30 வகை வெஜிடபிள் பிரியாணி--30 நாள் 30 வகை சமையல்

புதுசு புதுசா....தினுசு தினுசா... 30 வகை பிரியாணி பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீட...

புதுசு புதுசா....தினுசு தினுசா...
30 வகை பிரியாணி
பிரியாணி... எப்போதாவது முக்கியமான விசேஷ தினங்களில் மட்டுமே சில, பல வீடுகளில் கமகமக்கும் ஓர் உணவு என்றிருந்த காலம் உண்டு. இப்போது... 'அதெல்லாம் மலையேறி... போயே போச்சு...' எனும் அளவுக்கு, சின்னச் சின்ன விசேஷங்கள் என்றாலும்கூட ''பிரியாணி போட்டுடுங்க'' என்று சமையல்காரர்களிடம் ஆர்டர் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.
அதுமட்டுமா... "என்ன சமைக்கறதுனே தெரியல... பேசாம பிரியாணி பண்ணிட வேண்டியதுதான்'' என்றபடியே அடிக்கடி பிரியாணி சமைப்பது வீடுகளிலும்கூட வாடிக்கையாகிவிட்டது.
ஆனால், பெரும்பாலானவர்களுக்கு அதிகபட்சமாக நாலைந்து வகை பிரியாணிதான் செய்யத் தெரியும். அதையே சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிடக் கூடாது அல்லவா...! இதோ... அசத்தலாக 30 வகை வெஜிடபிள் பிரியாணியை 'புதுசு புதுசா... தினுசு தினுசா' செய்து அசத்தியிருக்கிறார் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன்.
"பிரியாணி செய்றதுக்கு அடிப்படையான சில விஷயங்களைக் கடைபிடிக்கணும். குறிப்பா... பாசுமதி அரிசியில செஞ்சாத்தான், அதுக்கான பிரத்யேக சுவை கிடைக்கும். அரிசியைக் கண்டிப்பா ஊற வச்சு, நெய்யில வறுக்கணும். அப்பத்தான்... சாதம் உதிரி உதிரியா இருக்கும். இதையெல்லாம் ஃபாலோ பண்ணுங்க. உங்க வீட்டு பிரியாணியும் உலக லெவல் பிரியாணிக்கு இணையா கமகமக்கும்...'' என சமையல் சூட்சமங்களைச் சொல்கிறார் சாந்தி விஜயகிருஷ்ணன்.
பிறகென்ன... வீட்டையே அசத்துங்க!
ராஜ்மா பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், ராஜ்மா, நறுக்கிய வெங்காயத்தாள் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: பட்டை - ஒரு துண்டு, பெரிய ஏலக்காய் - பாதி அளவு, மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, வறுத்துப் பொடிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் பொடிக்கவும். 

முதல் நாள் இரவே ராஜ்மாவை ஊற வைக்கவும். குக்கரில் கால் கப் தண்ணீர் விட்டு, ஊற வைத்த ராஜ்மாவைச் சேர்த்து ஒரு விசில் வந்ததும் இறக்கவும். அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு... நறுக்கிய இஞ்சி, வெங்காயத்தாள் போட்டு நன்கு வதக்கவும். ஊற வைத்த அரிசியை (தண்ணீரை வடித்துவிட்டு) அதில் போட்டு, நன்கு வறுத்து... குக்கரில் உள்ள ராஜ்மாவுடன் சேர்க்கவும். பொடித்த மசாலாத்தூள், உப்புச் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கலந்து மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன் எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறவும்.
ஃப்ரூட் பிரியாணி
தேவையானவை: திராட்சை, பலாப்பழம், பப்பாளி (மூன்றும் சேர்ந்து) - ஒரு கப், பாசுமதி அரிசி - ஒரு கப், தேங்காய்ப் பால் - ஒரு கப், முந்திரித் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா 1, வெள்ளை மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு கிராம்பு, ஏலக்காய் தாளித்து, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து நன்கு வதக்கவும். தேங்காய்ப் பால், உப்பு, வெள்ளை மிளகுத்தூளை சேர்த்து, தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும் திறந்து... சாதம் சூடாக இருக்கும்போதே பழக்கலவையை சேர்த்துக் கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
க்ரீன் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், கொத்தமல்லி, புதினா - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 4, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 2, ஏலக்காய் - 1, சதுரமாக நறுக்கிய உருளைக்கிழங்கு - கால் கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மூன்றையும் வதக்கி, ஆற வைத்து, கெட்டியாக அரைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, நறுக்கிய உருளைக்கிழங்கு, அரைத்த மசாலா, உப்பு சேர்த்து நன்கு கிளறவும். நெய்யில் அரிசியை வறுத்து, குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கினால்... கமகம க்ரீன் பிரியாணி ரெடி!
