பிறருக்கு துன்பம் வந்தால் இரக்கப்படுங்கள் --பெட்டகம் சிந்தனை
அறிவிப்பாளர்: வாஸிலா(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே! அ...

அறிவிப்பாளர்: வாஸிலா(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தாதே! அல்லாஹ் அவன் மீது கருணை புரிந்து (அந்தத் துன்பத்தைக் களைந்துவிடுவான்.) உன்னைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுவான்.'' (திர்மிதி) விளக்கம்: இரு மனிதர்களுக்கிடையே பகைமை ஏற்பட்டு, அவ்விருவரில் ஒருவருக்குத் துன்பம் வந்துவிட்டால் இன்னொருவர் மகிழ்ச்சி கொண்டாடுகிறார். இது இஸ்லாமிய மனப்பான்மைக்கு மாறானதாகும். ஓர் இறைநம்பிக்கையாளன் தன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொண்டாடுவதில்லை. இருவருக்குமிடையே எவ்வளவு மனத்தாங்கல் இருந்தாலும் சரியே! அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""எந்த மனிதனிடம் நான்கு குணங்கள் உள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகனாவான். எவனிடம் அந்த நான்கு குணங்களில் ஏதேனும் ஒன்று உள்ளதோ, அவனுக்குள் நயவஞ்சகத்தின் ஒரு குணம் உள்ளது(என்று பொருள்); அவன் அந்தக் குணத்தை விடாதவரை! அந்த நான்கு குணங்களாவன: 1. அவனிடம் ஓர் அமானிதப் பொருளை ஒப்படைக்கும் போது அவன் மோசடி செய்வான். 2. பேசும்போது பொய் சொல்வான். 3. வாக்களித்தால் அதை நிறைவேற்ற மாட்டான். 4. எவரிடமாவது சண்டையிட்டால் வசை மொழிகளால் ஏசத் தொடங்குவான்.'' (புகாரி முஸ்லிம்) பொய் அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: ""தன் இரு கண்களும் பார்த்திராத ஒன்றை தன் இரு கண்களுக்கும் காட்டுவது தான் அனைத்தையும் விடப் பெரிய பொய் ஆகும். (புகாரி) விளக்கம்: ஒருவன் கனவு காணவில்லை; எனினும், கண் விழித்த பின் மிகவும் விந்தையான, சுவையான , ருசியான விஷயங்களையெல்லாம் எடுத்துரைத்து, ""இவற்றை நான் என் கனவில் கண்டேன்'' என்று கூறுகின்றான். இப்படிக் கூறுவது கண்களைப் பொய் பேச வைப்பதாகும். அறிவிப்பாளர்: அஸ்மா பின்த் உமைஸ்(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவரை (புதுமணப்பெண்ணை) அழைத்துக் கொண்டு அண்ணலாரின் இல்லத்திற்குச் சென்றோம். நாங்கள் அண்ணலாரின் வீட்டை அடைந்த பொழுது அண்ணலார் ஒரு பெரிய பால் குவளையை எடுத்து வந்தார்கள். பிறகு(அதிலிருந்து பாலை) திருப்தியடையும் அளவிற்குக் குடித்தார் கள். பின் தம் துணைவிக்குக் கொடுத்தார்கள். அத்துணைவியார் பசியிருந்தும் ""எனக்கு விருப்பமில்லை'' என்று கூறினார்கள். அவர்கள் ஒப்புக்கு பதிலளிப்பதைப் புரிந்து கொண்ட அண்ணலார், ""நீ பசியையும் பொய்யையும் ஒன்று சேர்க்காதே!'' என்று கூறினார்கள்.(தபரானீயின் அல்முஃஜமுஸ்ஸகீர்) விளக்கம்: "நம் துணைவியாருக்குப் பசியென்னவோ எடுக்கத் தான் செய்கிறது. ஆனால், அவர்(வெட்கத்தால்) சங்கடப்படுகிறார்' என்று அண்ணலார் எண்ணினார்கள். ஆகவே, ஒப்புக்காகச் சொல்லும் பொய்யை விட்டுத் தம் துணைவியாரை அண்ணலார் தடுத்தார்கள். அறிவிப்பாளர்: ஸுஃப்யான் பின் அஸீத் ஹள்ரமீ(ரலி) அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவிலக் கேட்டிருக்கின்றேன்; ""நீர் உம் சகோதரரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லி, அதை அவர் உண்மையென்று கருதிக் கொண்டிருக்க, நீர் சொன்ன விஷயம் பொய்யாய் இருப்பது பெரும் நம்பிக்கைத் துரோகமாகும்.''(அபூதாவூத்) (அண்ணல் நபிகளார் வாழ்வினிலே.... நூலில் இருந்து)
Post a Comment