30 வகை பருப்பு உணவுகள்!

30 வகை பருப்பு உணவுகள்! தால் பர்ஃபி தேவையானவை: உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், வெல்லம் (அல்லது) பொடித்த சர்க்கரை...

30 வகை பருப்பு உணவுகள்! தால் பர்ஃபி தேவையானவை: உளுத்தம்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், வெல்லம் (அல்லது) பொடித்த சர்க்கரை - ஒரு கப், நெய் - தேவையான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பை, வாசம் வரும்வரை சிவக்க வறுத்தெடுங்கள். பாசிப்பருப்பையும் சிவக்க வறுத்துக்கொள்ளுங்கள். இரண்டையும் மிஷினில் அல்லது மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். பொடித்த சர்க்கரையையும் மாவுடன் சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நெய்யை சூடாக்கி, சிறிது சிறிதாக மாவில் சேர்த்து, உருண்டை பிடிக்கும் பதம் வந்ததும் உருண்டைகளாகப் பிடியுங்கள். சின்ன அச்சுகளிலோ அல்லது சிறு கிண்ணங்களிலோ மாவை அடைத்து ஒரு டிரேயில் தட்டி, பர்ஃபிகளாக எடுக்கலாம். வெல்லம் சேர்ப்பதாக இருந்தால், பொடித்த வெல்லத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, கரைந்ததும் வடிகட்டி, சூடான நெய்யையும் வெல்ல நீரையும் சிறிது சிறிதாக மாவில் ஊற்றி, உருண்டை பிடிக்கும் பதம் வரும் வரை கலந்து, பிறகு பர்ஃபிகளாக செய்யுங்கள். ------------------------------------------------------------------ பாசிப்பருப்பு இனிப்பு முறுக்கு தேவையானவை: பச்சரிசி மாவு (பதப்படுத்தும் முறை கீழே தரப்பட்டுள்ளது) - 2 கப், பொட்டுக்கடலைப் பொடி - அரை கப், பாசிப்பருப்பு மாவு (வறுத்து, அரைத்தது) - கால் கப், சர்க்கரை தூள் - ஒரு கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்பு, பொட்டுக்கடலை மாவுகளுடன் வெண்ணெய், உப்பு, சர்க்கரை சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளுங்கள். முறுக்கு அச்சுகளில் வைத்து, எண்ணெயைக் காயவைத்து, பிழிந்து வேகவைத்தெடுங்கள். விருப்பப்பட்டால் கைமுறுக்காகவும் சுற்றலாம். தீயை ஒரே சீராக எரியவிடவேண்டும். இல்லையெனில் (சர்க்கரை சேர்ந்திருப்பதால்) முறுக்கு கருகி விடும். குறிப்பு: பச்சரிசியை கழுவி, நிழலில் உலர்த்தி, லேசான ஈரம் இருக்கும்போது மிஷினில் அரைத்து, பிறகு சலித்து, ஒரு தட்டில் நிழலில் உலர்த்தி வைத்துக்கொள்ளுங்கள். --------------------------------------------------------------------- உளுந்து பூரண சப்பாத்தி தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - சுட்டெடுக்க தேவையான அளவு. பூரணத்துக்கு: உளுத்தம்பருப்பு - அரை கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு - தேவையான அளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன். செய்முறை: நெய், உப்பு சேர்த்து, கோதுமை மாவை நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளுங்கள். உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதை இட்லிப் பாத்திரத்தில் வைத்து வேகவைத்துக் கொள்ளுங்கள். ஆறியதும் எடுத்து உதிர்த்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். இதுதான் சப்பாத்திக்கான பூரணம். சப்பாத்தி மாவை சிறிது எடுத்து, கிண்ணம் போல செய்து, உள்ளே உளுந்து பூரணத்தை வைத்து நிரப்புங்கள். கிண்ணத்தை நன்கு மூடி, மெல்லிய சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு வேகவைத்தெடுங்கள். இது, உடலுக்கு வலு சேர்க்கும் சத்து நிறைந்த சப்பாத்தி. ---------------------------------------------------------------------- பருப்பு தோசை தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், பச்சரிசி - அரை கப், சின்ன வெங்காயம் - 12, கறிவேப்பிலை - சிறிது, காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். ஒரு மணி நேரம் ஊறியதும், மற்ற பொருட்களுடன் (எண்ணெய் நீங்கலாக) ஒன்றாகச் சேர்த்து அரைத்து, தோசைகளாக வார்த்தெடுங்கள். எண்ணெய் ஊற்றிச் சிவக்க வேகவிட்டெடுத்துப் பரிமாறுங்கள். வெங்காயத்தையும் சேர்த்து அரைப்பதால் வித்தியாசமான சுவை தரும் இந்த தோசை. ------------------------------------------------------------------------ வாழைப்பூ பருப்பு உசிலி தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், வாழைப்பூ - பாதி, உப்பு - தேவையான அளவு. அரைக்க: சின்ன