ட்ரை ஃப்ரூட் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, பால் - தலா ஒரு கப், திராட்சை - ஒரு டீஸ்பூன், கிராம்பு - 2, கீறிய பச்சை மிளகாய், ஏலக்காய் - தலா 1, பட்டை - ஒரு துண்டு, நெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: கசகசா - ஒரு டீஸ்பூன், பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 5.
செய்முறை: வெந்நீரில் கசகசாவை ஊற வைக்கவும். ஊறியவுடன், தண்ணீரை வடிகட்டி பாதம், முந்திரி, பிஸ்தா சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
அரிசியைக் கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். குக்கரில் நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். திராட்சை சேர்த்து அது பொரிந்தவுடன், ஊறிய அரிசியைப் போட்டு... உப்பு சேர்த்துக் கலக்கவும். அதனுடன் பாலையும் அரைத்த விழுதையும் சேர்த்து நன்றாகக் கலந்து, தேவையெனில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக வைத்து, ஆவி போனதும் திறந்து பரிமாறவும்.
குறிப்பு: ஒரு கப் அரிசிக்கு, ஒண்ணேகால் கப் என்ற விகிதத்தில் தண்ணீர் சேர்க்க வேண்டும். மசாலாவில் தண்ணீர் அதிகமானால், நாம் சேர்க்க வேண்டிய தண்ணீரின் அளவைக் குறைக்கலாம். ஊற வைத்த அரிசியை நெய்யில் வறுத்துப் போட்டால் சாதம் குழையாது. அதேபோல அரிசியை பலமுறை கழுவினால், பாசுமதிக்கேயுரிய வாசனை போய் விடும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்
வெஜிடபிள் பிரியாணி - மி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி கலவை - ஒரு கப், நறுக்கிய தக்காளி, நறுக்கிய வெங்காயம் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 2, பிரிஞ்சி இலை - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - கால் கப், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் நெய் விட்டு பிரிஞ்சி இலை, நறுக்கிய வெங்கா-யம், தக்காளி சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன், கீறிய பச்சை மிள-காய், இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துக் கிளற-வும். நறுக்கிய காய்கறிகளைப் போட்டு, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து... தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்-கவும். ஆறியதும், மூடியைத் திறந்து ஊற வைத்து நெய்யில் வறுத்த அரிசியைக் குக்கரில் போட்டு மிதமான தீயில் வேக வைத்து மீண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்கி, நறுக்கிய புதினா, கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
ரோஸ் பெட்டல்ஸ் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், ரோஸ் இதழ்கள் (பனீர் ரோஸ், சிவப்பு ரோஸ்) - ஒரு கப், தேன் - 2 டீஸ்பூன், ரோஸ் எசன்ஸ் - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து நெய்யில் வறுக்கவும். குக்கரில் அரிசியைப் போட்டு தேவையான உப்பு, தண்ணீர் விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து சாதத்தை ஒரு பேஸினில் கொட்டி, சூடாக இருக்கும்போதே ரோஸ் இதழ்களையும் ரோஸ் எசன்ஸையும் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கொஞ்சம் ஆறியதும், தேன் கலந்து பரிமாறவும். விருப்பப்பட்டால், காரத்துக்காக கொஞ்சம் மிளகுத்தூள் கலந்து கொள்ளலாம்.
