30 நாள் 30 வகை பொடிமாஸ்!
30 வகை பொடிமாஸ்! உருளைக்கிழங்கு கார பொடிமாஸ் தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - அரை கிலோ, நறுக்கிய வெங்காயம் - அரை கப், கீறிய பச்சைம...

https://pettagum.blogspot.com/2011/08/30-30_2286.html
30 வகை பொடிமாஸ்!
உருளைக்கிழங்கு கார பொடிமாஸ்
தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு - அரை கிலோ, நறுக்கிய வெங்காயம் - அரை கப், கீறிய பச்சைமிளகாய் - 1, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், இஞ்சி விழுது - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - சிறிது, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கைக் கழுவி ஆவியில் குழையாமல் வேகவிட்டு உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை போட்டு வதக்கி இஞ்சி விழுது, பொடிகளைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும். இதில் உதிர்த்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறி, ஒன்றாக சேர்ந்து வந்ததும் மல்லித்தழை தூவி இறக்கவும்.
இந்தப் பொடிமாஸ் பொலபொல-வென்று இருக்காது. சுவையாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
சேனைக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை: சேனைக்கிழங்கு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், கெட்டியான புளிக்கரைசல் - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 1, நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: சேனைக்கிழங்கை தோல் சீவி துண்டுகளாக்கவும். மிக்ஸியில் சிறிது சிறிதாக போட்டு சுற்றி தேங்காய்துருவல் போன்று உதிரியாக எடுக்கவும். உப்பு சேர்த்து இட்லிதட்டில் வைத்து ஆவியில் குழையாமல் வேகவிடவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கி மிளகாய்த்தூள், தனியாதூள், கிழங்கு சேர்த்து வதக்கவும். கிழங்கைச் சேர்க்கவும். பிறகு, புளிக் கரைசலைத் தெளித்து உதிர் உதிராக வரும் வரை கிளறி தேங்காய்த்துருவல், மல்லித்தழை சேர்த்து இறக்கி எலுமிச்சை சாறு சேர்க்கவும். விரும்பினால் பதமாக வெந்த பருப்புகளையும் சேர்க்கலாம்.
மூலச்சூட்டை தணிக்கும் இந்த பொடிமாஸ்!
--------------------------------------------------------------------------------
சர்க்கரைவள்ளிக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை: சர்க்கரை வள்ளிக்கிழங்கு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, வெறும் கடாயில் வறுத்த கறுப்பு எள் - 2 டீஸ்பூன், வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: வள்ளிக்கிழங்கை நன்றாக கழுவி ஆவியில் குழையாமல் வேகவிட்டு உதிர்த்து உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கி பொடி வகைகளைச் சேர்த்து பச்சை வாசனை போக கிளறவும். இதில் உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். வறுத்த எள், வறுத்து ஓரிரண்டாக உடைத்த வேர்க்கடலை, மல்லித்தழை ஆகியவற்றைக் கலந்து பரிமாறவும்.
வளரும் குழந்தைகளுக்கு ஊட்டமளிக்கும் பொடிமாஸ் இது.
--------------------------------------------------------------------------------
மரவள்ளிக்கிழங்கு பொடிமாஸ்
தேவையானவை:- மரவள்ளிக்கிழங்கு - அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், கீறிய பச்சைமிளகாய் - 3 வெறும் கடாயில் வறுத்த கறுப்பு எள் - 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: மரவள்ளிக் கிழங்கின் மேல் தோல், வெள்ளைப் பட்டையையும் சேர்த்து நீக்கிவிட்டு கழுவி துண்டுகளாக்கவும். பிறகு, குக்கர் தட்டில் வைத்து அரை வேக்காட்டில் வேகவிடவும். ஆறியதும் துருவி உப்பு கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய கிழங்கு, எள் சேர்த்து இரண்டு முறை கிளறி தேங்காய் துருவல், மல்லித்தழை தூவி இறக்கவும்.
