30 நாள் 30 வகை குடமிளகாய் சமையல்!

30 வகை குடமிளகாய் சமையல்! ஸ்டஃப்டு குடமிளகாய் தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, சேமியா உப்புமா (அ) ரவை உப்புமா (அ) அரிசி உப்புமா - ஒர...

30 வகை குடமிளகாய் சமையல்! ஸ்டஃப்டு குடமிளகாய் தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, சேமியா உப்புமா (அ) ரவை உப்புமா (அ) அரிசி உப்புமா - ஒரு கப், சோளமாவு - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: குடமிளகாயின் காம்பை நீக்கி விட்டு, உள்ளே லேசாக கத்தியால் கீறி விதைகளை எடுத்து விடவும். ஒரு டேபிள் ஸ்பூன் உப்புமாவை உள்ளே வைத்து, சோளமாவை கெட்டியாகக் கரைத்து, குடமிளகாயின் மேல்புறத்தில் வைத்து மூடவும். கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிளகாயை வரிசையாக அடுக்கி மூடி, உப்பு கலந்த தண்ணீர் தெளித்து 20 நிமிடம் வேக வைத்து பரிமாறவும். ***************************************************************** சிவப்பு குடமிளகாய் தொக்கு தேவையானவை: சிவப்பு குடமிளகாய் - கால் கிலோ, தக்காளி - 2, பூண்டு - 4 பல், இஞ்சி - சிறிய துண்டு, மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, எண்ணெய், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குடமிளகாய், தக்காளி, இஞ்சி, பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, அரைத்த விழுது, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை கெட்டியாக கிளறி எடுக்கவும். இதை சாதம், தோசை, இட்லி, சப்பாத்தி எல்லாவற்றோடும் சேர்த்து சாப்பிடலாம். **************************************************************** குடமிளகாய் பொடி தூவிய பொரியல் தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, பயத்தம்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - கால் கப், உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன் (மூன்றையும் எண்ணெயில் வறுத்துப் பொடிக்கவும்), கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குடமிளகாயை பொடியாக நறுக்கவும். பயத்தம் பருப்பை வேக வைக்கவும் (குழைய வேக விட வேண்டாம்).கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து குடமிளகாய் துண்டுகளைப் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் வேகவைத்த பயத்தம்பருப்பு, உப்பு, வறுத்து அரைத்த பொடி, தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும். ****************************************************** குடமிளகாய் பாம்பே சட்னி தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ (நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்), தேங்காய் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் - 4 முதல் 6 (நீளவாக்கில் நறுக்கவும்), கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, சீரகத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடலைமாவு - 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடலைமாவை போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ளவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து பச்சை மிளகாயை போட்டு ஒரு நிமிடம் வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு நறுக்கிய குடமிளகாயை போட்டு வதக்கவும். அரை கப் தண்ணீர் விட்டு கிளறி, மூடி சிறிது நேரம் கொதிக்க விடவும். மறுபடியும் நன்றாக கிளறி, சீரகத்தூள், துருவிய தேங்காய், வறுத்த கடலைமாவை போட்டு, மேலும் சிறிது நேரம் கிளறவும். வேறு பாத்திரத்தில் மாற்றி, எலுமிச்சை சாறு ஊற்றி, கொத்தமல்லி தூவி பரிமாறவும் *********************************************************** குடமிளகாய் பருப்பு உசிலி தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ (பொடியாக நறுக்கவும்), துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 5 (மூன்றையும் தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த மிளகாய் விழுதை போட்டுக் கிளறவும். 