தால் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 3, சீரகம் - கால் டீஸ்பூன், நறுக்கிய வெங்காயம் - கால் கப், புதினா, கொத்தமல்லி, இஞ்சி, பச்சை மிளகாய் (நான்கும் அரைத்த விழுது) - ஒரு டீஸ்பூன், பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா 1, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நெய், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: இரண்டு பருப்புகளையும் அரை மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடித்து, அதனுடன் தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்துக் கரகரப்பாக அரைக்கவும். அதனை இட்லி பாத்திரத்தில் இட்லியாக ஊற்றி அவித்து, உதிர்த்து வைக்கவும். குக்கரில் நெய் விட்டு... சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... வெங்காயம், அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு வதக்கவும். ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு... உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும். குக்கர் வெயிட் போடாமல் மிதமான தீயில் 5 நிமிடம் வேக வைக்கவும். பிறகு, குக்கரைத் திறந்து... உதிர்த்து வைத்துள்ள பருப்புக் கலவையை சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
பனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பனீர் துண்டுகள் - அரை கப், கொதிநீரில் ஊற வைத்து அரைத்த மிளகாய் பேஸ்ட் - அரை டீஸ்பூன், வட்டமாக நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு, பனீர் துண்டுகளை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதக்கியதும் அரைத்த மிளகாய் பேஸ்ட்டை சேர்த்து நன்கு வதக்கவும். ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு, உப்பு, தண்ணீர் விட்டுக் கலக்கவும். அதனுடன் வறுத்த பனீர் துண்டுகளைச் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும், இறக்கி வெங்காயத்தாள், எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.
பட்டர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைப் பட்டாணி - அரை கப், சீரகம் - அரை டீஸ்பூன், மிளகுத்தூள் - கால் டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 1, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் வெண்ணெயைப் போட்டு, உருகியதும் ஏலக்காய், கிராம்பு, சீரகம் தாளிக்கவும். சீரகம் பொரிந்தவுடன் பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். ஊற வைத்து நெய்யில் வறுத்த அரிசி, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். பிறகு, தண்ணீர் விட்டு குக்கரை மூடி, மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். விருப்பப்பட்டால் உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்டையும் சேர்த்துக் கொள்ளலாம்.
காலிஃப்ளவர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், நறுக்கிய காலிஃப்ளவர் - ஒரு கப், கார்ன்ஃப்ளார் - கால் கப், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், கீறிய பச்சை மிளகாய் - 2, தனியாத்தூள் - அரை டீஸ்பூன், மாங்காய் துருவல் - கால் கப், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொதிக்கும் நீரில் நறுக்கிய காலிஃப்ளவரை போட்டு, 2 நிமிடத்துக்குப் பிறகு தண்ணீரை வடிக்-கவும். அதனுடன் கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய்-விட்டு, மசாலா கலந்த காலிஃப்ளவரைப் பொரித்தெடுக்கவும். குக்கரில் எண்ணெய்விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து.. பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு, தனியாத்தூள் சேர்த்து மாங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கலக்கவும். ஊற வைத்து, நெய்யில் வறுத்த அரிசியைச் சேர்த்து, தண்ணீர் விட்டு, பொரித்து வைத்திருக்கும் காலிஃப்ளவரை போட்டு மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.

கார்ன் (சோளம்) பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, கார்ன் - தலா ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, புளிக் கரைசல் - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4. 
செய்முறை: வறுக்கக் கொடுத்துள்ளவற்றை கடாயில் வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். கார்னை வேக வைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும், வேக வைத்த கார்னைப் போட்டுக் கலக்கவும். ஊற வைத்து, வடித்து நெய்யில் வறுத்த அரிசி, புளிக் கரைசல், உப்பு, பொடித்த மசாலாத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி, மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
தக்காளி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், தக்காளி - 4, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை - தலா 1, நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நறுக்கிய புதினா - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சுடுநீரில் தக்காளியை சில நிமிடங்கள் போட்டு, வெளியே எடுத்து தோலை நீக்கி, மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய்விட்டு... பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை தாளித்து, இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். பிறகு, அரைத்த தக்காளி விழுதைச் சேர்த்து, கால் கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். அரிசியை ஊற வைத்து தண்ணீரை வடித்து, நெய்யில் வறுத்து, இதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்த சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். பிரியாணி சூடாக இருக்கும்போதே புதினா தூவிக் கிளறினால்... மணக்கும் தக்காளி பிரியாணி ரெடி!