மரவள்ளிக்கிழங்கைக் துருவி ஆவியில் இரண்டு நிமிடம் வேகவைத்தும் தாளிக்கலாம்.
--------------------------------------------------------------------------------
பாகற்காய் பொடிமாஸ்
தேவையானவை: முற்றாத நீள பாகற்காய் - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - 2 டேபிள்ஸ்பூன், கெட்டியான புளிகரைசல் - 2 டேபிள்ஸ்பூன், கேரட்துருவல், தேங்காய்துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன் சர்க்கரை - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாகற்காயைக் கழுவி விதை நீக்கி கேரட் துருவியில் துருவவும். தயிர், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாத்தூள், உப்பு சேர்த்து கலந்து பிசறி 10 நிமிடம் வைக்கவும். பிறகு இட்லி தட்டில் வைத்து வேகவிடவும். வெந்த பாகற்காயில் புளி கரைசலை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம் தாளித்து, வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பாகற்காயை சேர்த்து கிளறி நீர் வற்றியதும் தேங்காய்துருவல், கேரட் துருவல், உப்பு சேர்த்து இரண்டு முறை கிளறி சர்க்கரை தூவி இறக்கவும். கசப்பே தெரியாது. ஆவியில் வேகவிடுவ்தால் சத்தும் போகாது.
நீரிழிவு நோயாளிக்கு ஏற்ற பொடிமாஸ் இது.
--------------------------------------------------------------------------------
பப்பாளிக்காய் பொடிமாஸ்
தேவையானவை: பப்பாளிக்காய் - கால் கிலோ, நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்துருவல் - அரை கப், அவல் - கால் கப், கேரட்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சிதுருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பப்பாளியைத் தோல் நீக்கி உட்புறமும் சுத்தம் செய்து நீளவாக்கில் நான்காக நறுக்கி இட்லி தட்டில் வைத்து முக்கால் பதத்தில் வேகவிடவும். ஆறியதும், துருவி வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட்துருவலைச் சேர்த்து லேசாக வதக்கவும். வதங்கியதும் துருவிய பப்பாளி, உப்பு சேர்த்துக் கிளறவும். வெறும் கடாயில் அவலைப் பொன்னிறமாக வறுத்து கரகரப்பாகப் பொடித்து வதக்கிய பொடிமாஸில் தூவி, தேங்காய்துருவல், மல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.
குழையக்கூடிய காய்களை துருவிய பிறகு ஆவியில் வைத்தும் செய்யலாம். இதே போல் சுரைக்காயிலும் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
முள்ளங்கி பொடிமாஸ்
தேவையானவை: வெள்ளை முள்ளங்கி - கால் கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், கீறிய பச்சைமிளகாய் - 2, வெந்த துவரம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், பொரித்த அரிசித்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: முள்ளங்கியைக் கழுவி கேரட் துருவியில் துருவி உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி முள்ளங்கியைப் போட்டுக் கிளறவும். நன்றாக வதங்கியதும் தேங்காய்துருவல் சேர்த்துக் கிளறி வெந்த பருப்பு, பொரித்த அரிசித்தூள், மல்லித்தழை கலந்து இறக்கவும்.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் தேங்காய் போடாமல் செய்யலாம்.
--------------------------------------------------------------------------------
நூல்கோல் பொடிமாஸ்
தேவையானவை: நூல்கோல் - 4, நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 3, இஞ்சிதுருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய பனீர் துண்டுகள் - கால் கப், வறுத்த எள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது.
