்டிச் சாப்பிடத் தூண்டும். விருப்பமான வடகத்தை பொரித்துக் கொள்ளலாம். காய்ந்த நார்த்தங்காய் ஊறுகாயும் இந்த காம்பினேஷனில் இடம் பெறும்.
 பருப்பு அடை
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 100 கிராம், உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - 10, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, காய்ந்த மிளகாய், பூண்டுப்பல் - தலா 6, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லி அரிசியை தனியாக ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியைக் களைந்து காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, தோல் நீக்கிய பூண்டு, மிளகு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் பருப்புகளையும் சேர்த்து சிறிது மசிந்தவுடன் தேவையான உப்பு சேர்க்கவும். இதில் பெருங்காயத்தூள், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும். தோசைக் கல்லில் மாவை அடைகளாக வார்த்து,  இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும்.
குறிப்பு: அடையும் அவியலும் சிறந்த காம்பினேஷன். அடைக்கு வெண்ணெய் - வெல்லம், இட்லி மிளகாய்ப்பொடி தொட்டும் சாப்பிடலாம்.
 அவியல்
தேவையானவை: தேங்காய் துருவல் -  ஒரு கப், பீன்ஸ், அவரைக்காய் - தலா 6, பூசணிக் கீற்று, கேரட், சௌசௌ, பரங்கிக் கீற்று, கத்திரிக்காய், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 4, தயிர் - 100 மில்லி, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட், உருளைக்கிழங்கை தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கவும். பீன்ஸ், பூசணிக் கீற்று, சௌசௌ, பரங்கிக் கீற்று, அவரைக்காய், கத்திரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். எல்லா காய்களையும் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து, இரண்டு விசில் விட்டு இறக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் விழுதை தயிரில் கலக்கி சேர்த்து, தேங்காய் எண்ணெய், கறி வேப்பிலை சேர்த்து நன்கு கலக்கவும்.
 வெண் பொங்கல்
தேவையானவை: அரிசி - 250 கிராம், பாசிப்பருப்பு - 100 கிராம், மிளகு - 20, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, சீரகம் - 2 டீஸ்பூன், நெய் - 100 மில்லி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசி, பாசிப்பருப்பை சேர்த்து, வெறும் கடாயில் லேசாக சூடுவரும் வரை வறுக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். மிளகு, சீரகத்தை லேசாக பொடிக்கவும். அரிசி, பருப்பை களைந்து, ஒரு பங்குக்கு நான்கு மடங்கு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் விட்டு இறக்கவும். முந்திரிப்பருப்பை சிறிது நெய் விட்டு தனியாக வறுக்கவும். கடாயில் நெய் விட்டு... பொடித்த மிளகு, சீரகம், நறுக்கிய இஞ்சி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். வேக வைத்த சாதத்துடன் எல்லாவற்றையும் கலந்து நெய் விட்டு நன்கு கிளறவும்.
குறிப்பு: வடை, சூடான பொங்கலுக்குச் சரியான காம்பினேஷன். சட்னி, சாம்பார் தொட்டு சாப்பிட... சுவையில் அள்ளும்.
 உளுந்து வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 250 கிராம், மிளகு - 10, இஞ்சி -  ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 4, எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, வடிகட்டி... தோல் சீவி நறுக்கிய இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைக்கவும். மாவை நன்கு பிசைந்து ஒரு பிளாஸ்டிக் பேப்பர் அல்லது வாழை இலையில் சிறிது தண்ணீர் தடவி வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்க வும்.
குறிப்பு: இஞ்சி, மிளகு சேர்ப்பதால் வாயுத் தொல்லை வராது. விருப்பப் பட்டால் பூண்டுப் பல்லும் சேர்த்து வடை மாவு அரைக்கலாம்.
 மிளகு ரசம்
தேவையானவை: மிளகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, சீரகம் - அரை டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு, கடுகு - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் அரை டீஸ்பூன் நெய் விட்டு மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வறுத்து, மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். புளியை அரை லிட்டர் தண்ணீரில் நன்கு கரைக்கவும். அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்த்துக் கரைத்து, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். 10 நிமிடம் கொதித்ததும் மீதமுள்ள நெய்யில் கடுகு தாளித்து சேர்த்து, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மிளகு ரசத்துக்கு பருப்பு துவையல் நல்ல ஜோடி.