முந்திரி புலாவ்
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பொடித்த முந்திரி - ஒரு டேபிள்ஸ்பூன், துண்டுகளாக்கிய முந்திரி - கால் கப், மிளகுத்தூள், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், ஏலக்காய், கிராம்பு - தலா 1, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற விடவும். குக்கரில் நெய் விட்டு, துண்டுகளாக்கிய முந்திரி சேர்த்து பொன்னிறத்தில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு, அதே நெய்யில் ஏலக்காய், கிராம்பு தாளித்து, ஊறிய அரிசியைப் போட்டு வறுக்கவும். மிளகுத்தூள், சீரகத்தூள், பெருங்காயத்தூள், பொடித்த முந்திரி, உப்பு சேர்த்துக் கிளறி... தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக வைத்து ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி போனதும் மூடியைத் திறந்து, வறுத்த முந்திரியைப் போட்டு மெதுவாகக் கிளறிப் பரிமாறவும்.
வேர்க்கடலை பிரியாணி
தேவையானவை: வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப், பாசுமதி அரிசி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், இஞ்சி- பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், புதினா - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாயை வறுத்து, வேர்க்கடலையுடன் சேர்த்து ஒன்றிரண்டாகப் பொடிக்கவும். அரிசியைக் கழுவி 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு... இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும், வெங்காயம் சேர்த்து வதக்கி... புதினா, மஞ்சள்தூள் சேர்த்துக் கலக்கவும். அரிசி, பொடித்த வேர்க்கடலையைச் சேர்க்கவும். தண்ணீர், உப்பு சேர்த்து ஒருமுறை கிளறி, மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
நெல்லிக்காய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், துருவிய நெல்லிக்காய் - அரை கப், துருவிய இஞ்சி, கரம் மசாலாத்தூள், எலுமிச்சைச் சாறு - தலா ஒரு டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண் ணீரை வடித்து, நெய்யில் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, துருவிய நெல்லிக்காய் சேர்த்து வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும்... கரம் மசாலாத்தூள், உப்பு, அரிசி சேர்த்துக் கிளறி, தண்ணீர் விட்டு குக்கரை மூட-வும். மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் சில நிமிடங்கள் கழித்து இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். சுவையான நெல்லிக்-காய் பிரியாணி ரெடி!
சிவப்பு மிளகாய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பழுத்து சிவந்த பச்சை மிளகாய் - 4, தக்காளி - 1, புளி - 50 கிராம், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், செலரி இலைத் துண்டுகள் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - சிறிதளவு, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலாக்காய் - தலா ஒரு துண்டு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பழுத்த மிளகாய் (சுத்தம் செய்தது), தக்காளி, புளியை ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, வடித்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... ஏலக்காய், கிராம்பு, பட்டை தாளித்து... வெங்காயம் சேர்த்து வதக்கவும். மிதமாக வதங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கி அரிசி, உப்பு போட்டுக் கிளறவும். தண்ணீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து செலரித் துண்டுகளைப் போட்டுக் கலந்தால்... வித்தியாசமான சிவப்பு மிளகாய் பிரியாணி சுவையாக ரெடி!
தயிர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, தயிர் - தலா ஒரு கப், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, குடமிளகாய், பட்டாணி கலவை - ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், ஜாதிபத்திரி - ஒரு துண்டு, கறுப்பு ஏலக்காய் - சின்ன துண்டு, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு - 1, புதினா - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: காய்கறி களைத் தோல் சீவி நறுக்கி, சுத்தமாகக் கழுவி, தயிரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, ஜாதிபத்திரி, கறுப்பு ஏலக்காய், பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து வதக்கவும். தயிர், அதில் ஊறிக் கொண்டிருக்கும் காய்கறி ஆகியவற்றைச் சேர்க்கவும். பிறகு, நெய்யில் வறுத்த அரிசி சேர்த்துக் கிளறவும். தயிர் சேர்த்துள்ளதால், சரியான அளவு தண்ணீர் விட்டு, புதினா தூவி, குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
பலாமூசு பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், சிறிய பலாக்காய்த் துண்டுகள் - அரை கப், நறுக்கிய தக்காளி, வெங்காயம் - தலா கால் கப், புதினா, கொத்த மல்லி, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த விழுது - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நெய், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.