செய்முறை: நுல்கோல் தோலை சீவி, கழுவி, இரண்டாக நறுக்கி ஆவியில் வேக விடவும். பிறகு கேரட் துருவியில் துருவி, உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பனீர் துண்டுகளை சேர்த்து வதக்கவும், பிறகு நூல்கோல் சேர்த்துக் கிளறி வறுத்த எள், தேங்காய்துருவல், மல்லித்தழை தூவி இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
பீட்ரூட் பொடிமாஸ்
தேவையானவை: பீட்ரூட் - 2, நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பொரித்த ஜவ்வரிசி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, கழுவி, இரண்டாக நறுக்கி ஆவியில் அரைப்பதத்தில் வேகவிட்டு எடுத்து, துருவி உப்பு கலந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய், பீட்ரூட் சேர்த்துக் கிளறவும். பிறகு தேங்காய்துருவல் எண்ணெயில் பொரித்த சின்ன ஜவ்வரிசியை கலந்து இறக்கி மல்லித்தழை தூவி பரிமாறவும்.
ரத்த விருத்திக்கு ஏற்றது இந்தப் பொடிமாஸ்.
--------------------------------------------------------------------------------
வாழைத்தண்டு பொடிமாஸ்
தேவையானவை: வாழைத்தண்டு - 2, நீளமாக நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 4, முருங்கைக்கீரை - அரை கப், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, குழையாமல் வெந்த பாசிப்பருப்பு - கால் கப், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வாழைத்தண்டை சுத்தம் செய்து நாரை எடுத்துவிட்டு, மிகவும் பொடியாக நறுக்கவும். அல்லது மிக்ஸியில் அரைத்து உதிர்த்துக் கொள்ளவும். கீரையை ஆய்ந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு வாழைத்தண்டு, முழுங்கைக்கீரை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து தேங்காய்துருவல், வெந்த பாசிப்பருப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும். உதிர்த்த வாழைத்தண்டை இட்லி தட்டில் ஆவியில் வேக விட்டும் தாளித்து செய்யலாம்.
உடல் எடை குறையவும், சிறுநீரகக்கல்லை கரைக்கவும் உதவும் பொடிமாஸ் இது.
--------------------------------------------------------------------------------
வாழைப்பூ பொடிமாஸ்
தேவையானவை: வாழைப்பூ - 1, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 3, முருங்கைக்கீரை - அரை கப், புளிபேஸ்ட் - 2 டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, தேங்காய்துருவல் - கால் கப், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து நரம்பை நீக்கி இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேகவிட்டு எடுக்கவும். இதை மிக்ஸியில் போட்டு உதிர்த்து எடுத்து உப்பு, புளி பேஸ்ட் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்-பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு முருங்கைக்கீரையைச் சேர்த்து வதக்கி, வாழைப்பூவைக் கொட்டிக் கிளறவும். உதிராக வந்ததும் இறக்கி தேங்காய்-துருவல், மல்லித்தழை தூவி பரிமாறவும்.
இந்த பொடிமாஸ் வயிற்றுப் புண்ணைக் குணமாக்கும்.
--------------------------------------------------------------------------------
வாழைக்காய் மசாலா பொடிமாஸ்
தேவையானவை: பெரிய வாழைக்காய் - 2, நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 3, இஞ்சி துருவல் - ஒரு டீஸ்பூன், நறுக்கிய பூண்டு - 5 பல், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, சோம்பு, உப்பு - தேவையான அளவு, தேங்காய்துருவல் - 2 டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: வாழைக்காயைத் தோல் சீவி, நறுக்காமல் கொதிக்கும் நீரில் போட்டு குழையாமல் வேகவிட்டு எடுக்கவும். ஆறியதும் கேரட் துருவியால் துருவி, உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சியை ஒன்றன்பின் ஒன்றாகப் போட்டு வதக்கி அடுப்பை அணைத்து விடவும். சூடாக இருக்கும்போதே வாழைக்காய், தேங்காய்துருவல், மல்லித்தழை சேர்த்து கிளறி இறக்கவும்.
சின்ன வெங்காயம் பொடிமாசுக்கு நல்ல வாசனை தரும்.
