மாத்தி யோசிச்சா... மாசம் 25 ஆயிரம் லாபம் !---வேலை வாய்ப்புகள்
மாத்தி யோசிச்சா... மாசம் 25 ஆயிரம் லாபம் ! ''எந்த பிஸினஸ்னாலும், எல்லாரும் பண்ணுற வேலையை நாமளும் ச...
- சிம்பிள் லாஜிக் சொல்கிறார் சுசிலா. வெல்வெட், சணல் பைகள், பர்ஸ்கள் தயாரிப்பில் மாதம் 25 ஆயிரம் லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் மதுரைப் பெண்!
''எனக்கு ஓரளவு தைக்கத் தெரியும். மகளிர் குழுக்களுக்கு மதுரையில டெய்லரிங் கோச்சிங் கொடுத்தாங்க. அதுல கலந்துகிட்டப்போதான் தைக்கறதுல கிரியேட்டிவிட்டியைப் புகுத்தினா... வளமான வருமானம் பார்க்கலாம்னு புரிஞ்சுது. பயிற்சி முடிஞ்சதும் எல்லாரும் ஆடைகள் தைக்கத்தான் களம் இறங்கினாங்க. நானும் அதே பாதையில போனா... பந்தயத்துல முந்த முடியாதுனு புரிஞ்சுது. மாற்றுப் பாதையை யோசிச்சு தேர்ந்தெடுத்தேன். அதுதான் வெல்வெட், சணல் பைகள் மற்றும் பர்ஸ் தயாரிப்பு!'' என்று சொல்லி பெருமிதமாகப் பார்த்தவர், தொடர்ந்தார்...
பைக்காக வெட்டும்போது, மிச்சமாகி விழற வெல்வெட் துண்டு துணிகளை குப்பையில போடாம, அதை வெச்சு ஏதாச்சும் பண்ண முடியுமானு யோசிச்சேன். குழந்தைகள் விளையாடுறதுக்கு குட்டி குட்டி ஹேண்ட் பேக், கிஃப்ட் அயிட்டம், செல்போன் பவுச்னு சின்ன சின்னப் பொருட்களை தயார் பண்ணி வித்தேன். அதன் மூலமாவும் உபரி லாபம் கிடைக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்துல மகளிர் குழு கண்காட்சிகள், ரீடெய்ல் கடைகள் இதெல்லாம்தான் என்னோட மார்க்கெட்டிங் ஏரியா.
சணல் பைக்கான மூலப்பொருள் பெரும்பாலும் சென்னையில மட்டும்தான் கிடைக்கறதாலா... போக்குவரத்துக்கே நிறைய செலவாகி, லாபம் ரொம்பவும் குறைவாத்தான் கிடைச்சுது. அதனால, பேங்க்ல லோன் வாங்கி மொத்தமா சணல் வாங்கிப் போட்டேன். மீட்டர் 80 - 140 ரூபாய் வரையில விலையிலயே சணல் கிடைச்சுது. இதை வெச்சு ஜவுளிக்கடை பைகள் உட்பட நிறைய பைகள் தயாரிச்சேன். ஒரு சணல் பை, 50 ரூபாய் முதலீட்டுக்கு... 30 ரூபாய் லாபம் தந்துச்சு.
பர்ஸ்களை செய்ய பெரிய முதலீடு தேவை இல்லை. சாதாரண துணி, ஜிப், ரன்னர், நூல்... அவ்வளவுதான்! சின்ன பர்ஸ் செய்ய முதலீடு 10 ரூபாய்தான். அதை மார்க்கெட்டுல 30 ரூபாய்க்கு விக்கலாம். பெரிய பர்ஸை 30 - 40 ரூபாயில தயாரிக்கலாம். அதை 65 - 70 ரூபாய்க்கு விற்கலாம். கண்ணாடி, பட்டன், பாசினு அழகுபடுத்தினா இரட்டிப்பு லாபம் கிடைக்கும்'' என்ற சுசிலா, ஓர் உழைப்பாளியாகத் தொழிலைத் தொடங்கி, இன்று முதலாளியாக மாறியிருக்கும் கதையைத் தொடர்ந்தார்.
ஸ்கூல் ரீ-ஓபன், திருவிழா, பொங்கல், தீபாவளி நேரங்கள்ல வியாபாரம் சூடு பிடிக்கும். ஒரு கட்டத்துல என்னால தனியாளா எல்லா வேலைகளையும் பார்க்க முடியல. 'சிலர், நம்மள முன்னேத்திவிட்ட மாதிரி... நாமும் சிலரை முன்னேத்திவிடுறது நல்ல விஷயம்தானே!'னு வெளி வேலைக்கு ஆள் வெச்சுக்கிட்டதோட, டெய்லரிங் தெரிஞ்ச பொண்ணுங்களுக்கு என்னோட ஆர்டர்களைப் பிரிச்சுக் கொடுத்து தைச்சு வாங்கினேன். இப்போ கிட்டத்தட்ட ஆறு ஊர்கள்ல வியாபாரம் பண்றேன். எட்டாவதுகூட தாண்டாத நான்... மாசம் 25 ஆயிரம் ரூபாய் லாபம் பார்க்கிறேன். என்னோட தொழில் முயற்சிகளைப் பாராட்டி பல விருதுகளும்கூட வாங்கியிருக்கேன்!'' என்று பெருமையோடு சொன்னார் சுசிலா. இவரின் கணவரும் தொழிலுக்குத் துணையாக இருக்கிறார். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்துவிட்டது.
''தையலும், கொஞ்சம் கற்பனைத் திறனும் போதும்... ஆயிரம் ரூபாய் முதலீட்டில்கூட இந்த வெல்வெட், சணல் பைகள் தொழிலை ஆரம்பிச்சுடலாம். தண்ணியில தள்ளி விட்டா... தானா நீச்சல் பழகிற மாதிரி, மார்க்கெட்டிங், தொழில் போட்டி, லாபம், நஷ்டம்னு எல்லாம் கத்துக்கலாம்... முன்னேறணும்ங்கிற வெறி மனசுல இருந்தா!''
- வெற்றி சூத்திரம் சொல்லி முடிக்கிறார் சுசிலா!
1 comment
அவங்களுக்கு எத்தனை கஷ்டங்கள் இடையில் வந்தனவோ, எப்படி அதை சமாளித்தார்களோ, அதை பற்றி எல்லாம், சட்டை செய்யாமல், மனம் தொய்யாமல், தொழிலை பெருக்கி, வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொண்டுள்ள பெண்மணி!
படிக்கவே சந்தோசமாக இருக்குது.
Post a Comment