 பருப்பு துவையல்
தேவையானவை: துவரம் பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - ஒன்று, எண்ணெய் -  ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... துவரம்பருப்பு, காய்ந்த மிளகாயை வறுத்து சிறிது தண்ணீர் விட்டு ஊற வைத்து கெட்டியாக அரைத்து, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
 சப்பாத்தி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், வெண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன், உப்பு, வெண் ணெய் சேர்த்துப் பிசைந்து ஒரு மணி நேரம் மூடி வைக்கவும். பிசைந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, சப்பாத்தியாக இட்டு, தவாவில் போட்டு மிதமான தீயில் வாட்டி எடுக்கவும்
குறிப்பு: இதற்கு குருமா சிறந்த காம்பினேஷன். முள்ளங்கி துருவல், வெந்தயக்கீரை நறுக்கி சேர்த்தும், சப்பாத்தி தயா ரிக்கலாம்
 சென்னா குருமா
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக்கடலை -  ஒரு கப், பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, கசகசா, சோம்பு - தலா அரை டீஸ்பூன், பட்டை - 2 துண்டுகள், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் - தலா ஒன்று, தேங்காய்ப்பால் - ஒரு கப், பூண்டுப்பல் - 4, தேங்காய் துருவல் -  ஒரு கப், இஞ்சி - ஒரு சிறு துண்டு, எண்ணெய் - 6 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முளைகட்டிய கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேகவிடவும். பெரிய வெங்காயத்தை தோல் உரித்து நறுக்கி, பட்டை, சோம்பு, இஞ்சி, கசகசா, தக்காளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்ததை வதக்கி, நன்கு கொதிக்கவிட்டு... வேக வைத்த கொண்டைக்கடலையை சேர்த்து மேலும் கொதிக்கவிட்டு இறக்கி வைத்து, தேங்காய்ப்பால் விட்டு நன்கு கலக்கவும்.
குறிப்பு: சப்பாத்தியும் குருமாவும் சிறந்த காம்பினேஷன். பரோட்டாவுக்கும் இந்தக் குருமா நன்றாக இருக்கும்.
 மினி இட்லி
தேவையானவை: இட்லி அரிசி - 250 கிராம், உளுத்தம் பருப்பு - 100 கிராம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஊற வைத்து தனியாக அரைக்கவும். உளுந்தை ஊற வைத்து தனியாக அரைக்க வும். அடுத்த நாள் இரண்டு மாவுகளையும் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, நான்கு மணி நேரம் வைத்திருந்து மாவு பொங்கி வந்ததும், சிறிய இட்லித் தட்டில் ஒவ்வொரு குழியிலும் மாவை ஒரு சிறிய ஸ்பூனால் ஊற்றி, வேக வைத்து எடுக்க வும்.
குறிப்பு: இந்த மினி இட்லிக்கு சாம்பார் நல்ல காம்பினேஷன்.
 வெஜிடபிள் சாம்பார்
தேவையானவை: பாசிப்பருப்பு - 100 கிராம், கத்திரிக்காய், கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி - தலா ஒன்று, பீன்ஸ் - 6, பச்சை மிளகாய் - 2, புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் - 10 (தோல் உரிக்கவும்), சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை குக்கரில் வேக வைக்கவும். வெங்காயம், கத்திரிக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி எண்ணெயில் சிறிது வதக்கி, உப்பு, சாம்பார் பொடி சேர்க் கவும். 250 மில்லி தண்ணீரில் புளியைக் கரைத்து விட்டு, காய்கள் வெந்ததும் உப்பு போடவும். வேக வைத்த பாசிப் பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, கடுகு தாளித்து சேர்த்து இறக்கி, கொத்தமல்லி, கறிவேப் பிலை சேர்த்துக் கலக்கவும்.
