இஸ்லாமிய இல்லம் - 40 வழிமுறைகள்--பெட்டகம் சிந்தனை,

இஸ்லாமிய இல்லம் - 40 வழிமுறைகள் முன்னுரை எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே, அவனை நாம் புகழ்கின்றோம், அவனிடம் உதவியும் தேடுக...

இஸ்லாமிய இல்லம் - 40 வழிமுறைகள் முன்னுரை எல்லாப் புகழும் ஏக இறையோனாகிய வல்ல அல்லாஹ்வுக்கே, அவனை நாம் புகழ்கின்றோம், அவனிடம் உதவியும் தேடுகின்றோம், அவனிடமே மன்னிப்பும் கோருகின்றோம். நம்மிடம் உருவாகின்ற தீமைகளில் இருந்தும் இன்னும் தீமையான செயல்களிலிருந்தும் அவனிடமே நாம் பாதுகாப்புக் கோருகின்றோம். எவனொருவன் அல்லாஹ்வினால் வழிகாட்டப்பட்டு விட்டானோ, அவரை எவரும் வழிகெடுத்து விட முடியாது, இன்னும் எவனொருவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விட்டானோ அவனை யாரும் நேர்வழியில் செலுத்தி விட முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு ஒரு இறைவன் இல்லை என்று நான் சாட்சி பகர்கின்றோம், அவனுக்கு இணையுமில்லை அல்லது துணையுமில்லை, இன்னும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாராகவும், இன்னும் தூதராகவும் இருக்கின்றார் என்றும் சான்று பகர்கின்றேன். இல்லம் என்பது அல்லாஹ் தனது அடியானுக்கு வழங்கி இருக்கின்ற அருட்கொடையாகும். இதனை அல்லாஹ் தனது திருமறை வாயிலாக நமக்கு இவ்வாறு சுட்டிக் காட்டுகின்றான் : அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இல்லங்களை அமைதித்தளமாக ஏற்படுத்தியுள்ளான்;. (16:80) இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : அருளாளனும் இன்னும் மகத்துவமிக்கவனுமான அல்லாஹ் தனது அடிமைகளுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகள் குறித்து சுட்டிக் காட்டுகின்றான் : ''இல்லங்களை அவர்களுக்கு அமைதி வழங்கக் கூடிய தளமாக உருவாக்கித் தந்துள்ளான், அவர்களுக்கான புகலிடமாக அது அமைந்து அவர்களை மூடிக் கொள்கின்றது, இன்னும் அனைத்து வித நலன்களையும் அது அவர்களுக்கு வழங்குகின்றது.'' வீட்டின் மூலமாக நாம் பெற்றுக் கொள்வது தான் என்ன? உண்பதற்கும், மனைவியுடன் கொஞ்சிக் குலாவுவதற்கும், உறங்கவும், ஓய்வு எடுக்கவுமா? தனிமையில் இருந்து, மனைவியையும், பிள்ளைகளையும் சந்திக்கின்ற இடமா? வீடுகள் பெண்களை பாதுகாக்கும் அரணாக அமைந்திருக்கின்றதில்லையா? அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் : (நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள். (33:33) உங்களைப் போல வீடில்லாதவர்களைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள், சிறு அறைகளிலும் அல்லது தெருக்களிலும், அல்லது நிரந்திரமற்ற அகதி முகாம்களில் சிதறி வாழும் மக்களைப் பற்றிச் சிந்தித்தீர்களென்றால், உங்களுக்கு இறைவன் வழங்கியிருக்கின்ற அருட்கொடையான இல்லத்தைப் பற்றி உணர்ந்து கொள்வீர்கள். வீடின்றி நாடோடி வாழ்க்கை வாழும் மக்களிடம் அவர்களது வாழ்க்கையின் அவலங்களைப் பற்றிக் கேட்டால், ''எனக்கென்ன வீடா இருக்கின்றது, நிரந்தரமாகத் தங்குவதற்கு'' என்று அங்கலாய்ப்பதனைக் கேட்பீர்கள். நான் சில வேளைகளில் இன்னார் வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்குவேன், இன்னும் சில நேரங்களில் டீக்கடைப் பெஞ்சுகளில் அல்லது பூங்காக்களில் அல்லது கடற்கரைகளில், இன்னும் என்னுடைய உடைகளோ தெருவோரம் சாத்தி வைக்கப்பட்டிருக்கும் மரப் பெட்டிகளில்..! வீடின்றிப் போனால் உங்களது நிலைமைகளும் இவ்வாறு தான் இருக்கும் என்பதை நீங்கள் அப்பொழுது உணர்ந்து கொள்வீர்கள். யூதர்களின் ஒரு குலத்தவர்களான பனூ நளீர் - களிடமிருந்து அல்லாஹ் தனது அருட்கொடைகளை எடுத்துக் கொண்டு விட்ட பொழுது, அவர்களை அவர்களது இல்லங்களிலிருந்து வெளியேற்றினான், இதனை அல்லாஹ் தனது திருமறையில் : வேதத்தை உடையோரில் எவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்தனரோ, அவர்களை அவர்களுடைய வீடுகளிலிருந்து முதல் வெளியேற்றத்தில் வெளியேற்றியவன் அவனே எனினும் அவர்கள் வெளியேறுவார்கள் என்று நீங்கள் நினைக்கவில்லை.. .. .. (மேலும் அல்லாஹ் கூறுகின்றான்) : அன்றியும் அவர்கள் தம் கைகளாலும் முஃமின்களின் கைகளாலும் தம் வீடுகளை அழித்துக் கொண்டனர். எனவே அகப்பார்வையுடையோரே! நீங்கள் (இதிலிருந்து) படிப்பினை பெறுவீர்களாக. (59:2) இறைநம்பிக்கையாளர்கள் தங்களது வீடுகளை சரியான வகையில் ஒழுங்குபடுத்தப்பட்ட இல்லங்களாக மாற்றி அமைப்பதில் பல்வேறு நோக்கங்கள் இருக்கின்றன. முதலாவதாக, அவனையும், அவனது குடும்பத்தாரையும் நகர நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும், இன்னும் அவர்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காகவும் தனது இல்லத்தை அவன் ஒழுங்கு செய்வது அவசியமாகின்றது : முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர்; அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்; தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:6) இரண்டாவதாக, மரணத்தின் பின் உயிர் கொடுத்து எழுப்பப்படுகின்ற அந்த நாளில், தனக்குக் கீழ் உள்ளவர்களைப் பற்றி குடும்பத் தலைவன் விசாரணைக்கு உட்படுத்தப்படுவான் என்ற மிகப் பெரும் பொறுப்பு அவன் மீது சுமத்தப்பட்டுள்ளது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒவ்வொரு மேய்ப்பாளரையும் (பொறுப்பாளரும்) அவனுடைய மந்தைகளைப் பற்றி (தன்மீது பொறுப்புச் சுமத்தப்பட்டவர்கள் பற்றி) அல்லாஹ் (மறுமை நாளில்) விசாரிப்பான், அதனை அவர் பாதுகாத்தாரா அல்லது அதனை உதாசினம் செய்தாரா, என்பது பற்றி ஒவ்வொரு மனிதரும் விசாரிக்கப்படாமல் இருக்க மாட்டார். மூன்றாவதாக, இல்லம் என்பது ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் தளமாக இருக்கின்றது, தீமைகளில் இருந்து அவனையும், அவனது தீமைகளில் இருந்து மற்றவர்களையும் பாதுகாக்கின்றது. இன்னும் குழப்பமான நாட்களில் பாதுகாப்புத் தேடக் கூடிய இடமாகவும் அது திகழ்கின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நாவினை (ப் பாதுகாத்து) கட்டுப்படுத்திக் கொள்வது அருட்கொடையாகும், (அத்தகையவருக்கு) அவருடைய இல்லம் போதுமானதாகும், இன்னும் (அவர் செய்து விட்ட) பாவங்களுக்கு மன்னிப்புக் கோரி அழுதவற்கும்.'' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''ஐந்து விஷயங்கள் இருக்கின்றன, எவர் அதனைப் பூர்த்தி செய்கின்றாரோ அவர் நம்மைச் சேர்ந்தவர், அல்லாஹ் அவனுடன் இருப்பான் : (அதாவது) நோயாளியைச் சென்று சந்தித்து (நலம் விசாரிப்பது), இறைவழிப் போருக்காக வீட்டை விட்டு வெளியே செல்வது, தவறினைத்திருத்திக் கொள்ள அல்லது மரியாதைக்காக தலைவரிடம் செல்வது, அல்லது அவர் வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கட்டும், இதன் காரணமாக மக்கள் இவரிடமிருந்தும் இன்னும் இவர் மக்களிடமிருந்து பாதுகாப்புப் பெற்றுக் கொள்ளக் கூடும்.'' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''குழப்பமான நாட்களில் ஒரு மனிதனுக்குப் பாதுகாப்பானது (எதுவென்றால்) அவன் அவனது இல்லத்தில் தங்கி இருப்பது தான்.'' ஒருவன் தனக்கு நெருக்கமில்லாத அந்நிய தேசத்தில் அல்லது இடத்தில் இருக்கின்றான், அவனைச் சூழ இருக்கின்ற தீமைகளை அவனால் களைய முடியாது எனும் பொழுது கீழக்கண்ட ஆலோசனைகள் அவனுக்கு பிரயோஜனமாக இருப்பதைக் காண முடியும். அப்பொழுது அவன் தனது வீட்டில் அடைக்கலமாகி விடும் பொழுது, இஸ்லாம் தடை செய்திருக்கின்றவைகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதுடன் அல்லது தடுக்கப்பட்டவைகளைப் பார்ப்பதனின்றும், இன்னும் அலங்காரங்களை வெளியில் காட்டித் திரிவதனின்றும் தனது மனைவியையும், இன்னும் கெட்ட சகவாசத்திலிருந்து தனது பிள்ளைகளையும் பாதுகாக்கக் கூடிய தளமாக அவனது இல்லம் இருக்கும். நான்காவதாக, மக்கள் அதிகமான நேரங்களைத் தங்களது இல்லத்திலிருந்து கொண்டு கழிக்கக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், குறிப்பாக கோடைகாலத்தின் பொழுது அல்லது குளிர்காலத்தின் பொழுது, மழை பெய்யும் பொழுது, அதிகாலை நேரத்தின் பொழுது அல்லது மாலை நேரத்தின் பொழுது, இன்னும் தங்களது அலுவல்கள் முடிந்த பின்பு அல்லது பள்ளிக் கூடங்கள் முடிந்ததன் பின்பு, எனவே இந்த நேரங்களை இறைவனை வணங்கக் கூடிய தளமாக, நினைவு கூரக் கூடிய தளமாக மாற்றிக் கொண்டு, இறைவன் ஆகுமானவற்றை அதில் தேடிப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும், அவ்வாறில்லா விட்டால் உங்களது இருப்பிடம் இஸ்லாத்திற்கு முரணானவற்றை கழிக்கக் கூடிய தளமாக மாறி விட வாய்ப்புள்ளது. ஐந்தாவதாக, மிக முக்கியமானது என்னவென்றால், ஒவ்வொருவரும் தனது குடும்பத்தின் சீர்திருத்தத்தின் மீது அதிகக் கவனம் எடுத்துக் கொள்வதன் மூலம் ஒரு ஆரோக்யமான முஸ்லிம் சமூகத்தை உருவாக்க முனைய வேண்டும், ஏனென்றால், ஒரு சமுதாயம் என்பது குடும்பங்களின் தொகுப்பாகும், அதில் ஒவ்வொரு குடும்பமும் சமூகம் என்ற கட்டிடத்தின் செங்கலைப் போன்றதாகும். ஒரு குடும்பம் சீர்திருந்துவது அந்தக் குடும்பத்திற்கு அடுத்துள்ள சுற்றுப் புறத்தையும் சீர்திருத்துகின்றது, சுற்றப்புறமானது சமூகத்தை உருவாக்குகின்றது. சமூகம் என்ற கட்டிடத் தொகுப்பில் அமைந்துள்ள ஒவ்வொரு செங்கல்லும் உறுதியாக அமைந்து விட்டால், அந்த சமூகம் இறைச் சட்டத்தின் படி அமைக்கப்பட்டு விட்டால், எதிரிகளைச் சந்திக்கும் பொழுது அது உறுதியுடனிருக்கும் இன்னும் அதில் நன்மைகள் நிறைந்திருக்கும், தீமைகள் அதில் எளிதில் ஊடுறுவவும் இயலாததாகி விடும். இன்னும் இஸ்லாமியக் குடும்பம் என்பது சமூகம் என்ற கட்டிடத்தின் தூண்களைப் போல, அவை இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு வித்திடுகின்றன, இன்னும் சமூகத்தை நேர்வழியின்பால் இட்டுச் செல்கின்றன, மிகச் சிறந்த அழைப்பாளர்களாலும், அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாலும், இறைவழியில் போராடக் கூடிய தியாகம் படைத்தவர்களாலும், நேர்வழி பெற்றுக் கொண்ட மனைவியர்களாலும், சிறப்புக் கவனம் செலுத்தி அரவணைப்பு வழங்கக் கூடிய தாய்மார்களாலும், இன்னும் இது போன்ற பல்வேறு மறுமலர்ச்சிப் பணிகளில் ஈடுபடக் கூடியவர்களைக் கொண்டதாகவும் அந்த சமூகத் தொகுப்பு அமைந்திருக்க வேண்டும். கீழே நீங்கள் விரிவாகக் காணக் கூடிய அம்சங்கள் யாவும் மிகவும் முக்கியமானவை, நம்முடைய இல்லங்கள் பல்வேறு குறைபாடுகளைக் கொண்டவைகளாக இருக்கின்றன, அங்கு தீமைகளும் இன்னும் பொடுபோக்குத் தனங்களும், இவை யாவும் நம்மிடம் மிக முக்கியமான கேள்வி ஒன்றைக் கேட்கின்றன : நம்முடைய வீட்டினை இஸ்லாமிய மறுமலர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான வழிமுறைகள் என்ன? மேற்கண்ட கேள்விக்கான விடையைக் கீழ்க்காணும் பகுதிகள் உங்களுக்கு வழங்கவிருக்கின்றன. அதன் பயன்களை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்கட்டும், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய இல்லத்தை மறுசீரமைப்புச் செய்வதற்கு முயற்சி எடுத்துக் கொள்வதற்கு விரைவதற்கு அல்லாஹ் துணை நிற்கட்டும். கீழ்க்காணும் அறிவுரைகள் இருவிதமான நோக்கங்களைச் சுற்றியே வந்து கொண்டிருக்கும், ஒன்று நேர்மையானவற்றையும் இன்னும் நன்மையானவற்றையும் நிலைநிறுத்துவதும் இரண்டாவது, இன்னும் தீமைகளைத் தவிர்ப்பது, அந்தத் தீமைகள் உருவாகக் காரணமாகின்றவற்றையும் அல்லது நம்முடைய இல்லத்திற்குள் கொண்டு சேர்ப்பவற்றையும் .., இதுவே நம்முடைய நோக்கமுமாகும். அன்புள்ள சகோதர, சகோதரிகளே..! அஸ்ஸலாமு அலைக்கும்.. வரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு எல்லாப் புகழும் வல்ல இறையோனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும். சாந்தியும், சமாதானமும் சத்தியத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களது குடும்பத்தவர்கள், தோழர்கள், தோழியர்கள் மற்றும் அவரைப் பின்பற்றுகின்ற அனைவர் மீதும் உண்டாவதாக..! எல்லாப் புகழும் இறையோனுக்கே..! எமது இணையத்தில் வாசகர்களுக்கென சிறப்பு கட்டுரைகளை வழங்கி வந்திருக்கின்றோம். அந்த வகையில் சௌதி அரேபியாவின் மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவரான அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் முனஜ்ஜத் அவர்களின் - இஸ்லாமிய குடும்ப அமைப்பிற்கு 40 வழிமுறைகள் என்ற நூலை மொழிமாற்றம் செய்து தந்திருக்கின்றோம். எல்லாம் வல்ல அல்லாஹ் அதன் நன்மைகளை நம் அனைவருக்கும் தந்தருள்வானாக..! என்று பிரார்த்தித்துக் கொள்கின்றோம். இன்றைக்கு நம்முடைய சமூகத்தில் குடும்ப அமைப்பு சிதைந்து வருகின்றது. காரணம், நம் மீது புறச் சூழ்நிலைகள் அதிகம் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்து விட்டன. இஸ்லாமியச் சூழ்நிலைகளின் தாக்கம் நம் தமிழ் சமூகத்தில் மிகவும் குறைவு. அதன் காரணமாக இஸ்லாத்திற்கு முரணான பல்வேறு நிகழ்வுகளை நாம் அன்றாடம் செய்திப் பத்திரிக்கைகள் வாயிலாக கண்டு வருகின்றோம். வழி தவறுதல், விபச்சாரம், குடும்ப ஒழுக்கத்தில் கவனமின்மை, மது, போதை, தொலைக்காட்சிக் கலாச்சாரம், எஃப் எம் ரேடியோ கலாச்சாரம் என்று நாம் விரும்பியோ விரும்பாமலோ நம்மைச் சுற்றி இருக்கும் வேற்றுக் கலாச்சாரங்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதையும், இன்னும் அதிலிருந்து நம்மையும், நம்முடைய கொள்கையையும் எவ்வாறு பேணிக்காப்பது என்பதில் சிறு தடுமாற்றம் இருப்பதையும் நாம் காண முடிகின்றது. தொலைக்காட்சித் தொடரைப் பக்கத்து வீட்டில் பார்த்துக் கொண்டிருந்ததன் காரணமாக, சுன்னத் செய்து போடப்பட்டிருந்த குழந்தையின் மர்ம உறுப்பை கடித்துக் குதறிய பூனை, அதனால் குழந்தையின் மரணம், விளைவு கணவன்-மனைவி விவாகரத்தில் போய் நிற்கின்றது. பெண்கள் தங்களது ஹிஜாபைப் பேணாததன் காரணமாக மாற்றுமத ஆண்களின் வலையில் விழுந்து, திசைமாறிய பறவைகளான கதைகளை அன்றாடம் செய்திப் பத்திரிக்கைகள் தாங்கி வருகின்றன. இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? தனிமனிதர்களா? சமூகமா? அல்லது சமூகத்திற்கு வழிகாட்ட வேண்டிய தலைவர்களா? மார்க்க அறிஞர்களா? அல்லது இயக்க மாயையில் சகோதரத்தைத் தொலைத்து விட்டு சமூகத்திற்காகத் தான் பாடுபடுகின்றோம் என்று கூறும் இயக்கவாதிகளா? கேள்விக்கு விடை காண்பதறிது..! சமூகத்தில் ஆரோக்கியம் இருந்தால் தான் மார்க்கம் தலைக்க முடியும். முன்னுதாரணங்கள் யாவும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் முடிந்து விட்டதா?! அது தொடர வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம்..! அதற்கு இந்தத் தொடர் சிறந்த வழிகாட்டும் என்று நம்புகின்றோம்..! இறைவன் உங்களுக்குக் எங்களுக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன்..! உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..! இப்படிக்கு pettagum.blogspot.com ------------------------------------------------------------------------- குடும்பத்தார்களை உருவாக்குவது மனைவியைத் தேர்ந்தெடுத்தல் இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லா (ஆடவர், பெண்டி)ருக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லா) ஸாலிஹான உங்கள் (ஆண், பெண்) அடிமைகளுக்கும் விவாகம் செய்து வையுங்கள்; அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான்; மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். (24:32) குடும்பத்தலைவன் தனக்குரிய துணையை நேர்மையான மற்றும் பொறுத்தமான துணையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான வழிமுறைகளைக் கீழ்க்காணும் நபிமொழிகளில் இருந்து பெற்றுக் கொள்ளட்டும் : ''ஒரு பெண் நான்கு விஷயங்களுக்காக மணமுடிக்கப்படுகின்றாள் : அவளது செல்வத்திற்காக, குடும்பப் பாரம்பரியத்திற்காக, அவளது அழகிற்காக அல்லது அவளது மார்க்கத்திற்காக. (இவர்களில்) மார்க்கப் பற்றுள்ள பெண்ணையே தேர்ந்தெடுங்கள், அதன் மூலம் நீங்கள் வெற்றி பெறக் கூடும்.'' இந்த உலக வாழ்க்கை என்பது நிரந்தரமற்ற தற்காலிமான வசதிகள் தாம், இன்னும் இந்த உலக வாழ்க்கையின் மிகச் சிற்நத சந்தோஷமானது நல்ல மனைவி அமைவதாகும். (முஸ்லிம் 1468) உங்களில் ஒவ்வொருவரும் நன்றி செய்யக் கூடிய இதயத்தைப் பெற்றவராகி விடுங்கள், இறைவனைத் துதித்து நினைவு கூறக் கூடிய நாவினைப் பெற்றவர்களாகி விடுங்கள், இறைநம்பிக்கை கொண்ட மனைவியையும் பெற்றுக் கொள்ளுங்கள், அவள் அவனது மறுமைக்காக உதவக் கூடியவளாக இருப்பாள். (அஹ்மத் 5-282, அத் திர்மிதீ மற்றும் இப்னு மாஜா. ஸஹீஹ் அல் ஜாமிஃ 5231) இன்னுமொரு நபிமொழியில் : ஒரு நேர்மையான மனைவியானவள் (தனது கணவனுக்கு) இந்த உலக வாழ்க்கையிலும் இன்னும் ஆன்மீகத் துறையிலும் (உங்களுக்கு) உதவக் கூடியவளாக இருப்பாள், அத்தகையவளே ஒருவன் பெற்றுக் கொண்ட அருட்கொடையிலேயே மிகச் சிறந்த அருட்கொடையாகும். (பைஹகீ, ஸஹீஹ் அல் ஜாமிஃ 4285) அன்பும் இன்னும் செழிப்பான (அதிகம் பிள்ளை பெறக் கூடிய)வளையும் மணமுடியுங்கள், மறுமை நாளில் மற்ற நபிமார்களை (சமூகத்தை) விட என்னுடைய சமூகத்தவர்கள் (எண்ணிக்கையில்) அதிகம் இருக்கும் பெருமையைப் பெற விரும்புகின்றேன். (அஹ்மத், ஸஹீஹ் அல் இர்வா, 6-195). ''கன்னிப் பெண்களை மணமுடித்துக் கொள்ளும்படி நான் அறிவுரை கூறுகின்றேன், அவர்களது கர்ப்பங்கள் (புத்துணர்வு பெற்ற) புதியவை, அவர்களுடைய வாய் அதிக இனிமை கொண்டவை இன்னும் அவர்களிடம் (நல்லவைகள்) அதிகம் இருக்கும், (தீமைகள்) குறைவாக இருக்கும். இன்னுமொரு நபிமொழியில், ''வழிபிறழ்தல் (வழிகேடுகள், நேர்மையற்ற தன்மை) குறைவாகவே இருக்கும்'' (Reported by Ibn Maajah. Al-Silsilah al-Saheeh, 623). நல்ல மனைவி நான்கு விதங்களில் சந்தோஷத்தை அளிக்கக் கூடியவளாக இருப்பாள், கெட்ட மனைவியோ நான்கு விதங்களில் துன்பத்தை அளிக்கக் கூடியவளாக இருப்பாள், இந்த நபிமொழியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல : ''(அந்த நான்கு விதங்களில்) முதலாவது நல்ல மனைவியின் மூலம் பெறக் கூடிய சந்தோஷமானது என்னவென்றால், அவளை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களது உள்ளம் குளுமையடைய வேண்டும், நீங்கள் இல்லாத பொழுது, அவளைப் பற்றியும் உங்களது உடமைகள் குறித்தும் அவள் பாதுகாப்புடன் செயல்படுவாள் என்பது குறித்த உங்களது நம்பிக்கையைப் பெற்றவளாக அவள் இருக்க வேண்டும். கெட்ட மனைவியோ.. அவளை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களைத் துன்பத்திற்குள்ளாக்குவாள், கெட்ட வார்த்தையைக் கொண்டு திட்டுபவளாகவும், இன்னும் நீங்கள் இல்லாத பொழுது, அவள் குறித்தும் உங்களது உடமைகள் குறித்தும் உங்களது நம்பிக்கையைப் பெற்றவளாக அவள் இருக்க மாட்டாள்.'' இதைப் போலவே, முஸ்லிமான ஆண் தனக்குரிய துணையைத் தேடும் பொழுது, அவன் நல்ல இறையச்சமுள்ளவனாக இருக்கும்பட்சத்தில், அவனது கோரிக்கையை ஏற்று அவனுக்கு தனது மகளை மணமுடித்துக் கொடுக்க பெண்ணைப் பெற்றவர் சம்மதிக்க வேண்டும் என்பது கீழ்க்கண்ட விதிமுறைக்கு உட்பட்டது : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவனது மார்க்கமும், பண்பாடான ஒழுக்கமும் உங்களுக்கு பிடித்தமாக இருக்குமென்றால், பின் உங்களது மகளை (சகோதரி, இன்னும் பிற உறவுள்ள பெண்களை) அந்த மணமகனுக்கு மணமுடித்துக் கொடுங்கள், இல்லையென்றால் இந்தப் பூமியில் குழப்பமும் இன்னும் கெடுதிகளும் மிகைத்து விடும். மேற்கண்ட அனைத்து நோக்கங்களையும் அடைந்து கொள்வதற்கு, பல்வேறு வினாக்களினூடக, உண்மைகளை ஆய்வு செய்து அறிந்து கொள்தவன் மூலமாக, தகவல்களைச் சேகரிப்பதனூடாக இன்னும் பெற்றுக் கொண்ட தகவல்களைப் சரிபார்ப்பதனூடாக உங்களது இல்லங்களை மறுமலர்ச்சிமிக்கவைகளாக மிளிரச் செய்யுங்கள், இதன் மூலம் உங்களது இல்லம் சீரழிவு அல்லது விரிசல் விழாத இல்லமாக மாறி விடும். நல்ல கணவனும், இன்னும் நல்ல மனைவியும் இணைந்தால் தான் நல்ல குடும்பத்தை உருவாக்க முடியும், ஏனென்றால் (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது. ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது. (7:58) மனைவிக்கு நேர்வழி காட்டுங்கள் உங்களது மனைவி நேர்வழி பெற்ற இறையச்சமிக்க பெண்மணியாக இருந்து விட்டால், அதுவே நீங்கள் பெற்றிருக்கின்ற அருட்கொடைகளில் எல்லாம் சிறந்தது, இது அல்லாஹ்வின் அருட்கொடைகளில் ஒன்றாகும். அவள் நேர்வழி பெற்ற இறையச்சமிக்கவளாக இல்லாது போனால், பின்னர் அவளைத் திருத்தி நேர்வழியில்பால் வழிகாட்டுவது அவனது கணவன் மீதுள்ள கடமையாகும். கீழ்க்கண்ட வழிமுறையில் எதுவொன்றைப் பின்பற்றியும் அவளை நீங்கள் மணமுடித்திருக்கலாம். உதாரணமாக : ஒருவன் ஒரு பெண்ணை மணமுடித்துக் கொள்கின்றான், அவனோ மார்க்கத்தின் வாடையே அற்ற பெண்ணாக இருக்கின்றாள், ஏனென்றால் இவனும் கூட ஆரம்பத்தில் இஸ்லாமிய மார்க்கமே இல்லாத, அதனைப் பின்பற்றாதவனாகத் தான் இருந்தான், அல்லது அவளை எப்படியும் திருத்தி விடாலம் என்ற நல்லெண்ணத்தில் அடிப்படையில் அவளைத் திருமணம் முடித்து விட்டான் அல்லது உறவினர்களின் நிர்ப்பந்தத்தின் காரணமாக அவளை மணமுடித்துவிட்டான். இந்த நிலையில், அவளை நேர்வழிப்படுத்துவதும், இஸ்லாமிய மார்க்கத்தின்பால் ஆர்வம் ஏற்படச் செய்வதும் அவனுடைய பொறுப்பாகும். நேர்வழி என்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரக் கூடிய அருட்கொடை என்பதை ஒவ்வொருவரும் மனதில் இறுத்திக் கொள்ளல் வேண்டும், அவனே மனித மனங்களைப் புரட்டிப் போடக் கூடியவனாக, இஸ்லாமிய மறுமலர்ச்சியை மனங்களில் உருவாக்கக் கூடியவனாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அடியாரும், நபியுமான ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருந்த அருட்கொடைகளினல் ஒன்றைப் பற்றி திருமறையில் அல்லாஹ் இவ்வாறு விவரிக்கின்றான் : நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்காக அவருடைய மனைவியை (மலட்டுத் தனத்தை நீக்கி) சுகப்படுத்தி, அவருக்கு யஹ்யாவையும் அளித்தோம்; நிச்சயமாக இவர்கள் யாவரும் நன்மைகள் செய்வதில் விரைபவர்களாக இருந்தார்கள் - இன்னும், அவர்கள் நம்மை ஆசை கொண்டும், பயத்தோடும் பிரார்த்தித்தார்கள். மேலும், அவர்கள் நம்மிடம் உள்ளச்சம் கொண்டவர்களாக இருந்தார்கள். (21:90) சுகப்படுத்துவது, அல்லது நிவாரணத்தை வழங்குவது என்பது உள்ளத்து நோய்களுக்காகவோ அல்லது புற நோய்களுக்காகவோ அல்லது ஆன்மீக மறுமலர்ச்சிக்காகவோ இருக்கலாம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : முன்பு (ஸக்கரிய்யா (அலை) அவர்களின் மனைவி) மலடாக இருந்தார்கள், பின்னர் அவர்களது மலட்டுத் தனத்தை (அல்லாஹ்) போக்கி, குழந்தைப் பாக்கியத்தை வழங்கினான். அதாஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத மலடியாக அவர்கள் இருந்தார்கள், பின்னர் அவர்கள் குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுக் கொண்டார்கள். இன்னும் அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : நா வன்மையாகப் பேசுபவர்களாக இருந்தார்கள், இன்னும் அல்லாஹ் (ஸக்கரிய்யா (அலை) அவர்களது மனைவிக்கு) அதிலிருந்து சீர்திருத்தத்தையும் வழங்கினான். ஒரு தனது மனைவியை எந்த வழியிலாவது திருத்த முயற்சிக்க வேண்டும், அவர்களை நேர்வழிப்படுத்தவும் அல்லது இஸ்லாமிய மறுமலர்ச்சியை நோக்கி அவர்களைத் திருப்பவும் முனைய வேண்டும். உதாரணமாக : இபாதத் விஷயங்களில், தொழுகையின் அனைத்து அம்சங்களையும் முறையாகச் செய்கின்றாளா என்பது பற்றி சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும், இது பற்றி பின்பு விளக்கப்படும் இன்ஷா அல்லாஹ். வலுவிழந்த இறைநம்பிக்கையைப் புதுப்பிக்க வேண்டும், அதாவது இரவுத் தொழுகை (கியாமுல் லைல்) தொழுவதற்கு ஆர்வப்படுத்த வேண்டும், இன்னும் குர்ஆன் ஓதுவதற்கும் அதனை மனனமிடுவதற்கும் ஊக்கம் கொடுக்க வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த திக்ருகளை மனனமிடுவதற்கும், அதனை அந்தந்த நேரங்களில் சொல்வதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். தான தர்மங்களைச் செய்வதற்கும், பயனுள்ள இஸ்லாமிய நூல்களை வாசிப்பதற்கும் அவளுக்கு உதவிகரமாக இருங்கள். பயனுள்ள இஸ்லாமிய ஒலி, ஒளி நாடாக்களைப் பார்க்க கேட்கவும், அதன் மூலம் இஸ்லாமிய அறிவை அதிகப்படுத்திக் கொள்ளவும், இறைநம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ளவும் ஊக்கமளிக்க வேண்டும், இன்னும் அதற்காக தொடர்ந்து ஒலி, ஒளிப் பேழைகளை வழங்குதவற்கான சிரத்தையை கணவன் எடுத்துக் கொள்ள வேண்டும். அவளுக்காக இஸ்லாமிய மார்க்கத்தில் ஈடுபாடுள்ள பெண் நண்பர்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும், அத்தகைய பெண்களுடன் மார்க்கச் சகோதரிகளாக இன்னும் நல்ல பண்பாடான பேச்சுக்களையும், மார்க்கத்தைப் பற்றி கலந்துரையாடல்களை நடத்திக் கொள்ளக் கூடியவர்களாகவும், இன்னும் நல்ல பயன்மிக்க மார்க்க சந்திப்புகளை அவர்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொள்ளவும் உண்டான வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். இன்னும் அவளைத் தீமையானவற்றிலிருந்தும், பல்வேறு திசைகளிலிருந்து வரக் கூடிய தீமைகளிலிருந்து அவளைப் பாதுகாக்கவும், இன்னும் அத்தகைய சூழ்நிலைகளிலிருந்து விலகி இருக்க அவளைப் பயிற்றுவிப்பதோடு, கெட்ட சகவாசமுள்ள இடங்கள் மற்றும் நண்பிகளிடமிருந்தும் அவளை விலகி இருக்கப் பயிற்றுவிக்க வேண்டும். இல்லங்களை இறைநம்பிக்கை கொண்டு அலங்கரியுங்கள் இறைநினைவு கமழும் இல்லம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய இல்லங்கள் தான் விரும்பத்தகுந்த இல்லங்கள், அல்லாஹ்வை நினைவு கூறப்படாத இல்லங்கள், (இருளடைந்த) மண்ணறைக்குச் சமமானது.'' அனைத்து வழிகளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய இல்லங்களை இறைவனது விருப்பத்திற்குரிய இல்லங்களாக, அவனை நினைவுகூறக்கூடிய இடங்களாக மாற்றி அமைக்க வேண்டும், உள்ளத்தாலும், சொல்லாலும், தொழுகைகளின் மூலமாகவும் (விரும்பிச் செய்யக் கூடிய சுன்னத் மற்றும் நபிலான வணக்கங்கள்), திருமறையை ஓதுவதன் மூலமாகவும், இன்னும் இஸ்லாத்தைப் பற்றி கலந்தாலோசனை செய்யக் கூடிய தளமாகவும் அல்லது இன்னும் பல் வகையான இஸ்லாமிய நூல்களைப் புரட்டி வாசிக்கக் கூடிய தளமாகவும் அது திகழ வேண்டும். இன்றைக்கு நம்மில் எத்தனை இல்லங்கள் மண்ணறைக்குச் சமமாக இருக்கின்றன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும், ஏனென்றால், மேற்கண்ட நபிமொழியில் குறிப்பிட்டுள்ளவாறு அங்கே இறைவனை நினைவு கூறப்படுவதில்லை. இறைவனை நினைவு கூறப்பட வேண்டிய இஸ்லாமிய இல்லங்களில் மனித மனங்களில் அசிங்கமான அருவருக்கத்தக்க உணர்வுகளைத் தூண்டக் கூடிய சினிமாப் பாடல்களும், இன்னும் இஸ்லாமிய சமூக கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பதற்காகப் புறப்பட்டு வீறு கொண்டு நடைபோடுகின்ற தொலைக்காட்சித் தொடர்களும் ஆக்கிரமித்திருப்பதோடு, அங்கே வீணாண பேச்சுக்களும், ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேசுவதும், கேளி பேசிச் சிரிப்பதும், இன்னும் கேளிக் கூத்துக்களும் தானே அங்கே நடந்து கொண்டிருக்கின்றன? இதுவா இஸ்லாமிய இல்லம், இல்லை.. இல்லவே.. எங்கெல்லாம் ஷைத்தானிற்கு விருப்பத்திற்குரிய செயல்பாடுகள் நடைபெறுகின்றனவோ அங்கே ஷைத்தான்கள் தான் குடியிருக்க முடியும், அது மண்ணறையேயன்றி வேறென்னவாக இருக்க முடியும் என்பதை சகோதர, சகோதரிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்னும் மஹ்ரம்கள் திருமணம் முடிக்கத் தகுந்த உறவு முறை உள்ளவர்கள், இஸ்லாமிய வரையறைகளைப் பேணாது தாங்கள் விரும்பிய வீட்டிற்குள் ஹிஜாப் முறையைப் பேணாது அணுசரிக்காது நுழைவதும், தங்களது மறைக்க வேண்டிய பாகங்களை காட்டிக் கொள்வதும், இன்னும் இது போன்ற இஸ்லாம் தடுத்திருக்கின்றவைகளைச் செய்வதுமான இல்லமாக நம்முடைய இல்லங்கள் இருக்கலாமா? இத்தகைய வீடுகளில் மலக்குகள் எவ்வாறு நுழைவார்கள்? என்னருமைச் சகோதரர்களே.., உங்களது இல்லங்களை இனியாவது அல்லாஹ்வை நினைவு கூறக் கூடிய இல்லங்களாக மாற்றி அமைக்க முயற்சி செய்யுங்கள், அல்லாஹ் உங்கள் மீது அருட்கொடைகளைப் பொழிவான். இல்லங்களில் தொழுகைக்கான கிப்லா-வை அமையுங்கள் அதாவது உங்களது இல்லங்களை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக் கூடிய தளமாக மாற்றிக் கொள்ளுங்கள். இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : ஆகவே, மூஸாவுக்கும், அவருடைய சகோதரருக்கும்; ''நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள்; உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக (ஃகிப்லாவாக) ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் - மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக!'' என்று வஹீ அறிவித்தோம். (10:87) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''அவர்கள் தங்கள் இல்லங்களை வணக்க வழிபாடுகளை நிறைவேற்றக் கூடிய இல்லங்களாக மாற்றிக் கொள்ளும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டார்கள் (அதாவது பள்ளிவாசல்களாக).'' இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : ''அல்லாஹ் மிக அறிந்தவன் - அன்றைய நாளில் பிர்அவ்னிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்ததன் காரணமாக (வீடுகளை தொழுகைகளை நிறைவேற்றக் கூடிய தளமாக மாற்றி அமைக்க கட்டளை பிறப்பிக்கப்பட்டிக்கலாம்). இன்னும் அதிகமதிகம் தொழுகைகளில் ஈடுபடும்படியும் கட்டளை பிறப்பிக்கப்பட்டார்கள், இதனை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான் : நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான். (2:153) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நபிமொழியின் அடிப்படையில், ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் துன்பங்களை அல்லது அசம்பாவிதங்களைச் சந்திக்கும் பொழுது, அப்பொழுது தொழுது கொள்ளுவார்கள்.'' மேற்கண்ட வசனங்களும், நபிமொழிகளும் இல்லங்களில் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை நமக்கு விளக்குகின்றன, குறிப்பாக முஸ்லிம்கள் இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் தொழுகையை நிறைவேற்றிக் கொள்ள இயலாது என்ற சூழ்நிலை நிலவும் பொழுதும், முஸ்லிம்கள் பலவீனர்களாக இருக்கும் நிலையிலும் வீட்டில் தொழுது கொள்ள வேண்டும். இதற்கு மர்யம் (அலை) அவர்கள் வீட்டில் தனக்கென ஒரு பகுதியைத் தேர்ந்தெடுத்து (மிஹ்ராப்), அதனை தன்னுடைய வணக்கத் தளமாக மாற்றியமைத்துக் கொண்ட நிகழ்வினை அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு நமக்குச் சுட்டிக் காட்டுகின்றான் : ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார். (3:37) நபித்தோழர்கள் தங்களது இல்லங்களில் தொழுகையை நிறைவேற்றுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தார்கள் - கடமையான தொழுகைகளைத் தவிர்த்து (ஆண்களைப் பொறுத்தவரை இதனை கூட்டாகவே நிறைவேற்ற வேண்டியது கட்டாயமாகும்) - என்பதை கீழ்க்கண்ட சம்பவத்தின் மூலம் நாம் தெளிவு பெற்றுக் கொள்ளலாம். மஹ்மூத் இப்னு அல் ரபீஈ அல் அன்ஸாரி (ரலி) என்ற நபித்தோழர் கூறுவதாவது, உத்பா இப்னு மாலிக் (ரலி) - இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரும், அன்ஸாரிகளில் ஒருவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்டவருமாவார், இவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ''நான் என்னுடைய பார்வையை இழந்து விட்டேன், நானே என்னுடைய மக்களுக்கு தொழுகையை (இமாமாக) முன்னின்று நடத்துகின்றேன். மழை பெய்யும் பொழுது, எனக்கும் அவர்களுக்குமிடையே உள்ள ஓடையில் தண்ணீர் நிரம்பி ஓடுகின்றது, (அப்பொழுது) பள்ளிவாசலை அடைந்து அவர்களுக்குத் தொழ வைக்க இயலவில்லை. இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! என்னுடைய வீட்டிற்கு நீங்கள் வந்து அங்கு தொழ வேண்டும் என்பதை விரும்புகின்றேன், அதன் மூலம் (நீங்கள் நின்று தொழுத) அந்த இடத்தை நான் தொழக் கூடிய இடமாக ஆக்கிக் கொள்வேன்.'' (அதற்கு) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இறைவன் நாடினால், அவ்வாறு நான் செய்வேன்'' என்று கூறினார்கள். உத்பா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ''மறுநாள் காலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அபுபக்கர் (ரலி) அவர்களும் (என்னுடைய இல்லத்திற்கு) வந்தார்கள். என்னுடைய வீட்டில் நுழைவதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி கோரினார்கள், நான் அனுமதி வழங்கினேன். வீட்டில் நுழைந்து அவர்கள் உட்காரவில்லை, ''உங்களது வீட்டில் எந்த இடத்தில் நான் தொழ வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்? என்று கேட்டார்கள். எனது வீட்டின் ஒரு மூலையை அவர்களுக்குச் சுட்டிக் காட்டினேன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த இடத்தில் நின்று தக்பீர் (அல்லாஹுஅக்பர்) கூறினார்கள், அவர்களுக்குப் பின்னால் நாங்கள் நின்றோம், இரண்டு ரக்அத் தொழுதார்கள், பின்பு தொழுகையின் இறுதியில் ஸலாம் கூறினார்கள். (புகாரீ, அல் ஃபத்ஹ், 1-519) வீட்டிலுள்ளோருக்கு ஆன்மீகப் பயிற்சி ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரவில் இரவுத் தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்தார்கள், இன்னும் அவர்கள் தொழ ஆரம்பிக்கும் பொழுது, ஓ..! ஆயிஷாவே எழுந்து வித்ருத் தொழுங்கள் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம், முஸ்லிம் பி ஷர்ஹ் அல் நவவி, 6-23). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவில் எழுந்து தொழக் கூடியவனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக, அவன் எழுந்து (விட்ட பின்) அவனது மனைவியையும் எழுப்பி, இன்னும் அவள் (எழுந்திருக்க) மறுத்து விடுவாளென்றால் அவளது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கட்டும்.''. (அஹ்மத், அபூதாவூத், ஸஹீஹ் அல் ஜாமிஃ, 3488). இன்னும் வீட்டிலுள்ளோரை தானம் தர்மம் செய்யத் தூண்டுவது அவர்களது இறைநம்பிக்கையை அதிகரிக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியிருக்கின்றார்கள், அவர்கள், ஓ பெண்களே..! தான தர்மம் வழங்குங்கள், நரகத்தில் உள்ளவர்களில் நீங்கள் தான் அதிகமாக இருக்கின்றீர்கள் என்பதைப் பார்த்திருக்கின்றேன். (புகாரீ, அல் ஃபத்ஹ், 1-405) ஒன்று செய்யுங்கள்.., உங்களது வீட்டில் ஏழை எளியவர்களுக்கென தான தர்மம் வழங்குவதெற்கென ஒரு உண்டியலைத் தயார் செய்து கொள்ளுங்கள். வீட்டிலுள்ளோருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் கிடைக்கக் கூடிய தொகையில் ஒரு பகுதியை அதில் சிறிதளவை போட்டு வரும்படி ஆர்வமூட்டுங்கள். இன்னும் அதில் நீங்கள் போட்டிருப்பவைகள் யாவும் ஏழைகளுக்குச் சொந்தமானது என தீர்மானம் செய்து கொள்ளுங்கள், ஏனென்றால், அந்த உண்டியல் ஒவ்வொரு முஸ்லிமின் வீட்டிலும் இருக்க வேண்டிய ஏழையின் பாத்திரமாகும், (ஏழைக்குச் சொந்தமானதாகும்). இன்னும் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படக் கூடிய அய்யாமுல் ஃபீழ் நாட்களில், அதாவது பிறை 13, 14, 15 ஆகிய நாட்களில், திங்கள், வியாழன் ஆகிய நாட்களில், ஆஷுரா (முஹர்ரம் 9 மற்றும் 10) அரஃபா நாள் நோன்பு மற்றும் முஹர்ரம், ஷஃபான் மாதங்களில் முடிந்தளவு அதிக நாட்களை சுன்னத்தான மற்றும் நபிலான நோன்புகளை நோற்பதற்கு உங்களது வீட்டினரை ஆர்வப்படுத்துங்கள். வீட்டில் திக்ர் மற்றும் துஆக்களை ஓத ஆர்வமூட்டுதல் வீட்டில் நுழையும் பொழுது ஓத வேண்டிய துஆ : முஸ்லிம் ல் ஸஹீஹ் என்ற தரத்தில் பதிவாகி இருக்கின்றதொரு நபிமொழியில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள் : உங்களில் ஒருவர் வீட்டில் நுழையும் பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நுழையட்டும், உண்ணும் பொழுதும் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு உண்ணட்டும், (அப்பொழுது) ஷைத்தான் கூறுவான் : 'இந்த இடத்தில் நீ தங்குவதற்கு இடமில்லை, உண்பதற்கும் எதுவுமில்லை.' வீட்டில் நுழையும் பொழுது அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு நுழையவில்லையென்றால், (ஷைத்தான்) கூறுவான், 'நீ தங்குவதற்கு இடம் கிடைத்து விட்டது'. உண்ணும் பொழுதும் அல்லாஹ்வின் பெயரைக் கூறவில்லையென்றால் (ஷைத்தான்) கூறுவான், 'நீ தங்குவதற்கு இடமும் கிடைத்து விட்டது, உண்பதற்கும் உணவு கிடைத்து விட்டது.'' (இமாம் அஹ்மத், அல் முஸ்னத் 3-346, முஸ்லிம் 3-1599). அபூதாவூத் தனது சுனனில் பதிவு செய்திருக்கின்றதொரு நபிமொழியில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவர் தன்னுடைய இல்லத்தை விட்டு வெளியேறும் பொழுது இவ்வாறு கூறிக் கொள்ளட்டும், 'பிஸ்மில்லாஹி, தவக்கல்து அல்லல்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' (அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு (ஆரம்பிக்கின்றேன்), என்னுடை அலுவல்களை அவனிடமே ஒப்படைத்து விட்டேன், அல்லாஹ்வின் உதவியையன்றி வேறு உதவி இல்லை, அவனுடைய சக்தியன்றி வேறு சக்தி இல்லை), அவ்வாறு கூறக் கூடியவனுக்கு, அது பாதுகாப்பை வழங்கக் கூடியதாகவும், வழிகாட்டக் கூடியதாகவும், தேவையின் பொருட்டு பாதுகாப்பு வழங்கக்க கூடியதாகவும் இருக்கும். ஷைத்தான் அவனை விட்டும் தூரமாகவே இருப்பான், இந்த ஷைத்தானிடம் இன்னொரு ஷைத்தான் வந்து, ''வழிகாட்டப்பட்ட, (அருட்கொடைகளை) பெற்றுக் கொண்ட, மற்றும் பாதுகாக்கப்பட்டவனிடம் உனக்கு என்ன வேலை இருக்கின்றது? என்று கூறுவான்.'' (அபூதாவூத், மற்றும் திர்மிதீ, ஸஹீஹ் அல் ஜாமிஃ, எண்.499). சிவாக் (பற்குச்சி கொண்டு பல்துலக்குதல்) இமாம் முஸ்லிம் தனது ஸஹீஹ் முஸ்லிம் ல் ஆயிஷா (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டதொரு நபிமொழியில் கூறுவதாவது : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டில் நுழைந்து விட்டால், முதல் வேலையாக அவர்கள் மிஸ்வாக் கொண்டு தனது பல்லைத் தேய்த்துக் கொள்வார்கள். (முஸ்லிம், கிதாப் அத் தஹாரா, பாகம் 15, ஹதீஸ் எண்.44). தினந்தோறும் சூரா அல் பகரா ஓதப்படும் வீட்டில் இருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுவான். இது குறித்து ஏராளமான நபிமொழிகள் இருக்கின்றன, அவையாவன : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களது வீடுகளை மண்ணறையாக்கிக் கொள்ளாதீர்கள். சூரா அல் பகரா ஓதப்படும் வீட்டில் இருந்து ஷைத்தான் விரண்டோடி விடுகின்றான். (முஸ்லிம், 1-539) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களது வீடுகளில் சூரா அல் பகரா - வை ஓதுங்கள், சூரா அல் பகரா ஓதப்படும் வீட்டில் ஷைத்தான் நுழைய மாட்டான். (அல் ஹாகிம் - முஸ்தத்ரக் 1-561: ஸஹீஹ் அல் ஜாமிஇ, 1170) இன்னும் சூரா அல் பகரா வின் கடைசி இரண்டு ஆயத்துக்களை ஓதி வருவதன் சிறப்புக்கள் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ''அல்லாஹ் இந்த வானம் மற்றும் பூமி ஆகியவற்றைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் ஒன்றை எழுதினான், அவனது அர்ஷுக்கு அருகில் அதனை வைத்திருந்தான், இன்னும் அதிலிருந்து இரண்டு வசனங்களை எடுத்து சூரா அல் பகராவினை நிறைவு செய்தான். அதனை மூன்று இரவுகள் தொடர்ந்து ஓதி வந்தால், அந்த வீட்டினை ஷைத்தான் நெருங்க மாட்டான். (இமாம் அஹ்மத் அல் முஸ்னத், 4-274, மற்றும் பலர். ஸஹீஹ் அல் ஜாமிஇ, 1799). இல்லத்தில் இஸ்லாமியக் கல்வி குடும்பத்தாருக்கு இஸ்லாமிய