வெங்காயம் - 8, காய்ந்த மிளகாய் - 6, சோம்பு - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன். தாளிக்க: கடுகு - 1 டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: கடலைப்பருப்பு, துவரம்பருப்பு இரண்டையும் ஒன்றாக ஊறவையுங்கள். வாழைப்பூவை தட்டி பிழிந்தெடுங்கள் (அல்லது மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றியும் பிழியலாம்). அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து, அத்துடன் பருப்புகளையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு தாளித்து, அரைத்த விழுது, வாழைப்பூ, உப்பு சேர்த்து, உதிராக வரும்வரை நன்கு சுருள கிளறி இறக்குங்கள். ------------------------------------------------------------------------ பருப்பு உருண்டை தேவையானவை: துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - முக்கால் கப், பாசிப்பருப்பு - கால் கப், பச்சரிசி - கால் கப், சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - அரை கப், பச்சை மிளகாய் - 3, இஞ்சி - ஒரு துண்டு, தேங்காய் துருவல் - அரை கப், மல்லித் தழை - ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - ஒன்றரை முதல் 2 டேபிள்ஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. செய்முறை: அரிசி, பருப்புகளை ஒன்றாக ஊறவையுங்கள். அவற்றுடன் உப்பு சேர்த்து கரகரப்பாக, கெட்டியாக அரைத்தெடுங்கள். அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேங்காய் துருவல், சோம்பு, பச்சை மிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு எல்லாவற்றையும் கலந்து பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி, ஆவியில் வேகவைத்து எடுங்கள். காரச் சட்னியுடன் பரிமாறுங்கள். குறிப்பு: ஐந்து காய்ந்த மிளகாய், சிறிது உப்பு, இரண்டு பல் பூண்டு.. இவற்றை அம்மியில் வைத்துக் கரகரப்பாக அரைத்த சட்னி, இந்தப் பருப்பு உருண்டைக்கு பிரமாதமான காம்பினேஷன். --------------------------------------------------------------------- பாசிப்பருப்பு டோஸ்ட் தேவையானவை: பாசிப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 5, பூண்டு - 6 பல், சீரகம் - அரை டீஸ்பூன், புளி விழுது - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிதளவு, வெல்லத்தூள் - சிறிதளவு, பிரெட் - 8 ஸ்லைஸ், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன். செய்முறை: பருப்பை ஊறவைத்து மிளகாய், பூண்டு, சீரகம், புளி விழுது, உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்த்து பிசையுங்கள். ஒவ்வொரு பிரெட் ஸ்லைஸின் மேலும் இந்த விழுதைத் தடவுங்கள். தோசைக்கல்லை காய வைத்து, பருப்புக் கலவை தடவிய பக்கம் கல்லில் படுமாறு போட்டு நெய், எண்ணெய் கலந்து சுற்றிலும் ஊற்றி இருபுறமும் சுட்டெடுங்கள் (உப்பு கலந்த வெண்ணெய் சேர்த்து சேர்த்தும் சுடலாம்). இந்த டோஸ்ட், புதுமையான ‘ஈவினிங் ஸ்நாக்’. ----------------------------------------------------------------------- பருப்பு-தக்காளி தோசை தேவையானவை: புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், கடலைப்பருப்பு - கால் கப், உளுத்தம்பருப்பு - கால் கப், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, நன்கு பழுத்த தக்காளி - 3, உப்பு - தேவையான அளவு. செய்முறை: தக்காளியை பொடியாக நறுக்குங்கள். அரிசி, பருப்பு, வெந்தயம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுங்கள். தக்காளி சேர்ப்பதால் தண்ணீர் அதிகம் சேர்க்கத் தேவையில்லை. அரைத்த மாவை 2 மணி நேரம் புளிக்கவிட்டு, மெல்லிய தோசைகளாக ஊற்றி, எண்ணெய் சேர்த்து வேகவையுங்கள். இது, பள்ளி விட்டு வரும் குழந்தைகளுக்குக் கொடுக்க சத்தான சிற்றுண்டி. இதற்கு, தொட்டுக் கொள்ளக்கூட எதுவும் தேவையில்லை. அப்படியே சாப்பிடலாம்! ---------------------------------------------------------------- உளுந்து துவையல் தேவையானவை: முழு உளுத்தம்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 12, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு, பெருங்காயம் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - ஒன்றரை டேபிள்ஸ்பூன். செய்முறை: எண்ணெயைக் காயவைத்து மிளகாய், பெருங்காயம், உளுத்தம்பருப்பு சேர்த்து