குறிப்பு: இட்லிக்கு சூப்பர் காம்பினேஷனான இந்த சாம் பார், வடைக்கும் நல்ல ஜோடி.
மோர்க்குழம்பு
தேவையானவை: சுமாராக புளித்த மோர் - 500 மில்லி, வெண்டைக்காய் - 10, கடலைப்பருப்பு, வெந்தயம் - தலா அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, அரிசி - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் -  ஒரு கப், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய் - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பு, தனியா, காய்ந்த மிளகாய், வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து... தேங்காய் துருவல், அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் மோருடன் கலந்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும். வெண்டைக்காய்களை துண்டுகளாக நறுக்கி, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கி, கலந்து வைத்து இருக்கும் மோருடன் சேர்க்கவும். இதை மிதமான தீயில் சுட வைத்து லேசாக கொதித்ததும் இறக்கவும். அரை டீஸ்பூன் எண்ணெயில் கடுகு, வெந்தயம் தாளித்து சேர்க்கவும்.
குறிப்பு: மோர்க்குழம்பு அதிக நேரம் கொதிக்கக் கூடாது. கத்திரிக்காய், சேப்பங்கிழங்கு, பூசணிக்காய், சௌசௌ, பருப்பு உருண்டை ஆகியவற்றைப் பயன் படுத்தியும் மோர்க்குழம்பு செய்யலாம். மோர்க் குழம்பும் பருப்பு உசிலியும் நல்ல ஜோடி.
 பருப்பு உசிலி
தேவையானவை: துவரம்பருப்பு - 200 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், பீன்ஸ் - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 4, மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கடுகு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸை பொடியாக நறுக்கி, தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஒன்று சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்து... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இந்த பருப்பை இட்லித் தட்டில் ஆவியில் வேகவிடவும்.
வெந்த பருப்பை சூடு ஆறிய உடன் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றினால் உதிரி உதிரியாக ஆகிவிடும். வெந்த பீன்ஸை தண்ணீர் வடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, பெருங்காயத்தூள் சேர்த்து, பருப்புக் கவவை, பீன்ஸ் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதேமுறையில் கோஸ், கொத்தவரங்காய், வாழைப்பூ ஆகியவற்றிலும் பருப்பு உசிலி தயாரிக்கலாம்.
 புடலங்காய் பொரித்த குழம்பு
தேவையானவை: புடலங்காய் - 250 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், மிளகு - 10, காய்ந்த மிளகாய் - 3, தேங்காய் துருவல் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை ஓரளவு பெரிய துண்டுகளாக நறுக்கி உப்பு,   மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து மூன்று விசில் விட்டு இறக்கவும். மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை எண்ணெய் விட்டு வறுத்து தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வேக வைத்த புடலங்காய், வேக வைத்த பருப்பு, அரைத்து வைத்திருக்கும் விழுது எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து கொதிக்க வைத்து, கடுகு தாளித்து சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: மாங்காய்ப் பச்சடி இதற்கு சிறந்த காம்பினேஷன்.
 மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங் காய் - ஒன்று, வெல்லம் - 100 கிராம், பச்சை மிளகாய் (சிறியது) ஒன்று, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கடுகு, மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காயை தோல் சீவி பெரிய துண்டு களாக நறுக்கி உப்பு சேர்த்து வேக விடவும். வெந்ததும் வெல்லம் சேர்க்கவும். தேங்காய் துருவல், பச்சை மிளகாயை அரைத்து சேர்த்து... கொதிக்க வைக்கவும். கடுகு, மஞ்சள்தூள் தாளித்துக் கொட்டி இறக்கவும்.
 வெங்காய சாம்பார்
தேவையானவை: சின்ன வெங்காயம் - 250 கிராம், புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழம் அளவு, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், துவரம்பருப்பு - 100 கிராம், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, தோல் உரித்த சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். புளியை 500 மில்லி தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும். குழைய வேக வைத்த துவரம்பருப்பை சேர்த்து நன்கு கொதித்ததும்... கடுகு, வெந்தயம் தாளித்துக் கொட்டி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: வெங்காய சாம்பாரும், உருளைக்கிழங்கு பொரியலும் சிறந்த காம்பினேஷன்.
