இல்லறம் ஒரு காவியம்--கவிதைத்துளிகள்

  இல்லறம் ஒரு காவியம் காவியமொன்றுருப் பெற்றிடவே ...கற்பனையில் படைத்திடவே ஓவியத்தை வரைகின்றேன் ...உயிர் கலந்து கொடுக்கின்றேன். ...





 


இல்லறம் ஒரு காவியம்

காவியமொன்றுருப் பெற்றிடவே
...கற்பனையில் படைத்திடவே
ஓவியத்தை வரைகின்றேன்
...உயிர் கலந்து கொடுக்கின்றேன்.

அற்புதமான இல்வாழ்க்கை
...அனுசரிக்கும் நல்கணவர்
கற்கண்டாய் மணிக்குழந்தை
...கிடைத்திட்டால் எது தேவை

அளவான ஒரு வீடு
...அதனோடு திருப்பேறு
வளமான அன்போடு
...வாழ்ந்திடுவேன் சீரோடு.

வண்ணத்தில் வரும் கனவு
...வரையில்லா நல்லுணர்வு
எண்ணத்தில் எதிர்பார்ப்பு
...உள்ளத்தில் ஒரு நிறைவு

அழகான ராஜாங்கம்
...அமைந்திட்டால் இனிதாகும்
விழலாகா வரமாகும்
...வித்தங்கு மரமாகும்.

மாணிக்க ஒளிவிளக்கு
...மாதவத்தின் பயனாகும்.
காணிக்கை நான் தரவே
...காதலுடன் உறவாடும்

மலரம்பு எய்துவிட
...மன்மதனும் வெற்றிபெற
புலர்காலை பூத்துவிட
...புது வாழ்வு அடைந்திடுவேன்.

கலியாண மலர்மேடை
...கதம்பத்தின் மணம்வீசும்
சலியாத சுகவாழ்வு
...சொர்க்கத்தின் கதைபேசும்.

காதலரைக் கைப்பிடித்து
...காரியத்தில் கைகொடுப்பேன்
மதரறம் பேணிடவே
...மாட்சி பெற்று மகிழ்ந்திடுவேன்.

மனமொத்த தாம்பத்தியம்
...மதுரத்தேன் பிரவாகம்
தினம் வாழ்த்தும் புதுராகம்
...சம்சார சங்கீதம்.

கண்போலக் குடும்பத்தைக்
...கற்போடு பேணிடுவேன்.
மண்மீது எம்காதல்
...மறையாதென் றியம்பிடுவேன்.

உள்ளங்கள் சேர்ந்து விட்டால்
...உலகங்கள் காலடியில்
கள்வராய் மனம் கவர்வார்
...கணவரெனும் ஓர் வடிவில்.

வசந்தங்கள் வீசிடுமே
...வாழ்வினிலே சேர்ந்துவிட்டால்
கசக்காது காதலின்பம்
...கணவரென்று ஆகிவிட்டால்.

இனியென்ன நம் தேவை
...இனிய வாழ்வு அமைந்துவிட்டால்
கனிந்திடுமே தாயுள்ளம்
...நல் மழலை பெற்றுவிட்டால்.

காலைமுதல் மாலைவரை
...கொண்டவரை மகிழ்விப்பேன்
மாலை கொண்ட மன்னனோடு
...மனம் நிறைந்து இணைந்திடுவேன்.

அதிகாலை எழுந்திடுவேன்
...அன்றாடம் குளித்திடுவேன்
பதிதேவை நானுணர்ந்து
...பண்போடு அளித்திடுவேன்.

பணி செல்லப் புறப்பட்டால்
...பாசவிடை பகன்றிடுவேன்.
தணியாத அன்புணர்வால்
...சென்ற பின்னே கலங்கிடுவேன்.

கண நேரம் பிரிந்திடினும்
..கண்மயங்கி ஏங்கிடுவேன்
மணமிழந்த இல்லத்தை
...பூஜ்யமாக உணர்ந்திடுவேன்.

வரும் வழியில் விழிதொடுத்து
...வாசலிலே நின்றிருப்பேன்
விரும்பியவர் வரும்வரைக்கும்
...விழிமூடாதிருந்திடுவேன்.

பத்தினியாய் காத்திருப்பேன்
...வரும் வரையில் பசித்திருப்பேன்
இத்துணைதான் அன்பென்ற
...அளவனைத்தும் தாண்டிடுவேன்.

ருசியோடு சமைத்திடுவேன்.
...ரகம் ரகமாய் படைத்திடுவேன்.
பசியாற்றிப் புசித்திடுவேன்
...பூமுகத்தைப் பார்த்திருப்பேன்.

வதனத்தின் வேர்வைதனை
...முந்தனையால் துடைத்திடுவேன்
கதம்ப மலர் பூச்சரத்தை
...கருத்தோடு சூடிடுவேன்.

ஒளிவோடு வாழ்ந்திடவே
...ஒற்றுமையாய் இருந்திடுவேன்
எளிமையாக அலங்கரித்து
...பதிமனதை கவர்ந்திடுவேன்.

அலங்கார தேவதையாய்
...மச்சான் முன்னே தோன்றிடுவேன்
நிலவங்கு நின்றாட
...நெஞ்சத்தை வென்றிடுவேன்.