நன்கு சிவக்க வாசனை வரும் வரை வறுத்து, தேங்காய், புளி சேர்த்து மேலும் சிறிது வறுத்து இறக்குங்கள். ஆறியதும் கரகரப்பாக அரைத்தெடுங்கள். கெட்டியாக இருந்தால் சாதத்துக்கும், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்தால் இட்லிக்கு சட்னியாகவும் சுவை கொடுக்கும், இந்த உளுந்து துவையல். ------------------------------------------------------------------ ரிப்பன் பக்கோடா தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், பொட்டுக்கடலை - அரை கப், உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் (அல்லது) மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு. செய்முறை: உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவை சலித்து, அதில் பச்சை மிளகாய் விழுது அல்லது மிளகாய்தூள், உப்பு, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, ரிப்பன் பக்கோடா குழலில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வேக விட்டெடுங்கள். ------------------------------------------------------------------- பாசிப்பருப்பு சுண்டல் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - அரை கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு. தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சை மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன். செய்முறை: பாசிப்பருப்பை பெருங்காயம், உப்பு சேர்த்து மலர வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். இஞ்சி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, பருப்பு, தேங்காய் சேர்த்து கிளறி இறக்குங்கள். குறிப்பு: பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்காமல் பாத்திரத்தில் வேகவைக்கவேண்டும். அப்போதுதான் மலர வேகும். ---------------------------------------------------------------------------- துவரம்பருப்பு வெஜ் சாலட் தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கேரட் - 1, வெள்ளரிக்காய் - 1, மாங்காய் - 1, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன் (அல்லது) பச்சை மிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு. செய்முறை: துவரம்பருப்பை உப்பு சேர்த்து (குழைந்துவிடாமல், நெத்துப்பருப்பாக) வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். காய்களை மிகவும் பொடியாக நறுக்குங்கள். பச்சை மிளகாய் போடுவதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்குங்கள். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான ஆனால், சுவையான சாலட் இது. ----------------------------------------------------------------------- வேர்க்கடலை பர்ஃபி தேவையானவை: வறுத்த வேர்க்கடலைப் பருப்பு (தோல் நீக்கியது) - ஒரு கப், பொடித்த வெல்லம் - அரை கப். செய்முறை: வெல்லத்தூளில் ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, அது கரைந்ததும் வடிகட்டி மீண்டும் கொதிக்கவிடுங்கள். பாகு நல்ல பதம் வரும்வரை கொதிக்கவேண்டும். (சிறிதளவு பாகை எடுத்து தண்ணீரில் விட்டு, அதை எடுத்து உருட்டி ஒரு தட்டில் போட்டால் சத்தம் வரவேண்டும். இதுதான் பர்ஃபிக்கான பாகுப்பதம்). அந்த சமயத்தில் பாகை இறக்கி, வேர்க்கடலையைச் சேர்த்து நன்கு கிளறி, கிளறிய வேகத்தில் நெய் தடவிய தட்டில் கொட்டி, சமமாகப் பரப்பி, வில்லைகள் போடுங்கள். ----------------------------------------------------------------------------- கலவை பருப்பு ஓமப்பொடி தேவையானவை: உளுத்தம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், பாசிப்பருப்பு - அரை கப், பச்சரிசி - அரை கப், உப்பு, எண்ணெய் - தலா தேவையான அளவு. அரைக்க: பூண்டு - 6 பல், ஓமம் - 2 டீஸ்பூன். செய்முறை: அரிசி நீங்கலாக பருப்புகளை தனித்தனியே வறுத்துக்கொள்ளுங்கள். பின்பு அரிசியுடன் ஒன்றாக சேர்த்து மிஷினில் அரைத்துக்கொள்ளுங்கள். நன்கு சலித்தெடுங்கள். பூண்டு, ஓமத்தை நன்கு அரைத்து அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். மாவில் 2 கரண்டி எண்ணெயை சூடாக்கி ஊற்றுங்கள். அத்துடன் உப்பு, வடிகட்டிய ஓமத் தண்ணீர், தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து ஓமப்பொடி