--------------------------------------------------------------------------------
நட்ஸ் பொடிமாஸ்
தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், இஞ்சிதுருவல்- ஒரு டீஸ்பூன், முந்திரி, பாதாம் - தலா 12, நெய் - 2 டீஸ்பூன், நறுக்கிய பச்சைமிளகாய் - 3, பொரிகடலை - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு, சீரகம் கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: உரித்த வேர்க்கடலையை குக்கர் தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்து மிக்ஸியில் போட்டு ஓரிரண்டாக பொடிக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், இஞ்சியைப் போட்டு வதக்கி, வேர்க்கடலை, சிறிது உப்பு சேர்த்துக் கிளறவும், சிறு துண்டுகளாய் உடைத்த முந்திரி, பாதாமுடன், பொரிகடலையை நெய்யில் வறுத்துச் சேர்த்து தேங்காய்துருவல், மல்லித்தழை தூவி பரிமாறவும்.
குழந்தைகளுக்கு அதிக ஊட்டத்தை தரும் பொடிமாஸ் இது.
--------------------------------------------------------------------------------
பரங்கிக்காய் பொடிமாஸ்
தேவையானவை: கெட்டி பரங்கிக்காய் - கால் கிலோ (தோல் சீவி துருவிக் கொள்ளவும்) பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு, தேங்காய்துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். துருவிய பரங்கிக்காய், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். இறக்குவதற்கு முன் பொட்டுக்கடலை மாவு, மல்லித்தழை, தேங்காய்துருவலைத் தூவி பரிமாறவும்.
--------------------------------------------------------------------------------
காலிஃப்ளவர் பொடிமாஸ்
தேவையானவை: நடுத்தர சைஸ் காலிஃப்ளவர் - 1, நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 4, தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், இஞ்சிதுருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், எண்ணெய், கறிவேப்பிலை - தேவையான அளவு, மல்லித்தழை, உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை: காலிஃப்ளவரை நான்கு துண்டுகளாக நறுக்கி சிறிது கல் உப்பு சேர்த்த வெதுவெதுப்பான வெந்நீரில் மூழ்கும்படி போட்டு பத்து நிமிடம் மூழ்கும்படி வைக்கவும். பிறகு வெளியில் எடுத்து மீண்டும் கழுவி கேரட் துருவியில் துருவவும். இட்லி தட்டில் வைத்து வேகவிட்டு எடுத்து உப்பு போட்டு கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து பச்சைமிளகாய், இஞ்சிதுருவல் சேர்த்து வதக்கி காலிஃப்ளவரை சேர்த்துக் கிளறவும். தேங்காய்துருவல், மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும். விருப்பப்-பட்டால் வறுத்த முந்திரியை சேர்க்கலாம்.
--------------------------------------------------------------------------------
முருங்கைக்காய் பொடிமாஸ்
தேவையானவை: சதைப்பிடிப்பான முருங்கைக்-காய் - 15, நறுக்கிய வெங்காயம் - அரைகப், நறுக்கிய பச்சைமிளகாய் - 3, தேங்காய்துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த வேர்க்கடலை - கால் கப், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முருங்கைகாய்களைக் கழுவி துண்டுகளாக்கி ஆவியில் வேகவிடவும். ஆறியதும் சதைப்பகுதியை தனியே எடுக்கவும். நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் காய வைத்து, கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி, உப்பு சேர்த்து முருங்கைக்காய் சதையைப் போட்டுக் கிளறவும். தேங்காய்துருவல் மற்றும் வறுத்து ஓரிரண்டாக பொடித்த வேர்க்கடலை கலந்து இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
கேரட் பொடிமாஸ்
தேவையானவை: கேரட் - கால் கப், நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், கீறிய பச்சைமிளகாய் - 3, தேங்காய் துருவல் - ஓரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு, சீரகம் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கேரட்டைக் கழுவி, முழுசாக குக்கர் தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். குழையாமல் எடுத்து ஆறியதும் துருவவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கேரட், உப்பு, தேங்காய்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
சைவ முட்டை பொடிமாஸ்
தேவையானவை: கடலைமாவு - ஒரு கப், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், சோம்பு, எண்ணெய், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ் - தலா 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: கடலைமாவுடன், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மாவை கனமான ஆம்லெட் போல் ஊற்றி இருபுறமும் வேக விட்டு எடுக்கவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், துருவிய இஞ்சி என ஒவ்வொன்றாக சேர்த்து கடைசியில் உதிர்த்த ஆம்லெட்டை சேர்க்கவும். பிறகு எலுமிச்சை சாறு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி மல்லித்தழை தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் தேங்காய்துருவல், முந்திரி சேர்க்கலாம்.