உருளைக்கிழங்கு பொரியல்
தேவையானவை: உருளைக்கிழங்கு - அரை கிலோ, பெரிய வெங்காயம் - 4, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, கடலைப்பருப்பு - தலா கால் ஸ்பூன், எண்ணெய் - 50 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வைத்து இரண்டு விசில் விட்டு இறக்கவும். பெரிய வெங் காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு தாளித்து... நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, வேக வைத்த உருளைக் கிழங்கை தோல் உரித்து உதிர்த்துப் போட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி இறக்கவும்.
 குருணை அரிசி உப்புமா
தேவையானவை: குருணை அரிசி - 250 கிராம், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், துவரம் பருப்பு - 4 டீஸ்பூன், மிளகு - 20, பெருங்காயத்தூள் - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குருணை அரிசியுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து ஒரு மணி நேரம் வைத்திருந்து, பிறகு மிக்ஸியில் ரவை பதத்துக்கு பொடிக்கவும். ஒரு கனமான பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் தாளித்து... கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்க்கவும். ஒரு பங்கு குருணைக்கு நான்கு பங்கு என்ற விகிதத்தில் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். கொதித்தவுடன் குருணை யைத் தூவி கிளறி, தீயைக் குறைத்து மூடி வைத்து, அடிக்கடி கிளறி விடவும். நன்கு வெந்ததும் இறக்கவும்.
குறிப்பு: அரிசிக் குருணை தயார் செய்து விட்டால் அவசரத்துக்கு கை கொடுத்து உதவும். இந்த உப்புமாவுக்கு கத்திரிக்காய் கொத்சு சிறந்த காம்பினேஷன்.
 கத்திரிக்காய் கொத்சு
தேவையானவை: பெரிய கத்திரிக்காய் - ஒன்று, புளி - ஒரு எலுமிச்சம் அளவு, கடலைப் பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், வெல்லம் - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயின் மேல் பகுதியில் சிறிது எண் ணெய் தடவி அடுப்பில் வைத்து சுட்டு எடுக்கவும். கடலைப் பருப்பு, தனியா, காய்ந்த மிளகாயை சிறிது எண்ணெயில் வறுத்து பொடித்துக் கொள்ள வும். புளியை இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் கரைக்கவும். கத்திரிக்காயை தோல் உரித்து புளிக் கரைசலில் நன்றாகக் கரைத்து, பொடித்து வைத் திருப்பதை சேர்க்கவும். இதில் உப்பு சேர்த்து வெல்லத்தை பொடித் துப் போட்டு... நன்கு கொதிக்க வைத்து, கடுகு தாளித்து இறக்கவும்.
குறிப்பு: கத்திரிக்காயை காம்பு நறுக்கி ஒரு கரண்டியை செருகி அடுப்பில் வைத்து சுடலாம். சின்ன வெங்காயத்திலும் கொத்சு தயாரிக்கலாம்.
 ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: பாசுமதி அரிசி - 250 கிராம், தேங்காய்ப்பால் - 100 மில்லி, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, உரித்த பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட் - தலா ஒரு கப், பீன்ஸ் - 10, குடமிளகாய் - ஒன்று, புதினா - ஒரு கைப்பிடி அளவு, பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 20, நெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை களைந்து நீரை வடிக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு, தேங்காய்ப்பால் -  தண்ணீர் இரண்டும் சேர்த்து இரு பங்கு என்ற அளவில் விட்டு, குக்கரில் சேர்த்து 2 விசில் வந்ததும் இறக்கவும். பச்சை மிளகாய், தேங்காயை அரைத்துக் கொள்ளவும். வாணலியில் நெய் விட்டு, வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிப் போட்டு, பச்சைப் பட்டாணி, பீன்ஸ், குடமிளகாய் வெங்காயத்தாள், கேரட் சேர்க்கவும். பிறகு பச்சை மிளகாய் - தேங்காய் விழுது, உப்பு, கரம் மசாலாதூள் சேர்த்து மிதமான தீயில் காய்களை வதக்கவும். நன்கு வெந்த உடன் சாதத்துடன் வதக்கிய காய்கள், நெய்யில் வதக்கிய புதினாவை சேர்த்து, வறுத்த முந்திரி, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
குறிப்பு: நண்பர்கள், உறவினர்களுக்கு பார்ட்டி கொடுக்கும்போது இந்த ஃப்ரைடு ரைஸ் சூப்பர் டிஷ்! ராய்த்தா இதற்கு சிறந்த காம்பினேஷன்.