குழலில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வேகவையுங்கள். ------------------------------------------------------------------ பாசிப்பருப்பு பக்கோடா தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 2, பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, கறிவேப்பிலை - சிறிது, தனியா (ஒன்றிரண்டாக உடைத்தது) - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தலா தேவையான அளவு. செய்முறை: பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்குங்கள். பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, இஞ்சி, உப்பு, தனியா சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். நறுக்கிய எல்லாவற்றையும் அரைத்த பருப்புக் கலவையில் சேர்த்துப் பிசைந்து, எண்ணெயைக் காயவைத்து சிறுசிறு பக்கோடாக்களாகக் கிள்ளிப் போட்டு வேகவைத்தெடுங்கள். மாலை நேரத்துக்கு, ‘கரகர’வென சுவை சேர்க்கும் அருமையான சிற்றுண்டி இது. ----------------------------------------------------------------- கடலைப்பருப்பு ஸ்வீட் சுண்டல் தேவையானவை: கடலைப்பருப்பு - அரை கப், சர்க்கரை - அரை கப், தேங்காய் துருவல் - அரை கப், ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன். செய்முறை: கடலப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, குழைந்துவிடாமல் வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் நெய்யைக் காயவைத்து, கடலைப்பருப்பு, தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள். ------------------------------------------------------------------- கொத்துக் கடலை தாளிதம் தேவையானவை: கருப்பு கொத்துக்கடலை - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, தக்காளி - 1, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன் , பச்சை மிளகாய் - 2, மல்லித்தழை - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், நெய் - 2 டேபிள்ஸ்பூன். செய்முறை: வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும். குக்கரில், கடலை + தேவையான தண்ணீர், மஞ்சள்தூள், உப்பு, வெண்ணெய் சேர்த்து வேகவிடவும். ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்து, 5 நிமிடம் வேகவிடவும். இதன் நடுவில் கடாயில் நெய் ஊற்றி சீரகத்தை போடவும். சீரகம் வெடிக்க ஆரம்பித்ததும் பூண்டு, வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுதுபோட்டு பொன்னிறமாகும்வரை வதக்கவும். இப்பொழுது, தக்காளியை போட்டு 3 நிமிடங்களுக்கு வதக்கவும். பெருங் காயம், கரம்மசாலா, பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, மிளகாய் தூள் சேர்த்து மேலும் 2 நிமிடம் கிளறவும். குக்கரை திறந்து, வெந்த கடலையுடன், கடாயில் வதக்கிய மசாலாவையும் போட்டு, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். அப்பொழுதுதான் மிகவும் ருசியாக இருக்கும். மசியல் ரொம்பவும் கெட்டியாக இருந்தால், கொஞ்சம் நீரை கொதிக்க வைத்து சேர்க்கவும். சூடாக, சப்பாத்தியுடனோ, சாதத்துடனோ பரிமாறவும். ----------------------------------------------------------------------- கடலைப்பருப்பு காராமணி தால் தேவையானவை: கடலைப்பருப்பு, வெள்ளை காராமணி (இரண்டும் சேர்த்து) - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, உருளைக்கிழங்கு - 1, காய்ந்த மிளகாய் - 3, சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், தனியாதூள் - அரை டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை பொடி - அரை டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், சர்க்கரை - தலா சிறிதளவு, கிராம்பு, ஏலக்காய், பட்டை (மூன்றும் சேர்த்துப் பொடித்தது) - அரை டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - சிறிதளவு. செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, மிளகாயை கிள்ளிப் போடவும். ஒரு நிமிடம் கழித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்க்கவும். தனியாதூள், மல்லித்தழை, சீரகத்தூள், மஞ்சள்தூள் சேர்க்கவும். அரை கப் தண்ணீர் + கழுவி வைத்துள்ள பருப்பை சேர்க்கவும். குக்கரை மூடி பருப்பை வேக விடவும். பருப்பு வெந்தவுடன் அதில் பட்டை, ஏலக்காய், கிராம்பு தூளை சேர்க்கவும். உப்பு போட்டு மிகவும் நிதானமான தீயில் வைக்கவும். கிரேவி