15 நிமிடம் கிளறியதும், நறுக்கிய குடமிளகாய், உப்பு சேர்த்து மேலும் நன்றாக கிளறி இறக்கவும். சாப்பாட்டுடன் தொட்டுக் கொள்ள ஏற்ற உசிலி இது. ********************************************************* குடமிளகாய் மோர் கறி தேவையானவை: குடமிளகாய் - 2, கடலைமாவு - ஒரு கப், பச்சைமிளகாய் - 4 (பொடியாக நறுக்கவும்), பூண்டு - 5 பல் (நசுக்கிக் கொள்ளவும்), கெட்டி மோர் - அரை கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை வறுத்து பொடிக்கவும். பிறகு பச்சைமிளகாய், நசுக்கிய பூண்டை போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கவும். மஞ்சள்தூள், குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். மோரில் கடலைமாவை கரைத்து குடமிளகாய் கலவையுடன் சேர்த்து, உப்பு, கொத்தமல்லி தூவி நன்றாக கிளறவும் கையில் தொட்டால் ஒட்டாமல் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். ****************************************************** குடமிளகாய் பனீர் ஃப்ரை தேவையானவை: பனீர் - 2 கப், பெரிய குடமிளகாய் - 1 (நீள வாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2 (நீளவாக்கில் நறுக்கவும்), சோயா சாஸ் - சிறிதளவு. பூண்டு, பச்சைமிளகாய் சாஸ் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: பனீரை துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் பொரித்து தனியே வைக்கவும். அதே எண்ணெயில் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். சோயா சாஸ், பூண்டு - மிளகாய் சாஸ், உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ************************************************************* குடமிளகாய்-காலிஃப்ளவர் பாஜி தேவையானவை: குடமிளகாய் - 2, காலிஃப்ளவர் - 2 கப் (பூக்களை நீளவாக்கில் நறுக்கவும்), வெங்காயம் - 2, தக்காளி - 2, பாவ்பாஜி மசாலா - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்தூள்- தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உலர் மாங்காய்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குழிவான ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் தக்காளி துண்டுகளைப் போட்டு சிறிது வதங்கியதும் உப்பு சேர்த்து, மேலும் சிறிது நேரம் வதக்கவும். குடமிளகாய், காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து, பாவ்பாஜி மசாலா, மஞ்சள்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள், மாங்காய்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் வதக்கி இறக்கவும். ******************************************************************* மசாலா குடமிளகாய் தேவையானவை: குடமிளகாய் - 3, கெட்டியான புளி தண்ணீர் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 3 டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், உலர் தேங்காய் பொடி - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூள் போட்டு வறுக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளைப் போட்டு, 10 முதல் 15 நிமிடம் மிதமான தீயில் மூடி போடாமல் சமைக்கவும். புளித்தண்ணீருடன் மஞ்சள்தூள், தனியாத்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள், உலர் தேங்காய் பொடி, உப்பு சேர்த்துக் கலந்து, வதங்கிக் கொண்டிருக்கும் குட மிளகாயில் ஊற்றி நன்றாக கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். இது, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். ************************************************************* ஸ்டஃப்டு சிவப்பு குடமிளகாய் தேவையானவை: சிவப்பு குடமிளகாய் - 8 முதல் 10 (கடைசி வரை 'கட்' பண்ணாமல் நீளமாக நறுக்கவும்), வெங்காயம் - 8 , பூண்டு - 4 பல், கடலைமாவு - ஒரு கப், அரிசிமாவு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, மஞ்சள்தூள், சமையல்சோடா, உப்பு சேர்த்து கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டை போட்டு பொன்னிறமாக வதக்கவும். வதங்கியதும், குடமிளகாயில் சிறிது அடைத்து, கடலைமாவு கரைசலில் தோய்த்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். ******************************************************* குடமிளகாய்-பொட்டுக்கடலைமாவு பொரியல் தேவையானவை: குடமிளகாய் - 2 (அ) 3, பூண்டு - 3 பல், பொட்டுக்கடலைமாவு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, பெருங்காயம் - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு, கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பெருங்காயம், பொடியாக நறுக்கிய குடமிளகாய், பூண்டு துண்டுகளை போட்டு மூடி, குறைத்த தீயில் 7 முதல் 10 நிமிடம் வதங்க விடவும். நடு நடுவே மூடியைத் திறந்து கிளறி விடவும். பிறகு பொட்டுக்கடலைமாவு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு மேலும் 8 முதல் 10 நிமிடம் கிளறவும். குடமிளகாயுடன் பொட்டுகடலைமாவு நன்றாக சேர்ந்து இருக்க வேண்டும். கொத்தமல்லி தூவி, சூடான சப்பாத்தியுடன் பரிமாறவும். ************************************************************** தாமரைத் தண்டு-குடமிளகாய் மசியல் தேவையானவை: குடமிளகாய் - 2, உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி - தலா 1 (சிறியது), சீஸ் கால் கப், பொரித்த தாமரைத் தண்டு வற்றல் - அரை கப், (கடைகளில் கிடைக்கும்), முந்திரி - 2 டேபிள்ஸ்பூன் (வறுத்துக் கொள்ளவும்), தயிர் - அரை கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து, சதுரமான துண்டுகளாக நறுக்கவும். சீஸ், குடமிளகாய், தக்காளி, வெங்காயத்தை சிறிய துண்டுகளாக நறுக்கவும். தாமரைத் தண்டு, சீஸ், உருளைக்கிழங்கை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும். தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கி தயிர் விட்டு, எண்ணெய் பிரியும் வரை கொதிக்க விடவும். உப்பு, மிளகாய்த்தூள் போட்டு, வறுத்த முந்திரி, சீஸ், தாமரைத் தண்டு, உருளைக்கிழங்கு, குடமிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறவும். மூடியால் மூடி 2 நிமிடம் சமைக்கவும். இஞ்சி துருவல் தூவி, சாதத்துடன் பரிமாறவும். *************************************************************** குடமிளகாய்- ராஜ்மா பொரியல் தேவையானவை: குடமிளகாய் - 2 (துண்டுகளாக நறுக்கவும்), ராஜ்மா - அரை கப் (முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் வேக வைக்கவும்), நறுக்கிய தக்காளி - கால் கப், கடுகு, சீரகம், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), எலுமிச்சை சாறு - 2 டேபிள்ஸ்பூன், கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகத்தை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு தக்காளி, வேக வைத்த ராஜ்மா சேர்க்கவும். மூடியால் மூடி 10 முதல் 15 நிமிடம் சமைக்கவும். குடமிளகாய் துண்டுகளை சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள் சேர்த்துக் கிளறி, கொத்தமல்லி தூவி பரிமாறவும். *************************************************************** குடமிளகாய்-வேர்க்கடலை புளி சட்னி தேவையானவை: பெரிய குடமிளகாய் - 4, வறுத்த வேர்க்கடலை, தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன், புளி விழுது - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குடமிளகாயை பொடியாக நறுக்கவும். வேர்க்கடலையை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பிறகு அதனுடன் தேங்காய் துருவல், புளி விழுது சேர்த்து அரைக்கவும். குடமிளகாயை மிருதுவாகும் வரை லேசான தீயில் வதக்கவும். 5 நிமிடம் வதக்கிய பிறகு வேர்க்கடலை விழுதை சேர்த்து 2 நிமிடம் சமைக்கவும். சீரகம், உப்பு, மிளகாய்த்-தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து, எண்ணெய் மேலே மிதக்கும் வரை சமைக்-கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். ************************************************************** குடமிளகாய் கிண்ணங்கள் தேவையானவை: பெரிய குடமிளகாய் - 2, வெங்காயம் - பாதி (பொடியாக நறுக்கவும்) காலிஃப்ளவர் (பூக்களாக ஆய்ந்து கொள்ளவும்) - அரை கப், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மாங்காய்தூள், சோயா சாஸ் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் சாஸ் - ஒரு டீஸ்பூன், நெய் (அ) எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு. செய்முறை: குடமிளகாயை நீளவாக்கில் அல்லது குறுக்கில் பாதியாக நறுக்கி, உள்ளே இருக்கும் விதைகளை எடுத்து விடவும். வெங்காயத்தையும், காலிஃப்ளவரையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியை தூருவிக் கொள்ளவும். வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி சேர்த்துக் கிளறவும். பொடியாக நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து வதக்கி, மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, லேசாக தண்ணீரை தெளித்து நன்றாக கிளறவும். மூடியால் மூடி 3 முதல் 5 நிமிடம் மிதமான தீயில் சமைக்கவும். மிருதுவாக ஆனதும் இறக்கி ஆற விடவும். குட மிளகாயில் இரு பக்கமும் வெந்த காலிஃப்ளவர் கலவையை நிரப்பி, கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, குடமிளகாயை அடுக்கி மிதமான தீயில் 5 முதல் 8 நிமிடம் வரை சமைக்கவும். ******************************************************************* குடமிளகாய் டிலைட் தேவையானவை: பெரிய குடமிளகாய் - 4 (அ) 5, பெரிய தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன், சர்க்கரை - 2 டீஸ்பூன், பச்சைமிளகாய் சாஸ், கரம் மசாலாத்தூள் - தலா 2 டேபிள்ஸ்பூன், தக்காளி