பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் --
பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் தொடர்ச்சி….. காய்ச்சல் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சலுக்கு சுக்கு, மிளக...

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்
தொடர்ச்சி…..
காய்ச்சல் கருவுற்றிருக்கும் காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சலுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி ரசம் வைத்து சாப்பிடுதல் நன்மை பயக்கும். அதுபோன்றே ஒரு சிலருக்கு கண்களில் வீக்கம், நீர்ச்சுரப்பு ஏற்படுவதுண்டு. அது உஷ்ண மிகுதியால் ஏற்படுவதாகும். குளிர்ச்சியான உணவுப் பதார்த்தங்களை, சோயா பால், சத்துள்ள பழ வகைகளைச் சாப்பிட பயனளிக்கும். நன்றாக கொதிக்க வைத்த சோயா பாலில் ஒரு துண்டு வெள்ளைத் துணியை நனைத்துப் பிழிந்து கண் இமைகளில் ஒற்றடம் கொடுக்க, கண் சிவப்பு மாறும், வீக்கம் வலி போன்றவை குறையும்.
விக்கல் கர்ப்பக் காலத்தில் விக்கல் ஏற்படுவது சாதாரணம். அது நீடித்திருக்கக்கூடாது. அப்படி இருக்குமானால் 5 கிராம் இஞ்சியை எடுத்து அரைத்து ஒரு டம்ளர் நீரில் கலந்து கலக்கி ஒரு மணி நேரம் ஊற வைத்து பின் எடுக்க அடியில் வண்டல் தங்கி இருக்கும். அந்த நீரை மட்டும் இறுத்துக் கொள்ள வேண்டும். கடுக்காய், திப்பிலி வகைக்கு 5 கிராம் எடுத்து முன் இறுத்த இஞ்சி நீரை விட்டு மை போல அரைத்து, பின்அந்த நீரிலேயே கலக்கி காலை மாலை இரு வேளையும் அருந்த உடனே விக்கல் தணிந்து விடும்.
மாதவிடாய்க் கோளாறுகள் விளாம்பிசின் 50 கிராம் அளவு எடுத்து சுத்தப்படுத்தி வெய்யிலில் காய வைத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவு பசும் வெண்ணெயில் கலந்து காலை மாலை இரு வேளை வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சம்பந்தப்பட்ட நீர்த்தாரையில் ஏற்படும் எரிச்சல், வெள்ளை படுதல், ரணம், அதிக இரத்தப்போக்கு போன்றவை தீர்க்கப்படும்.
எருக்கம் பூ 10 கிராம், மிளகு 5 கிராம், வெள்ளைப் பூண்டு 10 கிராம், இவற்றை ஒன்றாய்ச் சேர்த்து இடித்துச் சாறு எடுத்து அதில் இரண்டு ஸ்பூன் அளவு மாதவிடாய் ஆகும் நாட்களில் ஐந்து நாள் அருந்தி வர மாதவிடாய் சம்பந்தப்பட்ட பிரச்னைக்ள நீங்கும். இதையே மாத்திரைகளாகவும் செய்து அருந்தலாம். மேற்கூறியவற்றில் வெள்ளைப் பூண்டின் தோல்களை சுத்தப்படுத்திக் கொண்டு பின் மூன்றையும் அம்மியில் வைத்து அரைத்துச் சிறு சிறு உருண்டைகாளக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்து கொள்ள வேண்டும். மாதவிடாய் நாட்கிளல் அதில் 2 மாத்திரைகள் வீதம் வாயிலிட்டு வெந்நீர் அருந்தி வர குணம் பெறலாம்.
