படிப்பு, பணம் மைனஸ்... உறுதி, உழைப்பு ப்ளஸ் !
சரஸ்வதியின் சாதனை ரகசியம்
பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு
சாமான்ய பெண்களின் சாதனை கதை
புகுந்த வீட்டில் பொருளாதார ரீதியாக பல பிரச்னைகள் உருவாகி, திடீரென
கூட்டுக் குடும்பத்தில் இருந்து வெளியேற வேண்டிய நெருக்கடி நேர்ந்தது...
திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதிக்கு. 'பொம்பளப் புள்ள வீட்டுலதான் அடைஞ்சு
கிடக்கணும்...’ என்ற பழமையை பொய்யாக்கி, சிறு வயது முதலே தந்தையின்
சிமென்ட் கட்டுமானப் பொருட்கள் தொழில் பற்றி அறிந்து வைத்திருந்த சரஸ்வதி,
நிலைகுலைந்து நின்றிருந்த அந்த வேளையில் சிறுவயது அனுபவம் கை கொடுக்க,
கணவரின் கை கோத்து 'நாம பொழச்சுக்கலாம்...’ என்று வறுமையை எதிர்த்து
நின்றதையும், வென்றதையும் 'குடிசையிலிருந்து கோபுரத்துக்கு உயர வைத்த ஹாலோ
பிளாக்’ என்ற தலைப்பில் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம்.
தொழில் நேர்த்தியாலும், கடும் உழைப்பாலும்
ஹாலோ பிளாக் தொழிலில் சாதனை படைத்து வரும் சரஸ்வதி, இந்த தொழிலில் தான்
சந்தித்த சவால்களையும், இதில் இறங்க நினைப்பவர்களுக்கு தேவையான
வழிகாட்டல்களையும் தொடர்கிறார் இங்கு...
''செங்கல் விலை கடுமையா ஏறிட்டே இருந்ததுனால, இனிமே ஹாலோ பிளாக்
கல்லுக்குதான் அதிக வரவேற்புனு அதுல இறங்குறதுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக
செஞ்சோம். சொந்தமா ஒரு இடம் இருந்தா தான் வசதியா இருக்கும்னு... கையில
இருந்த சேமிப்பு, வீட்டிலயிருந்த நகை, வெளிய கொஞ்சம் கடன்னு பணத் தைப்
புரட்டினோம். தட்டுப்பாடு இல்லாம தண்ணீர் கிடைக்கணும்; பக்கத்துலயே ஜல்லி,
சிமென்ட் உள்ளிட்ட மூலப்பொருட்களும் கிடைக்கணும்னு அலைஞ்சு திரிஞ்சு,
திருவானைக்கோவில்ல உள்ள இந்த இடத்தை வாங்கினோம்''
- திட்டமிடலில் எப்போதுமே தனிக்கவனம் செலுத்தியிருக்கிறார் சரஸ்வதி.
''ஆரம்பத்துல கையால இயக்கக் கூடிய சாதாரண மெஷினை வாங்கிப் போட்டு, சின்ன
அளவுல ஹாலோ பிளாக் தொழிலைத் தொடங்கினோம். விற்பனை சுமாரா இருந்துச்சு.
அந்தச் சமயத்துல ஒரு ஹாலோ பிளாக் கல்லோட விலை 6 ரூபாய்னுதான் திருச்சி
முழுக்கவே விற்பனை பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஒரு ரூபாய் லாபம் கிடைச்சாலே
போதும்னு அதிரடியா மூணே கால் ரூபாய்க்கு விற்பனை செய்ய ஆரம்பிச்சோம்.
சீக்கிரமே விற்பனை சூடு பிடிச்சுடுச்சு. ஆனா, அதுக்கேத்த வேகத்துல உற்பத்தி
பண்ண முடியல. கை மெஷின்ல ஒரு நாளைக்கு அதிகபட்சம் 350 கல்தான் உற்பத்தி
செய்ய முடிஞ்சுது. 'அதி நவீன ஹைட்ராலிக் மெஷினை வாங்கிப் போட்டாத்தான்
நினைச்ச உயரத்தை வாழ்க்கையில எட்ட முடியும்’னு தீர்மானிச்சோம்'' என்று
முக்கிய முடிவுஎடுத்தவர், திருவானைக்கோவில் இந்தியன் வங்கியை
அணுகிஇருக்கிறார்.
|
|
''உங்க ஆர்வத்தையும் உழைப்பையும் புரிஞ்சுக்க முடியுது. ஆனா, வியாபார
நுணுக்கங்களும் இந்தத் தொழிலுக்குத் தேவைனு சொல்லி, 'டீடிசியா’ அமைப்புக்கு
என்னை அனுப்பி, தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சில கலந்துக்க
வெச்சாங்க பேங்க் ஆபீஸருங்க. பத்து நாள் பயிற்சியில உரிமம், உற்பத்தி,
விற்பனை தொடர்பான இன்னும் பல புதிய விஷயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன்.