அறிவூட்டல் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடிய நல்லடியார்களாக தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களை உருவாக்க விளைவது குடும்பத் தலைவர்களது கடமையாகும், இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு தெளிவாக்குகின்றான் : முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும் (66:6) தனது குடும்ப அங்கத்தவர்களை நன்மையின் பால் அழைத்து, தீமைகளிலிருந்து விலகி இருக்கச் செய்து, அவர்களை இஸ்லாமிய நிழலின் கீழ் வளர்த்தெடுப்பதற்கான கடமைகள் அதன் குடும்பத் தலைவருக்குரிய தலையாய கடமை என்பதை மேல்காணும் வசனம் மூலம் இறைவன் தெளிவாக்குகின்றான். மேற்கண்ட வசனத்திற்கு சில இஸ்லாமியப் பெருந்தகைகள் கூறி இருக்கின்ற விளக்கங்கள், குடும்பத் தலைவன் மீது எத்தகைய பொறுப்புக்களை இறைவன் சுமத்தியுள்ளான் என்பது விளங்கும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி கட்டளை இட வேண்டும், அவனுக்கு வழிபட மறுப்பதனின்றும் அவர்களைத் தடுக்கவேண்டும், அல்லாஹ்வின் ஏவல்களின் அடிப்படையில் அவர்களை வழி நடத்த வேண்டும் இன்னும் அவற்றை ஏற்றுப் பின்பற்றுவதற்காக அவர்களுக்கு உதவவும் வேண்டும். அத்தஹாக் மற்றும் முகாதில் (ரஹ்-அலை) ஆகியோர்கள் கூறுவதாவது : தனது குடும்பத்தவர்களுக்கு அறிவூட்டுவது ஒரு முஸ்லிமின் மீதுள்ள கடமையாகும், இன்னும் சொந்தபந்தங்களுக்கும், பெண்ணடிமைகளுக்கும், அல்லாஹ் அவர்களுக்கு ஏவிய நன்மையானவற்றின் மீதும், இன்னும் அவன் அவர்கள் மீது விலக்கியவற்றின் மீதும், அதனைப் பின்பற்றி நடக்குமாறு அவர்களை அறிவுறுத்த வேண்டும். அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் : (உங்கள் குடும்பத்தவர்களுக்கு) அறிவூட்டுங்கள், இன்னும் ஒழுக்கத்தை பேணச் செய்யுங்கள்.'' அத்தபரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நம்முடைய குழந்தைகளுக்கு மார்க்கத்தைப் பற்றியும், இன்னும் நன்மையானவற்றைப் பற்றியும் அறிவூட்டுவது கடமையாகும், இன்னும் அவர்களுக்குத் தேவையான நல்ல பண்பாடுகளையும் கூட அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இறைத்தூதர் (ஸல்)அவர்கள் பெண்ணடிமைகளுக்கும் கூட கல்வி அறிவூட்டும்படி அறிவுறுத்தி இருக்கின்றார்கள் என்று சொன்னால், சுதந்திரமானவர்களான உங்களது குழந்தைகள் மற்றும் மனைவிகளின் நிலைமைகள் என்ன? என்பதைச் சற்றுச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் புகாரீயில் : அத்தியாயம் : தனது பெண்ணடிமைக்கும் மற்றும் மனைவிக்கும் கல்வி கற்பிப்பது என்ற அத்தியாயத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபிமொழியைப் பதிவு செய்திருக்கின்றார்கள் : மூன்று விஷயங்களை எவர் நடைமுறைப்படுத்துகின்றாரோ அவருக்கு இரண்டு நன்மைகள் (கிடைக்கும்) : .. ஒரு மனிதனுக்கு பெண்ணடிமை ஒருத்தி இருந்து, அவளுக்கு அவன் நற்பண்புகளைப் போதித்து, அதனை நல்ல முறையில் போதித்து, இன்னும் அவளுக்கு கல்வியறிவூட்டி, இன்னும் அதனை நல்ல முறையில் போதித்து, பின்னர் அவளை சுதந்திரமாக விடுவித்து, பின்னர் அவளை திருமணம் செய்து கொள்கின்றாரோ, அத்தகையவர் இரண்டு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார். இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் பற்றிக் கூறுவதாவது : ''மேற்கண்ட நபிமொழி குறிப்பாக பெண்ணடிமையைப் பற்றித் தான் பேசுகின்றது, இன்னும் அது குறிப்பால் உவமையாக மனைவியையும் சுட்டிக் காட்டுகின்றது. அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் சுதந்திரமான தன்னுடைய மனைவிக்குப் போதிப்பது என்பது ஒரு அடிமைக்குப் போதிப்பதைக் காட்டிலும் முக்கியத்துவம் மிகுந்தது என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழி நமக்கு விளக்குகின்றது. ஒரு ஆண் அவனுக்கு இருக்கின்ற அலுவல்கள், பணிகள் மற்றும் மற்ற தேவைகளுக்கிடையே, தனது மனைவிக்கு இஸ்லாமியக் கல்வியறிவூட்டுவதனைப் பற்றி மறந்தவனாக அசிரத்தையுடையவனாக ஆகி விடுகின்றான். இதற்குச் சரியான பரிகாரம் என்னவென்றால், உங்களது குடும்பத்தார்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள், இன்னும் பிற சொந்த பந்தங்களுக்காகவும், இன்னும் வீட்டில் இதற்காகவென பயிற்சிப் பட்டறையையும் உருவாக்குங்கள். பயிற்சிப் பட்டறை கூடுவதற்கான நேரத்தையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள், தீர்மானிக்கப்பட்ட அந்த நேரத்தில் தவறாது அனைவரும் வந்து ஆஜராகும்படிச் செய்யுங்கள், இது அவர்கள் மீது நிரந்தரமான தவிர்க்க இயலாத செயல்முறையாகவே அவர்களது வாழ்நாளில் பதிந்துவிடும். இவ்வாறானதொரு வழிமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் நிகழ்ந்துள்ளது. அல் புகாரீ (ரஹ்) அவாகள் கூறுவதாவது : கல்யறிவைத் பெற்றுக் கொள்வதற்கென தனியானதொரு நாளை பெண்களுக்கு ஒதுக்க முடியுமா? என்றதொரு அத்தியாத்தில் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுவதாவது : இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பெண்கள் கூறினார்கள் : ஆண்களது கூட்டம் எப்பொழுதும் உங்களைச் சுற்றி இருப்பதால், உங்களை நெருங்க எங்களால் இயலாது போய் விடகின்றது, எனவே எங்களுக்கென ஒரு ஒதுக்குங்கள், அன்றைய தினத்தில் நாங்கள் உங்களிடம் வந்து (மார்க்க விஷயங்களைப்) பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இதன் பொறுட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் பெண்களைச் சந்திக்க ஆரம்பித்தார்கள், அவர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள். இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : இதைப் போன்றதொரு நபிமொழியை ஸஹ்ல் இப்னு அபீ ஸாலிஹ் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''இன்ன இன்ன நபரின் வீட்டில் உங்களை (மார்க்க விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக) நியமனம் செய்திருக்கின்றேன்', (அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நபர்) அவர்களிடம் வந்தார், இன்னும் அவர்களிடம் (மார்க்க விஷயங்கள் பற்றிப்) பேசினார்.'' இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் பெண்கள் வீட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு மார்க்க விஷயங்கள் பற்றி அறிவை ஊட்ட வேண்டும் என்பதே, இன்னும் நபித்தோழியர்கள் இஸ்லாமிய மார்க்க விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வதில் எந்தளவு அக்கறை உள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. அறிவைப் பெற்றுக் கொள்வதனை ஆண்களுக்கும் மட்டும் தான் என்றால், பெண்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால், அது மிகவும் படுபாதகமான விளைவுகளையும் உண்டாக்கி விடும். தாய் தான் குழந்தையின் முதல் பள்ளிக் கூடம். அத்தகைய தாயானவள் கல்வி கற்காதவளாகவும், இஸ்லாத்தைப் பற்றி அறிவில்லாதவளாகவும் இருப்பாளென்றால், அவள் தன்னுடைய குழந்தைக்கும் இன்னும் தன்னுடைய உறவினர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வது எவ்வாறு?! சரி.., நம்முடைய குடும்பத்தவர்களுக்கு இஸ்லாமிய அறிவை ஊட்டுவதற்கென ஒரு நாளைத் தீர்மானித்து, அந்த நாளில் அவர்களை ஒன்று கூட வைத்து - அந்த ஒன்று கூடலின் பொழுது அவர்களுக்கு மார்க்கத்தை எந்த அடிப்படையில் விளக்குவது? எங்கிருந்து ஆரம்பம் செய்வது? என்று நீங்கள் கேட்கலாம். பொதுவாக, மிகவும் இலகுவான நிகழ்ச்சிகளை ஆரம்பித்தில் நடத்துங்கள், குறிப்பாக பெண்களுக்கு கீழ்க்காணும் நூல்களினைக் கற்றுக் கொடுப்பதில் ஆரம்பிப்பது பயனளிக்கும் : குர்ஆன் விளக்கவுரைகள் - தப்ஸீர் அல்லமா இப்னு ஸஅதி அவர்களின் தைசீர் அல் கரீம் அர் ரஹ்மானி ஃபி தப்ஸீர் கலாம் அல் மன்னான்'' இது ஏழு பாகங்களைக் கொண்டதும், மிக இலகுவானதுமாகும், இதனை வாசித்து, அதிலிருந்து சிலவற்றை அவர்களுக்கு விளக்கலாம். (தமிழில் - அபுல் அஃலா மௌதூதி (ரஹ்) அவர்களின் குர்ஆன் விளக்கவுரை கிடைக்கிறது, இதனை இஸ்லாமிய கல்வி நிறுவனம் ட்ரஸ்ட் வெளியிடுகின்றார்கள்) ரியாழ் அஸ் ஸாலிஹீன் - இதில் நபிமொழிகளும், அதற்கான அடிக்குறிப்புகளும், அதிலிருந்து பாடம் பெற்றுக் கொள்ள முடியும். இன்னும் நுஸ்கத் அல் முத்தகீன் என்ற நூலையும் வாசிப்பது நல்லது. குறிப்பாக பெண்களுக்கு ஃபிக்ஹு சம்பந்தமான நூல்களைப் போதிப்பது நல்லது, அதாவது சுத்தம் பற்றிய சட்டங்கள் (தஹாரா) இன்னும் மாதவிடாய் மற்றும் பிரசவத்தீட்டு பற்றிய சட்டங்கள், தொழுகை, ஜகாத், நோன்பு, மற்றும் ஹஜ் (அதற்காக சக்தி பெற்றிருப்பின்) சம்பந்தமான ஃபிக்ஹு சட்டங்களைக் கற்றுக் கொடுப்பது சிறந்தது. உணவு மற்றும் குடிப்பு சம்பந்தமான சட்டங்களையும், ஆடை மற்றும் அலங்காரங்கள், இயற்கைச் சட்டங்கள் (சுனன் அல் ஃபித்ரா), மஹ்ரமானவர்கள் குறித்த சட்டங்கள் (மஹ்ரமான உறவினர்கள் மற்றும் உறவினரல்லாதவர்கள்), பாடல்கள் சம்பந்தமான சட்டங்கள், புகைப்படம் குறித்த சட்டங்கள், இன்னும் இது போன்றவைகள் குறித்து அவர்களுக்கு விளக்குவது நல்லது. இன்னும் அடிப்படைத் தகவல்களில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்கள் (சட்டங்கள் அல்லது தவிர்க்கப்பட வேண்டியவைகள்), அதாவது ஷேக் அப்துல் அஜீஸ் பின் பாஸ் (ரஹ்) மற்றும் ஷேக் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) மற்றும் பல மார்க்க அறிஞர்களின் ஃபத்வாக்கள் நூல்களாக இருந்தாலும் சரி அல்லது உரைகளாக ஒலி, ஒளி நாடாக்களாக இருந்தாலும் சரி அவற்றின் தொகுப்பினை பார்வையிடுவது சிறந்தது. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக நீங்கள் தயாரிக்கவிருக்கும் உங்களது பாடத் திட்டத்தில் நம்பிக்கையுள்ள மார்க்க அறிஞர்களின் வகுப்புகள் அல்லது பொதுமக்களுக்காக ஆற்றிய உரைகள், இன்னும் அது மாதிரியான உரைகளின் பொழுது மார்க்கத்தை அறிந்து கொள்ளும் பொறுட்டு கேட்கப்படும் கேள்விகள் ஆகியவற்றின் சேகரிப்புகளை வைத்திருப்பது, மார்க்கத்தில் பல்வேறு வகையான பயிற்சிகளைத் தன்னகத்தே அது கொண்டதாக இருக்கும். இன்னும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகள் மற்றும் கேபிள் ஆபரேட்டர் மூலமாக ஒலி-ஒளி பரப்பப்படும் இஸ்லாமிய நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும், இன்னும் இஸ்லாமிய புத்தக நிலையங்கள், மற்றும் புத்தகக் கண்காட்சிகளுக்கு வீட்டிலுள்ளோரை அழைத்துச் சென்று பார்வையிட வைக்கலாம். (முறையான பேணுதலான ஹிஜாப் உடையுடன்) இஸ்லாமிய 'நூலகம்' உருவாக்குதல் இஸ்லாமிய மார்க்கத்தைப் பற்றியும், அதன் சட்டங்கள் பற்றியும் எளிதாக அறிந்து கொள்வதற்கு உங்கள் குடும்பத்தவர்களுக்கு உங்களது வீட்டில் அமைக்கப்படும் நூலகம் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அது மிகப் பெரியதாக இருக்க வேண்டும் என்பது ஒன்று அவசியமில்லை, அதற்காக நல்ல புத்தகங்களைத் தேர்ந்தெடுப்பது, அவற்றை மிக எளிதாகக் கையாளக் கூடிய வகையில் அமைப்பது, இன்னும் குடும்பத்தவர்களை அதிகம் படிப்பதற்கு ஊக்குவிப்பது. நூலகத்தை சுத்தமாகவும், உங்களது முக்கிய ஹால் பகுதியின் மூலையில் நல்ல ஒழுங்கமைப்புடன் அமைக்கலாம், இன்னும் படுக்கை அறை அல்லது விருந்தினர் அறை, ஆகியவற்றில் நூலகத்திற்கென ஒரு பகுதியை ஒதுக்கி வைப்பதன் மூலம், மிக எளிதாக அவற்றை எடுத்து குடும்பத்தவர்கள் பயன்படுத்தும் வசதியையும் ஏற்படுத்தினால், அதன் மூலம் குடும்பத்தவர்கள் தொடர்ந்து வாசிப்புப் பழக்கத்தை மேற்கொண்டு பயன்பெற வசதி செய்யலாம். உங்களது நூலகம் நல்ல முறையில் செயல்படுவதற்கு - இன்னும் சீராகவும் அழகாகவும் செய்யப்படுவதனை அல்லாஹ் விரும்புகின்றான் ஆதலால் - உங்களது நூலகத்தில் அந்த நூலகத்தில் உள்ள நூல்கள் பற்றி குறிப்பேடுகளைப் பேணுவதன் மூலம் உங்களது குடும்பத்தவர்கள் ஆய்வு செய்வதற்கும், குழந்தைகள் அதன் மூலம் தங்களது வாசிப்புக்குத் தேவையானவற்றைத் தேர்வு செய்வதற்கும் வசதி ஏற்படும். இன்னும் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும் இன்னும் பெண்களுக்கும் என பல்வேறு தரத்தினர் பயன்படுத்துவதற்கு ஏதுவான நூல்களைத் தேர்வு செய்து அதனை ஒழுங்குபடுத்தி அமைக்க வேண்டும். இன்னும் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு அன்பளிப்புச் செய்வதற்காகவென சில நூல்களையும், நண்பர்களின் குழந்தைகளுக்கும்,இன்னும் வீட்டிற்கு வருகை தரக் கூடியவர்களுக்கும், அவர்களது மனதைக் கவரும் வகையில் அச்சிடப்பட்ட, தொகுக்கப்பட்ட, பொருள் அட்டவணையிடப்பட்ட தரமான நூல்களை வாங்கி தயாராக வைத்திருப்பதோடு, அவர்களின் வருகையின் பொழுது சமயோசிதமான முறையில் நாகரீகமான முறையில் அவர்களுக்கு அன்பளிப்புச் செய்திட வேண்டும். இன்னும் இது போன்ற நூலகங்களை அமைப்பதற்கு அவர்களை ஊக்கப்படுத்துவதோடு, முஸ்லிம் குடும்பங்களில் இஸ்லாமிய நூல்களை அமைப்பது எப்படி என்பது குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளைக் கூட குடும்ப சந்திப்புகளின் போது விளக்கலாம். இதற்காக இந்தத் துறையில் அனுபவமிக்கவர்களின் துணையையும் நீங்கள் நாடலாம். இன்னும் உங்களது நூலகத்தில் இருக்கும் நூல்களையும் அதனதன் தரத்தின்படி அடுக்கும் கலையையும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் நீங்கள் செய்யலாம். அதாவது, திருமறைக் குர்ஆன் மற்றும் அதன் விளக்க உரைகள் ஒரு தட்டிலும், நபிமொழிகள் இன்னொரு தட்டிலும், ஃபிக்ஹு சம்பந்தமான நூல்களை இன்னொரு தட்டிலும், இப்படி அந்தந்த தலைப்புகளின் வாரியாக அடுக்கலாம், இவ்வாறு அடுக்கி வைப்பது உங்களது குடும்ப உறுப்பினர்கள் பயன்பாட்டுக்கு மிக எளிதாக இருக்கும். இன்னும் வரிசைக்கிரமமாக அகர வரிசைப்படியும் நூல்களை அடுக்கி வைப்பதும் பயன்தரக்கதாக அமையும். இப்பொழுது நீங்கள் உங்களது இல்லத்தில் சொந்தமாக நூலகம் அமைக்க விரும்புகின்றீர்கள். அதற்காக என்னென்ன நூல்களைத் தேர்வு செய்து வாங்குவது என்ற குழப்பம் தானே. இதோ சில நூல்களை நாங்கள் உங்களுக்குப் பரிந்துரைக்கின்றோம். நூல்களின் வரிசை குர்ஆன் (ஜான் ட்ரஸ்ட், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட் வெளியீடுகள்) தப்ஸீர் - இப்னு கதீர் தப்ஸீர் - அல்குர்ஆனின் நிழலில் (செய்யது குதுப்) ஹதீஸ் தொகுப்புகள் - புலுகுல் மரம் (அப்துல் காதிர் உமரி) ரியாழுஸ் ஸாலஹீன் பிஃக்ஹு தமிழ்இஸ்லாம்.காம் - பார்க்க ஏனைய நூல்கள் : அகீதா - முஹம்மது ஸமீல் ஸைனூ ரமளான் மஜ்லிஸ் - (ஸாலிஹ் அல் உதைமீன்) ஹஜ் வழிகாட்டி இஸ்லாமிய ஒழுக்க மாண்புகள் (முஹம்மது கஸ்ஸாலி) தஜ்வீது வரலாறு (தமிழ் இஸ்லாம்.காம்) நபி (ஸல்) - ஹாமிது அப்துல் ஹை மற்றும் முபாரக் பூரி நபித்தோழர்கள் (தமிழ்இஸ்லாம்.காம்) நபித் தோழியர்கள் வரலாறு (தமிழ்இஸ்லாம்.காம்) கதைப் புத்தகங்கள் (சிறுவர்களுக்கு) கதைக்குள் கதை, இஸ்லாமிய வரலாறு மாற்றுமத சகோதரர்களுக்கு கொடுப்பதற்குப் பரிந்துரைக்கப்படும் நூல்கள் இஸ்லாம் உங்கள் இதயத்துடன் பேசுகிறது இந்து வேதங்களில் இஸ்லாம் நான் காதலிக்கும் இஸ்லாம் (அடியார்) நபிகள் நாயகம் பற்றி பைபிள் என்ன கூறுகிறது (அஹ்மத் திதாத்) இஸ்லாம் உங்கள் பார்வைக்கு (ஹம்முதா அப்துல்லத்தீ) இது தான் இஸ்லாம் (மௌதூதி) இஸ்லாமா, கிறிஸ்தவமா? ஹிந்துக்களே விழுமின் எழுமின் இஸ்லாத்தைத் தெரிந்து கொள்ளுங்கள் இது தான் பைபிள் (பி.ஜே) இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (பி.ஜே) இந்து கிறிஸ்தவ முஸ்லிம் உரையாடல் - அபூ ஆஸியா இந்து வேதங்களில் இஸ்லாம் நபிகள் நாயகம் (டாக்டர். ராமகிருஷ்ண ராவ்) பூரண விடுதலை பெற இஸ்லம் (டாக்டர். சேப்பன்) தித்தித்திப்பான திருப்பு முனைகள் (டாக்டர். ஜவாஹிருல்லாஹ்) நாம் இங்கே சில நூல்களைத் தான் உங்களுக்கு பரிந்துரை செய்திருக்கின்றோம். இன்னும் ஏராளமான நூல்கள் இருக்கின்றன. பல்வேறு வெளியீட்டாளர்களின் புத்தக வெளியீட்டு வரிசைப் பட்டியலைக் கேட்டுப் பெற்று தரமான நூல்களை நீங்கள் வாங்குவதற்கு முயற்சி செய்யவும். இது குறித்து நம்பிக்கையுள்ள மார்க்க அறிஞர்களின் உதவியையும் நாடலாம். எவரொருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடி விட்டானோ, அவன் அவனுடைய மார்க்கத்தினை அறிந்து கொள்வதற்கு அதன் வழிகளை எளிதாக்குவான். குறிப்பு : நமது இணையத்தளத்திலும் ஏராளமான நூல்கள் உள்ளன. அவற்றையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவற்றை வாசித்து பின்னர் அவற்றில் வெளியிடப்பட்ட நூல்களை விலைக்கு வாங்கியும் மற்றும் வெளியிடப்படாத நூல்களை பிரிண்ட் (அ) டவுன்லோட் செய்தும் நூலகத்தில் வைத்திருப்பது, நமது அவசரத் தேவைகளுக்கு உதவக் கூடியதாக இருக்கும். இன்னும் உறவினர், நண்பர்கள், மாற்றுமத நண்பர்களின் வருகையின் பொழுது பரிசாக வழங்குவதற்கும் அது ஏற்றதாக இருக்கும். வீட்டில் ஒலி-ஒளிப் பேழை சேகரிப்பு உங்களது இல்லத்தில் இருக்கும் கேஸட் பிளேயரை நன்மையானவற்றிற்கும் பயன்படுத்தலாம், தீமையானவற்றிற்கும் பயன்படுத்தலாம். அதனை நாம் எவ்வாறு அல்லாஹ்வின் உவப்பினைப் பெற்றுக் கொள்ளும் விதமாகப் பயன்படுத்துவது? இதற்காக நம்முடைய வீடுகளில் ஆடியோ, வீடியோ லைப்ரேரியினை - சேகரிப்பைத் துவங்க வேண்டும். மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகள், மாநாட்டு உரைகள், குத்பாப் பேருரைகள், இன்னும் அழைப்புப் பிரச்சாரம் சம்பந்தமான கேசட்டுகளின் தொகுப்பினை சேகரித்து வைக்கலாம். குர்ஆனை அழகாகவும், இனிமையாகவும், தெளிவாகவும் ஓதக் கூடிய இமாம்களின் கேஸட்டுக்கள், உதாரணமாக தராவீஹ் தொழுகைகளின் பொழுது ஓதிய கிராஅத் திலாவத் கேஸட்டுகளைக் கேட்பது குடும்பத்தவர்களின் இதயத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும், இன்னும் அதன் பொருள், இறங்கியதன் பின்னணி ஆகியவை அறிந்திருந்தால் இன்னும் அதில் அவர்கள் அதிகமாக லயித்துக் கேட்பதற்கும், அவ்வாறு லயித்துக் கேட்பதன் மூலம் மிக எளிதாக திருமறையை மனனமிடுதவற்கும் உதவிகரமாக இருக்கும். இத்தகைய குர்ஆன் திலாவத் கேஸட்டுகளை கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டு விட்டதென்றால், ஷைத்தானியச் சங்கீதங்களைக் கேட்பதற்கு மனம் அலை பாயாது. இன்னும் ஷைத்தானியச் சங்கீதங்களைக் கேட்பதனைக் காட்டிலும், அளவற்ற அருளாளனின் திருமறையினை ஓதக் கேட்பது சிறந்ததல்லவா. இன்னும் அர்ரஹ்மானினுடைய வார்த்தைகளும் ஷைத்தானின் சங்கீதமும், இரண்டும் இறைநம்பிக்கையாளர்களின் இதயங்களில் ஒரு சேரக் குடியிருக்க முடியாது. இன்னும் ஃபத்வாக்கள் (மார்க்கத் தீர்ப்புகள்) சம்பந்தமான கேஸட்டுகள் குடும்பத்தவர்களிடம் கடுமையான மாற்றத்தை ஏற்படுத்தவல்லது, இன்னும் மார்க்கச் சட்டங்கள் பற்றிய பல்வேறு தகவல்களை அவர்கள் அறிந்து கொள்வதற்கும் அது உதவிகரமாக இருக்கும். அஷ்ஷெய்க் அப்துல் அஜீஸ் பின் பாஸ் (ரஹ்), அஷ்ஷெய்க் முஹம்மது நஸீருத்தீன் அல்பானி (ரஹ்), அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்), ஸாலிஹ் அல் ஃபவ்ஸான் ஆகியோர்கள் போன்ற மார்க்கத்தின் தெளிவினைப் பெற்ற மார்க்க அறிஞர்களின் உரைகளைக் கொண்ட கேஸட்டுக்களை சேகரித்துக் கேட்கலாம். மேற்கண்ட உரைகள் அரபு மொழியில் இருப்பது தமிழ் மக்களுக்கு விளங்காது. ஆனால், தமிழ் மொழியில் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களின் கேஸட்டுகள் கிடைக்கின்றன. இந்தியா, இலங்கை அழைப்பாளர்களும் இதில் அடங்குவர். தமிழில் கே.வி.எஸ்.ஹபீப் முஹம்மது, கமாலுத்தீன் மதனீ, அப்துல் காதிர் உமரீ, ஷம்சுத்தீன் காஸிமி, முஜீபுர் ரஹ்மான் உமரி, பி.