மிளகு, கருஞ்சீரகம், கடுகு, கறிமஞ்சள் இவற்றை வகைக்கு 25 கிராம் எடுத்து, வறுத்து எடுத்துச் சூரணமாக்கிக் கொண்டு அத்துடன் 25 கிராம் வெல்லத்தையும் சிறிது தேனையும் சேர்த்து அரைக்க மெழுகு பதத்தில் வரும். அதில் ஒரு நாளைக்கு இரு வேளையாக மாதவிடாய் ஆகும் ஐந்து நாட்களிலும் தொடர்ந்து நெல்லிக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட வேண்டும். இவ்வாறு நான்கு, ஐந்து முறை மாதவிடாய் காலங்களில் சாப்பிட்டு வர அனைத்து தொல்லைகள் நீங்குவதோடு கருப்பையும் சுத்தமடையும்.
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் சரிவர வராமல் இருக்கும். அப்படி வந்தாலும் பல தொல்லைகள் கொடுக்கும். அவர்கள் மாதவிடாய் ஏற்பட வேண்டியதற்கு ஒரு வாரம் முன்னதாகவே சாம்பார் வெங்காயத்தில் மூன்று அல்லது நான்கு எடுத்து காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்ன வேண்டும். இவ்விதம் ஒரு வாரம் சாப்பிட மாதவிடாய் எந்தவித சிக்கலுமின்றி ஒழுங்காக அமையும். மாதவிடாய் ஒழுங்காக வராத நிலையில் ஒரு கைப்பிடி மல்லிகைப் பூக்களை, காம்புகளை நீக்கி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் நீர் விட்டு பாதியாகச் சுண்டக் காய்ச்சி, கசாயமாக்கி காலை மாலை இரு வேளை இரண்டு ஸ்பூன் அளவு உள்ளுக்கு அருந்தலாம். இவ்வாறு ஐந்து நாட்கள் தொடர்ந்து பருகி வர கருப்பை பலம் பெறுவதோடு, காலத்தோடு மாதவிடாய் ஏற்படும். பெண்களுக்கு தொல்லை கொடுக்கும் நோய்களில் பெரும் இரத்தப்போக்கு எனும் பெரும்பாடு மிகவும் கொடுமையானது. இரத்தம் சதா வெளியேறிக்கொண்டே இருக்கும். அடிக்கடி மருந்துகளைச் சாப்பிட்டு வந்தாலும், இத்தொல்லை ஏற்படுவது நிற்காது. இதனால் இரத்த சோகை ஏற்படவும் கூடும். உடல் வெளுத்து, சோர்வு, களைப்பு போன்ற உடல் தளர்ச்சியும் மற்றும் மனதளவில் விரக்தியும் ஏற்படுவது சகஜம். இதற்கு எளிய முறையிலான சிகிச்சையை தக்க தருணத்தில் மேற்கொண்டால் பூரண குணம் பெறலாம.
மருந்து அருந்தும் நாட்களில் அதிக காரம், புளிப்பு, போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. மாதவிடாயில் இரத்தப்போக்கு அளவுக்கு அதிகமாக இருக்குமானால் கரிய போளத்தை சிறிது நீரில் கரைத்து வடிக்கட்டிய பின் மணல் கற்கள் ஏதுமின்றி, சுத்தப்படுத்தி வெயிலில் உலர்த்தி தூளாக்கிக்கொண்டு அதில் ஒரு சிட்டிகைத் தூளை வாழைப்பழத்தில் வைத்து சாப்பிடலாம். ஐந்து அல்லது ஆறு நாட்கள் சாப்பிட இரத்தப்போக்கு நிற்கும்.