கெட்டியாகும் வரை கிளறவும். சாதத்தில் நெய்போட்டு, இந்த பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். ------------------------------------------------------------------------- பாசிப்பருப்பு தால் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - அரை கப், தக்காளி - 1 அல்லது 2, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 3 பல், பச்சை மிளகாய் - 3, மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கவும். பருப்பை, உப்பு சேர்த்து பூண்டுடன் வேகவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, மிளகாய் பொடி தூவி மேலும் 2 நிமிடம் வதக்கவும். சிறிது நேரம் கழித்து, வெந்த பயத்தம் பருப்பை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 கொதி கொதிக்கவிடவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும். ---------------------------------------------------------------------- தால்தட்கா தேவையானவை: மசூர் பருப்பு - ஒன்றரை கப், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, பச்சை மிளகாய் - 4 அல்லது 5 (அல்லது காரத்துக்கு ஏற்றவாறு), பூண்டு - 2 பல், மல்லித்தழை - சிறிதளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சம்பழச் சாறு - 2 டீஸ்பூன். தாளிக்க: கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன். செய்முறை: பருப்பை மஞ்சள்தூளுடன் சேர்த்து குழையவிடாமல் வேகவிடவும். கடாயில் நெய் ஊற்றி, கடுகு, பெருங்காயம், சீரகம் போட்டு வெடிக்க விடவும். பிறகு பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பூண்டு போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும். பிறகு வெந்த பருப்பை போட்டு, உப்பையும் போட்டு மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும். நடுவில் கிளறிவிடவும். கறிவேப்பிலை, மல்லித்தழை தூவி இறக்கி, எலுமிச்சம்பழச் சாறு பிழிந்து பரிமாறவும். --------------------------------------------------------------------- முழுப்பயறு தால் தேவையானவை: பாசிப்பயறு - அரை கப், கடலைப்பருப்பு - அரை கப், பழுத்த தக்காளி - 4, பெரிய வெங்காயம் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாதூள் - அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், தனியாதூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சர்க்கரை - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: தக்காளியை நான்கு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், இஞ்சி, மல்லித்தழை மூன்றையும் பொடியாக நறுக்கவும். பருப்பையும் பயறையும் குக்கரில் குழைய வேகவிட்டு (6 விசில் வைக்கவும்) ஆறவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம், இஞ்சி போட்டு 2 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி துண்டுகளை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கவும். இப்பொழுது வேகவைத்துள்ள பருப்பை சேர்த்து கொதிக்க விடவும். எல்லா தூள்களையும் போட்டு சர்க்கரை, உப்பு சேர்த்து கிளறவும். 5-லிருந்து 10 நிமிடம் வரை கொதிக்கவிடவும். நடுவில் கிளறிவிடவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி பூரி, சப்பாத்தியுடனோ, சூடான சாதத்துடனோ சேர்த்து சாப்பிடவும். ---------------------------------------------------------------- பருப்புவடை தால் தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 1, பொடியாக நறுக்கிய இஞ்சி - இரண்டரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4 அல்லது 5, தயிர் - 3 டேபிள்ஸ்பூன், பெருங்காயம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பருப்பை தண்ணீரில் 2 மணி நேரம் ஊறவிடவும். தண்ணீரை வடித்துவிட்டு பச்சை மிளகாய், இஞ்சி, தயிர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். கொஞ்சம் எடுத்து வைத்துவிட்டு (வடை போட) மீதியை சிறிது நீர்விட்டு கரைத்துக்கொள்ளவும். எடுத்து வைத்த பருப்பு கலவையை வடைகளாக தட்டி, எண்ணெயில் பொறித்து எடுக்கவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள் சேர்க்கவும். 