ராய்த்தா
தேவையானவை: புளிக்காத தயிர் - 500 மில்லி, பொடி யாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கவும். தயிரில் தேவையான உப்பு சேர்த்து நறுக்கிய வெங்காயத்துடன் கலக்கவும்.
குறிப்பு: இதே முறையில் வெள்ளரிக்காய் தக்காளி, கேரட்டிலும் ராய்த்தா தயா ரிக்கலாம்.
 குழல் புட்டு
தேவையானவை: சிவப்பு அரிசி புட்டு மாவு - 200 கிராம், நேந்திரம்பழம் - 2, தேங்காய் துருவல் - 2 கப்.
செய்முறை: தண்ணீரை லேசாக சூடாக்கி, புட்டு மாவில் தெளித்து பிசிறிக் கொள்ளவும். நேந்திரம் பழத்தைப் பொடியாக நறுக்கவும். புட்டு குழாயில் சிறிது மாவு, அதன் மீது நறுக்கிய பழம், அதன் மேல் புட்டு மாவு, பிறகு தேங்காய் துருவல் இப்படி மாறி மாறி போட்டு மூடி, அடுப்பில் வைத்து வேகவிடவும்.
குறிப்பு: இது கேரளா ஸ்பெஷல். பயறுகறி இதற்கு சிறந்த காம்பினேஷன். தண்ணீருக்குப் பதில் தேங்காய்ப்பால் விட்டும் மாவை கலந்து நிரப்பலாம்.
 பயறுகறி
தேவையானவை: சிவப்பு காராமணி - 100 கிராம், தேங் காய் துருவல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - ஒன்று, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய்ப்பால் - 100 மில்லி, சர்க்கரை - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சிவப்பு காரா மணியை லேசாக வறுத்து ஒரு மணி நேரம் ஊற வைத்து வேகவிடவும். தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், தனியாவை லேசாக வறுத்து, அரைக்கவும். அரைத்த விழுதை வேகவைத்த காராமணியுடன் சேர்த்து, தேங்காய்ப்பால், சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொதிக்கவிட்டு இறக்கவும்.
 பூரி
தேவையானவை: கோதுமை மாவு - 200 கிராம், எண்ணெய் - 500 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் தண்ணீர், உப்பு கலந்து கெட்டியாகப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தியைவிட சிறியதாக இடவும். வாணலியில் எண் ணெயை விட்டு, காய்ந்ததும் தீயைக் குறைத்து, இட்டு வைத்த பூரிகளை போட்டு இருபுறமும் திருப்பி பொரித்து எடுக்கவும்.
குறிப்பு: பூரியை மாவு  பிசைந்த உடனே தயாரித்து விடவும். மாவு நீண்ட நேரம் ஊறக் கூடாது. ஒரு டிபன் பாக்ஸ் மூடியால் வைத்து அழுத்தினால் சரியான ரவுண்டு வடிவம் கிடைக்கும். கோதுமை மாவுடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்துப் பிசைந்து பூரி பொரித்தால் ருசி கூடும். பூரியும், உருளைக்கிழங்கு மசாலாவும் சிறந்த காம்பினேஷன்.
 உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - 250 கிராம், பெரிய வெங்காயம் - 4, இஞ்சி - ஒரு சிறிய துண்டு (தோல் சீவி பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் - இரண்டு (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சம்பழம் (சிறியது) - ஒன்று, கடுகு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கடலை மாவு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். வெங் காயத்தை நீளவாக்கில் நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும். உருளைக் கிழங்கை உதிர்த்துப் போட்டு, உப்பு சேர்த்து... கடலை மாவை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து விட்டு சிறிது கொதிக்க வைத்து, நன்கு கலந்து இறக்கவும். சூடு ஆறிய உடன் எலுமிச்சம் பழத்தை பிழிந்து நன்கு கலக்கவும்.