கண்ணுக்கு விருந்தாவேன்
...காலத்தின் விளக்காவேன்
புண்ணுக்கு மருந்தாவேன்
...நுகர்தற்கு மலராவேன்.

விலையில்லாப் பொன்னாவேன்
...விளையாடும் பொருளாவேன்
கலையோடு கணவருடன்
...கவிபாடும் பெண்ணாவேன்.

எல்லையற்ற உள்ளழகால்
...ஓருருவாய் சமைந்திடுவேன்
முல்லை நிகர் புன்னகையால்
...மோகமுத்தம் ஈந்திடுவேன்.

நெருக்கத்தின் மயக்கத்தில்
...நிறைவாகும் தருணத்தில்
பருவத்தின் பரிமாறல்
...பன்னீரின் பூத்தூவல்.

மங்காத உயிர்க்காதல்
...மறையாத சந்தோஷம்
பொங்கிடுமே பூபாளம்
...புது இன்பம் ஏராளம்.

சித்தம் தான் கலங்கிடவே
...சிந்தனைகள் ஊறிடவே
அத்தருணம் அவர் வரவே
...அன்பினிலே அமிழ்ந்திடுவேன்.

கொஞ்சும் தேன் மொழியாலும்
...களியேற்றும் பேச்சாலும்
நெஞ்சத்தை நிறைத்திடுவேன்
...நினைவெங்கும் சூழ்ந்திடுவேன்.

உருவாகும் நல்லிணக்கம்
...உறங்காத செயலாக்கம்
கருவாகும் கனியாகும்
...கனவங்கு நனவாகும்.

இணக்கத்தை ரசித்திருப்பேன்
...இன்முகத்தைப் பார்த்திருப்பேன்
கணக்கில்லா காதலதை
...கரையின்றி நான் தருவேன்.

அகத்தில் நிறைந்த மச்சானையே
...அனுதினமும் சேவிப்பேன்
நகத்தில் கூட அழுக்கெடுப்பேன்
...நித்தம் உயிராய் பாவிப்பேன்.

தலை கூட துவட்டிடுவேன்
...தளிர் சிரிப்பில் மயங்கிடுவேன்
கலையாத கனவின்று
...அரங்கேற சிலிர்த்திடுவேன்.

ஆசை முகம் ததும்பிடவே
...அமுதூறப் போற்றிடுவேன்
நேசக்கரம் அணைத்திடவே
...நெஞ்சோடு சேர்ந்திடுவேன்.

கன்னத்தில் முத்தமொன்று
...கலைதீப ரத்தினமாய்
தன்னழகில் நிலைமறந்து
...என்மனதைப் பறிகொடுப்பேன்.

அன்பென்னும் நெறியினிலே
...நல்லறங்கள் வளர்த்திடுவேன்
துன்பமினி இல்லையென்று
...தலைவணங்கித் தழுவிடுவேன்.

கொவ்வையிதல் நகைவீச
...காதல்பயிர் வளர்த்திடுவேன்
செவ்வொளியில் முகம் மலர
...கவிதையுரம் தூவிடுவேன்

தென்னை மர சலசலப்பில்
...தெவிட்டாத இன்பங்கண்டு
சின்னப்புள் மெல்லொலியில்
...சுகராகம் பாடிடுவேன்.

மண்ணுலக நல்லோசை
...மாலைனேர சாரத்தில்
பண்ணிசைத்தவ் வொலியனைத்தும்
...பதமாக சேர்ந்திசைப்பேன்

கானக்குயில் கதைசொல்ல
...காட்டுமரம் பூச்சொரிய
மோன நிலை எய்திடவே
...மடியினிலே முகம் புதைப்பேன்.

வான் தனிலே பறந்துவரும்
...சின்னஞ்சிறு பறவைதரும்
மேனியது சிலிர்க்குமந்த
...இன்பத்தில் திளைத்திருப்பேன்.

நீலப்பெருங் கடலினிலே
...நீந்திவரும் அலைகளிலே
கோலத்துடன் ஒன்றிணைந்து
...காலமென்றும் கைகோர்ப்பேன்.

வானமெனும் வீதியிலே
...மையலுற்ற போதினிலே
ஞானமதில் நல்லரோடு
...நாட்டமுடன் நாடிடுவேன்.

தென்றலங்கு தாளம் போட
...தெம்மாங்கு பாடிவர
சென்று நானும் தேடிடுவேன்
...மச்சானுடன் ஆடிடுவேன்.

ஆற்றுநீரின் ஓசையிலும்
...அருவி சிந்தும் ஒலியினிலும்
காற்றுவெளி சூழலிலும்
...காதல் நித்தம் புரிந்திடுவேன்.

பாயவரும் நதியினிலும்
...மச்சான் முகம் கண்டிடுவேன்
மாயமான மயக்கத்துடன்
...மஞ்சத்தை அலங்கரிப்பேன்.

இன்பத்தில் இன்புறுவேன்
...இதமாக சேர்ந்திருப்பேன்
துன்பத்தில் துன்புறுவேன்
...துயரத்தைப் போக்கிடுவேன்

அன்பிற்கு எது எல்லை
...அவரின்றி ஒன்றில்லை
என்றுணர்ந்து கூடிடுவேன்
...பலகாலம் வாழ்ந்திடுவேன்.

Related

கவிதைத்துளிகள் 1869447437467784457

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item