2 நிமிடம் கழித்து கரைத்து வைத்த பருப்புக்கூழை ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். (கெட்டியாகவோ, தளர்த்தியாகவோ, அவரவர் விருப்பப்படி, தண்ணீர் கூட்டியோ, குறைத்தோ சேர்க்கவும்.) பொரித்து வைத்துள்ள வடைகளை போட்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும். சூடான சாதத்துடன் பரிமாறவும். ----------------------------------------------------------------------- கருப்பு உளுந்து தாளிதம் தேவையானவை: கருப்பு உளுந்து - அரை கப், வெள்ளை கொண்டைக்கடலை - கால் கப், ரெட் பீன்ஸ் - கால் கப், மிளகாய்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், மல்லித்தழை - கால் கப், வெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், பெரிய வெங்காயம் - 2, தக்காளி - 3, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 3, சீரகத்தூள் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: பயறு வகைகளை 6 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். பிறகு குக்கரில் பயறுகளை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். மிளகாய்தூளும், சீரகத்தூளும் சேர்க்கவும். தக்காளி துண்டுகளை சேர்க்கவும். வெந்த பருப்புகளை சேர்த்து, வெண்ணெயையும் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் கிளறவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும். -------------------------------------------------------------------- தக்காளி தால் தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், தக்காளி - 4, பச்சை மிளகாய் - 1, மல்லித்தழை - சிறிதளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, கறிவேப்பிலை - சிறிதளவு. தாளிக்க: கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும், குக்கரில் துவரம்பருப்புடன் பெருங்காயம், மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, சீரகம் போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பை போடவும். உளுத்தம்பருப்பு சிவந்ததும், நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 5 நிமிடம் வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும், வெந்த பருப்பை சேர்த்து, தேவையான உப்பு, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். சூடான சாதத்துடனோ, புல்காவுடனோ சாப்பிட நன்றாக இருக்கும். ------------------------------------------------------------------------ உருளை-பருப்பு தால் தேவையானவை: துவரம் பருப்பு - ஒரு கப், உருளைக் கிழங்கு - 1, தக்காளி - 1, கறிவேப்பிலை - சிறிதளவு, மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. தாளிக்க: கடுகு, சீரகம், எண்ணெய் - சிறிதளவு. செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பருப்புடன் தக்காளி, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போட்டு தாளித்து, பருப்பு கலவையில் கொட்டவும். -------------------------------------------------------------------------- மசூர் பருப்பு தால் தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், மசூர் பருப்பு - ஒரு கப், வெள்ளரிக்காய் அல்லது தோசைக்காய் - 1, பெரிய வெங்காயம் - 2, பூண்டு - 6 அல்லது 7 பல், இஞ்சி - ஒரு துண்டு, தக்காளி - 4, கறிவேப்பிலை, மல்லித்தழை - தலா சிறிதளவு, பச்சை மிளகாய் - 5, நெய் - 5 டீஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப, எலுமிச்சம்பழச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன். தாளிக்க: எண்ணெய் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன். செய்முறை: வெள்ளரி, வெங்காயம், பூண்டு, மல்லித்தழை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். தக்காளியைப் பெரிய துண்டுகளாக்கவும். குக்கரில், இரண்டு பருப்புகளோடு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், உப்பு, கறிவேப்பிலை, சிறிது நெய் சேர்த்து வேகவிடவும். ஒரு கடாயில் மீதி நெய்யை விட்டு, சூடானதும் கடுகு, சீரகம் போட்டு வெடித்ததும் நறுக்கிவைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் வெள்ளரி துண்டுகளைப் போடவும். சிறிது மிருதுவானவுடன், தக்காளி துண்டுகளைப் போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறவும். கடாயில் நெய் பிரிந்து வரும்போது, வெந்த பருப்பைச் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறவும். மல்லித்தழை தூவி, எலுமிச்சை