ஜெயினுலாபிதீன், யூசுஃப் மிஸ்பாஹி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர், அகார் முஹம்மது, மின்ஹாஜ் இஸ்லாஹி போன்றோரின் மார்க்கச் சொற்பொழிவுத் தொகுப்பினைச் சேகரிப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இன்னும் முஸ்லிம்கள் ஃபத்வாக்கள் குறித்து அதிகக் கவனம் செலுத்த வேண்டும், அவற்றின் மூலதாரங்கள் என்ன என்பது பற்றியும் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் இது மார்க்கம் சம்பந்தப்பட்டது, எனவே இந்த மார்க்கச் சட்டங்கள் குறித்த விளக்கங்களை நீங்கள் எங்கிருந்து பெறுகின்றீர்கள் என்பது குறித்து கவனமாக இருக்க வேண்டும். இன்னும் மார்க்க விளக்கங்களைப் பெற்றுக் கொள்வதைப் பொறுத்தமட்டில் நம்பிக்கை மிக்க, இறையச்சமிக்க மார்க்க அறிஞர்களிடமும், இன்னும் அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்து பெறப்பட்ட ஆதாரங்களைப் பெறுபவராகவும் இருத்தல் வேண்டும், இன்னும் மார்க்கத்தில் புதினங்களையும் பித்அத்க்களையும் புகுத்தி விடக் கூடிய மத்ஹபுச் சட்டங்களைப் பின்பற்றுபவராக அவர் இருத்தல் கூடாது, இன்னும் அவர் மார்க்கச் சட்ட விளக்கங்களுக்காக ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைத் திரட்டித் தருவதோடு, நடுநிலை பேணக் கூடியவராகவும், வரம்பு மீறிச் செயல்படுபவராகவும் அல்லது நெகிழ்ந்து கொடுத்துப் போகும் போக்குக் கொண்டவராகவும் இருத்தல் கூடாது. அல்லாஹ் கூறுகின்றான், 'கற்றறிந்தோரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.., ', அறிந்தவர்களிடம் அவனைப் பற்றிக் கேட்பீராக (25:59). இன்னும் இந்த உம்மத்தை அச்ச மூட்டி எச்சரிக்கக் கூடியவர்களின் உரைகளையும், ஆதாரங்களை நிலைநிறுத்தியும் இன்னும் தீமைகளைக் கைவிடுவது குறித்த உரைகளைக் கேட்பது, குடும்ப உறுப்பினர்களை சுய குணாதிசயமுள்ள முன்னுதாரணமிக்கவர்களாக உருவாக்குவதற்கான, இன்னும் ஒரு இஸ்லாமிய இல்லத்தை உருவாக்குவதற்கான அடிப்படைத் தேவைகளாகும். மார்க்க உரைகள் சம்பந்தமாக ஏராளமான கேஸட்டுகள் விற்பனைக்குக் கிடைக்கின்றன, இருப்பினும் உரையாற்றுபவர் யார், அவர் எப்படிப்பட்டவர், மார்க்க விஷயங்களில் தெளிவான பார்வை உடையவரா என்பதைப் பற்றி அறிந்து, நல்லவர்களைத் தேர்வு செய்து கொள்ளும் அளவுக்கு விஷயமுடையவராக இருத்தல் வேண்டும். இத்தகைய நம்பிக்கையானவர்களுடைய உரைகளை நீங்கள் நம்பிக்கையுடன் கேட்கலாம். மார்க்க அறிஞர்கள் எப்படிப்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் எனில், இஸ்லாமிய அடிப்படைச் கொள்கைகள் என்று சொல்லக் கூடிய அகீதா - வில் பிடிப்புள்ளவராக, உறுதியானவராக இருப்பதோடு, அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத்தவராக, இன்னும் சுன்னாவை முழுமையாகக் கடைபிடித்து பித்அத் களை விட்டும் நீங்கியவராக இருத்தல் வேண்டும். இன்னும் தீவிரம் மற்றும் நெகிழ்ந்து கொடுக்கும் போக்கு இவற்றுக்கு மத்தியில் நடுநிலைப் போக்கைக் கைக் கொள்பவராகவும் இருத்தல் வேண்டும். தன்னுடைய உரையை ஸஹீஹான தரத்தில் அமைந்தது என்று நிரூபணம் செய்யப்பட்ட நபிமொழிகளைக் கொண்டு உரையாற்றுபவராகவும், பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட நபிமொழிகளைக் கையாள்வதில் எச்சரிக்கை உணர்வோடு உரையாற்றுபவராகவும், அதனைத் தவிர்க்கக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். சமகாலப் பிரச்னைகளில் தெளிந்த அறிவுடையவராக இருத்தல் வேண்டும், இன்னும் சமூகத்தின் நிலைகளை அறிந்தவராக, அதனிடையே எழும் பிரச்னைகளுக்கு தெளிவான முறையில் மருத்துவம் செய்யக் கூடியவராகவும், வழிகாட்டக் கூடியவராகவும், மக்களின் தேவைகளை நிறைவேற்றக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். எப்பொழுதுமே அவர் சத்தியத்தையே பேச வேண்டும், பொய்யானவற்றிலிருந்து விலகி இருப்பதோடு, மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக தன்னுடைய பேச்சை அமைத்துக் கொண்டு, அல்லாஹ்வின் கோபத்தை வரவழைத்துக் கொள்ளக் கூடியவராக இருக்கக் கூடாது. இன்னும் சிறுவர்களுக்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ஆடியோ மற்றும் விடியோ கேஸட்டுகள் கிடைக்கின்றன. இவை அவர்களது மனங்களில் மிகச் சிறந்த இஸ்லாமியத் தாக்கத்தை உருவாக்கவல்லவை. இளம் சிறார்களின் திருமறைக் குர்ஆன் திலாவத்துகள், அல்லது அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள் மற்றும் திக்ருகள், அல்லது இஸ்லாமியப் பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள் அல்லது இசை கலக்காத இஸ்லாமியப் பாடல்கள், இன்னும் பயன்மிக்க பல்வேறு தகவல்கள் கொண்டு கேஸட்டுகளை அவர்களுக்குப் பெற்றுக் கொடுக்கலாம். கேஸட்டுகளை அதற்கான மர அலமாரிகளில் அடுக்கி வைப்பது மிக எளிதாக எடுத்துக் கையாள்வதற்கு வசதியாக இருக்கும், இன்னும் உடைந்து, சிதைந்து போகாமல் பாதுகாப்பாக இருக்கும். கேஸட்டுகளைச் சேமிப்பதோடு - அவற்றைச் செவிமடுத்ததன் பின்னர், அவற்றைப் பிறருக்கு இரவல் அல்லது சிறு தொகையைப் பெற்றுக் கொண்டு வாடகைக்கும் கொடுத்து உதவலாம். இன்னும் சமையல் அறைகளில் டேப் ரிக்கார்டர்களை வைத்திருப்பது பெண்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும், இன்னும் படுக்கை அறைகளிலும் டேப் ரிக்கார்டர்களை வைத்து பயன்படுத்துவது, அன்றைய தினத்தின் இறுதிக் கணங்கள் வரைக்கும் மிகவும் பயன்மிக்கதாக அமைந்து விடும். இன்னும், மானுட வசந்த நிகழ்ச்சி, இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி, என்னைக் கவர்ந்த இஸ்லாம், சிந்தனை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளின் தொகுப்புகளையும் சேகரித்து வைப்பது பயனுள்ளதாக இருக்கும். நல்லோர்களையும், மார்க்கத்தை அறிந்து கொள்வோரையும் வீட்டிற்கு அழைத்தல் ''என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே'' (என்றும் கூறினார்). (71:28) இறைநம்பிக்கையுடைவர்கள் உங்களது வீட்டில் பிரவேசிப்பது, அது உங்களது இல்லத்தில் ஒளியேற்றக் கூடியதாக இருக்கம், இன்னும் பல்வேறு நன்மைகளை அது விளைவிக்கும், ஏனென்றால் உங்களது பேச்சுக்களும், கலந்துரையாடல்களும், விவாதங்களும் இஸ்லாத்தினைப் பற்றியே இருக்கும் என்பதே காரணமாகும். கஸ்தூரி(வாசனைப் பொருள்)யை வைத்திருப்பவர் அதனை உங்களுக்குக் கொடுக்கலாம் அல்லது அதன் மனத்தையாவது நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் அல்லது மனதைத் தொட்டு வருடக் கூடிய சுகந்தம் அவரிடம் இருக்கின்றது என்பதையாவது நீங்கள் அறிந்து கொள்ள இயலுமல்லவா. குழந்தைகள், சகோதரர்கள், பெற்றோர்கள் ஆகியோர்கள் அவர்களுடன் அமர்ந்தும், இன்னும் பெண்கள் திரைமறைவுக்குப் பின்னால் இருந்து கொண்டும் வந்திருக்கக் கூடிய மார்க்க அறிஞரின் அல்லது விருந்தாளியினுடைய மார்க்க உரையாடல்களைக் கேட்கும் பொழுது, மார்க்கத்தில் அதிகமான ஞானத்தையும், விளக்கத்தையும் ஏற்படுத்தும். இத்தகைய நன்மக்கள் உங்களது இல்லங்களுக்கு வருகை தருவதன் விளைவு, கெட்ட நண்பர்களின் சகவாசத்தையும், இன்னும் அவர்கள் உங்கள் இல்லங்களுக்கு வருகை தருவதையும் நிறுத்தி விடும். வீட்டிற்கான இஸ்லாமியச் சட்டங்களைக் கற்பது 1) வீட்டில் தொழுவது 2) அனுமதி பெற்ற பின் வீட்டில் நுழைவது 3) அடுத்தவர் வீட்டில் எட்டிப் பார்க்கதீர்கள் 1) வீட்டில் தொழுவது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''கடமையாக்கப்பட்ட தொழுகையினைத் தவிர்த்து - வீட்டில் அவன் தொழும் தொழுகை தான் மிகச் சிறந்தது''. (புகாரீ, அல் ஃபத், 731) அனுமதிக்கப்பட்ட நிலைகளைத் தவிர்த்து, கடமையாக்கப்பட்ட (தினமும் ஐவேளைத்) தொழுகைகளை பள்ளிவாசலில் தான் தொழ வேண்டும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவன் (கடமையாக்கப்பட்ட தொழுகைகளைத் தவிர்த்து ஏனைய) சுன்னத்தான, நபிலான தொழுகைகளை மற்ற இடங்களில் தொழுவதனைக் காட்டிலும், வீட்டில் தொழுவது அதிக நன்மைகளைப் பெற்றுத் தரும், தனியாகத் தொழும் கடமையான தொழுகையைக் காட்டிலும் கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழும் தொழுகை மிகச் சிறந்ததாகும். (இப்னு அபீ ஷைபா, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2953) பெண்களைப் பொறுத்தவரையில், வீட்டில் உள் அறைகளில் அவள் தொழுவது, மிகச் சிறந்தது, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பெண்ணின் (தொழக் கூடிய) தொழுகைகளில் மிகச் சிறந்தது, வீட்டின் உள்பகுதியில் தொழும் தொழுகை தான். (அத்தபரானீ, ஸஹீஹ் அல் ஜமாமிஇ, 3311). ஒரு ஆண் (வீட்டுத் தலைவர் பின்னிற்க) அவனது சொந்த வீட்டில் தொழ வைக்கப்படக் கூடாது, இன்னும் அவனது அனுமதி பெற்றே தவிர, வீட்டுத் தலைவர் வழக்கமாக அமரும் இடத்தில் யாரும் உட்காரக் கூடாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு ஆண் அவனுக்கு அதிகாரமுள்ள இடத்தில் (வீட்டுத் தலைவனாக இருக்கும் நிலையில்) அவனுக்கு (பிறர் இமாமாக முன்னிற்கும் நிலையில்) தொழ வைக்கப்படக் கூடாது, இன்னும் அவனது அனுமதி பெற்றே தவிர (வீட்டுத் தலைவனான) அவனது இடத்தில் பிறர் அமரக் கூடாது. (அத் திர்மிதீ, 2772) அதாவது, அவர் இருக்கும்பட்சத்தில் யாரும் தொழ வைப்பதற்கு இமாமாக முன்னேறிச் செல்லக் கூடாது, அவரைக் காட்டிலும் இவருக்கு மிகச் சிறந்த முறையில் குர்ஆன் ஓதத் தெரிந்திருந்தாலும் கூட, அவனுக்குச் சொந்தமான இடத்தில், அவனுக்கு அதிகாரமுள்ள இடத்தில், அதாவது அவனது வீட்டில் அல்லது பள்ளியின் இமாமாக பணியாற்றும் இடத்தில். இதனைப் போலவே, குடும்பத் தலைவன் அவனுக்கென பிரத்யேகமாக அமரக் கூடிய இடத்தில், அதாவது படுக்கையில் அல்லது படுக்கை விரிப்புகளில்.. இன்னும் இதனைப் போல அவனுக்கென பிரத்யேகமாக உள்ளவற்றில் அவனது அனுமதி பெற்றே தவிர அவற்றைப் பயன்படுத்துவது கூடாது. 2) வீட்டில் நுழைய அனுமதி பெறுவது ஈமான் கொண்டவர்களே! உங்கள் வீடுகளல்லாத (வேறு) வீடுகளில், அ(வ்வீட்டிலுள்ள)வர்களிடம் அனுமதி பெற்று, அவர்களுக்கு ஸலாம் சொல்லாதவரை (அவற்றினுள்) பிரவேசிக்காதீர்கள் - (அவ்வாறு நடப்பதுவே) உங்களுக்கு நன்மையாகும்; நீங்கள் நற்போதனை பெறுவதற்கு (இது உங்களுக்குக் கூறப்படுகிறது). அதில் நீங்கள் எவரையும் காணாவிட்டால், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படும் வரையில் அதில் பிரவேசிக்காதீர்கள்; அன்றியும், 'திரும்பிப் போய் விடுங்கள்' என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், அவ்வாறே திரும்பி விடுங்கள் - அதுவே உங்களுக்கு மிகவும் பரிசுத்தமானதாகும்; மேலும், அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிபவன். (24:27-28) வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (2:189) யாருமே இல்லாத வீடுகளில் அத்தியாவசியப்பட்ட சமயங்களில் நுழைவது ஆகுமானது, அதாவது அந்த வீட்டினை விருந்தினர்களுக்காகத் தயார் செய்வது, மராமத்து வேலைகளுக்காக ஒழுங்கு செய்வது போன்றவற்றிற்காக அதில் நுழைய அதிகாரம் அல்லது அனுமதி பெற்றிருப்பவர் நுழையலாம். (எவரும்) வசிக்காத வீடுகளில் உங்களுடைய பொருட்கள் இருந்து, அவற்றில் நீங்கள் பிரவேசிப்பது உங்கள் மீது குற்றமாகாது செய்வதையும், நீங்கள் மறைத்து வைப்பதையும் நன்கறிவான். (24:29) உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் உண்பதற்குக் கூச்சப்படாதீர்கள், இன்னும் உறவினர்களின் வீடுகள் மற்றும் நண்பர்களின் வீடுகள் மற்றும் எந்த வீடுகளின் சாவிகள் யாரிடம் உள்ளனவோ அவர்கள் மறுப்புத் தெரிவிக்காத நிலையில் அவர்களது இல்லங்களில் நீங்கள் நுழைவதும் ஆகுமானதே. (முஃமின்களே! உங்களுடன் சேர்ந்து உணவருந்துவதில்) குருடர் மீதும் குற்றமில்லை; முடவர் மீதும் குற்றமில்லை, நோயாளியின் மீதும் குற்றமில்லை; உங்கள் மீதும் குற்றமில்லை; நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ, அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரர் வீடுகிறலோ, அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயின் சகோதரர்கள் வீடுகளிலோ, அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ, அல்லது எ(ந்த வீட்டுடைய)தின் சாவிகள் உங்கள் வசம் இருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ, நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகாது. (24:61) குழந்தைகளிடமும், வீட்டுப் பணியாளர்களிடமும் பெற்றோர்கள் வழக்கமாகத் தூங்கக் கூடிய நேரங்களில், அதாவது பஜ்ருத் தொழுகைக்கு முன்பு, மதிய நேரங்களில், மற்றும் இஷாவுக்குப் பின் உள்ள வேளைகளில் நுழைய வேண்டிய தேவை ஏற்பட்டால், அனுமதி பெற்றே தவிர உள்ளே நுழையக் கூடாது என்பதை அவர்களுக்கு அறிவுறுத்துங்கள். சந்தர்ப்பவசமாக அவர்கள் மறைவாக இருக்கும் நிலையில் எதையும் பார்த்து விட்டால், அதில் குற்றமேதுமில்லை, ஏனென்றால் அவர்கள் அந்த வீட்டினுள் வலம் வரக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், அத்தகையவர்களைத் தடுப்பது சிரமமான காரியம் தான். அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் : ஈமான் கொண்டவர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர் (அடிமை)களும், உங்களிலுள்ள பருவம் அடையாச் சிறுவர்களும் (உங்கள் முன் வர நினைத்தால்) மூன்று நேரங்களில் உங்களிடம் அனுமதி கோர வேண்டும்; ஃபஜ்ரு தொழுகைக்கு முன்னரும், நீங்கள் (மேல் மிச்சமான உங்கள் உடைகளைக் களைந்திருக்கும் 'ளுஹர்' நேருத்திலும், இஷாத் தொழுகைக்குப் பின்னரும்-ஆக இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்றுள்ள) மூன்று அந்தரங்க வேளைகளாகும் - இவற்றைத் தவிர (மற்ற நேரங்களில் மேல்கூறிய அடிமைகளும், குழந்தைகளும் அனுமதியின்றியே உங்கள் முன் வருவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை; இவர்கள் அடிக்கடி உங்களிடமும் உங்களில் ஒருவர் மற்றவரிடம் வரவேண்டியவர்கள் என்பதினால்; இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கின்றான்; மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; ஞானம் மிக்கவன். (24:58) 3) அடுத்தவர் வீட்டில் எட்டிப் பார்க்கதீர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அனுமதி பெறாத நிலையில் எவரொருவர் இன்னொருவருடைய வீட்டினுள் (எட்டிப்) பார்க்கிறாரோ, அவருடைய கண்ணை (குத்தி) வெளியே எடுத்து விடுங்கள், இன்னும் அதற்கு எந்தவித இழப்பீட்டுத் தொகையையோ அல்லது இரத்த இழப்பீட்டையோ வழங்க வேண்டியதில்லை. (அஹ்மத், அல் முஸ்னத் 2-385, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 6046) ஒரு பெண் முதலாவது அல்லது இரண்டாவது தடவை தலாக் சொல்லப்பட்டிருந்தால் (கணவனால் திரும்ப அழைத்துக் கொள்ளும் சந்தர்ப்பம் இருந்து கொண்டிருக்கும் நிலையில்) அவள் இத்தா இருக்கும் நிலையில் அவள் வீட்டை விட்டு வெளியில் செல்லவோ, அல்லது அவளை வீட்டை விட்டு வெளியேற்றவோ கூடாது, இன்னும் அவளது வாழ்க்கைத் தேவைகளுக்கானதை வழங்கப்பட வேண்டும். அல்லாஹ் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான் : நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்' சொல்வீர்களானால் அவர்களின் 'இத்தா'வைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத காலங்களில்) தலாக் கூறுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுpக் கொள்ளுங்கள் தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெறியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள் எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்; (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை அறிய மாட்டீர்.(65:1) வரம்பு மீறுகின்ற மனைவியை அவளது கணவன் வீட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் அவளிடமிருந்து விலகி இருக்கலாம், அதாவது இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களில் வழங்கியிருக்கின்ற அனுமதியின்படி அதனை நடைமுறைப்படுத்த வேண்டும். வீட்டிற்கு உள்ளே விலகி இருப்பது என்பதற்கான திருமறையின் ஆதாரமாவது : ''எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்'' (4:34) வீட்டிற்கு வெளியே விலகி இருப்பது என்பது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது மனைவிமார்களிடமிருந்து விலகி இருக்க நாடிய பொழுது, அவர்களை அவர்களது இடங்களில் விட்டு விட்டு, மனiவியர்களை விட்டுப் பிரிந்து வீட்டிற்கு வெளியே உள்ள அறைகளில் தங்கினார்கள். (புகாரீ, கிதாப் அல் தலாக், பாப் ஃபில் ஈலா') இரவு நேரங்களில் ஒருவர் தனியாகத் தனது இல்லத்தில் இருப்பது கூடாது. இப்னு உமர் (ரலி) அவாகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''தனித்திருப்பதையும் இன்னும் ஒருவன் இரவு நேரங்களில் தனித்திருப்பதும் கூடாது அல்லது பயணம் செய்வதும் கூடாது. (அஹ்மத் அல் முஸ்னத் 2-91) அதாவது தனித்திருப்பதால் ஏற்படும் தனிமை உணர்வு, எதிரிகளிடமிருந்து அல்லது திருடர்களிடமிருந்து தாக்குதல் நடைபெறுவதற்கான சாத்தியம், இன்னும் நோயாளியாக இருக்கும்பட்சத்தில் தனிமையில் இருப்பதன்றி இன்னொருவரும் அவருக்குத் துணைக்கு இருக்கும் பொழுது உதவ முடியும் என்பதனாலும். (ஃபத்ஹ் அல் ரப்பானீ 5-64) பாதுகாப்பு மற்றும் சுற்றுச் சுவர் இல்லாத வீட்டுக் கூரையில் தூங்கக் கூடாது, அவ்வாறு தூங்கினால் நீங்கள் மேலிருந்து கீழே விழுந்து விட வாய்ப்புண்டு. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''பாதுகாப்பிற்கென (சுற்றுச்) சுவர் இல்லாத வீட்டுக் கூரைகளில் தூங்குபவருக்கு, அவருக்கு நிகழ்கின்ற (விபத்திற்கு) யாரும் பொறுப்பாக முடியாது''. (அபூதாவூது, அல் சுனன் 5041, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6113. அவ்ன் அல் மஃபூத் 13-384). அயர்ந்து தூங்கக் கூடியவர் உருண்டு கீழே விழுந்து விட வாய்ப்புண்டு, இன்னும் சுற்றுச் சுவர் இல்லையெனும் பொழுது அவர் தவறிக் கீழே விழுந்து கொலை செய்யப்படவும் வாய்ப்புண்டு. இந்த நிலையில் அவரது மரணித்திற்காக எவரையும் குற்றம் சொல்ல முடியாது அல்லது அவரின் கவனயீனத்தின் காரணமாக அல்லாஹ் தன்னுடைய பாதுகாப்பை விலக்கிக் கொண்டான், ஏனென்றால் அவர் படுக்கைக்குச் செல்லு முன்பு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். இதனைத் தான் மேற்கண்ட நபிமொழி நமக்கு விளக்குகின்றது. வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளான பூனை வாய் வைத்த பாத்திரம் மற்றும் அதில் நீர் அசுத்தமாகி விடாது அல்லது அது வாய் வைத்த உணவு நஜீஸாக - அசுத்தமாகி விடும். அப்துல்லா இப்னு அபீ கத்தாதா (ரலி) அவர்கள் தனது தந்தையின் வாயிலாக அறிவிக்கின்றார், அவருக்கென ஒளுச் செய்வதற்காக தண்ணீர் தயாராக வைக்கப்பட்டிருந்தது, அங்கே ஒரு பூனை வந்தது, அதில் உள்ள தண்ணீரை நக்கிக் குடித்தது. (பூனை வாய் வைத்த அந்த) தண்ணீரை எடுத்து, ஒளுச் செய்தார், அப்பொழுது, ஓ.. அபூ கத்தாதாவே..! பூனை அதில் வாய் வைத்து குடித்து விட்டதே..! (என்று கூறப்பட்ட பொழுது), இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன், (அதாவது) பூனை உங்களது குடும்பங்களில் ஒன்றானது, இன்னும் அது உங்களது வீடுகளைச் சுற்றி வலம் வரக் கூடியதாகவும் இருக்கின்றது'' என்றார்கள். (அஹ்மத் அல் முஸ்னத் 5-309, ஸஹீஹ் அல் ஜாமிஇ 3694). இன்னுமொரு நபிமொழியில், அவைகள் (பூனைகள்) அசுத்தமற்றவை, அவை உங்களைச் சுற்றி வலம் வரக் கூடியவை (குழந்தைகளையும், பணியாளர்களையும் இன்னும் இவர்களைப் போல). (முஸ்னத் அஹ்மத் 5-309, ஸஹீஹ் அல் ஜாமிஇ 2437) உள்ளச்சத்துடன் தொழுவதன் பலன்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : முஸ்லிமானதொரு மனிதன், தொழுகைக்கான குறித்த நேரம் வந்த பொழுது, அவன் முறையாக ஒளுச் செய்து, இறையச்சத்துடன் அவற்றைச் செய்து, (பள்ளியை நோக்கிச் சென்று தொழுது) இன்னும் சரியான முறையில் ருகூஉ செய்து இருப்பானேயானால், அது அவனது முந்தைய அனைத்துப் பாவங்களுக்குப் பரிகாரமாக அமையும், எதுவரை எனில் அவன் மிகப் பெரும் பாவங்களைச் செய்யாத வரைக்கும், அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை. (முஸ்லிம் 1-206 எண்.7-4-2) மேலும் அவன் எந்தளவு உள்ளசத்துடன் தொழுதான் என்பதனைப் பொறுத்தே அவனது நன்மையின் அளவுகளும் அமையும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியான் தொழுது இன்னும் அவனது (கணக்கில்) அதனைப் பத்து மடங்காக, அல்லது ஒன்பது மடங்காக, அல்லது எட்டு மடங்காக, அல்லது ஏழாக அல்லது ஆறாக அல்லது ஐந்தாக அல்லது நான்கு பங்காக, அல்லது மூன்றாக அல்லது பாதியாக எழுதப்படாமல் இருப்பதில்லை''. (அஹ்மத், ஸஹீஹ் ஜாமிஇ 1626). எங்கே அவர் தன்னை ஓர்நிலைப்படுத்தினாரோ இன்னும் தனது கவனம் சிதறாமல் ஒருமுகப்படுத்திக் கொண்டாரோ அதற்குத் தகுந்த மாதிரி அவரது நன்மையின் பங்குகள் இருக்கும் என்பதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் : ''நீங்கள் உ ங்களது தொழுகையில் எந்தளவு கவனம் செலுத்தினீர்களோ அந்தளவு (நன்மைகளைப்) பெற்றுக் கொள்வீர்கள்.'' நீங்கள் உங்களது கவனங்களை முறையாக தொழுகையின் மீது செலுத்தினீர்கள் என்றால் இன்னும் அதில் உள்ளச்சம் நிறைந்திருந்தது என்றால் உங்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள் : ''(அல்லாஹ்வின்) அடியான் தொழுகைக்கான நின்று இன்னும் (அவன்) தொழுது கொண்டிருக்கும் பொழுது, அவனது அனைத்துப் பாவங்களும் அவனது தலைக்கும் இன்னும் தோள் புஜங்களுக்கும் கொண்டு வரப்படும். ஒவ்வொரு முறையும் அவன் குனியும் பொழுதும், இன்னும் சுஜுது செய்யும் பொழுதும், அதில் சில பாவங்கள் அவனிடமிருந்து (கீழே) விழுந்து கொண்டிருக்கும், (மன்னிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்)''. (பைஹகி - அல் சுனன் அல் குப்ரா, 3-10, இன்னும் ஸஹீஹ் அல் ஜாமிஇ லும் இது இடம் பெற்றுள்ளது பார்க்கவும்). அல் மனாவி என்பவர் கூறுகின்றார் : தொழுகையின் முக்கியத் தூண்களை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி முடிக்கும் பொழுது, பாவங்களின் சில பகுதிகள் அவற்றிலிருந்து வீழ்ந்து விடுகின்றன, எதுவரையெனில் அவன் தொழுகையை முடிக்கும் வரையிலும், அனைத்துப் பாவங்களும் நீக்கப்பட்டு விடுகின்றன. இது தொழுகைக்கான அனைத்து விதிமுறைகளும் நிறைவேற்றப்பட்டிருக்கும் பட்சத்தல், அதன் அடிப்படையான அம்சங்கள் முழுமைப்படு;தியிருக்கும்பட்சத்திலும். அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 'அடியான்' மற்றும் 'நிற்பது' என்பது ஒரு மாபெரும் மன்னனின் (அல்லாஹ்வுக்கு) முன் அவனது அடிமை மிகவும் பணிவுடன் நிற்பதைக் குறிக்கும்''. (பைஹகி அல் சுனன் அல் குப்ரா, 3-10 : இன்னும் ஸஹீஹ் அல் ஜாமிஇ விலும் இடம் பெற்றுள்ளது பார்க்கவும்). இறையச்சத்துடன் தொழக் கூடியவர், அவர் தனது தொழுகையை முடித்ததும் மனதில் உள்ள பாரங்கள் அனைத்தும் இறங்கி மிக இலேசாக இருப்பதாக உணர்வார், அவரிடமிருந்து அவரது கவலைகள் நீக்கப்பட்டும் விடும். பாரம் குறைந்ததன் காரணமாக, அவர் புத்துணர்வு பெற்றவராக ஆகி விடுவார், எனவே தொழுகையை நிறுத்தி விட அவர் மனது நாடாது, ஏனென்றால் தொழுகையில் தான் அவருக்கு சந்தோஷமும் இன்னும் இந்த உலகத்தின் சுகமும் அவருக்குக் கிடைக்கின்றது. இன்னும் அடுத்து அவர் தொழ ஆரம்பிக்கும் வரைக்கும் ஒரு குறுகிய சிறைச்சாலையில் இருந்து கொண்டிருப்பது போன்று அவர் உணர்வார். எவரொருவர் தொழுகையை உவப்பானதாகக் கருதுகின்றாரோ அவர், 'நாங்கள் தொழுகின்றோம், இன்னும் அதில் சுகத்தையும் பெற்றுக் கொள்கின்றோம்' என்று கூறுவார். உதாரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓ பிலால்..! தொழுகையில் நாம் சுகத்தைக் காண்போம்''. வாருங்கள் தொழுவோம், அதனை முடிப்போம்' என்று கூறாமல், தொழுகையில் சுகத்தைக் காண்போம் என்று கூறியிருப்பதிலிருந்து தொழுகையின் முக்கியத்துவம் நமக்கு விளங்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''என்னுடைய சந்தோஷம் தொழுகையில் ஆக்கப்பட்டிருக்கின்றது''. தொழுகையில் சந்தோஷத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய எவராவது, தொழுகையில் அல்லாமல் அவர் வேறு ஒரு இடத்தில் சந்தோஷத்தை அவர் தேடுவாரா?, அல்லது அதனை விட்டும் தூரமாகி விலகி (தொழாமல்) இருப்பதற்கு எப்படித் தான் முடிகின்றது? (Al-Waabil al-Sayib, 37). தொழுகையில் துஆக் கேட்பதற்கான மிகச் சிறப்பு வாய்ந்த தருணங்கள், குறிப்பாக ஸுஜுதில் அல்லாஹ்விடத்தில் உரையாடுவது (தொழுகை என்பது இறைவனிடம் நடத்தக் கூடிய உரையாடல்), யாரிடம் மட்டும் மனிதன் தன்னுடைய பணிவைக் காட்ட வேண்டுமோ அத்தகையவனிடத்தில், அவனிடத்தில் மட்டுமே தன்னுடைய தேவைகளைக் கேட்பது, இன்னும் அவன் கேட்கக் கூடிய அத்தனை உதவிகளும் வல்லோனின் நெருக்கத்தை அடியானுக்குபு; பெற்றுக் கொடுக்கும், இன்னும் அவனிடத்தில் அது குஷு என்ற உள்ளச்சத்தையும் ஏற்படுத்தும். துஆ - பிரார்த்தனை - தனக்குத் தேவையானவற்றை வேண்டிப் பெறுவது என்பதும் ஒரு இறைவணக்கமேயாகும், இன்னும் பிரார்த்தனைகளை அதிகமதிகம் கேட்கும்படி நாம் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றோம். அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான் : பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே.. (6:63) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எவனொருவன் அல்லாஹ்வை (ப் பிரார்த்தித்து) அழைக்கவில்லையோ, அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கின்றான்.'' (திர்மிதீ, கிதாப் அத் தாஃவாத், 1-426, ஸஹீஹ் திர்மிதீ, 2686) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் குறிப்பிட்ட நேரத்தில் அதிகமதிகம் துஆக் கேட்கக் கூடியவர்களாக இருப்பார்கள், அதாவது, ஸுஜுது செய்யும் பொழுது, இரண்டு ஸுஜுதுக்கும் மத்தியில், மற்றும் தஸஹ்ஹுத் (இருப்பில் அத்தஹிய்யாத் ஓதி அதனைத் தொடர்ந்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதி முடித்ததன்) பின் உள்ள நேரத்தில். இவற்றில் மிகச் சிறந்தது ஸுஜுதின் பொழுது கேட்கும் துஆ தான், இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு அடியான் தன்னுடைய எஜமானனுக்கு மிகவும் நெருக்கமாக உள்ள நிலை எதுவென்றால் ஸுஜுது நிலையில் இருக்கும் பொழுது தான், எனவே நீங்கள் உங்களது துஆவை அப்பொழுது அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்.'' (முஸ்லிம், கிதாப் அஸ் ஸலாத், பாப் மா யுகல்லுஃபில் ருகூஉ வல் ஸுஜுது, எண்.215) மேலும் கூறினார்கள் : ஸுஜுதைப் பொறுத்தவரையில், அதிகமதிகம் முயற்சி செய்து துஆச் செய்து கொள்ளுங்கள், அதில் (நீங்கள் கேட்கும் துஆக்களுக்கு) பதிலளிக்கப்படுகின்றீர்கள்.'' (முஸ்லிம், கிதாப் அஸ் ஸலாத், பாப் அல் நஹீ அன் கிராஅத் அல் குர்ஆன் ஃபில் ருகூஉ வல் ஸுஜுது, 207) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஸுஜுது நிலையில் இருக்கும் பொழுது வழக்கமாக இந்தத் துஆவை ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள் : ''அல்லாஹும்மஃ ஃபிர்லீ தன்பி திக்கஹுவ ஜில்லஹுவ அவ்வலஹு வ அகீரஹு வ அலானிய்யதஹு வ ஸிர்ரஹு'' ("Allaahumma’ghfir li dhanbi diqqahu wa jillahu wa awwalahu wa aakhirahu wa ‘alaaniyatahu wa sirrahu) (யா அல்லாஹ், என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, சிறிய மற்றும், பெரிய, முதலும், இறுதியுமாகவும், இன்னும் வெளிப்படையாகவும் மறைவாகவும் (செய்த பாவங்களை மன்னிப்பாயாக..!) (முஸ்லிம், கிதாப் அல் ஸலாஹ், பாப் மா யுகாலு ஃபில் ருகூஉ வல் ஸுஜுத், 216) இன்னும் அவர்கள், அல்லாஹும்மஃ ஃபிர்லி மா அஸ்ரர்து வ மா அஃலன்து ("Allaahumma’ghfir li maa asrartu wa maa a’lantu) (யா அல்லாஹ், என்னை மன்னிப்பாயாக, நான் மறைவாகச் செய்தவைகளையும் இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும்) (அந் நஸஈ, அல் முஜ்தபா 2-569, ஸஹீஹ் அல் ஜாமிஇ 1067). இன்னும் ஸஜ்தாக்களுக்கிடையில் ஓதக் கூடிய பல துஆக்கள் இருக்கின்றன. அவற்றை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு வழங்குவோம். தஸஹ்ஹுத் க்குப் பின்னால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஓதியிருக்கக் கூடிய துஆக்களை நாம் ஆய்வு செய்தோமென்றால் அவர்களின் துஆக்களிலிருந்து நாம் சில படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளலாம் : உங்களில் ஒருவர் தஸஹுத்தை முடித்து விட்ட பின், அவர் அல்லாஹ்விடம் நான்கு வகைகளுக்காகப் பாதுகாப்பைத் தேடிக் கொள்ளட்டும், நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கும், மண்ணறையின் வேதனைகளிலிருந்தும், வாழ்விலும், மரணத்திலும் ஏற்படும் குழப்பங்களிலிருந்தும், இன்னும் மஸீஹுத் தஜ்ஜாலின் தீங்குகளிலிருந்தும் பாதுகாப்புத் தேடிக் கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட துஆவையும் அடிக்கடி ஓதி வரக் கூடியவர்களாக இருந்தார்கள் : ''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் ஷர்ரி மா அமில்து வ மின் ஷர்ரி மாலம் அமல் ("Allaahumma innee a’oodhu bika min sharri maa ‘amiltu wa min sharri maalam amal) (யா அல்லாஹ், தீமைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன், இன்னும் நான் செய்தவற்றையும் இன்னும் நான் செய்யாதிருக்கின்ற தீமைகளிலிருந்தும் (பாதுகாப்புத் தேடிக் கொள்கின்றேன்) ''அல்லாஹும்ம ஹாஸிப்னீ ஹிஸாபன் யஸீரா'' ("Allaahumma haasibni hisaaban yaseeran) ''(யா அல்லாஹ், என்னுடைய (மறுமைக்) கணக்குகளை எளிதாக்கி வைப்பாயாக)'' அபுபக்கர் (ரலி) அவர்களுக்கு இவ்வாறு கூறி வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹும்ம இன்னீ ழலம்து நஃப்ஸீ ழுல்மன் கதீரன், வ லா யஃக்ஃபிர் அத் துனூப இல்லா அன்த, ஃபஃக்பிர்லி மஃக்ஃபிரத்தன் மின் இன்திக வர்ஹம்னீ இன்னக அன்தல் ஃகஃபூருர் ரஹீம் ("Allaahumma innee zalamtu nafsi zulman katheeran, wa la yaghfir al-dhunooba illa anta, faghfir li maghfiratan min ‘indaka warhamni innaka anta al-Ghafoor al-Raheem) ''(யா அல்லாஹ், எனக்கு நானே தவறிழைத்து விட்டேன், இன்னும் உன்னைத் தவிர வேறு யாரும் என்னுடைய பாவங்களை மன்னிக்க முடியாது. எனக்கு மன்னிப்பளிப்பாயாக, இன்னும் என்மீது கருணை புரிவாயாக, நீயே மன்னிக்கக் கூடியவனாகவும், மிகவும் கருணையாளனாகவும் இருக்கின்றாய்)'' தஸஹ்ஹுத் - தில் ஒரு மனிதர் இவ்வாறு கூறக் கேட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் : ''அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க யா அல்லாஹ் அல் அஹத் அஸ் ஸமத் அல்லதீ லம் யலித் வ லம் யூலத் வ லம் யகுல் லஹு குஃபுவன் அஹத் அன் தஃக்ஃபிர்லீ துனூபி இன்னக்க அன்தல் ஃகஃபூர் அர் ரஹீம் (யா அல்லாஹ், யா அல்லாஹ் உன்னிடமே நான் கேட்கிறேன், அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை. (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை, (யா அல்லாஹ்) என்னுடைய பாவங்களை மன்னிப்பாயாக, நீயே (பாவங்களை) மன்னிப்பவனாகவும், மிகவும் கருணையுடையவனாகவும் இருக்கின்றாய்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து, ''அவர் மன்னிக்கப்பட்டு விட்டார், அவர் மன்னிக்கப்பட்டு விட்டார்'' என்றார்கள். இன்னொரு தோழர் இவ்வாறு கூறுவதைக் கேட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''அல்லாஹும்ம இன்னீ அஸ் அலுக்க பி அன்ன லகல் ஹம்து, லா இலாஹ இல்லா அன்த வஹதுக லா ஷரீக லக் அல் மன்னான் யா பதீ அஸ் ஸமாவாதி வல் அர்ழ், யா தல் ஜலாலி வல் இக்ராம், யா ஹய்யு யா கய்யூம், இன்னீ அஸ்அலுக அல் ஜன்னா வ அஊதுபிக மினன் னார்'' (யா அல்லாஹ், உனக்கேயுரிய அனைத்துப் புகழைக் கொண்டு நான் கேட்கின்றேன், வணக்கத்திற்குரிய நாயன் உன்னையன்றி வேறில்லை, உனக்கு துணை கிடையாது அல்லது இணையாளர்கள் கிடையாது, நீயே கொடையாளன், வானங்களையும், பூமியையும் படைத்தவனே, புகழுக்கும் கண்ணியத்திற்கும் உரித்தானவனே, நிலையானவனே, சுயம்புவானவனே, உன்னிடம் நான் சுவனத்தைக் கேட்கின்றேன், இன்னும் நரக நெருப்பிலிருந்தும் பாதுகாக்கும்படி வேண்டுகின்றேன்).'' (அப்பொழுது அங்கிருந்த) தன்னுடைய தோழர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''அவர் எதனைக் கொண்டு அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருக்கின்றார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? என்றார்கள். அதற்கு, அல்லாஹ்வும் அவனது தூதருமே அறிவார்கள் என்று தோழர்கள் பதில் கூறினார்கள். அதற்கு, ''எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவனது மிக உயர்ந்த (கண்ணியமிக்க) பெயர்களைக் கொண்டு (அவனிடம் தனக்குத் தேவையானவைகள் குறித்துக்) கேட்கின்றார், அவ்வாறு அல்லாஹ்வினது தன்மைகளைக் கொண்டு அவனை அழைக்கப்படும் போது, அதற்கு அல்லாஹ் பதிலளிக்கின்றான், அவ்வாறு அல்லாஹ்வை (நீங்கள்) அழைத்தால், அவன் கொடுக்கக் கூடியவனாக இருக்கின்றான்'' என்றார்கள். இன்னும் தஸஹ்ஹுத் மற்றும் ஸலாத்துக்கு இடையே இவ்வாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள் : ''அல்லாஹும ஃக்ஃபிர்லி மா கத்தம்து வமா அக்கர்து வ மா அஸ்ரர்து வ மா அஃலன்து வ மா அஸ்ரஃப்து வ மா அன்த அஃலம் பிஹி மின்னி அன்த அல் முகத்திம் வ அன்த அல் முஅக்கிர், லா இலாஹ இல்லா அன்த'' ("Allaahumma’aghfir li maa qaddamtu wa ma akhkhartu wa maa asrartu wa maa a’lantu wa maa asraftu wa maa anta a’lam bihi minni anta’l-muqaddim wa anta’l-mu’akhkhir, laa ilaaha illa anta) (யா அல்லாஹ், கடந்த காலத்தில் நான் செய்தவைகளை மன்னித்தருள்வாயாக, இன்னும் நான் செய்ய இருப்பவைகளையும் மன்னித்தருள்வாயாக, இன்னும் நான் மறைத்தவைகளையும், இன்னும் வெளிப்படையாகச் செய்தவைகளையும், இன்னும் வரம்பு மீறியவைகளையும், (மன்னித்தருள்வாயாக), என்னை விட நீயே மிகவும் அறிந்தவனாக இருக்கின்றாய். நீயே முற்படுத்துபவனாகவும், இன்னும் நீயே பிற்படுத்துபவனாகவும் இருக்கின்றாய், உன்னையன்றி வேறு ஒரு இறைவன் இல்லை.'' (These du’aa’s and others, along with their isnaads, are to be found in Sifat al-Salaah by al-‘Allaamah al-Albaani, p.163, 11th edn.) மேற்கண்ட துஆக்களை மனனம் செய்து கொள்வது நம்முடைய பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாகவும், அதற்கான தீர்வுகளை வழங்கக் கூடியதாகவும் இருக்கும், ஆனால் இதனை மனனம் செய்யாமல் இருப்பதால், தஸஹுத்தின் பொழுது என்ன ஓதுவது என்பது தெரியாமல் இமாமிற்குப் பின்னால் மௌமான இருந்து விடக் கூடியவர்களாக நாம் இருந்து வருகின்றோம். இந்த நிலை இனிமேலாவது மாற வேண்டும். முயற்சி செய்ய வேண்டும். குறிப்பு : மேற்கண்ட இறைமறை வசனங்கள் மற்றும் துஆக்களை அதனதன் அரபி உச்சரிப்பில் ஓதுவதுதான் மிகச் சிறந்தது. நம்மில் பலருக்கு திருமறைக் குர்ஆனை அதன் மூல மொழியாகிய அரபி மொழியில் ஓதத் தெரியாது. இந்த ரமளான் மாதத்திலாவது அதற்கான முயற்சியைச் செய்வோம். திருமறையை அது இறக்கப்பட்ட அரபி மொழியில் ஓதப் பழகுவோம். அதன் மூலம் அதன் வார்த்தைகள் மற்றும் அர்த்தம் சிதறாமல் உச்சரிக்கக் கற்றுக் கொள்வோம். தொழுகைக்குப் பின் ஓதக் கூடியவைகள் தொழுகைக்குப் பின் ஓதக் கூடிய திக்ருகளும், இறையடியானின் மனதில் உள்ளச்சத்தையும், இன்னும் இறைவனது ஆசியையும், அவனது அருட்கொடைகளையும் பெற்றுக் கொடுக்கும். உங்களது நன்மையான காரியங்களைத் தொடர்ந்து செய்வதற்கும், இன்னும் பொடுபோக்காக அதனை விட்டு விடாமல் இருப்பதற்கும் ஏதுவாக அந்த நற்செயல்களைத் தொடர்ந்தாற் போல் செய்து கொண்டிருப்பதேயாகும். தொழுகைக்குப் பின்னால் ஓதக் கூடிய திக்ருகளில், மூன்று முறை இறைவனிடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும், அவ்வாறு அவர் பாவ மன்னிப்புக் கோருவது, தொழுகையில் கவனக் குறைவாக விடுபட்ட அமல்களுக்கு அல்லது உள்ளச்சம் விடுப்பட்டுப் போனதற்கு அது பரிகாரமாக அமையும். இன்னும் பர்ளான - கடமையான தொழுகைகளுக்குப் பிறகு நபிலான தொழுகைகளைத் தொழுவதானது, கடமையான தொழுகைகளில் கவனக் குறைவாக விடுபட்டுப் போனவைகளும், இன்னும் தவறிப் போன உள்ளச்சத்திற்கும் அது ஈடு செய்யக் கூடியதாக இருக்கும். வணக்கசாலியின் கவனத்தைத் திசை திருப்பக் கூடியவைகள் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ஆயிஷா (ரலி) அவர்கள் அவரது வீட்டின் ஒரு பகுதியில் வண்ணத்திரையை தொங்க விட்டு மறைத்து அழகுபடுத்தி இருந்தார்கள். (இதைக் கண்ட) இறைத்தூதர் (ஸல்) அவர்கள், 'அதை இங்கிருந்த அகற்றி விடுங்கள்' என்று கூறி விட்டு, ''இது நான் தொழுது கொண்டிருக்கும் பொழுது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது'' என்று கூறினார்கள். (அல் புகாரீ, ஃபத்ஹ் அல் பாரி, 10-391) அல் காஸிம் அவர்கள் அறிவிப்பதாவது, ஆயிஷா (ரலி) அவர்களிடத்தில் ஒரு துணி இருந்தது, அதில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது, அதனை வைத்து (தூங்குவதற்கு அல்லது பொருள்களைப் பத்திரப்படுத்தி வைப்பதற்கான) ஒரு மறைப்புப் பகுதியை ஏற்படுத்தி அதனைத் திரைத் துணி போல தொங்க விட்டிருந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதனை நோக்கி தொழுது கொண்டிருந்தவர்கள், ''அதனை அகற்றி விடுங்கள், ஏனென்றால் அதில் உள்ள அலங்கார வேலைப்பாடுகள் தொழுகையில் எனது கவனத்தைத் திசை திருப்புகின்றன'' என்றார்கள். அதனை அகற்றி விட்டதோடு, அதனை தலையணை உரையாகச் செய்து கொண்டார்கள். (முஸ்லிம், 3-1668). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தந்த இன்னுமொரு குறிப்பைப் பார்ப்போம் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கஃபாவில் தொழ விரும்பி உள்ளே நுழைந்தார்கள், அங்கு ஆட்டின் இரண்டு கொம்புகள் இருக்கக் கண்டார்கள். அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய பின், உதுமான் அல் ஹஜபி (ரலி) அவர்களைப் பார்த்து, இதனை மறைத்து வைக்கும்படி உங்களிடம் நான் கூற மறந்து விட்டேன், ஏனென்றால் தொழுகையாளிகளின் கவனத்தைத் திசை திருப்பக் கூடிய எதுவும் இங்கே இருக்கக் கூடாது என்றார்கள். (அபூதாவூது, 2030, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2504) மக்கள் நடமாடக் கூடிய பகுதிகளில் தொழுவது அல்லது அதிக கூச்சல், சப்தம், மக்களின் பேச்சுக்கள் நிறைந்த இடங்களிலும் அல்லது மக்கள் கூடக் கூடிய இடங்களிலும், விவாதம் செய்யும் இடங்களிலும் இன்னும் இது போன்ற சந்தர்ப்பங்களில் தொழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது எங்கெல்லாம் கவனத்தைத் திசை திருப்பி விடக் கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கின்றனவோ அங்கும் கூட தொழுவதைத் தவிர்த்துக் கொள்ளல் வேண்டும். இன்னும் அதிகமான உஷ்ணம் அல்லது கடுமையாகக் குளிரக் கூடிய இடங்களிலும் முடிந்தவரை தொழுவதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். கடுமையான உஷ்ணம் மிகுந்த பகல் பொழுதுகளில் வெப்பம் தணியும் வரை லுஹர் தொழுகையைப் பிற்படுத்துமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இப்னு அல் கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள் : 'கடுமையான வெப்பத்தில் நின்று கொண்டு தொழக் கூடியவர் தனது கவனத்தை ஒருநிலைப்படுத்தி உள்ளச்சத்துடன் தொழ இயலாது போய் விடும், அவர் அதனை விருப்பமற்ற முறையில் நிறைவேற்றக் கூடியவராக இருப்பார் என்பதே அதன் காரணமாகும்', எனவே தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வெப்பம் தணியும் வரைக்கும் தொழுகையைப் பிற்படுத்துமாறு அறிவுரை பகர்ந்திருக்கின்றார்கள், இதன் மூலம் அவர் தனது மனதை ஒருநிலைப்படுத்தி, தொழுகையை எதற்காகத் தொழுகின்றோமோ அதன் பயன்களை அடைந்து கொள்வதற்கும், உள்ளச்சத்துடன் தொழுவதற்கும் இன்னும் தனது முழுக் கவனத்தையும் வல்ல அல்லாஹ்வின் பக்கம் திருப்பிக் கொள்ளவும் இயலும்', என்றார்கள். (அல் வாபில் அஸ்ஸயிப், தார் அல் பயான், பக்.22) அழகுபடுத்தப்பட்ட, வரையப்பட்ட, கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட அல்லது படங்கள் கொண்ட கவனத்தைத் திசை திருப்பக் கூடிய தொழுகை விரிப்புகளில் தொழக் கூடாது ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், தொழுகைக்காக நின்ற பொழுது கோடுகள் போட்ட சட்டையை அணிந்திருந்தார்கள், அதன் வேலைப்பாடுகளைப் பார்த்தார்கள். தொழுகையை நிறைவு செய்த பின் அவர்கள் கூறினார்கள், ''இதனை அபூ ஜஹ்ம் இப்னு ஹுதைபா அவர்களிடத்தில் கொடுத்து விடுங்கள், எனக்கு கட்டங்கள் அல்லது அழகுபடுத்தப்படாத ஆடையான அன்பஜானி யைக் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள், ஏனென்றால் நான் தொழும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டது''. இன்னுமொரு அறிவிப்பின்படி, ''(இதில் வரையப்பட்டிருக்கும்) கோடுகள் எனது கவனத்தைத் திசை திருப்பி விட்டன'', என்றார்கள். இன்னுமொரு அறிவிப்பின்படி, ''(என்னிடம்) கோடுகள் போட்ட சட்டை இருந்தது, தொழுகையில் அதனை நான் அணியும் பொழுது அது எனது கவனத்தைத் திசை திருப்பி விடுகின்றது.'' என்று கூறியிருக்கின்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம், 556, பகுதி 3-391). படங்கள் வரையப்பட்டிருக்கும் துணிகளிலும் தொழாமல் இருப்பது சிறந்தது, இன்னும் உருவப்படங்கள் வரையப்பட்டிருக்கும் விரிப்புகளை, இன்னும் அதனைப் போன்று இன்று விற்பனைக்குக் கிடைக்கும் விரிப்புகளைத் தொழுகைக்குப் பயன்படுத்தும் பொழுது மிகக் கவனமாக இருக்க வேண்டும், அவ்வாறான விரிப்புகளில் தொழவே கூடாது. உண்பதற்கு உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உணவு தயாராக இருக்கும் பொழுது தொழாதீர்கள்''. (முஸ்லிம் - 560) உணவு தயாரிக்கப்பட்டு இன்னும் பரிமாறுவதற்குத் தயாராகி இருக்கும் பொழுது அல்லது உண்ண அழைப்புக் கொடுக்கப்பட்டதன் பின்பு, அந்த மனிதர் உணவை முதலில் உண்ண வேண்டும், ஏனென்றால் தொழுகையில் அவர் கவனம் செலுத்த இயலாது என்பதும், அவர் உண்ண விரும்புகின்ற நேரத்தில் தொழுகைக்காக நின்றால் அங்கு உள்ளச்சம் விடை பெற்று விடும் என்பதும் காரணமாகும். இன்னும் அவர் விரைந்து உண்ண வேண்டியதும் அவசியமில்லை, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''(இரவு) உணவு பரிமாறப்பட்டிருக்கும் நிலையில், தொழுகைக்கான நேரம் வந்து விட்டால், மஃக்ரிப் தொழுகைக்கு முன்பதாக முதலில் (இரவு) உணவை உண்ணுங்கள், இன்னும் உணவை வேகமாகவும் உண்டு முடிக்க வேண்டாம்.'' இன்னுமொரு அறிவிப்பின்படி : ''(இரவு) உணவு பரிமாறப்பட்ட நிலையில், தொழுகைக்கான அழைப்பு கொடுக்கப்பட்டு விட்டால், முதலில் (இரவு) உணவை உண்ணுங்கள், இன்னும் விரைந்து உண்டு முடிக்க அவசரப்பட வேண்டாம்.'' (புகாரீ, கிதாப் அல் அதான், பாப் இதா ஹழரல் தஆமு வ யுகீமத் அஸ் ஸலாத், முஸ்லிம் 557-559) இயற்கை உந்துதல் (மலஜலம்) - அவரச நிலையில் தொழாதீர்கள் ஒருவருக்கு அவசரமாக மலக் கூடத்திற்குப் போக வேண்டிய தேவை இருக்கும் நிலையில், தொழுகையில் நிற்பது அவரது உள்ளச்சத்தைப் பாதிக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிறுநீர் அல்லது மலம் கழிக்க வேண்டிய அவசர நிலையில் இருக்கும் பொழுது, தொழுவதைத் தடை செய்துள்ளார்கள். (இப்னு மாஜா, 617, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6832) எவரொருவர் அவசர நிலையில் இருக்கின்றாரோ அவர் முதலில் கழிவறைக்குச் செல்லட்டும், அதன் தேவையை நிறைவு செய்யட்டும், கடமையான தொழுகையானதாக இருந்து அதில் அவர் தவறியதைத் தவறி விட்டாலும் சரியே, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''கழிவறை செல்வதற்கான தேவை இருந்தும், தொழுகையும் ஆரம்பமாகி விட்டால், அவர் முதலில் கழிவறைக்குச் செல்லட்டும்.'' (அபூதாவூத் - 88, ஸஹீஹ் ஜாமிஇ 299) இன்னும் அவர் தொழுது கொண்டிருக்கும் பொழுது மல ஜலம் கழிப்பதற்கான தேவை வந்து விட்டால், அவர் தொழுகையை இடை நிறுத்தி விடட்டும், இயற்கையின் தேவையை நிறைவு செய்யட்டும், அவரைத் தூய்மைப்படுத்திக் கொண்டதன் பின் தொழட்டும், ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், ''உணவு தயாராகி விட்டதன் பின்பும், அல்லது ஒருவருக்கு மலஜலங்களை வெளியேற்ற வேண்டிய தேவை அதிகரிக்கும் பொழுதும் தொழுகை இல்லை.'' (முஸ்லிம், 560) சந்தேகமில்லாமல், இயற்கையின் தேவைகள் அதிகரிக்கும் பொழுது அதனை அடக்கிக் கொண்டிருப்பது உள்ளச்சத்தைப் பாதிக்கும். இந்தச் சட்டம் மலப் பாதை வழியே காற்றுப் பிரிய வேண்டிய தேவை இருக்கும் பொழுதும் பொருந்தும். தூக்க நிலையில் தொழாதீர்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) கூறினார்கள், ''இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''தொழுது கொண்டிருக்கும் நிலையில் உங்களில் ஒருவருக்கு தூக்கம் வருமானால், அவர் (தொழுகையில்) என்ன ஓதுகின்றார் என்பதனை நினைவோடு ஓதும் வரைக்கும் (அவர் போதுமான அளவு ஓய்வெடுத்து) தூங்கிக் கொள்ளட்டும்,'' அதாவது, அவர் மயக்கத்தை உணராத அளவுக்கு சிறு துயில் கொள்ளட்டும். (புகாரீ, 210) இது (கியாமுல் லைல்) இரவுத் தொழுகையைத் தொழக் கூடியவருக்கு இம்மாதிரியான தூக்க நிலைகள் ஏற்படும், அந்த நேரத்தில் (தொழக் கூடியவன் மற்றும் பிரார்த்திக்கக் கூடியவனின்) பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, இன்னும் அந்த நேரத்தில் தொழக் கூடிய ஒருவன் (தான் என்ன கேட்கின்றோம், பிரார்த்திக்கின்றோம் என்பதை) அறியாமல் கேட்டு, தனக்கு எதிராகவே பிரார்த்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடலாம். இந்த மாதிரியான நிலைகள் கடமையான தொழுகைகளின் பொழுதும் ஏற்படலாம், இத்தகைய நிலையில் தொழுகைக்கான குறிப்பிட்ட நேரம் இன்னும் மீதமிருக்கின்றது (நேரங் கடந்து விடவில்லை) என்ற நிலை இருப்பின், அவர் சிறு துயில் கொண்டு விட்டு பின்பு தொழலாம். (ஃபத்ஹ் அல் பாரி, ஸர்ஹ் கிதாப் அல் உளு, பாப் அல் உளு மினன் னவ்ம்). பேசிக் கொண்டிருக்கின்ற (அல்லது தூங்கிக் கொண்டிருப்ப)வருக்கு பின்புறமாக நின்று தொழாதீர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதனைத் தடை செய்துள்ளார்கள், அவர்கள் (ஸல்) கூறினார்கள் : ''தூங்கிக் கொண்டிருப்பவர் அல்லது பேசிக் கொண்டிருப்பவர் இவர்களுக்குப் பின்புறமாக நின்று தொழ வேண்டாம்.'' (அபூதாவூது, 694, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 375 - ஹஸன்) - ஏனென்றால் பேசிக் கொண்டிருப்பவரின் பேச்சு தொழக் கூடியவரின் கவனத்தை சிதறடித்து விடும், இன்னும் தூங்கிக் கொண்டிருப்பவரிடமிருந்து வெளிப்படுகின்றவையும் தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பி விட்டு விடலாம். அல் கத்தாபி (ரஹ்) கூறினார்கள் : ''பேசிக் கொண்டிருப்பவருக்குப் பின்னால் நின்று தொழுவதானது, அஷ் ஷாஃபிஈ மற்றும் அஹ்மத் பின் ஹம்பல் ஆகியோரின் கூற்றுப்படி மக்ரூஹ் - வெறுக்கத்தக்கது, ஏனென்றால் அவர்களது பேச்சு தொழுகையாளியின் கவனத்தைத் திசை திருப்பி விடும். (அவ்ன் அல்-மாபூத், 2-388). தூங்கிக் கொண்டிருப்பவருக்குப் பின்னால் நின்று தொழுவது குறித்து வரும் நபிமொழிகள் பலவீனமானவை என்று ஏராளமான மார்க்க அறிஞர்கள் கருதுகின்றார்கள் (அவைகளில் அபூதாவூத், கிதாப் அஸ் ஸலாத், தஃப்ரீ அப்வாப் அல் வித்ர், பாப் அத் துஆ இன்னும் இப்னு ஹஜர் - னுடைய ஃபத்ஹ் அல் பாரி, ஸர்ஹ் பாப் அஸ் ஸலா ஃகலஃப் அல் நயீம், கிதாப் அஸ் ஸலாத்). அல் புகாரீ (ரஹ்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்திருக்கின்றதொரு நபிமொழியை இவ்வாறு பதிவு செய்திருக்கின்றார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்களது படுக்கையில் நான் குறுக்கு நெடுக்காகப் படுத்துக் கிடக்கும் நிலையில் (எனக்கு முன்பாக நின்று) தொழுதிருக்கின்றார்கள். (புகாரீ, கிதாப் அஸ் ஸலாத்). முஜாஹித், தாவூத், மாலிக் ஆகியோர்கள் தூங்கிக் கொண்டிருப்பவரை முன்னோக்கித் தொழுவது மக்ரூஹ் - வெறுக்கத்தக்கது என்று கூறியுள்ளார்கள், தூங்கிக் கொண்டிருப்பவரிடமிருந்து வெளிப்பட்டு விடக் கூடியவை, தொழக் கூடியவரின் கவனத்தைத் திசை திருப்பி விடும் என்பதே காரணமாகும். (ஃபத்ஹ் அல் பாரி) தூங்கிக் கொண்டிருப்பவருக்கு பின்னால் நின்று தொழும் பொழுது, எதுவும் வெளிப்படுவதற்கான முகாந்திரம் இல்லையெனின், அது மக்ரூஹ் ஆக மாட்டாது. அல்லாஹ் மிக அறிந்தவன். தொழக் கூடியவர் தனக்கு முன்னால் உள்ள இருப்பிடத்தை சுத்தப்படுத்துதல் அல்லது சரி செய்தல் முஐகீப்(ரலி) அறிவிப்பதவாது : ஸஜ்தாச் செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக.' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரீ - 1207, ஃபத்ஹுல் பாரி, 3-79)). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழும் பொழுது (தரையைச் சுத்தப்படுத்துவதற்காகத்) மண்ணை விலக்கி விடாதீர்கள், ஆனால் அவ்வாறு செய்வதற்கு முற்பட்டீர்களென்றால் ஒருமுறை மட்டும் செய்யவும்.'' (அபூதாவூத், 946, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 7452) இதன் காரணமென்னவென்றால் உள்ளச்சத்தை வளர்த்தெடுக்க வேண்டுமென்பதே அதன் காரணமாகும், தொழுகையில் உள்ளசத்தைப் பெற விரும்புவோர்கள் அதில் அதிகமான அசைவைத் தவிர்க்கக் கூடியவர்களாக இருப்பார்கள். தொழுகையில் சுஜுது செய்யக் கூடிய இடம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற ஒருவர், அதனை தொழுகைக்கு முன்பதாகச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் தொழுகையின் பொழுது சுஜுது செய்த பின் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணைத் தட்டி விடுதவற்கும் பொருந்தும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தண்ணீரிலும், களிமண்ணிலும் சுஜுது செய்யும் பொழுது, அதன் எச்சங்கள் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும். தொழக் கூடியவர் சுஜுது செய்து விட்டு எழுந்ததும், அதனை அடிக்கடி தட்டி விட்டுக் கொண்டிருக்கக் கூடாது. அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும், ஏனென்றால் அவர் உள்ளச்சத்துடன் தொழும் பொழுது அதன் லயிப்பில் அதனை அவர் அறிந்து கொள்ள மாட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (புகாரீ, ஃபத்ஹுல் பாரி 3-72) அபூ அத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு அபீ ஷைபா அவர்கள் கூறுகின்றார்கள் : ''எனக்குச் சிவந்த நிற ஒட்டகைகள் கிடைத்தாலும், (தொழுகையில் சுஜுதை நிறைவேற்றியபின்) எனது நெற்றியில் ஒட்டிக் கொண்டிருக்கும் மண்ணை நான் தட்டி விட மாட்டேன்.'' அயாத் அவர்கள் கூறுகின்றார்கள் : தொழுகையை நிறைவு செய்யும் வரைக்கும், இறையச்சமுடைய அடியார்கள் நெற்றியில் ஒட்டிக் கொண்டிருப்பவற்றைத் தட்டி விட மாட்டார்கள்.'' (அல் ஃபத்ஹ், 3-79). இதனைப் போலவே தொழுகையாளி தனது தொழுகையை விட்டும் தன்னைப் பாராமுகமாக ஆக்கக் கூடியவற்றினின்றும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும், அதனைப் போலவே பிறரைத் தொந்திரவு செய்வதனின்றும் அவர் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். அவையாவன: பிறருக்கு இடையூறாக சப்தமாக ஓதாதீர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நீங்கள் அனைவரும் உங்களது இறைவனுடன் உரையாடுபவர்களே, எனவே உங்களில் ஒருவர் மற்றவருக்கு (சப்தமிட்டு ஓதுவதன் மூலம்) இடையூறாக இருக்க வேண்டும், ஓதும் பொழுது உங்களில் ஒருவர் மற்றவரது குரலைக் காட்டிலும் சப்தத்தை உயர்த்த வேண்டாம், அல்லது, ''தொழுகையில்'' என்று அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், 2-83, ஸஹீஹ் ஜாமிஇ 752). இன்னுமொரு நபிமொழியில், ''திருமறையை ஓதும் பொழுது ஒருவர் மற்றவரது குரலை உயர்த்திப் போட்டி போட வேண்டாம்'', என்றார்கள். (இமாம் அஹ்மத், 2-36, ஸஹீஹ் ஜாமிஇ 1951). தொழுகையில் (அங்குமிங்கும்) திரும்பிப் பார்த்தல் கூடாது அபூதர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : தன்னுடைய அடியான் தொழுகையில் இருக்கும் பொழுது அல்லாஹ் அவனை நோக்கிய வண்ணமே இருப்பான், எதுவரையெனில் அவன் தொழுகையை விட்டும் திரும்பாத வரைக்கும், ஆனால் அவன் தொழுகையை விட்டும் திரும்பி விட்டானென்றால், (அல்லாஹ்) அவனை விட்டும் திரும்பி விடுவான். (அபூதாவூத், 909, ஸஹீஹ் அபூதாவூத்) தொழுகையை விட்டும் ஒருவன் திரும்புவது இரண்டு வகையில் அமையும் : அல்லாஹ்வின் நினைவினை விட்டும் ஒருவன் தன்னுடைய கவனத்தைத் திசை திருப்புவது அவனது கண்களைத் திசை திருப்புவது இரண்டுமே தொழுகையின் பொழுது தடுக்கப்பட்ட செயல்களாகும், இவை தொழுகையாளியினுடைய வெகுமதிகளைக் குறைத்து விடும். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் தொழுகையின் பொழுது ஒருவன் திரும்பிப் பார்ப்பது குறித்துக் கேட்ட பொழுது, ''அது ஷைத்தான் அவனுடைய தொழுகையிலிருந்து (வெகுமதிகளைத்) திருடுவது போன்றதாகும்'' என்றார்கள். (புகாரீ, கிதாப் அல் அதான், பாப் அல் இல்திஃபாத் ஃபில் ஸலாத்) தொழுகையின் பொழுது ஒருவன் தனது மனதால் அலை பாய்ந்து கொண்டிருப்பவனாக அல்லது கண்களால் அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருப்பதனை இவ்வாறு விளக்கலாம், அதாவது ஒரு மனிதனை அவனது ஆட்சியாளன் அழைத்திருக்க, அவன் முன் நின்று கொண்டிருக்கும் குடிமகனைப் பார்த்து அந்த ஆட்சியாளன் உரையாடிக் கொண்டிருக்கும் பொழுது, தன்னுடைய ஆட்சியாளன் தன்னை நோக்கி என்ன கூறிக் கொண்டிருக்கின்றான் என்பதனைச் செவிமடுக்காமல், வலப் புறமாகவும் இடப் புறமாகவும் திரும்பிக் கொண்டிருப்பானேயானால், அந்த ஆட்சியாளன் சொல்ல வந்த விஷயமென்ன என்பதைப் பற்றி இவன் கேட்கவுமில்லை, அவன் சொல்ல வந்ததில் எதனையும் இவன் புரிந்து கொள்ளவும் இல்லை, ஏனென்றால், அவனது உள்ளமும், மனதும் அவனிடமில்லை அது எங்கோ அலை பாய்ந்து கொண்டிருக்கின்றது என்பதே காரணமாகும். இத்தகையவனுக்கு அந்த ஆட்சியாளன் என்ன தான் செய்து விட முடியும்? இன்னும் எப்படி அவனுக்கு உதவுவதற்கு மனது வரும்? இந்த மனிதனும் அந்த ஆட்சியாளனிடம் என்ன தான் எதிர்பார்க்க முடியும்? அந்த ஆட்சியாளனை விட்டும் அவன் அகன்று விட்ட பொழுது, அவன் வெறுக்கப்படக் கூடியவனாகவும் இன்னும் எந்தவிதத்தில் மதிப்பற்றவனாகவும் ஆகி விடுவான். தொழுகையின் பொழுது தன்னுடைய முழுக் கவனத்தையும் இறைவனின் பால் செலுத்தக் கூடியவனும், தொழுகையைப் பராக்காக்கிக் கொண்டவனும் சரி சமமாகி விட முடியாது. இறையச்சமுடையவன் மகத்துவமிக்கவனாகிய வல்ல இறைவனின் முன்பாக நாம் நின்று கொண்டிருக்கின்றோம் என்ற உணர்வுடன் அவன் அச்சத்துடனும், அற்பணிப்புடனும் நின்று கொண்டிருப்பான், இன்னும் அத்தகையவன் தன்னுடைய இறைவன் முன் நின்று கொண்டிருக்கும் பொழுது, அல்லாஹ்வின் மீதான கவனத்தை விட்டும் அல்லது தன்னுடைய பார்வையைத் திருப்பி விடுவதற்கு வெட்கப்படக் கூடியவனாக இருப்பான். இறையச்சத்துடன் தொழுபவனுக்கும் இன்னும் தொழுகையில் பாராமுகமாக இருப்பவனுக்கும் உள்ள வித்தியாசம் பற்றி ஹஸன் இப்னு அதிய்யா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் : ''கூட்டுத் தொழுகையில் ஈடுபட்டிருக்கும் இரண்டு மனிதர்கள், ஆனால் அவர்களது நற்பேறுகளோ வானத்திற்கும் பூமிக்கும் உள்ள தொலைவைப் போன்றது. ஒருவன் தன்னுடைய முழுக்கவனத்தையும் அல்லாஹ்வின்பால் திருப்பியவனாக இருக்கின்றான், அடுத்தவனோ பொடுபோக்குத் தன்மையுடனும், (இறைவனை) மறந்த நிலையிலும் நிற்கின்றான். (அல் வாபில் அல் ஸயிப் - இப்னுல் கைய்யிம், தார் அல் பயான், பக்.36) ஒருவன் தொழுது கொண்டிருக்கும் நிலையில் நன்னோக்கத்திற்காகத் திரும்பினால், அது ஒன்றும் பிரச்னையில்லை. அபூதாவூத் ல் ஸஹ்ல் இப்னு அல் ஹன்ஸலிய்யா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது : ''நாங்கள் சுபுஹ் தொழுகையை ஆரம்பித்தோம், (அப்பொழுது) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சமவெளிப்பகுதியை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.'' அபூதாவூத் அவர்கள் அறிவிப்பதாவது : ''சமவெளிப்பகுதியினைப் பாதுகாப்பதற்காக வேண்டி இரவில் ஒரு குதிரை வீரரை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி இருந்தார்கள்.'' இது எதைப் போன்றதென்றால், உமாமா பின்த் அபு அல் ஆஸ் அவர்களைச் சுமந்து கொண்டிருந்த போதும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கதவைத் திறந்து விட்ட போதும், மக்களுக்கு கற்பித்துக் கொடுப்பதற்காக மிம்பரிலிருந்து கீழிறங்கி வந்த அதேவேளையில் தொழுத பொழுதும், கிரகணத் தொழுகையின் பொழுது ஒரு அடி பின்னோக்கி காலடி எடுத்து வைத்த பொழுதும், தொழுகையின் பொழுது அதனைக் கெடுப்பதற்காக ஷைத்தான் இடையூறு செய்த பொழுது அவனை எட்டிப் பிடித்த பொழுதும் - என்பதனை ஒத்திருக்கின்றது. தொழுகையின் பொழுது குறுக்கிடும் பாம்பு, தேள் போன்றவற்றைக் கொல்லும்படியும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் இன்னும் தொழுது கொண்டிருக்கின்ற நபருக்கு முன்னால் குறுக்கே நடக்கின்றவனைத் தடுத்து நிறுத்துவதற்காக தன்னுடைய தொழுகையை இடைநிறுத்தி விடவும், இன்னும் (அதையும் மீறிச் செல்பவன் எவனோ) அவனிடம் சண்டையிடவும் கூட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இன்னும் (தொழுகையின் பொழுது இமாம் தவறிழைத்து விட்டால்) பெண்கள் தங்கள் கைகளைத் தட்டி ஓசை எழுப்பும்படியும், தொழுது கொண்டிருக்கின்ற வேளையில் உங்களுக்கு ஸலாம் சொல்லக் கூடியவரை நோக்கி கைகளை அசைத்து சைகை செய்து கொள்ளவும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கி இருக்கின்றார்கள். இன்னும் தேவையின் நிமித்தம் தொழுகையின் பொழுது பல்வேறு அசைவுகளுக்கு அனுமதி இருக்கின்றது, ஆனால் அது தேவையற்ற வகையில், விளையாட்டுத் தனமாக செய்யக் கூடிய அசைவுகள் இறையச்சத்தைப் பாதிக்கும் இன்னும் இவை போன்றவைகள் தொழுகையின் பொழுது அனுமதிக்கப்படவில்லை. (மஜ்மஊ அல் ஃபத்வா, 22-559). தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது தொழுகையின் பொழுது வானத்தை அன்னாந்து பார்ப்பதை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தடை செய்திருப்பதோடு, எச்சரிக்கையும் செய்திருக்கின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் தொழுது கொண்டிருக்கின்ற எவரும் வானத்தை அன்னாந்து பார்த்தல் கூடாது, பார்க்கக் கூடியவர் தனது பார்வையை இழந்து விடுவார். (அஹ்மத், 5-294, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 762). இன்னுமொரு அறிவிப்பில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''தொழுது கொண்டிருக்கின்ற வேளையில் வானத்தை நோக்கி அன்னாந்து பார்க்கக் கூடியவர்களே, உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?'' என்று கூறினார்கள். இன்னுமொரு அறிவிப்பில், ''தொழுகையின் பொழுது துஆக் கேட்கும் நேரத்தில் அவர்கள் தங்களது முகங்களை வானத்தை நோக்கிப் பார்க்கின்றார்கள்?'' என்று வந்துள்ளது. (முஸ்லிம், 429). இவ்வாறு தொழுகையின் பொழுது வானத்தை நோக்கிப் பார்ப்பதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளதோடு, ''அதனை அவர்கள் தடுத்துக் கொள்ளட்டும்'', அல்லது ''அவர்களது பார்வைகள் பறிக்கப்பட்டு விடும்'' என்று கூறினார்கள். (இமாம் அஹ்மத், 5-258, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 5574). தொழுது கொண்டிருப்பவர் தனக்கு முன்னால் (எச்சிலைத்) துப்ப வேண்டாம் இது இறையச்சத்திற்கு முரணானது, இன்னும் அல்லாஹ்வின் முன்னிலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது இது பண்பாடான செயலல்ல. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் தொழுது கொண்டிருப்பவர், அவருக்கு முன்பாக துப்பிக் கொள்ள வேண்டாம், தொழுது கொண்டிருப்பவருக்கும் பொழுது, அவருக்கு முன்னால் அல்லாஹ் இருக்கின்றான்.'' (புகாரீ, 397) இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்று விட்டால், அவருக்கு முன்புறமாகத் துப்ப வேண்டாம், ஏனென்றால் அவர் அருட்கொடையாளனும், இன்னும் மகத்துவமிக்கவனுமாகிய - அல்லாஹ்வினிடத்தில் உரையாடிக் கொண்டிருக்கின்றார், அவர் தொழுகைக்கான இடத்தில் நின்று கொண்டிருக்கின்ற வரையிலும், இன்னும் அவர் தனது வலப்புறமாகத் துப்ப வேண்டாம், ஏனென்றால் அவருக்கு வலப்புறமாக ஒரு மலக்கு (நியமிக்கப்பட்டு) இருக்கின்றார். அவர் தனக்கு இடப்புறமாகத் துப்பிக் கொள்ளட்டும் அல்லது அவரது பாதத்திற்கு அடியில் துப்பி அதனை மூடி விடட்டும்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ். 416, 1-512). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்களில் ஒருவர் தொழுகைக்காக நின்று விட்டால், அவர் அகிலங்களின் அதிபதியுடன் உரையாடிக் கொண்டிருக்கின்றார், இன்னும் அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ் அவனுக்கும் கிப்லாவுக்கும் இடையில் இருக்கின்றான், எனவே உங்களில் எவரும் கிப்லாவை முன்னோக்கித் துப்ப வேண்டாம், ஆனால் அவர் தனக்கு இடப்புறமாகவோ அல்லது பாதத்திற்கு கீழாகவோ துப்பிக் கொள்ளட்டும்''. (புகாரீ, அல் ஃபத் அல் பாரீ, 417, 1-513). இப்பொழுது பள்ளிவாசல்கள் கார்பெட் மற்றும் கோரைப் பாய் அல்லது ஜமுக்காளம் போன்ற தொழுகை விரிப்புகளாக விரிக்கப்பட்டு தொழுவதற்கு வசதி ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார்பெட்டுக்குக் கீழாகவோ அல்லது பாய் அல்லது ஜமுக்காளத்திற்குக் கீழாகவோ துப்பாமல் கைக்குட்டை மற்றும் காகிதத்தில் துப்பி தனது சட்டைப் பையில் பத்திரப்படுத்தி வைத்திருந்து, பின்பு வெளியில் சென்றவுடன் குப்பையில் போட்டு விட வேண்டும். தொழுகையின் பொழுது கொட்டாவி விட வேண்டாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவருக்கு கொட்டாவி வந்தால், அவரால் இயன்ற அவரை அவர் அதனை அடக்கிக் கொள்ளட்டும், அவ்வாறில்லா விட்டால் (அவரது தொழுகையில் இடையூறு செய்ய) ஷைத்தான் நுழைந்து விடுவான்.. ..'' (முஸ்லிம், 4-2293). தொழுகையாளியின் தொழுகையில் ஷைத்தான் நுழைந்து விட்டால், அவன் அவனுக்கு அதிக இடையூறுகளைச் செய்ய ஆரம்பித்து விடுவான், இன்னும் மேலதிகமாக கொட்டாவி விடுபவனைப் பார்த்து அவன் சிரிக்கின்றான் (என்றும் கூறினார்கள்). தொழுகையின் பொழுது இடுப்பில் கையை வைத்துக் கொண்டு தொழ வேண்டாம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் : ''தொழுகையின் பொழுது இடுப்பில் கை வைப்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்.'' (அபூதாவூத் 947, ஸஹீஹ் புகாரீ, கிதாப் அல் அம்ல் ஃபில் ஸலாஹ், பாப் அல் ஹழர் ஃபில் ஸலாஹ்). ஸியாத் இப்னு ஸுபைஹ் அல் ஹனஃபி என்பவர் கூறுவதாவது : ''நான் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் நின்று தொழுதேன், (அப்பொழுது) எனது கையை எனது இடுப்பில் போட்டேன், இப்னு உமர் (ரலி) அவர்கள் அதனைத் தட்டி விட்டார்கள். இன்னும் அவர் தொழுகையை முடித்ததன் பின்னால், ''இது தொழுகையில் இடையூறு விளைவிப்பதாகும்'', இதனை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்திருக்கின்றார்கள்'', என்றும் கூறினார்கள். (இமாம் அஹ்மத் 2-106 இன்னும் பலர். அல் ஹாபிழ் அல் இராக்கி அவர்கள் தனது தஃக்ரீஜ் அல் இஹ்யா எனும் நூலில் இதனை ஸஹீஹ் என்று கூறியிருக்கின்றார்கள். இன்னும் இல் இர்வா 2-94 ஐயும் பார்க்கவும்). ''(இத்தைகய) செயல்கள் ஒருவரை நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விடும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எச்சரித்திருக்கின்றார்கள், அல்லாஹ் அவ்வாறான தண்டனையிலிருந்து நம்மைப் பாதுகாப்பானாக.'' (அபூஹுiரா (ரலி) அவர்கள் வழியாக பைஹகி இதனை அறிவிக்கின்றார்கள். அல் இராகி அவர்கள், இதன் அறிவிப்பாளர் தொடர் சரியானது என்று கருத்துரைத்திருக்கின்றார்கள்). தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுதல் கூடாது ''தொழுகையின் பொழுது (கரண்டைக் காலுக்குக் கீழாக) ஆடைகளைத் தொங்க விடுவதையும் அல்லது வாயை (ச் சுற்றி துணி போன்றவற்றினைக் கொண்டு) மூடி வைத்திருப்பதும் கூடாது. (அபூதாவூத் 643, ஸஹீஹ் அல் ஜாமிஇ 6883, ஹஸன் - ஸஹீஹ்). 'அவ்ன் அல் மாபூத்' (2-347) - ல் அல் கத்தாபி அவர்கள் கூறுவதாவது : 'அல் ஸத்ல்' என்பது வழி நெடுகிலும் ஒருவர் ஆடையைக் (கிரண்டைக் காலுக்கும் கீழாக அணிந்து) தொங்க விட்டபடி செல்வது, என்றார்கள். மர்காத் அல் மஃபாதீஹ் (2-236) ல் குறிப்பிட்டிருப்பதாவது : ''அல் ஸத்ல்' என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது, ஏனென்றால் அது பெருமையடிப்பதாகவும், இன்னும் தொழுகையினை மோசமாகவும் ஆக்கக் கூடியது.'' அந் நிஹாயா - ல் குறிப்பிடப்படுவதாவது : ''ஒருவர் தன்னை ஆடையால் போர்த்திக் கொண்டு, அதனுள் தன்னுடைய கையை நுழைத்துக் கொண்டு, இன்னும் ருகூஉ வையும், சுஜுதையும் செய்வதைக் குறிக்கும்.'' இது யூதர்களின் பழக்கமாகும் என்று கூறப்பட்டுள்ளது. இன்னும் ஸத்ல் என்பது - ஒருவர் தனது தலைக்கு மேலாக துணியைப் போட்டுக் கொள்வதைக் குறிக்கும் அல்லது தோள்பட்டையின் மீது, இன்னும் கைலியின் அடிப்பகுதியை முன்பாகத்தில் தவழ விடுவது இன்னும் ஒருவருடைய தோள்பட்டையின் மேலாகப் போட்டுக் கொள்வது, இன்னும் தனது உடைகள் மற்றவைகள் சரி செய்வதிலேயே கவனம் செலுத்திக் கொண்டிருப்பது, இன்னும் இவை போன்ற செயல்கள் ஒருவரது உள்ளச்சத்தைப் பாதிக்கும், இன்னும் உடைகளை சரியானபடி அணிந்திருத்தல் அல்லது பட்டன்கள் சரியானபடி மாட்டியிருத்தல், இவை போன்றவைகள் ஒருவரது தொழுகையைப் பாதிக்காது, அல்லது தொழுகையிலிருந்து கவனத்தைத் திசை திருப்பாது. ஆனால் உடைகளைச் சரியான விதத்தில் அணியவில்லை என்றால், அதனைச் சரி செய்வதற்கும் இன்னும் அதனை பராமரிப்பதற்குமே அவர் தொழுகையின் பொழுது கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பவராக இருப்பார். இது போன்ற தொழுகையைப் பாழடிக்கக் கூடியவற்றைத் தவிர்ந்து கொள்ள வேண்டும். இன்னும் ஒருவர் தொழுகையின் பொழுது ஏன் தனது வாயை மூடிக் கொண்டிருப்பது கூடாது என்றால், அவ்வாறு வாயை இறுக மூடி இருக்கும் பொழுது அவர் திருமறையைத் தெளிவாக ஓத முடியாது என்பதும், இன்னும் சரியான முறையில் சுஜுது செய்வதற்கு அது தடையாக இருக்கும் என்பதினாலாகும். (மர்காத் அல் மஃபாதீஹ், 2-236) விலங்கினங்களைப் போல இருக்கக் கூடாது அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களது மக்களைக் கண்ணியப்படுத்தியுள்ளான், இன்னும் மனித வர்க்கத்தை படைப்பினங்களில் எல்லாம் மிகச் சிறந்த படைப்பாகப் படைத்துள்ளான், எனவே இவ்வளவு உன்னதத்துடன் படைத்திருக்கக் கூடிய மனிதப் படைப்பு? விலங்கினத்தைப் போலத் தோற்றமளிப்பதோ அல்லது விலங்கினத்தைப் போல ஒப்புவமைப்படுத்திக் கொள்வதோ அழகல்ல, வெட்கரமானது. தொழுகையின் பொழுது - விலங்கினத்தைப் போலத் தோற்றமளிப்பதையோ அல்லது நடித்துக் காட்டுவதையோ அல்லது விலங்கினம் போல நடந்து காட்டுவதையோ இஸ்லாம் தடை செய்திருக்கின்றது. ஏனெனில் இவை தொழுகையாளியின் உள்ளச்சத்தைப் பாதிக்கும் அல்லது இது போன்ற நடத்தைகள் அசிங்கமானது இன்னும் இது தொழுகையாளிக்கு ஏற்புடையதுமல்ல. உதாரணமாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது, அவர்கள் மூன்று விஷயங்களைத் தடை செய்திருக்கின்றார்கள் : (அதாவது) காக்கையைப் போலக் கத்துவது, புலால் உண்ணிகள் (புலி, சிங்கம், நாய்) போல முன்னங்கால்களைப் பரப்பிக் கொள்ளுதல், அல்லது குறிப்பிட்ட ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதன் மீதே எப்பொழுதும் தொழுதல், அதாவது ஒட்டகம் தனக்கென ஒரு இடத்தைத் தேர்வு செய்து அதன் மீதே எப்பொழுதும் உட்காருவது போல. (அஹ்மத், 3-428, அல் ஃபத்ஹ் - அல் ரப்பானி, 4-91). இன்னுமொரு அறிவிப்பின்படி, ''கழுதை போலக் கத்துவதையும், நாயைப் போல அல்லது நரியைப் போல உட்காருவதையும் (இறைத்தூதர் (ஸல்) அவர்கள்) தடை செய்திருக்கின்றார்கள்.'' (இமாம் அஹ்மத், 2-311, ஸஹீஹ் அல் தர்கீப், 556). மேற்கண்ட அனைத்தும் தொழுகையில் இருந்து கொண்டிருக்கக் கூடியவரின் உள்ளச்சத்தைப் பாதிக்கக் கூடியவைகள், எனவே அவற்றைத் தவிர்ந்து கொள்வதன் மூலமும், இன்னும் கவனத்தைத் திசை திருப்பக் கூடியவைகளை விட்டும் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். நல்ல பண்பாடுகள் குடும்பத்தாருடன் இரக்க மனப்பான்மையுடன் நடந்து கொள்ளல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது : சங்கைக்குரியோனும் புகழுக்குரியோனுமாகிய அல்லாஹ் - குடும்பத்தவர்களுக்கு நல்லதை நாடி விட்டானென்றால், அவர்களுக்குள் பரஸ்பரம் இரக்க மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவான். (அஹ்மத், 6-71, ஸஹீஹ் ஜாமிஇ 303). இன்னுமொரு நபிமொழியின்படி, : (அந்தக்) குடும்பத்தவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைத்து விட்டானென்றால், அவர்களுக்குள் பரஸ்பரம் இரக்க மனப்பான்மையை ஏற்படுத்தி விடுவான். (அப்னு அபீ அத் துன்யா இன்னும் பலர், ஸஹீஹ் அல் ஜாமிஇ, 1704). இதனை இன்னுமொரு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் தங்களுக்குள் பரஸ்பரம் அன்பு காட்ட ஆரம்பித்து விடுவார்கள். இது தான் குடும்பத்தவர்களுக்குள் சந்தோஷமனப்பான்மை விதைத்து விடுவதற்கான சிறந்த வழிமுறையாகும், இன்னும் கணவன் மனைவி இவர்களுக்கு இடையே நிலவக் கூடிய அன்பும், இரக்கமும் முக்கியமானதும், இன்னும் குடும்ப அமைதிக்கு வழிகோலக் கூடியதுமாகும், இன்னும் குழந்தைகளுடனும் கூட- ஆக அன்பை உருவாக்குவதும், குடும்பத்தில் அமைதியைக் கொண்டு வருவதும் கடுமையான கட்டுப்பாடும், முரட்டுத் தன்மையினாலும் கொண்டு வந்து விட முடியாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''அல்லாஹ் இரக்கத்துடன் நடந்து கொள்வதை விரும்புகின்றான், இன்னும் அவனும் அதனைப் போலவே (அத்தகையவர்களுக்கு) இரக்கத்துடன் நடந்து நன்மைகளை வழங்குகின்றான், முரட்டுத்தனத்திற்கும் அல்லது அதுபோன்ற எதற்கும் அல்லாஹ் நன்மைகளை வழங்குவதில்லை. (முஸ்லிம், கிதாப் அல் பிர் வல் ஸில்லாஹ் வ அல் அதாப், 2592) வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது வீட்டு வேலைகள் என்பது தங்களுக்குரியதல்ல என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், இன்னும் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது தங்களின் அந்தஸ்திற்கும் இன்னும் தகுதிக்கும் உகந்ததல்ல என்றும் சிலர் கருதுகின்றார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள், தனது ஆடையைத் தைத்துக் கொண்டார்கள், அவர்களது பாதணிகளைப் பழுது பார்த்துக் கொண்டார்கள். (இமாம் அஹ்மத் 6-121, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 4927) வீட்டில் இருக்கும் வேளைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்கள் தான் பார்த்தவற்றை இவ்வாறு விளக்குகின்றார்கள். அவர்கள் கூறினார்கள் : ''மற்ற மனிதர்களைப் போலவே அவர்களும் இருந்தார்கள், ஆடைகளைக் கழுவினார்கள், பெண் ஆட்டிலிருந்து பால் கறந்தார்கள் இன்னும் (தனக்குத் தேவையான உணவு போன்றவற்றை) தானே பரிமாறிக் கொள்வார்கள்.'' (இமாம் அல் முஸ்னத் அஹ்மத் 6-256, அல் ஸில்ஸிலத்தல் ஸஹீஹ், 671). மேலும், அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுப் பழக்க வழக்கங்கள் குறித்துக் கேட்கப்பட்ட பொழுது, ''குடும்பத்தவர்களுடன் தனது நேரத்தைக் கழிப்பார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், தொழுகைக்காக வெளியே கிளம்பி விடுவார்கள்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ் - 2-162) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற ஆரம்பித்தால், நாம் மூன்று விதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் : ஒன்று.., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம் இரண்டு.., நம்முடைய மனைவியர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றோம் மூன்றாவதாக.., நாம் இரக்கத் தன்மை கொண்டவர்களாக உணரப்படுவதுடன், முரட்டத்தனமற்ற தன்மையையும் குடும்பத்தினர் நம்மிடம் கண்டு கொள்வார்கள் அங்கே குழந்தை அழுது கொண்டிருக்கின்றது, அடுப்பில் உணவு இருந்து கொண்டிருக்கின்றது., இந்த நிலையில் எனக்கு இப்பொழுதே உணவைக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். அடுப்பில் சமையல் வேளையில் இருந்து கொண்டிருக்கின்ற மனைவிக்கு உதவியாக அழுகின்ற அந்தக் குழந்தை எடுத்து அணைத்து அதன் அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது சமையல் முடிந்து மனைவி அவற்றைத் தயார் செய்து விட்டு வரட்டுமே என்று பொறுமை காப்பதுமில்லை. அவர்களுக்கு மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை நல்லதொரு படிப்பினையாக இருக்கும். குடும்பத்தவர்களுடன் அன்பைப் பிணைத்தல், நகைச்சுவையுடன் பேசுதல் குடும்பத்தவர்களுடன் மனைவி மக்களுடன் அன்புடனும், பாசத்துடன் நடந்து கொள்ளும் பொழுது வீடானது சந்தோஷம் பூத்துக் குலுங்கும் நந்தவனமாகவும், அமைதி தவழக் கூடிய இடமாகவும் மாறி விடும். எனவே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம், கன்னிப் பெண்ணை மணந்து கொள்ளும்படி அறிவுரை கூறினார்கள், ''நீங்கள் ஏன் கன்னிப் பெண்ணை மணந்து கொள்ளக் கூடாது, அதன் மூலம் நீங்கள் அவளிடம் விளையாடலாம், அவளும் உங்களுடன் விளையாடலாம், அவளை நீங்களும், உங்களை அவளும் சந்தோஷப்படுத்த இயலுமல்லவா? என்று கூறினார்கள்'' (அல் புகாரீ, அல் ஃபத்ஹ் 9-121). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''எதன் மீது அல்லாஹ்வின் திருநாமம் உச்சரிக்கப்படவில்லையோ அவை யாவும் வீணும், விளையாட்டுமேயாகும், ஆனால் நான்கு விஷயங்களைத் தவிர : ஒன்று.., ''அவன் தனது மனைவியுடன் (உல்லாசமாக) விளையாடுவது..'' (அந் நஸயீ, உஷ்ரத் அந்நிஸா பக்.87, மேலும் ஸஹீஹ் அல் ஜாமிஇ - லும் வந்துள்ளது). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை தனது மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுடன் சேர்ந்து குளிக்கும் பொழுது, அவர்களுடன் மிகவும் பாசத்துடன் நடந்து கொள்வார்கள், இதனை அறிவிக்கின்ற ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவதாவது : ''நானும், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் கடமையான குளிப்பை ஒரே பாத்திரத்தில் (உள்ள தண்ணீரில்) குளிப்போம், இன்னும் (அந்தப் பாத்திரத்தில் உள்ள) அனைத்து தண்ணீரையும் நான் குளித்து விடுவேன் என்று என்னை பயமுறுத்தி விளையாடுவார்கள், (அப்பொழுது நான்) 'எனக்கு கொஞ்சம் மீதம் வையுங்கள்', 'எனக்கு கொஞ்சம் மீதம் வையுங்கள்' என்று கூறுவேன்,'' - இன்னும் (அப்பொழுது) நாங்கள் இருவரும் குளிப்புக் கடமையான நிலையில் இருந்தோம். (முஸ்லிம் பி ஷர்ஹ் அல் நவவீ, 4-6). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குழந்தைகளிடம் எந்தளவு பாசத்துடனும், பிரியத்துடனும் நடந்து கொண்டார்கள் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர்கள் தனது பேரப் பிள்ளைகளான ஹஸன் (ரலி) மற்றும் ஹுஸைன் (ரலி) ஆகியோர்கள் மீது எந்த அளவு பாச மழையைப் பொழிந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. இதுவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எங்கேனும் பயணம் சென்று விட்டுத் திரும்பி வந்து விட்டால், அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் சந்தோஷத்தின் மிகுதியால் குழந்தைகள் குதூகலிக்க ஆரம்பித்து விடுவார்கள், அவர்களை வரவேற்க விரைந்து வெளியே வருவார்கள், என்பதைக் கீழ்க்காணும் நபிமொழியில் இருந்து அறிந்து கொள்ள முடிகின்றது. அப்துல்லா இப்னு ஜாஃபர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : எப்பொழுதெல்லாம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி வருகின்றார்களோ, அப்பொழுது நாங்கள் வெளியே வந்து அவர்களைச் சந்திப்போம் (வரவேற்போம்). ஒருநாள் இறைத்தூதர் (ஸல்) அவர்களை நாங்கள் சந்தித்த பொழுது, நானும், ஹஸன், ஹுஸைன் ஆகியோர்கள் இருந்தோம். அப்பொழுது (ஒட்டகத்தில் அமர்ந்திருந்த அவர்களுக்கு) முன்னால் ஒருவரையும், மற்றவர்களை அவர்களுக்குப் பின்னாலும் அமர வைத்தார்கள், மதீனாவை அடையும் வரைக்கும் நாங்கள் அவ்வாறிருந்தோம்.''. (ஸஹீஹ் முஸ்லிம், 4-1885 - 2772, துஹ்ஃபதுல் அஹ்வதி 8-56 ஐப் பார்க்கவும்). அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் கொண்ட இல்லத்தையும், இன்னும் இவை அனைத்தையும் மறந்து விட்ட இல்லங்களையும் சற்று நினைத்துப் பாருங்கள். அங்கு சந்தோஷமாகச் சிரித்து பேச முடிவதில்லை, மனங்கள் நெருங்காமல் விலகியே இருக்கும், இன்னும் ஒருவர் மற்றவரிடம் காட்டக் கூடிய கருணை, இரக்கமென்பதே இல்லாதிருக்கும். இன்னும் சில தந்தைமார்கள் தங்களது பிள்ளைகளை அணைத்து முத்தமிடுவதைக் கூட கௌரவக் குரைச்சலாகக் கருதுகின்ற நிலையும் நம் சமூகத்தில் இருக்கின்றது. இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் கீழ்க்கண்ட நபிமொழியை சற்று சிந்தித்துப் பார்ப்பது நல்லது. அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : அல் அக்ராஉ (ரலி) அவர்கள் அருகில் உட்கார்ந்திருந்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பேரப் பிள்ளையான ஹஸன் (ரலி) அவர்களை முத்தமிட்டார்கள். (அப்பொழுது) அல் அக்ராஉ (ரலி) அவர்கள் கூறினார்கள் : 'எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கிறார்கள், இன்னும் அவர்களில் எவரையும் நான் முத்தமிட்டதில்லை,' என்றார், அவரை உற்றுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ''எவரொருவர் (மற்றவர்கள் மீது) கருணை காட்டவில்லையோ அவர்கள் மீது கருணை காட்டப்பட மாட்டாது (அல்லாஹ் கருணை காட்ட மாட்டான்)'' என்று கூறினார்கள். வீட்டில் கெட்ட பழக்கங்களைத் தடுப்பது பொய் பேசுவது, புறம் பேசுவது, கோள் சொல்வது மற்றும் பிறரை எள்ளி நகையாடுவது போன்றவையும் இன்னும் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட பல பழக்க வழக்கங்கள் யாவும் அதிகமான குடும்பங்களில் மிக சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இத்தகைய கெட்ட பேச்சுகளை இஸ்லாமிய குடும்பங்களில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட வேண்டும். இத்தகைய கெட்ட பழக்க வழக்கங்களை அடியோடு ஒழிப்பதற்கான சரியான வழிமுறை அத்தகையவர்களை அடித்துத் திருத்துவதே என்ற கொள்கையைக் கொண்டவர்களாக பலர் இருக்கின்றார்கள். கீழ்க்கண்ட பாடம் நமக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : ''குடும்பத்தவர்களில் யாராவது பொய் சொல்லி விட்டார்கள் என்று தெரிந்தால், அவர்கள் அதற்காக மன்னிப்புக் கோரும் வரைக்கும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அந்த நபரைக் கண்டு கொள்ள மாட்டார்கள்'' (முஸ்னத் அஹ்மத், 6-152, ஸஹீஹ் அல் ஜாமிஇ 4675). அடித்து திருத்துவதைக் காட்டிலும், இன்னும் இது போன்ற தண்டனைகளைக் கொடுப்பதைக் காட்டிலும் அந்த நபரைப் புறக்கணிப்பது, அல்லது பேசாமல் இருப்பது போன்ற தண்டனைகளைக் கொடுப்பது, அவரைத் திருத்துவதற்கான நல்ல விளைவுகளைத் தரும், இன்னும் அடித்துத் திருத்துவதை விட சரியான விளைவினைத் தரும், எனவே பெற்றோர்கள் தங்களது குடும்பத்தவர்கள் தவறு செய்யும் பொழுது அவர்களை அடித்துத் திருத்த நினைக்காமல், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருக்கும் வழிமுறைப்படி நடந்து கொள்வது நல்ல மாற்றங்களைக் கொடுக்கும். குடும்பத்தவர்கள் கண்ணில் படும்படியாக சாட்டை, கம்பு போன்றவற்றைத் தொங்க விடுதல் தண்டனைகள் என்பது இழந்து விட்ட ஒழுக்கத்தை மீட்டிக் கொண்டு வருவதற்கானதொரு