--------------------------------------------------------------------------------
தேங்காய் பொடிமாஸ்
தேவையானவை: தேங்காய் துருவல் - ஒரு கப், பொரிகடலை - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 4, இஞ்சிதுருவல் - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - எண்ணெய், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: தேங்காய், பொரிகடலையை தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து கைவிடாமல் கிளறவும். வெந்து பொலபொலவென்று வந்ததும், எலுமிச்சை சாறு தெளித்து இறக்கவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கிப் போட்டுக் கிளறி வைக்கவும்.
சுவையும் மணமும் மிக்கது இது பொடிமாஸ்.
--------------------------------------------------------------------------------
சோயா சங்க் பொடிமாஸ்
தேவையானவை: சோயா உருண்டைகள் - 2 கப், நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 3, கேரட் துருவல், தேஙகாய் துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், வறுத்த முந்திரி - 10, எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: சோயா உருண்டைகளை கொதிக்கும் நீரில் போட்டு மூடி 10 நிமிடம் வைக்கவும். பிறகு நீரை ஒட்டப் பிழிந்து விட்டு மிக்ஸியில் விட்டு விட்டு அரைத்து கரகரப்பாக தூள் செய்யவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கி கேரட்டைச் சேர்த்துக் கிளறி சோயா, உப்பு சேர்க்கவும். பிறகு இறக்கி வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து தேங்காய், வறுத்த முந்திரி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
சுலபமாக செய்யக்கூடிய இந்தப் பொடிமாஸ் சத்து நிறைந்தது.
--------------------------------------------------------------------------------
பனீர் பொடிமாஸ்
தேவையானவை: பனீர் துண்டுகள் - 2 கப், நறுக்கிய குடமிளகாய், நறுக்கிய வெங்காயம் - தலா அரை கப், கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கீறிய பச்சைமிளகாய் - 2, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன், எண்ணெய், சீரகம், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பனீரை துண்டுகளாக்கி ஒரு ஸ்பூன் எண்ணெயில் லேசாக வதக்கி இட்லி தட்டில் வைத்து இரண்டு நிமிடம் ஆவியில் வேக வைக்கவும். ஆறியதும் உதிர்த்துக் கொள்ளவும். நான்ஸ்டிக் பேனில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், குடமிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், சிறிது உப்பு, சேர்த்து உதிர்த்து வைத்த பனீரை போட்டு கிளறி இறக்கி வைத்து எலுமிச்சை சாறு சேர்க்கவும். மல்லித்தழை துவி பரிமாறவும்.
குழந்தைகளுக்கு விருப்பமான சத்தான பொடிமாஸ். வயதானவர்கள் ஆஸ்டியோபொராஸிஸ் வராமல் தடுக்க அடிக்கடி சாப்பிடலாம்.