செய்முறை: பலாமூசு என்னும் சிறிய பலாக்காயைத் தோல் சீவிப் பெரிய துண்டுகளாக நறுக்கி வேக வைக்கவும். தண்ணீரை வடித்து, ஆறியதும் மிக்ஸியில் ஒருமுறை சுற்றியெடுத்தால் பலா துருவலாகக் கிடைக்கும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளியைப் போடவும். லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், அரைத்து வைத்திருக்கும் புதினா, கொத்தமல்லி, இஞ்சி, காய்ந்த மிளகாய் விழுதைச் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் பலாத்துருவல், உப்பு சேர்த்துக் கலந்து, அரிசியைப் போட்டு தண்ணீர் விட்டு குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும், சில நிமிடங்கள் விட்டு இறக்கவும். பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சோயாபனீர் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், துருவிய சோயாபனீர் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - அரை கப், நறுக்கிய குடமிளகாய், வெங்காயம் இரண்டும் சேர்ந்து - கால் கப், கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், ஒன்றிரண்டாகப் பொடித்த பட்டை, கிராம்பு, ஏலக்காய் - ஒன்றரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், முந்திரி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீரை வடித்து, ஈரம் போக நெய்யில் வறுக்கவும். குக்கரில் எண்ணெய் விட்டு, பொடித்த மசாலா சேர்த்து தாளித்து, இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும். பச்சை வாசனை போனதும்... நறுக்கிய வெங்காயம், குடமிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள் போட்டு வதக்கி, துருவிய சோயாபனீர் சேர்த்துக் கலக்கவும். தண்ணீர், உப்பு சேர்த்துக் கலந்து அரிசியைப் போட்டுக் கிளறி மூடவும். மிதமான தீயில் வேகவிட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
வத்தல் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், மணத்தக்காளி வத்தல் - ஒரு டீஸ்பூன், சுண்டைக்காய் வத்தல் - 8, மோர் மிளகாய் - 5, சுக்கங்காய் வத்தல் - 8, பாகற்காய் வத்தல் - 5, அரிசி வத்தல் - கைப்-பிடியளவு, வெங்காய வத்தல், ஜவ்வரிசி வத்தல் - சிறிதளவு, கறிவேப்-பிலை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... ஒவ்வொரு வத்தலையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். குக்கரில் நெய் விட்டு, ஊற வைத்த அரிசியைச் சேர்த்து வறுத்துக் கொள்ளவும். வத்தலிலேயே உப்பு இருப்பதால் அளவாக உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, வத்தல்களை போட்டு குக்கரை மூடவும். மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், திறந்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை தூவி கலக்கிப் பரிமாறவும்.
கீரை பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை- ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், உருளைக்கிழங்கு - 2, பச்சை மிளகாய் - 3, பிரிஞ்சி இலை - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம், பிரிஞ்சி இலை தாளித்து... இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு, வெந்தயக்-கீரை போட்டு லேசாக வதக்கி, வேக வைத்து நறுக்கிய உருளைக்கிழங்கைச் சேர்த்து மேலும் வதக்கி, உப்பு சேர்க்-கவும். அரிசியை சேர்த்துக் கலந்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
வெஜ் பிரியாணி மிமி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு, பீன்ஸ், பட்டாணி கலவை - தலா ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, பிரெட் துண்டுகள் - 2, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
மசாலாவுக்கு: பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - ஒன்று, ரோஜா மொட்டு - ஒரு துண்டு, கசகசா - ஒரு டீஸ்பூன். முந்திரி - 3, பாதாம் - 3, வதக்கிய வெங்காயம் - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு - 5, சீரகம் - கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறு துண்டு, தேங்காய்ப் பால் - கால் கப். 
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், ரோஜா மொட்டு, கசகசாவை வறுத்துக் கொள்ளவும். முந்திரி, பாதாம், இஞ்சி, பச்சை மிளகாய், வதக்கிய வெங்காயம், மிளகு, சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து தேங்காய்ப் பால் விட்டு நைஸாக அரைக்கவும்.