இறுதி வழிமுறையாகும். இதுவே சாட்டை, கம்பு போன்ற தண்டனைக் கருவிகளை வீட்டினர் கண்களில் படும்படியாக வைக்கக் கூறுவதின் கருத்தாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''உங்கள் குடும்பத்தவர்கள் கண்களில் படும்படியான இடத்தில் சாட்டையைத் தொங்க விடுங்கள், அதுவே அவர்களை அதிகம் ஒழுக்கமுள்ளவர்களாகத் திகழச் செய்வதற்கான சிறந்த வழிமுறையாகும்.'' (அத்தபரானி, 10-344,345: அல் ஸில்ஸிலத்துல் ஸஹீஹ் 1447). அந்த சாட்டையை அவர்கள் பார்க்கும் பொழுதெல்லாம், அவர்கள் கெட்ட பழக்க வழக்கங்களிலிருந்தும், எண்ணங்களிலிருந்தும் தவிர்ந்து வாழ முயற்சிப்பதோடு, ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் அந்த சாட்டையின் மூலமாக நமக்குத் தண்டனை கிடைத்து விடுமே என்ற அச்சமும் அவர்களை ஆட்கொள்ளும். இதுவே அவர்களைச் சீர்திருத்தக் கூடிய சிறந்த வழிமுறையாகவும் ஆகி விடும், நல்ல பண்பாடுகளையும் அவர்களிடம் உருவாக்கும். இப்னுல் அன்பாரீ அவர்கள் கூறுவதாவது : ''அடிப்பது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அந்த சாட்டையைத் தொங்க விடக் கூடாது, ஏனென்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எதற்கெடுத்தாலும் அந்த சாட்டையைக் கொண்டு அடித்துத் திருத்துங்கள் என்று யாருக்கும் கட்டளையிடவில்லை'', அதன் உண்மையான அர்த்தம் என்னவெனில் அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகத் திகழச் செய்ய வேண்டும் என்பதேயாகும். (ஃபைழ் அல் கதீர் - அல் மன்னாவி, 4-325). அடித்துத் திருத்துவது என்பது (முதன்மையான) வழிமுறை கிடையாது, எதற்கெடுத்தாலும் கையில் பிரம்பை எடுத்துக் கொண்டிருக்கக் கூடாது, அனைத்து வித வழிமுறைகளும் பயனற்றுப் போகும் பொழுது அல்லது வலிமையைக் கண்டிப்பாகப் பிரயோகப்படுத்தியே ஆக வேண்டும் அதன் மூலம் குடும்பத்தினர்களிடம் கீழ்ப்படிதலைக் கொண்டு வர முடியும் என்ற நிலை இருக்கும் பொழுது மட்டுமே கையில் சாட்டையையோ அல்லது பிரம்பையோ கையில் எடுக்க வேண்டும். அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான் : எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். (4:34) மேற்கண்ட வழிமுறைப்படி தான் தண்டனையின் முறைகளை அமைத்துக் கொள்ளல் வேண்டும். இன்னுமொரு நபிமொழி நமக்கு இவ்வாறு அறிவுறுத்துகின்றது : ''உங்களது குழந்தை ஏழு வயதை அடைந்து விட்டால் அவர்களைத் தொழும்படி ஏவுங்கள், இன்னும் பத்து வயது வரை அவர்கள் தொழவில்லை என்றால் அடித்துத் (தொழும்படி) ஏவுங்கள்.'' (சுனன் அபூதாவூத், 1-334 : இர்வா அல் கலீல், 1-266 ஐயும் பார்க்கவும்). தேவையில்லாத நிலையில் அவர்களை அடிப்பது, அது ஒரு அடக்குமுறையாகும். எப்பொழுதும் தனது தோள்பட்டையில் பிரம்பு ஒன்றைத் தொங்க விட்டுக் கொண்டு திரிகின்ற ஒரு மனிதரை மணமுடித்துக் கொள்ள வேண்டாம் என்று ஒரு பெண்மணிக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தார்கள். அதாவது, அதாவது அந்த பிரம்பைக் கொண்டு அவர் தனது மனைவியர்களை அடிக்கக் கூடிய பழக்கமுடையவராக இருந்தார் என்பதனால் அவரை மணக்க வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். இன்னும் சிலர் இந்த வழிமுறைகளை எப்பொழுதுமே பின்பற்றக் கூடாது என்று கூறக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், இவர்கள் இறைநிராகரிப்பாளர்களின் கொள்கையைப் பின்பற்றுகின்றவர்களாவார்கள். இன்னும் இது இஸ்லாமிய இறைச்சட்டங்களுக்கு முரணான கருத்துமாகும். வீட்டின் தீமைகள் கணவர் இல்லாத சமயங்களில் மணமுடிப்பதற்கு தடை இல்லாத உறவினர்களின் வீட்டிற்குள் நுழையும் பொழுது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்ப சந்திப்புகளின் பொழுது ஆண்களும், பெண்களும் தனித்தனி இடங்களில் தான் அமர வேண்டும். குடும்ப வாகன ஓட்டிகள் மற்றும் ஆண், பெண் வேலைக்காரர்கள் விஷயத்திலும் மிகவும் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். ஒழுங்கீனமாக நடந்து கொள்ளக் கூடியவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றி விடுங்கள் தொலைக்காட்சியின் தீமைகளிலிருந்து எச்சரிக்கையாக இருங்கள் தொலைத் தொடர்பு சாதனங்கள் வழியாக வருகின்ற தீமைகளிலிருந்தும் எச்சரிக்கையாக இருங்கள். இறைநிராகரிப்பாளர்களின் சின்னங்கள், அவர்களது கடவுள்களின் உருவப்படங்கள், இன்னும் அவர்கள் வணங்கக் கூடியவைகள், இன்னும் இது போன்ற அடையாளங்களை உங்களது இல்லங்களிலிருந்து அகற்றி விடுங்கள். உருவப்படங்களையும், அதனை ஒத்த அனைத்தையும் அகற்றி விடுங்கள். உங்கள் இல்லங்களில் புகைபிடிக்க யாரையும் அனுமதிக்காதீர்கள் வீட்டில் நாயை வளர்க்கக் கூடாது. வீட்டினை மிதமிஞ்சிய வகையில் அலங்காரம் செய்வதையும் தவிர்த்திடுங்கள் (சுமாரான முறையைக் கடைபிடியுங்கள்). வீட்டிற்கு உள்ளே, வெளியே வீடு கட்டுவதற்குச் சிறந்த இடத்தையும், டிஸைனையும் தேர்வு செய்யுங்கள் இறைநம்பிக்கை கொண்டவர்கள் தங்களது இல்லங்கள் எந்தமாதிரியாக அமைய வேண்டும் என்பதைப் பற்றிக் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள், மற்றவர்களைப் போல ஏனோ தானோவென்று இருக்க மாட்டார்கள். அதன் அமைவிடம், உதாரணமாக : உங்களது இல்லம் பள்ளிவாசலுக்கு மிக அருகாமையில் இருக்க வேண்டும். இதில் பல நன்மைகள் இருக்கின்றன : தொழுகைக்கான அழைப்பொலியானது அவருக்கு எப்பொழுதும் தொழுகையைப் பற்றி நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும், இன்னும் தூக்கத்திலிருக்கும் சமயங்களில் அவரை எழுப்பியும் விடும், வீட்டிற்கு அருகாமையில் பள்ளிவாசல் இருக்கும் பொழுது ஆண்கள் கூட்டாகச் சேர்ந்து தொழுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும், பெண்கள் பள்ளிவாசலில் ஓதப்படும் குர்ஆனில் கிராஅத் சப்தத்தையும், திக்ருகள், பயான்கள் போன்றவற்றைச் செவிமடுக்க முடியும், பள்ளிவாசலில் நடைபெறும் இஸ்லாமிய வகுப்புகளில் கலந்து கொண்டு குழந்தைகள் பயன் பெற முடியும், அவர்கள் திருமறைக் குர்ஆனையும், திக்ருகளை மனனமிடுவதற்கும், இன்னும் இது போன்ற பல நன்மையான விஷயங்களைக் கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படும். வளர்ந்து வரும் நகரங்களில் இப்பொழுது அபார்ட்மெண்டுகள், கூட்டுக் குடியிருப்புகளில் முஸ்லிம்கள் வீடெடுத்து தங்க வேண்டிய நிலை ஏற்படுகின்றன. அது போன்ற சமயங்களில் முஸ்லிம்கள் நிறைந்து வாழக் கூடிய குடியிருப்புகளில் வீடெடுக்க வேண்டும். இறைநிராகரிப்பாளர்கள் அதிகம் வாழக் கூடிய குடியிருப்புகள் மற்றும் ஆண்களும், பெண்களும் கலந்து பழகும் முறைகள் உள்ள இடங்கள் போன்ற இடங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் இல்லங்களில் நடைபெறுகின்றவைகள் வெளியில் தெருவில் நடந்து போகின்றவர்களின் கண்களுக்குப் படும்படியாக இருக்கக் கூடாது. அதுபோலவே தெருவில் நடக்கக் கூடியவற்றைத் தெளிவாகப் பார்க்கும்படியாகவும் உங்களது இல்லங்களின் அமைப்புகள் இருக்கக் கூடாது. அதற்காக ஜன்னல்கள், வாசல்கள் போன்றவற்றில் திரைகள் மாட்டப்பட்டிருக்க வேண்டும், உயர்ந்த மதில் சுவர்கள், கம்பி வலைகள் போன்றவற்றை வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பாக அமைத்திருக்க வேண்டும். உங்களது இல்லங்களின் அமைப்புகளைப் பொறுத்தவரையில், உதாரணமாக : திருமண முடிப்பதற்கு தடையில்லாத ஆண்கள் மற்றும் பெண்கள் வீட்டிற்கு விருந்தினர்களாக வரும் பொழுது அவர்களை பிரித்து வைப்பதற்கான ஏற்பாடுகள் வீட்டில் இருக்க வேண்டும். உதாரணமாக, ஆண்கள் மற்றும் பெண்கள் நுழைவதற்கான தனிவழி மற்றும் அமரும் இடங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்ய இயலவில்லை என்றால், திரைச் சீலைகள் போன்றவற்றினைக் கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும். உங்களது வீட்டுச் ஜன்னல்களை திரை கொண்டு மூடி விடுங்கள், அதன் மூலம் உங்களது அண்டை அயலார்கள், அல்லது தெருவில் போவோர் வருவோர் உங்களது வீட்டின் உள்பகுதியில் உள்ளவற்றைப் பார்ப்பது தடை செய்யப்படுகின்றது, குறிப்பாக இரவு நேரங்களில் உங்களது இல்லங்களுக்குள் விளக்குகள் எரிந்து கொண்டிருக்கும் பொழுது, திரையிடப்படாத வீடுகளுக்குள் நடப்பவற்றை தெருவில் அல்லது பக்கத்து வீடுகளில் உள்ளோர் தெளிவாகக் காண முடியும். எனவே, இது குறித்துக் கவனமாக இருக்க வேண்டும். உங்களது வீட்டில் உள்ள கழிப்பிடங்கள் கிப்லாவை முன்னோக்கியவைகளாக இருத்தல் கூடாது. உங்களது இல்லங்களில் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாகவும், இன்னும் இஸ்லாமிய வழிமுறைகள் பேணப்படுவதனை எளிதாக்கக் கூடியதாகவும் இருக்க வேண்டும். ''தன்னுடைய அடியானுக்கு வழங்கியிருக்கின்ற அருட்கொடைகளின் அடையாளங்கள் அவனிடம் தெரிவதை அல்லாஹ் விரும்புகின்றான்.'' (அத்திர்மிதீ 2819) சந்தோஷமான வாழ்விற்கு மூன்று வழிமுறைகள் உள்ளன, அதனைப் போலவே துன்பத்தை வரவழைத்துக் கொள்வதற்கும் மூன்று வழிமுறைகள் உள்ளன. சந்தோஷம் என்பது : நேர்மையான மனைவி, அவளை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களை அவள் மகிழ்விப்பாள், நீங்கள் அவளுடன் இல்லாத சமயங்களில் அவளையும், உங்களது உடமைகளையும் பாதுகாக்கக் கூடிய நம்பிக்கையைப் பெற்றவளாக இருப்பாள், உங்களது தனிமையை விரட்டக் கூடியவளாகவும் இருப்பாள், இன்னும் வீடானது நிறைந்ததாகவும், நல்ல வசதிகளைக் கொண்டதாகவும் இருக்கும், இதுவே சந்தோஷமான வாழ்க்கைக்கான அடித்தளமாகும். இன்னும் துன்பமான அல்லது கொடுமையான வாழ்விற்கான எடுத்துக்காட்டு, ''அவளை நீங்கள் காணும் பொழுது உற்சாகமிழந்து விடுவீர்கள், வார்த்தைகளைக் கொண்டு உங்களை நோவினை செய்யக் கூடியவளாகவும், நீங்கள் இல்லாத சமயங்களில் அவளையும், உங்களது உடமைகளையும் பாதுகாப்பதற்கான நம்பிக்கையை இழந்தவளாகவும் இருப்பாள், உங்களது தனிமையை அவள் போக்கக் கூடியவளாக இருக்க மாட்டாள், உங்களது தேவைகளுக்கான ஒத்துழைப்பும் அவளிடமிருந்து கிடைக்காது. (அல் ஹாகிம் 3-262, ஸஹீஹ் ஆல் ஜாமிஇ, 3056) சுகாதாரம் சம்பந்தப்பட்டவற்றுக்கு முக்கியத்தும் கொடுங்கள், கற்றோட்டமான வீடுகள், இயற்கையான வெளிச்சம் கிடைக்கும்படியான அமைப்பு மற்றும் இது போன்ற சுகாதாரத்தை மேம்படுத்துவதற்குண்டான வசதிகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இது தங்களது வாய்ப்பு, வசதிகள், மற்றும் வளங்களைப் பொறுத்து அமைத்துக் கொள்ளல் வேண்டும். வீட்டை கட்டுவதற்கு முன்பு அண்டை அயலார்கள் பற்றி அறிதல் இந்தத் தலைப்பினைத் தேர்வு செய்வதற்கான முக்கியத்துவம் இருக்கின்றது. இன்றைய சூழ்நிலையில், அண்டை அயலார்கள் ஒருவரது பழக்க வழக்கங்களில் அதிக தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியவர்களாக இருக்கின்றார்கள், ஏனென்றால் வீடுகள் நெருக்கமாக அமைக்கப்படுகின்றன, மக்கள் நெருங்கி வாழும் சூழ்நிலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் போன்றவை மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவைகளாக இருக்கின்றன. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நான்கு விதமான சந்தோஷங்கள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று நேர்மையான அண்டை வீட்டார், இன்னும் நான்கு வகையான கேடுகள் பற்றிக் கூறினார்கள், அவற்றில் ஒன்று கெட்ட அண்டை வீட்டார். (அபூ நயீம் - அல் ஹில்யா, 8-388, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 887). இந்த விஷயத்தின் பாரதூரமான விளைவுகளின் காரணமாகவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், கெட்ட அண்டை அயலாரின் தீங்குகளிலிருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தித்துள்ளார்கள். அதாவது, ''அல்லாஹும்ம இன்னீ அஊதுபிக மின் ஜார் அல் ஸுஃ ஃபீ தார் அல்-முகாமஹ் ஃப இன்ன ஜார் அல் பாதியா யாதஹாவ்வில்'' (யா அல்லாஹ், எனது நிரந்தரமான இல்லத்தின் (அருகில் உள்ள) அண்டை அயலார்களின் தீங்குகளை விட்டும், (இன்னும்) பாலைவனத்தில் (பயணத்தின் பொழுது என்னுடன்) அருகாமையில் உள்ள அண்டை அயலாரிடமிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்''. உங்களது நிலையான இல்லங்களுக்கு மிக அருகாமையில் உள்ள கெட்ட அண்டை அயலார்கள், இவர் (களின் தீங்கு)களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்ளுங்கள், ஏனென்றால் பாலைவன (பயணத்தில் உங்களுடன் பயணமாகக் கூடியவர்) உங்களுடனேயே (இறுதி வரை தொடர்ந்து) வரக் கூடியவராகவும் உள்ளார். (புகாரீ - அல் அதப் அல் முஃப்ரத் 117, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 2967). பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களது குழந்தைகள் கெட்ட நடத்தையுள்ளவர்களாக இருப்பின் அவர்களால் விளையக் கூடிய தீங்குகள், துன்பங்கள் பற்றி நாம் அதிகம் விவரிக்கத் தேவையில்லை. எனவே மேற்கண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்களின் அறிவுரைப்படி அண்டை அயலார்களைத் தேர்வு செய்து அதன் பின் நமது இல்லங்களை அமைத்துக் கொள்வது மிகச் சிறந்த இஸ்லாமிய வாழ்வுக்கு வழிவகுக்கும். இன்னும் வாடகைக்குத் தங்களது இல்லங்களை விடக் கூடியவர்களும் நல்ல இஸ்லாமியப் பற்றுள்ள குடும்பங்களுக்கு வாடகைக்கு விடுவது சிறந்தது. அல்லது தனக்கு அருகில் உள்ள வீட்டார்களுக்கு இஸ்லாமியச் சூழ்நிலையை அறிமுகப்படுத்துவதும், அவர்களால் எழக் கூடிய பிரச்னைகளைத் தவிர்க்கக் கூடிய வழிமுறையாகவும் அமையும். நல்ல அயலார்கள் விலைமதிப்பற்ற செல்வத்தைப் போன்றவர்கள் வீட்டுப் பராமரிப்பு மற்றும் வீட்டுச் சாதனங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது இன்றைய தொழில் வளர்ச்சி அடைந்திருக்கும் நாட்களில் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது அல்லாஹ்வின் அருட்கொடையாகும், அது நம்முடைய வாழ்க்கை வசதிகளை மிகவும் எளிதாக்கி இருக்கின்றது, நம்முடைய நேரங்களை மிச்சப்படுத்தி இருக்கின்றது, அதாவது வீட்டுச் சாதனங்களைப் பொறுத்தவரையில் குளிர்சாதனப் பெட்டிகள், ஏர்கண்டிஷனர்கள், சலவை இயந்திரங்கள், மாவரைக்கும் இயந்திரங்கள், பழச்சாறு பிழியும் இயந்திரங்கள் என இன்னும் இது போன்ற எண்ணற்ற வீட்டு உபயோகச் சாதனங்கள் வந்து விட்டன. இவற்றில், விளம்பரங்களில் காணும் பொருள்களைக் கண்டு ஏமாந்து விடாமல், நல்ல தரமானவற்றைத் தேர்வு செய்து வாங்க வேண்டும், இதில் மிதமிஞ்சிய தன்மை இருக்கக் கூடாது அல்லது பொருளாதாரத்தை விரையம் செய்யும் அளவுக்கோ, அல்லது கடனுக்கு வாங்கும் நிலைக்கோ செல்லக் கூடாது. அதாவது பயன்பாடு மற்றும் ஆடம்பரம் இவற்றுக்கு இடையில் நடுநிலையைப் பேண வேண்டேமே ஒழிய, மிதமிஞ்சிய அளவில் வீணான செலவுகளைச் செய்யக் கூடாது. எளிதில் உடையக் கூடிய சாதனங்களை பாதுகாப்பான இடங்களில் பொறுத்த வேண்டும், அல்லது வைக்க வேண்டும். ஆனால் சிலர் இதிலெல்லாம் கவனம் செலுத்துவதில்லை, இன்னும் பூச்சி புழுக்கள் ஊர்ந்து செல்லும் குப்பை மேடாகவும், சாக்கடைத் தண்ணீர் அடைத்து துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும், வீட்டில் உள்ள பொருட்கள் அங்கும் இங்கும் இரைந்து குப்பை மேடாகவும், உடைந்த கண்ணாடித் துண்டுகள் அல்லது பர்னிச்சர்கள் போன்றவை வீட்டின் இடத்தை அடைத்துக் கொண்டுமிருப்பதைப் பற்றி பல மனைவிமார்கள் தங்கள் கணவர்மார்களிடம் குறைபட்டுக் கொண்டாலும், இவர்கள் அது பற்றிக் கவலைப்படுவதில்லை. இவ்வாறில்லாமல், வீட்டினை ஒழுங்கு செய்வதில், சாதனங்களைச் சரி செய்வதில், இன்னும் பராமரிப்புச் செய்வதில் ஆண்கள் பெண்களுக்குத் துணையாக இருக்க வேண்டும். அதுவும் குடும்ப ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கக் கூடியதாக இருக்கும். அதுவல்லாமல் வீடு குப்பை மேடாகக் காட்சி அளிப்பது மனதுக்கு சங்கடத்தை உண்டாக்கும், வீடு அமைதி தவழும் இடமாக இல்லாமல் வீட்டில் தங்குவதற்கே மனது இடங்கொடுக்காத நிலைதான் உண்டாகும். இதுவும் ஒரு வகையில் தம்பதியினரின் சந்தோஷத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும், திருமண உறவில் விரிசல்கள் மற்றும் சுகாதாரக் கேடுகளையும் விளைவிக்கும். வீட்டுச் சூழ்நிலைகளைக் கெடுக்கக் கூடிய இந்த அம்சங்களை விரைந்து சரி செய்யக் கூடியவர்கள் தான் உங்களில் மிகச் சிறந்தவர் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குடும்பத்தினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பின் மீது கவனம் செலுத்துதல் தங்களது குடும்பத்தினர்களின் எவராது நோயுற்றால் அவர்கள் மீது முஅவ்விதத்தைன் (குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்) என்று சொல்லக் கூடிய இரண்டு அத்தியாயங்களை ஓதி அவர்கள் மீது ஊதக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (முஸ்லிம், 2192) தனது குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் நோயுற்ற பொழுது, சூப் செய்யும்படி தனது குடும்பத்தவர்களிடம் கூறுவார்கள், அது அவருக்காகத் தயார் செய்யப்பட்டு கொண்டு வரப்படும் பொழுது, அதனைக் குடிக்குமாறு கூறி விட்டுக் கூறுவார்கள், ''நோயினுடைய வருத்தத்தில் இருப்பவரின் மனதை இது திடப்படுத்தும், உங்களில் ஒருவரது முகத்தில் உள்ள தூசியைத் தட்டி விடுவது போல நோயுற்றவரின் இதயத்தில் உள்ள (அழுக்குகளை அது) சுத்தப்படுத்தும் (குணப்படுத்தும்). (அத்திர்மிதி, 2039, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 4646). வருமுன் (பாது)காப்பு நடவடிக்கைகள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''இரவு நேரம் வந்து விட்;டால், உங்களது குழந்தைகளை வீட்டில் இருக்கச் செய்யுங்கள், ஷைத்தான்கள் அந்த நேரத்தில் (தங்களது இருப்பிடங்களில் இருந்து) வெளிக்கிளம்பி பரவி வருவார்கள். இரவிற்கான நேரம் கழிந்து விட்டால், உங்களது குழந்தைகளை வெளிச் செல்ல அனுமதியுங்கள், வீட்டுக் கதவுகளை அல்லாஹ்வின் பெயர் கொண்டு தாழிட்டுக் கொள்ளுங்கள், உங்களது (சமையல்) பாத்திரங்களையும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு மூடி விடுங்கள், (மூடுவதற்கு எதுவுமில்லை என்றாலும்) அந்த பாத்திரத்தின் மீது சிறு குச்சியையேனும் அல்லாஹ்வின் பெயர் கொண்டு வைத்து விடுங்கள், இன்னும் விளக்குகளை அணைத்து விடுங்கள்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ், 10-88,89). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிம் ல் பதிவு செய்யப்பட்டிருக்கின்றதொரு நபிமொழியில், : ''உங்களது கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளங்கள், பாத்திரங்களை மூடி வையுங்கள், விளக்குகளை அணைத்து விடுங்கள், கயிறுகளை சரியான முறையில் முடிச்சிடுங்கள் (அதாவது தண்ணீர் குடுவைகள் - அந்தக் காலத்தில் தண்ணீர்க் குடுவைகளின் வாய்ப் பாகங்களை சிறு கயிறுகள் கொண்டு முடிச்சிட்டுக் கொள்ளும் பழக்கம் இருந்தது), மூடப்பட்ட கதவுகளை ஷைத்தான் திறக்க மாட்டான், அல்லது மூடப்பட்டவை (பாத்திரங்களையும்) அவன் திறக்க மாட்டான் அல்லது முடிச்சிட்டவைகளையும் அவன் அவிழ்க்க மாட்டான். எலியானது உங்களது வீட்டை தீக்கிரையாக்கி விடக் கூடும். (அதாவது விளக்கை அணைக்காமல் விட்டு விட்டால், இரவில் ஓடித் திரியும் எலியானது விளக்கைத் தட்டி விட்டு, வீட்டை தீப்பிடிக்க வைத்து விடலாம்). (இமாம் அஹ்மத், அல் முஸ்னத் 3-103, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 1080). இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ''நீங்கள் தூங்கும் பொழுது, உங்களது வீடுகளைத் தீப்பிடிக்கச் செய்து விடாதீர்கள். (புகாரீ, அல் ஃபத்ஹ் 11-85). அல்லாஹ் மிக அறிந்தவன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக, இறைவன் தன்னுடைய அருட்கொடைகளை அன்னார் மீது பூரணமாக்கி வைப்பானாக..!

Related

பெட்டகம் சிந்தனை 87865482324219648

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item