சாறு சேர்த்து, கிளறி இறக்கவும். ------------------------------------------------------------------------- மங்களூரியன் தால் தேவையானவை: வேகவைத்து மசித்த துவரம்பருப்பு - ஒரு கப், தேங்காய்ப்பால் - 2 கப், வெல்லம் - ஒரு டேபிள்ஸ்பூன், கெட்டியான புளித்தண்ணீர் - 2 டேபிள்ஸ்பூன், கரம் மசாலாதூள் - ஒரு டீஸ்பூன், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, நெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - ருசிக்கேற்ப. செய்முறை: ஒரு கடாயில் வெந்த பருப்பையும் தேங்காய்ப் பாலையும் ஊற்றி கொதிக்கவிடவும். வெல்லம், புளித்தண்ணீர், கரம்மசாலா, உப்பு இவற்றை ருசிக்கேற்ப சேர்க்கவும். மற்றொரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, பருப்பு கலவையில் கொட்டவும். மல்லித்தழை தூவி பரிமாறவும். -------------------------------------------------------------------- பூரி தால் தேவையானவை: கோதுமைமாவு அல்லது மைதாமாவு - ஒரு கப், உப்பு - ருசிக்கேற்ப, துவரம்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், காய்ந்த மிளகாய் (காரம் தேவைப்பட்டால்) - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய் அல்லது நெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - 1 சிட்டிகை. செய்முறை: பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கவும். துவரம்பருப்புடன், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். ஆறினபிறகு எண்ணெய் அல்லது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். அதில் சப்பாத்திகளாக இட்டு, சிறிய மூடியால் வெட்டி, குட்டி குட்டி பூரிகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். ரொம்பவும் சிவந்துவிடாமல், வெள்ளையாக இருக்கும்போதே எடுக்கவேண்டும். பருப்பு மசியலில் இந்த பூரிகளை நனைத்து சாப்பிடவும். குழந்தைகளுக்கான அட்டகாசமான அயிட்டம் இது. குறிப்பு: காய்கறி சேர்க்க வேண்டுமென்றால் பருப்புடன் ஏதாவது ஒரு காயையும் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பருப்பு சற்று தளர்த்தியாக இருக்க வேண்டும். ------------------------------------------------------------------ மிக்ஸ்டுஸ்பைஸி தால் தேவையானவை: துவரம்பருப்பு, வெள்ளை கொண்டைக்கடலை, பாசிப்பருப்பு, மசூர்தால், உளுத்தம்பருப்பு - எல்லாம் தலா கால் கப், மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 10, பூண்டு - 10 பல். தாளிக்க: பெரிய வெங்காயம் - 1, பிரிஞ்சி இலை - சிறிது, தக்காளி - 1, எண்ணெய் - தேவையான அளவு, மல்லித்தழை - சிறிது. செய்முறை: எல்லா பருப்புகளையும் முதல் நாள் இரவே ஊறவைக்கவும்.வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். காய்ந்த மிளகாயை ஒரு டீஸ்பூன் எண்ணெயில் வறுக்கவும். மறுநாள், குறைந்த தீயில் தேவையான நீர் சேர்த்து, பருப்புகளை மஞ்சள்தூள் சேர்த்து 15 நிமிடம் வேகவைக்கவும். மிளகாயையும், பூண்டையும் சேர்த்து, மிக்ஸியில் விழுதாக அரைத்து, வெந்த பருப்புடன் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, தக்காளி சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கி, கடைசியில் பருப்பையும் சேர்த்து ஒரு தடவை கிளறி, மல்லித்தழை தூவி பரிமாறவும். ------------------------------------------------------------------------ உளுத்தம்பருப்பு மசியல் தேவையானவை: உடைத்த உளுத்தம்பருப்பு - ஒரு கப், துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தனியாதூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன். செய்முறை: பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பருப்பை ஒரு மணிநேரம் ஊறவைத்து, குறைந்த நீரில் 10 நிமிடம் வேகவிடவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பெருங்காயத்தூள், தனியாதூள், மஞ்சள்தூள் போடவும். 2 நிமிடம் கிளறவும். பிறகு இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, வெந்த உளுத்தம்பருப்பையும் கொட்டி, உப்பு போட்டு, 5 நிமிடம் கிளறவும். சுவையான உளுத்தம்பருப்பு மசியல் ரெடி. இது சப்பாத்தி அல்லது சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.

Related

30 நாள் 30 வகை சமையல் 2120274569501275602

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item