 இடியாப்பம்
தேவையானவை: புழுங்கல் அரிசி (இட்லி அரிசி) - அரை கிலோ, உப்பு - சிறிதளவு.
செய்முறை: அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அல்லது கிரைண்டரில் நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கனமான பாத்திரத்தில் மாவுடன் சிறிது உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கெட்டியாகும் வரை கிளறவும். நன்கு பிசைந்து உருட்டிக் கொண்டு, ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நன்கு கொதித்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். உருண்டைகள் நன்கு வெந்து மேலே மிதந்து வரும். இடியாப்பம் பிழியும் அச்சில் ஒவ்வொரு உருண்டையாக்கப் போட்டு பிழியவும்.
குறிப்பு: மாவு வேக வைத்த தண்ணீர் ஆறிய உடன், அதில் உப்பு, வெங்காயம் சேர்த்துக் குடிக்கலாம். இதனால் உடல் சூடு தணியும். இடியாப்பமும், தேங்காய்ப்பாலும் சிறந்த காம்பினேஷன். இடியாப்பத்துடன் புளிக்காய்ச்சல், வறுத்த தேங்காய் துருவல், வெல்லப்பாகு, வெஜிடபிள் என்று விதம் விதமான ருசியுடனும் சாப்பிடலாம்.
தேங்காய்ப்பால்
தேவையானவை: தேங்காய்ப் பால் (முற்றிய தேங்காயைத் துருவி மிக்ஸியில் அரைத்து, பிழிந்து பால் எடுக்கவும்) - 250 மில்லி, பொடித்த வெல்லம் - ஒரு கப், ஏலக்காய் - சிறி தளவு.
செய்முறை: வெல்லத்தைப் பொடித்து தேங்காய்ப் பாலுடன் சேர்த்து, ஏலக்காய்த் தூள் சேர்த்து லேசாக சூடுபடுத்தி இறக்கவும்.
குறிப்பு: தேங்காய்ப்பால் வாய்ப்புண்ணை ஆற்றும் குணம் கொண்டது. ஆப்பத்துக் கும் தேங்காய்ப்பால் நல்ல காம்பினேஷன்.
 வெங்காய காரக்குழம்பு
தேவையானவை: சின்ன வெங்காயம் - 10 (தோல் உரித்து நறுக்கவும்), காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 4 டீஸ்பூன், புளி - ஒரு எலுமிச்சம் பழ அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயம், கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை 500 மில்லி தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு, வெந்தயம், வெங்காயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்து, சாம்பார் பொடி போட்டு வறுக்கவும். அதில் புளிக் கரைசலை விட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்க விட்டு, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
குறிப்பு: இதே முறை யில் விருப்பமான காய் கறிகளில் காரக்குழம்பு தயாரிக்கலாம். வெங்காய காரக்குழம்புக்கு வாழைக் காய் பொடிமாஸ் நல்ல காம்பினேஷன்.
 வாழைக்காய் பொடிமாஸ்
தேவையானவை: வாழைக்காய் - 2, தேங்காய் துருவல் - ஒரு கப், கடுகு, கடலைப்பருப்பு - சிறிதளவு, எலுமிச்சம்பழம் - ஒரு மூடி, இஞ்சி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை இரண்டு பெரிய துண்டுகளாக நறுக்கவும்.  தண்ணீரை கொதிக்கவிட்டு வாழைக்காயை சேர்த்து வேகவிடவும். சிறிது வெந்ததும் தண்ணீர் வடித்து, தோல் உரித்து கொப்பரைத் துருவியில் துருவிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப் பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் துருவிய வாழைக்காயை சேர்க்கவும். இதில் கறிவேப்பிலையை பொடியாக கிள்ளிப் போட்டு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, எலுமிச்சம்பழத்தை பிழிந்து, தேங்காய் துருவல் போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 3549080240592503817

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item