பிறகு, பயிற்சிக்கான சான்றிதழோடு மறுபடியும் பேங்க்குக்கு போனேன்.
இடத்துக்கான லீகல் ஒப்பீனியன், தாராளமா தண்ணீர் கிடைக்கும்ங்கறதுக்கான
சர்டிஃபிகேட், மூலப்பொருள் சப்ளை பண்றவங்க, ஹாலோ பிளாக் வாங்க தயாரா
இருக்குற இன்ஜினீயர்ங்கனு எல்லாத்தையும் வாங்கிட்டு வரச் சொன்னாங்க.
ஆரம்பத்துல மலைப்பா தெரிஞ்சாலும், சுணங்காம தடதடனு வேலைகள்ல இறங்க,
அடுத்த ஆறாவது மாசமே... நாலே கால் லட்ச ரூபாய் கடன் கொடுத்தாங்க பேங்க்ல!''
- அத்தனை பாடுகளையும் வைராக்கியத்தோடு கடந்தவருக்குப் பரிசாக கை மேல் காசு தந்திருக்கிறது வங்கி!
''புது மெஷினை வாங்கிப் போட்டோம். அதுல ஒரு நாளைக்கு ரெண்டாயிரம் கல்
உற்பத்தி செய்ய முடிஞ்சது. உடல் உழைப்பு அதிகமில்ல. ஆனா, ரெட்டிப்பு
கவனத்தோட இருக்கணும். வைப்ரேட் சுவிட்ச், ஹைட்ராலிக் பிரஷர்னு நிறைய
தொழில்நுட்பங்கள் இருக்கு. எங்க கவனக் குறைவால ஆரம்பத்துல நிறைய பிரச்னை.
அடிக்கடி மெஷின்ல கலவை இறுகி புடிச்சுக்கும், சில பாகங்கள் உடைஞ்சுடும்,
நிறைய செலவு வைக்கும். ஆனா, சித்திரமும் கைப்பழக்கம்னு போகப் போக
எல்லாத்தையும் கத்துக்கிட்டோம். நாங்க தயாரிச்ச ஹாலோ பிளாக் தரமா
இருந்ததுனால தேடி வந்து வாங்க ஆரம்பிச்சாங்க. இப்ப ஒரு கல் 12 ரூபாய்னு
விலை போகுது. மாசத்துக்கு சராசரியா 3 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் வியாபாரம்
பார்க்கறோம். எல்லா செலவும் போக தோராயமா 60 ஆயிரம் ரூபாய் லாபம்
கிடைக்குது!'' என்று கண்களில் சிரிக்கும் சரஸ்வதி, இதோடு தன் தேடல்களையும்
சவால்களையும் நிறுத்திக் கொள்ளவில்லை.
''இப்ப ரெடிமேட் காம்பவுண்ட்டும் தயார் பண்றோம். இதுக்கும் நல்ல
வரவேற்பு இருக்கு. அடுத்ததா 16 லட்சம் ரூபாய் முதலீட்டுல டைல்ஸ் தயார்
பண்ணப் போறோம். பேங்கலயும் லோனுக்கு 'ஓ.கே’ சொல்லிட்டாங்க!''
- பத்தாவதே படித்த அந்தப் பெண், தன் தொழிலுக்காக எடுக்கும் தொடர் முயற்சிகள் நம்மை வியக்க வைத்தன.
''படிப்பு, பரம்பரை சொத்துனு எதுவும் இல்லைனாலும்... மனசுல உறுதியும்,
அதுக்கு கை கொடுக்கற உழைப்பும் இருந்தா போதும். அது நம்மள நிச்சயமா
உயரத்துல கொண்டு போய் வைக்கும்!''
- மூளைக்குள் பாய்வதாக இருந்தன சரஸ்வதியின் இந்த அனுபவ வார்த்தைகள்!
Post a Comment