பிரெட் துண்டுகளை, எண்ணெயில் வறுத்துக் கொள்ளவும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... வெங்காயம், புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போனதும் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். ஒரு நிமிடம் வதங்கியதும், தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கலக்கி, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து... அரிசி, அரைத்த மசாலாவையும் சேர்த்து ஒன்றாகக் கலந்து மூடவும். மீண்டும் ஒரு விசில் வந்ததும் இறக்கி, பிரெட் துண்டுகள் சேர்த்துப் பரிமாறவும். விருப்பப்பட்டால், எலுமிச்சைச் சாறு கலந்து பரிமாறலாம்.
தேங்காய்ப் பால் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி, தேங்காய்ப் பால் - தலா ஒரு கப், நீளமாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், சின்ன உருளைக்கிழங்கு (வேக வைத்து தோலுரித்தது) - 1 கப், பச்சை மிளகாய் - 3, பட்டை - ஒரு துண்டு, ஏலக்காய், கிராம்பு - தலா 1, நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, ஏலக்காய், கிராம்பு தாளித்து... நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு, 10 நிமிடம் ஊற வைத்து, தண்ணீர் வடித்து, நெய்யில் வறுத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கி, தேங்காய்ப் பால் சேர்க்கவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும் வரை வேக விட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கவும். ஆவி போனதும், மூடியைத் திறந்து, நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
கலர்ஃபுல் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - 1 கப், பப்பாளிக்காய், சிவப்பு, மஞ்சள், பச்சை குடமிளகாய், பீன்ஸ், கேரட், தக்காளி கலவை - ஒரு கப், வயலட் முட்டைகோஸ் - கால் கப், நறுக்கிய சின்ன வெங்காயம் - கால் கப், நறுக்கிய புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை - தலா 1, பச்சை மிளகாய் - 10, எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பச்சை மிளகாயை கிள்ளிப் போடவும். அது சுருண்டு, அதன் காரம் எண்ணெயில் இறங்கியதும்... மிளகாய்களை எடுத்து விடவும். பிறகு, அதே எண்ணெயில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து... இஞ்சி-பூண்டு விழுதைச் சேர்க்கவும். பச்சை வாசனை போனவுடன், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளைப் போட்டு வதக்கவும். காய்கறிகளின் நிறம் மாறாமல் வதக்கி, அரிசி, உப்பு, தண்ணீர் விட்டு மூடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி போனதும் மூடியைத் திறந்து கொத்தமல்லி, புதினா தூவி பரிமாறவும்.
ஃப்ரெஷ் புரோட்டீன் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், ஃப்ரெஷ் பட்டர் பீன்ஸ், டபுள் பீன்ஸ், மொச்சைக் கொட்டை, பட்டாணி (கலந்தது) - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: கிராம்பு, ஏலக்காய் - தலா 1, பட்டை - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3, சீரகம் - அரை டீஸ்பூன், தனியா - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி - அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வறுக்கவும். அதனுடன், சீரகம், தனியா, பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி சேர்த்து வதக்கி ஆற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைத்து, நெய்யில் ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அரைத்த மசாலாவைச் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். ஃப்ரெஷ் பீன்ஸ்களைச் சேர்த்து மீண்டும் ஒருமுறை வதக்கவும். வதங்கியதும், அரிசியைப் போட்டு ஒருமுறை கிளறி... உப்பு, தண்ணீர் விட்டு நன்றாகக் கலக்கவும். குக்கரை மூடி, மிதமான தீயில் வேக வைத்து, ஒரு விசில் வந்ததும் இறக்கிப் பரிமாறவும். 
கேரட் ஜூஸ் பிரியாணி
தேவையானவை: திக்கான கேரட் ஜூஸ், பாசுமதி அரிசி - தலா ஒரு கப், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பச்சைப் பட்டாணி - கால் கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு.... பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து... நறுக்கிய வெங்காயம், பட்டாணி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி... அரிசி, உப்பு, கேரட் ஜூஸ் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடவும். மிதமான தீயில் ஒரு விசில் வரும்வரை வேக விட்டு இறக்கவும். ஆவி போனதும், திறந்து கொத்தமல்லி தூவி பரிமாறவும். விருப்பப்பட்டால் சீஸ் துருவல் சேர்த்தும் பரிமாறலாம். 