--------------------------------------------------------------------------------
கதம்ப பொடிமாஸ்
தேவையானவை: நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், முளைகட்டிய சுண்டல் கடலை, முளைகட்டிய பச்சை பயறு, முளைகட்டிய சோயா, ராஜ்மா, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு - தலா கால் கப், நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 3, இஞ்சி துருவல் - 2 டீஸ்பூன், தேங்காய்துருவல் - கால் கப், நறுக்கிய பூண்டு பல் - 15, மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு - தலா 2 டீஸ்பூன், சிறிய பனீர் துண்டுகள் - கால் கப், எண்ணெய், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பருப்பு வகைகளையும், ராஜ்மாவையும் நன்றாக ஊறவிட்டு முளைகட்டிய தானியங்கள், உப்பு, காய்ந்த மிளகாய், மஞ்சள்தூள், இஞ்சி சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். (தேவையானால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளலாம்) அதனுடன் பாலக்கீரை சேர்த்துப் பிசறி உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக விடவும். ஆறியதும் உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி துருவல் சேர்த்து வதக்கியதும் உதிர்த்த பருப்பு வகைகள், தேங்காய்துருவல், பனீர் துண்டுகளை வதக்கி எலுமிச்சை சாறை ஊற்றவும். மல்லித்தழை தூவி இறக்கவும்.
--------------------------------------------------------------------------------
கொள்ளு பொடிமாஸ்
தேவையானவை: கொள்ளு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - முக்கால் கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 4, கசகசா, பச்சரிசி - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு, ஆம்சூர் பொடி - 2 டீஸ்பூன்.
செய்முறை: முந்தைய நாள் இரவே கொள்ளை ஊற வைத்து காலையில் வேக விட்டால் சீக்கரம் வெந்துவிடும். வெந்த கொள்ளை மத்தினால் ஓரிரண்டாக நசுக்கியோ (அ) மிக்ஸியில் இரண்டு சுற்று சுற்றியோ உதிர்த்துக் கொள்ளவும். கசகசா, அரிசி இரண்டையும் தனித்தனியே வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளைப் போட்டு உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு ஆம்சூர் பொடி, மல்லித்தழை, அரிசித்தூள், கசகசா கலந்து கிளறி இறக்கவும்.
உடல் எடையைக் குறைக்க உதவும் பொடிமாஸ் இது.
--------------------------------------------------------------------------------
கடலை - கீரை பொடிமாஸ்
தேவையானவை: முளைகட்டிய கொண்டைக் கடலை - 2 கப், நறுக்கிய பொன்னாங்கன்னி கீரை - அரை கப், தேங்காய் துருவல், கேரட் துருவல் - தலா 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - அரைகப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, சிறிய மாங்காய் துண்டுகள் - கால் கப், எண்ணெய், கடுகு, சீரகம், கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: முளைகட்டிய கடலையை குழையாமல் வேகவிட்டு மிக்ஸியில் அரைத்து உதிர்த்து உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து காய்ந்த மிளகாய், வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பொன்னாங்கன்னி கீரையைப் போட்டு பிரட்டவும். பிறகு கடலை தூளைப் போட்டு தேங்காய் துருவல், கேரட், மாங்காய் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடம் கிளறி இறக்கி மல்லித்தழை தூவவும்.
--------------------------------------------------------------------------------
ராஜ்மா பொடிமாஸ்
தேவையானவை: ராஜ்மா - ஒரு கப், பனீர் துண்டுகள் - கால் கப், கேரட் துருவல் - கால் கப், நறுக்கிய வெங்காயம் - அரைகப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, ஆம்சூர் பொடி - 2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: ராஜ்மாவை முந்தைய நாள் இரவே, ஊற வைத்து மறுநாள் வேக வைத்து எடுக்கவும். மிக்ஸியில் கரகரப்பாக பொடித்து உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், பனீர் துண்டுகள், கேரட் துருவல், இஞ்சி துருவல் எல்லாவற்றையும் ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கவும். கடைசியில் ராஜ்மாவைப் போட்டுக் கிளறவும். ஆம்சூர் பொடி, மல்லித்தழை கலந்து பரிமாறவும்.