கெச்சப் - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: எண்ணெய், பெருங்காயம், மஞ்சள்தூள், உளுத்தம்பருப்பு, கடுகு, சீரகம் - தேவையான அளவு. செய்முறை: குடமிளகாயின் விதைகளை நீக்கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். வெங்காயத்தையும் தக்காளியையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, பெருங்காயம், மஞ்சள்தூள், உளுத்தம்பருப்பு போட்டு வறுத்துக் கொள்ளவும். வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி, சர்க்கரை, பச்சைமிளகாய் சாஸ், கரம் மசாலாத்தூள், தக்காளி கெச்சப், உப்பு சேர்த்து 5 முதல் 7 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். மூடியால் மூடி தனியே வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் குடமிளகாய் துண்டுகளை போட்டு மூடியால் மூடி வதக்கவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது, கடாயில் உள்ள பொருட்களுடன் நன்றாக கலந்து 10 நிமிடம் சமைக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். 30 வகை குடமிளகாய் சமையல்! ****************************************************************** குடமிளகாய்-கோஸ் மசாலா தேவையானவை: குடமிளகாய் - 2, பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு கப், கடுகு - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 4 (அ) 5 (பொடியாக நறுக்கியது), கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, கறிவேப்பிலை, பச்சைமிளகாய், கொத்தமல்லி, இஞ்சி துருவல் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பொடியாக நறுக்கிய கோஸை போட்டு மேலும் சிறிது நேரம் வதக்கி தனியே வைக்கவும். குடமிளகாயின் காம்பை எடுத்து விட்டு, உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். வதக்கிய கோஸ் மசாலாவில் சிறிது அடைத்து, மறுபடியும் காம்பை வைத்து, பிரஷர் பானில் சிறிது எண்ணெய் விட்டு மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடம் சமைக்கவும். ******************************************************************** குடமிளகாய்-காலிஃப்ளவர் ஃப்ரை தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, காலிஃப்ளவர் (பூக்களாக ஆய்த்தது) - ஒரு கப், வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும், காலிஃப்ளவரை போட்டு வறுத்து தனியே வைக்கவும். பிறகு குடமிளகாயுடன் உப்பு போட்டு வதக்கி தனியே வைக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். பிறகு குடமிளகாயை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். அதனுடன் வறுத்த காலிஃப்ளவரை சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும். சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ் இது. **************************************************** குடமிளகாய்-டபுள் பீன்ஸ் மசியல் தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட், சிவப்பு, பச்சை குடமிளகாய், தக்காளி - ஒரு கப், டபுள் பீன்ஸ், பட்டாணி - தலா ஒரு கப், சீரகத்தூள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு - தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 4 டேபிள்ஸ்பூன். செய்முறை: முதல் நாள் இரவே பட்டாணி, பீன்ஸை ஊற வைத்து, மறுநாள் குக்கரில் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கவும். குடமிளகாய், கேரட், உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கும்போது, காய்கறிகள் நீர்த்துக் கொள்ளும். அப்போது தக்காளியை சேர்த்து 2 நிமிடம் வதக்கி, மிளகாய்த்தூள் சேர்க்கவும். மேலும் 2 நிமிடம் கிளறி, வெந்த பட்டாணி, பீன்ஸை சேர்த்து மேலும் நன்றாக கிளறவும். 3 கப் தண்ணீர் சேர்த்து கலவையை நன்றாக கொதிக்கவிட்டு, சீரகத்தூள் சேர்க்கவும். கடைசியில் எலுமிச்சை சாறு விட்டு மிதமான தீயில் ஒரு 10 நிமிடம் சமைக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். ******************************************************* குடமிளகாய் கொத்சு தேவையானவை: குடமிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), தேங்காய் பால் - அரை கப், புளி விழுது, தனியா, மிளகு - தலா ஒரு டீஸ்பூன், சீரகம், காய்ந்த மிளகாய் - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு - அரை டீஸ்பூன், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தனியா, மிளகு, சீரகம், மிளகாய் போட்டு வறுத்துப் பொடிக்கவும். கடாயில் மறுபடியும் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து, பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து