கத்திரிக்காய் பிரியாணி
தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் - கால் கிலோ, பாசுமதி அரிசி - ஒரு கப், சின்ன வெங்காயம் - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்துப் பொடிக்க: கிராம்பு - 2, தனியா - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, மிளகு - அரை டீஸ்பூன், புளி - 50 கிராம், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: புளி நீங்கலாக, வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வெறும் கடாயில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதே கடாயில், புளியை சிறு துண்டுகளாகப் போட்டெடுத்து, வறுத்தவற்றைச் சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். கத்திரிக்காயை நடுவில் மட்டும் நான்காகப் பிளந்ததுபோல் நறுக்கவும். அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு ஈரம் போக அரிசியை வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, கத்திரிக்காயைப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். அதே எண்ணெயில் சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பொடித்த மசாலாவை சேர்த்து வதக்கவும். அரிசி சேர்த்துக் கிளறி, தண்ணீர் விட்டு, வறுத்த கத்தரிக்காயைச் சேர்த்துக் கலந்து, குக்கரை மூடி மிதமான தீயில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும் இறக்கி, ஆவி போனதும் திறந்து, கறிவேப்பிலை தூவிப் பரிமாறவும்.
மஷ்ரூம் (காளான்) பிரியாணி
தேவையானவை: மஷ்ரூம் - அரை கப், பாசுமதி அரிசி - ஒரு கப், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை - 1, பட்டை - ஒரு துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா 1, நறுக்கிய வெங்காயம் - கால் கப், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு (பொடியாக நறுக்கியது), நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு முறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு, அரிசியை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு... பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை தாளித்து, நறுக்கிய வெங்காயம், மஷ்ரூம் போட்டு வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுது, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு அரிசி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு, மிதமான தீயில் வேக விட்டு, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
நாட்டுக் காய்கறி பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், வாழைத்தண்டு, கொத்தவரங்காய், அவரைக்காய், வாழைக்காய், பரங்கிக்காய், கீரைத்தண்டு கலவை - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, கசகசா - ஒரு டீஸ்பூன், கிராம்பு, ஏலக்காய் - தலா 1, எள், தனியா, கொப்பரைத் துருவல் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒருமுறை கழுவி, 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் நெய் விட்டு... அரிசியை ஈரம் போக வறுத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் எள்ளை வறுத்துக் கொள்ளவும். அதே கடாயில் எண்ணெய் விட்டு... கசகசா, கிராம்பு, ஏலக்காய், தனியா, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து, கொப்பரைத் துருவல், எள் சேர்த்து கரகரப்பாகப் பொடித்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் விட்டு, காய்கறிகளை வதக்கி, பொடித்த மசாலா, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். வாசனை வந்ததும்... அரிசி, உப்பு, தண்ணீர் சேர்த்துக் கிளறி மூடி, மிதமான தீயில் வேக விடவும். ஒரு விசில் வந்ததும், சில நிமிடங்களுக்குப் பிறகு இறக்கிப் பரிமாறவும்.
ஸ்டஃப்டு மிளகாய் பிரியாணி
தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கப், பஜ்ஜி மிளகாய் - 3, கொப்பரைத் துருவல் - கால் கப், மிளகாய்த்தூள், தனியாத்தூள் - தலா அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பஜ்ஜி மிளகாயைக் கீறி விதைகளை நீக்கவும். அரிசியை 10 நிமிடம் ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கொப்பரைத் துருவல், மிளகாய்த்தூள், கரம் மசலாத்தூள், தனியாத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து வதக்கி, மிளகாய்கள் ஒவ்வொன்றிலும் அடைத்து 'ஸ்டஃப்' செய்யவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு மிளகாயை லேசாக வதக்கவும். ஒவ்வொரு மிளகாயையும் 3 துண்டுகளாக்கவும். குக்கரில் நெய் விட்டு, ஊற வைத்து தண்ணீர் வடித்த அரிசியை வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். துண்டுகளாக்கிய மிளகாயைச் சேர்த்து லேசாகக் கிளறி, குக்கரை மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். பரிமாறுவதற்கு முன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 7167374079054541274

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item