--------------------------------------------------------------------------------
பருப்பு உருண்டை பொடிமாஸ்
தேவையானவை: துவரம் பருப்பு, கடலைப்பருப்பு - அரை கப், நறுக்கிய வெங்காயம் - ஒருகப், காய்ந்த மிளகாய் - 2, நறுக்கிய பச்சைமிளகாய் - 3, நறுக்கிய பூண்டு பல் - 15, துருவிய இஞ்சி, சோம்பு - தலா 2 டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு, தேங்காய் துருவல் - அரைகப், வறுத்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பருப்பு வகைகளை 2 மணி நேரம் ஊற விட்டு உப்பு, காய்ந்த மிளகாய் பாதி அளவு சோம்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த பருப்பு வகைகளை முருங்கைக் கீரையை கலந்து உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேகவிடவும். ஆறியதும் உதிர்த்து விடவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, மீதமுள்ள சோம்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு துண்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக போட்டு வதக்கவும். நன்றாக உதிர்ந்ததும், தேங்காய் துருவல், வறுத்த முந்திரி, மல்லித்தழை சேர்த்து கலக்கவும். விரும்பினால் இரண்டு டீஸ்பூன் தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.
அபார சுவையில் அசத்தும் சத்தான பொடிமாஸ் இது.
--------------------------------------------------------------------------------
முளைப்பயறு பொடிமாஸ்
தேவையானவை: முளைகட்டிய பச்சை பயறு - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரைகப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2 காய்ந்த மிளகாய் - 2, துருவிய கேரட், துருவிய தேங்காய் - தலா 2 டேபிள்ஸ்பூன், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, சீரகம், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு, எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: முளைகட்டிய பயறை குக்கர் தட்டில் வைத்து ஆவியில் வேகவிடவும். வெந்ததும் கனமான கரண்டியால் நசுக்கி உதிர்த்து உப்பு சேர்த்து கலக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, பயறு, கேரட் துருவலைச் சேர்த்துக் கிளறி தேங்காய்துருவல், மல்லித்தழை கலந்து இறக்கி எலுமிச்சை சாறை விடவும்.
கேரட்டை அதிகம் வதக்க வேண்டாம். சற்று பச்சையாக இருந்தால் நன்றாக இருக்கும்.
--------------------------------------------------------------------------------
வேர்க்கடலை பொடிமாஸ்
தேவையானவை: உரித்த பச்சை வேர்கடலை - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4 முதல் 6, எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன், மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வேர்க்கடலையை மிக்ஸியில் கரகரப்பாக அரைத்து ஆவியில் வேகவிடவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம் தாளித்து உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பை போட்டு, வறுத்து அரைத்த வேர்க்கடலையை போட்டு கிளறி, தேவையான உப்பு சேர்க்கவும். மல்லித்தழை, தேங்காய் துருவல் தூவி எலுமிச்சை சாறு விட்டு பரிமாறவும்.
--------------------------------------------------------------------------------
பட்டாணி பொடிமாஸ்
தேவையானவை: காய்ந்த பட்டாணி - ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - அரை கப், நறுக்கிய பச்சைமிளகாய் - 2, காய்ந்த மிளகாய் - 2, கேரட் துருவல், தேங்காய்துருவல் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு.
செய்முறை: பட்டாணியை 6 மணி நேரம் ஊற வைத்து, பிறகு வேக விட்டு ஒன்றிரண்டாக உதிர்த்து உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி பட்டாணி சேர்க்கவும். நன்றாக கிளறி கேரட் துருவல், தேங்காய்துருவல் கலந்து இறக்கவும். மல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.
--------------------------------------------------------------------------------
மக்காச்சோள பொடிமாஸ்
தேவையானவை: துருவிய மக்காச் சோளம் - 1, கேரட் துருவல் - கால் கப், நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துருவிய சோளத்தை ஆவியில் லேசாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சீரகம், போட்டு வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுத்து, வேக வைத்த சோள துருவலைச் சேர்த்து 2 நிமிடம் கிளறவும். பிறகு கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், கேரட் துருவல், உப்பு, தேங்காய்துருவல், பச்சைமிளகாய், சேர்த்து நன்றாகக் கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும்.
---------------------------------------------------------------------------------
Post a Comment