வறுக்கவும். பிறகு குடமிளகாய் துண்டுகளை போட்டு, மெத்தென்று ஆகும் வரை வதக்கி, தேங்காய் பால், புளி விழுதை சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். குடமிளகாய் வேகும் வரை குறைந்த தீயில் சமைக்கவும். அரைத்த பொடி, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி சாதத்துடன் பரிமாறவும். ************************************************************* பனீர் ஸ்டஃப் செய்த குடமிளகாய் பொரியல் தேவையானவை: குடமிளகாய் - 2, எண்ணெய் - தேவையான அளவு. ஸ்டஃப்பிங்குக்கு: துருவிய பனீர் - ஒன்றரை கப், பச்சை பட்டாணி - அரை கப், இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1. செய்முறை: ஸ்டஃப்பிங்குக்கு கொடுத்துள்ள பொருட்களை நன்றாக கலந்து வைக்கவும். குடமிளகாயின் தலை பாகத்தை வெட்டி விட்டு கத்தியால் உள்ளிருக்கும் விதைகளை நீக்கவும். கலந்து வைத்துள்ள கலவையை குடமிளகாயில் சிறிதளவு அடைத்து, பிரஷர் பானில் எண்ணெய் ஊற்றி, குடமிளகாய்களை அதில் வைத்து குறைந்த தீயில் 10 நிமிடம் வதக்கவும். பிறகு வெளியே எடுத்து, கத்தியால் நீள வாக்கில் நறுக்கி, ரொட்டியில் வைத்து பரிமாறவும். ******************************************************* குடமிளகாய்-வெங்காய மசாலா தேவையானவை: குடமிளகாய் - 2 (அ) 3 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 2 (மெல்லியதாக நறுக்கவும்), தக்காளி - 1, கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், கடலைமாவு, மிளகாய்த்தூள் - தலா 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்கா யத்தை பொன்னிறமாக வதக்கி, குடமிளகாய், தக்காளியை போட்டு 5 நிமிடம் வதக்கவும். கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கிளறி உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது தண்ணீரில் கடலைமாவை கரைத்து அதை கடாயில் வதங்கிக் கொண்டிருக்கும் குடமிளகாய் மசாலாவில் ஊற்றி, 5 நிமிடம் வதக்கி இறக்கவும். ***************************************************** குடமிளகாய் ஃப்ரை தேவையானவை: குடமிளகாய் - 1 (பொடியாக நறுக்கவும்), கடுகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், வெந்தயத்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா கால் டீஸ்பூன், எள்ளுப்பொடி - ஒன்றரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன். செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது, வெங்காயத்தை போட்டு 5 நிமிடம் நன்றாக வதக்கவும். பிறகு குடமிளகாயை போட்டு சீரகத்தூள், வெந்தயத்தூள், எள்ளுப்பொடி, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை சமைக்கவும். ****************************************************** குடமிளகாய் பொடி அடைத்த எண்ணெய் கறி தேவையானவை: குடமிளகாய் - கால் கிலோ, சீரகம்- --ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. பொடிக்கு அரைத்துக் கொள்ள: கடலைமாவு - 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, தனியாபொடி - தலா ஒரு டீஸ்பூன், மிளகாய் - 4. செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். மிளகாயை நீளவாக்கில் சிறிது நறுக்கி (கடைசி வரை நறுக்க வேண்டாம்) அதில் ஒரு டீஸ்பூன் பொடியை அடைக்கவும். பிறகு கடாயில் எண்ணை ஊற்றி, காய்ந்ததும் சீரகத்தை வறுத்து, அடைத்த குடமிளகாய்களை போட்டு மூடியால் மூடி 10 முதல் 15 நிமிடம் வதக்கவும். ****************************************************************************** குடமிளகாய் ரங்கீலா கிரேவி தேவையானவை: சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை குடமிளகாய் - தலா 1, பெரிய வெங்காயம் - 1, முந்திரி - அரை கப், கிராம்பு - 5, மிளகு - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 5 (அ) 6, தயிர் - 2 கப், இஞ்சி - கால் கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு. செய்முறை: முந்திரி, கிராம்பு, மிளகு, பட்டை, பச்சைமிளகாய், இஞ்சியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும், சிறிது தயிரையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். வெங்காயம், குடமிளகாயை 2 இன்ச் நீளத்துக்கு மெல்லிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும். பிறகு குடமிளகாயை சேர்த்து 5 நிமிடம் வதக்கி, அரைத்த விழுது, உப்பு, மீதி தயிர் சேர்த்து 5 முதல் 7 நிமிடம் சமைக்கவும். கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும். ********************************************************************** குடமிளகாய் ஊறுகாய் தேவையானவை: குடமிளகாய் - ஒரு கப், வெந்தயம், தனியா - தலா ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு - அரை கப், உப்பு - தேவையான அளவு. செய்முறை: மிளகாயை நீள துண்டுகளாக நறுக்கி, விதைகளை நீக்கி எலுமிச்சை சாறில் போடவும். வெந்தயம், தனியாவை தனித்தனியே பொடி செய்து, குடமிளகாய், உப்புடன் கலந்து ஒரு நாள் வைக்கவும். மறுநாள் தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிடலாம். ********************************************************************** ஸ்டஃப்டு குடமிளகாய் பஜ்ஜி தேவையானவை: பஜ்ஜி குடமிளகாய் - 5, கடலைமாவு, தேங்காய் துருவல் - தலா அரை கப், எண்ணெய், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: குடமிளகாய், எண்ணெயை தவிர மற்ற எல்லா வற்றையும் சிறிது தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும். மிளகாயின் நடுவில் கீறி, விதைகளை நீக்கி, பிசைந்து வைத்துள்ள கலவையை உள்ளே அடைக்கவும். எல்லா மிளகாய்களிலும் அடைத்த பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். ******************************************************** குடமிளகாய்-உருளைக்கிழங்கு பொரியல் தேவையானவை: குடமிளகாய் - அரை கிலோ (பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - 4 (சதுர துண்டுகளாக நறுக்கவும்), வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் - 3 (அ) 4, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயம் - ஒரு சிட்டிகை, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெந்தயத்தூளை போட்டு ஒரு நிமிடம் வறுக்கவும். பின்னர் பச்சைமிளகாய், மஞ்சள்தூள், பெருங்காயத்தை சேர்த்து வறுத்து, நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு வதக்கவும். பிறகு குடமிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். தீயைக் குறைத்து உப்பு சேர்த்து ஒரு நிமிடம் கிளறவும். கடைசியில் எலுமிச்சை சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும். ******************************************************************* குடமிளகாய் கார மசாலா ஸ்டஃப்பிங் தேவையானவை: குடமிளகாய் - 6, கடலைமாவு - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு. ஸ்டஃப்பிங் செய்ய: பெரிய உருளைக்கிழங்கு - 3 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், துருவிய பனீர் - 2 கப், தனியாத்தூள், மிளகாய்த்தூள், ஆம்சூர் பவுடர், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, பச்சைமிளகாய், கரம் மசாலாத்தூள், முந்திரி (பாதி அரைக்கவும்) - தலா ஒரு டீஸ்பூன். செய்முறை: குடமிளகாயை விதைகளை நீக்கி, உப்பு தூவி அரை மணி நேரம் வைக்கவும். கடலைமாவு, பெருங்காயம், உப்புடன் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். கரம் மசாலாத்தூள், பனீரை தவிர, மற்ற பொருட்களை சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறவும். அடுப்பிலிருந்து இறக்கி பனீரையும் கரம் மசாலாவையும் சேர்த்து வதக்கவும். பாதியாக நறுக்கிய குடமிளகாயில் மசாலாவை அடைக்கவும். கடலைமாவில் பாதிவரை தோய்த்து பானில் எண்ணெய் ஊற்றி, மாவு தோய்த்த பகுதி கீழே இருக்கும்படி வதக்கவும். இருபுறமும் திருப்பிப் போட்டு மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். ***************************************************************** உருளைக்கிழங்கு-குடமிளகாய் கிரேவி தேவையானவை: பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு - 2 கப், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - அரை கப், நீளவாக்கில் நறுக்கிய குடமிளகாய் - ஒரு கப், சீரகத்தூள் - முக்கால் டீஸ்பூன், தனியாத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், பெருங்காயத்தூளை போடவும். பிறகு வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். குடமிளகாய் சேர்த்துக் கிளறவும். மிதமான தீயில் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். காய்கறிகள் பாதி வெந்ததும் தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து 2, 3 நிமிடம் கிளறவும். நன்றாக வதங்கிய பிறகு தக்காளி சாறை சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க விடவும். ரொம்பவும் தண்ணியாக இல்லாமல் கெட்டியாக இருக்கட்டும். சூடாக பராத்தாவுடன் பரிமாறவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 3513471372370882186

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item