கருவேல மரப்பட்டை மேல் பாகத்தில் கனமான கறுப்புப் பகுதியை நீக்கிவிட்டு உள்பட்டையை எடுத்துச் சுத்தப்படுத்தி 25 கிராமும், அதே அளவு அரசம் பட்டை, அத்திப்பட்டை, நாவல் பட்டை, உதியம் பட்டை இவற்றையும் சுத்தப்படுத்தி சேர்த்து வெயிலில் காய வைத்து இடித்துத் தூளாக்கி, சூரணமாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
பெரும்பாடு தொல்லையால் மிகுதியாக அவதிப்படுவோர், காலை மாலை இரு வேளைக்கு இரு ஸ்பூன் சூரணத்தை, வாயிலிட்டு சாப்பிட்டு வென்னீர் குடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட குணமாகும். இரத்தப் போக்கு நிற்க, வில்வ இலையுடன் (இங்குள்ள சிவ ஆலயங்களில் கிடைக்கும்) வெங்காயத்தைச் சேர்த்து இடித்து எடுத்து சாற்றுக்குச் சம அளவு விளக்கெண்ணெய் சேர்த்து சிறு தீயிலிட்டுக் காய்ச்சிய தைலத்தில் ஒரு ஸ்பூன் வீதம் காலை ஒரு வேளையாக பத்து நாட்கள் அருந்த வேண்டும். அதனால் கருப்பை பையிலுள்ள புண்கள் ஆறி, இரத்தப் போக்கு நிற்கும். இதை அதிக நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம். கெடுதல் இல்லை. அது போன்றே பசலைக் கீரை, வெங்காயம், சீரகம் இவற்றைச் சம அளவு எடுத்து அம்மியில் மைபோல் அரைத்து காலை மாலை இரு வேளை வீதம் ஒன்பது நாட்களுக்குச் சாப்பிட பெரும்பாடு தொல்லை நீங்கும்.
அதிமதுரம் 20 கிராம் எடுத்து ஒன்று பாதியாகத் தட்டி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு பாதியாகச் சுண்டக் காசயமாக்கி அதை காலை மாலை இரு வேளையாகச் சாப்பிட்டு வர அதிக உதிரப் போக்கு நிற்கும். மருந்து சாப்பிடும் அன்று மோர் சாதம் புசித்தல் நல்லதாகும். சுத்தமான சந்தன அத்தரில் 5 அல்லது 6 சொட்டுகள் சோயாபாலை விட்டு உள்ளுக்கு அருந்த அதிக இரத்தப்போக்கு மட்டுப்படும். அதுபோன்றே சந்தன கட்டையைச் சந்தனக் கல்லில் இழைத்து அதில் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து, சோயா பாலில் கலந்த அருந்த குணமாகும்.
ஜாதிக்காயைப் பொடியாக்கி நெய் விட்டு வறுத்த பின் சூரணமாக்கி அதில் இரண்டு சிட்டிகை வாயிலிட்டு வென்னீர் அருந்த அதிக இரத்தப் போக்கு நீங்கும் கருஞ்சீரகம், பழைய துணி எரித்த சாம்பல் இரண்டையும் சம அளவு எடுத்து தூளாக்கி அதே அளவு பனை வெல்லம் சேர்த்து அரைத்து ஒரு நாளைக்கு இரு வேளை வீதம் எலுமிச்சங்காய் அளவு மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் உதிரப் போக்கு நிற்கும்.
இரத்தப்போக்கு ஏராளமாகப் போய் உடல் சோர்வும் மயக்கமும் ஏற்பட்டிருந்தால் ஒரு சதுரமான பழைய நூல் துணியைச் சுட்டு கரியாக்கிப் பொடி செய்து, அதன் தூளுடன் ஒரு ஸ்பூன் தேன், ஒரு கோழி முட்டையின் வெண்கரு எடுத்து அதில் சேர்த்து நன்றாகக் கலக்கி உள்ளுக்குள் அருந்த மயக்கமும் இரத்தப் போக்கும் நிற்பதோடு சோர்வும் நீங்கும்.
வாழைக் காயை நெருப்பிலிட்டு சுட்டு தோலைச் சீவி எறிந்துவிட்டு உள் காயை மை போல அரைத்து எருமைத் தயிரில் கலந்து உள்ளுக்கு அருந்தினால் இரத்தப் போக்கு நிற்கும். மாதவிடாய் நாட்களில் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு இதை அருந்த வேண்டும். அடுத்து கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான பல்வேறு பிரச்சனைகளைப் பார்ப்போம்.
(தொடரும்)
Post a Comment