30 வகை பஜ்ஜி-வடை--30 நாள் 30 வகை சமையல்
பாலக்கீரை வடை தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், ரவை - 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - 4 டேபிள்ஸ்...
தேவையானவை: பொடியாக நறுக்கிய பாலக்கீரை - ஒரு கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், ரவை - 2 டேபிள்ஸ்பூன், கோதுமை மாவு - 4 டேபிள்ஸ்பூன், இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் துண்டுகள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு, சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெயைக் காய வைத்து, கலந்து வைத்துள்ள மாவை வடையாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
முளைக்கீரையிலும் இந்த வடை செய்யலாம்.
பசலைக்கீரை பஜ்ஜி
தேவையானவை: பசலைக்கீரை - ஒரு கப், கோதுமை மாவு - அரை கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், சமையல் சோடா - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய், கீரையைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
ஒவ்வொரு கீரை இலையையும் கரைத்த மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கொத்தமல்லி வடை
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு (பொடியாக நறுக்கவும்), தயிர் - ஒரு கப், சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: தயிரை ஒரு துணியில் கொட்டி, அதில் உள்ள நீரை முழுவதும் வடிய விடவும். இந்தத் தயிரில் கொத்தமல்லி, உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் கலந்து கொள்ளவும்.
தோசைக்கல்லை காய வைத்து, கலந்த வைத்துள்ள தயிர் கலவையை சிறிது எடுத்து உள்ளங்கையில் போட்டு மெல்லியதாக தட்டிக் கொள்ளவும். இதைக் கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும்.
மாலை நேரத்தில் டீயுடன் சாப்பிட அருமையான டிபன் இது
காலிஃப்ளவர் பஜ்ஜி
தேவையானவை: உதிர்த்த காலிஃப்ளவர் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், சமையல் சோடா, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் அரிசி மாவு, சமையல் சோடா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு, தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைக்கவும்.
உதிர்த்த காலிஃப்ளவர் பூவை ஒவ்வொன்றாக எடுத்து, மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
கோஸ்-வெங்காய வடை
தேவையானவை: பொடியாக நறுக்கிய கோஸ் - அரை கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், கடலை மாவு - ஒரு கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோம்பு - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றை யும் போட்டு சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கலந்து, கைகளினால் வடையாகத் தட்டவும்.
சூடான எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்..
நேந்திரம் பழ பஜ்ஜி
தேவையானவை: நேந்திரம் பழத் துண்டுகள் - ஒரு கப், கடலை மாவு - கால் கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவுடன் அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
நேந்திரம் பழத் துண்டுகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
ஸ்டஃப்டு தயிர் வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃப்பிங் செய்ய: முந்திரித் துண்டுகள், திராட்சை - தலா 2 டீஸ்பூன், இஞ்சி, பச்சை மிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன் (எல்லாவற்றையும் கலந்து வைத்துக் கொள்ளவும்).
அலங்கரிக்க: தயிர் - ஒரு கப், உப்பு - ஒரு சிட்டிகை, சர்க்கரை - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டீஸ்பூன், வறுத்த சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். உப்பு, சமையல் சோடா சேர்க்கவும்.
சிறிதளவு மாவை எடுத்து குழி போல் செய்து, அதில் ஸ்டப்ஃபிங் குக்கு கலந்து வைத்துள்ள முந்திரிக் கலவையை சிறிது வைத்து மூடி, லேசாகத் தட்டிக் கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து, அதில் தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு எடுக்கவும். வடைகளை ஒரு தட்டில் வைத்து... அதன் மேல் தயிரை ஊற்றி, மேலே மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, சீரகத்தூள், கொத்தமல்லி கலந்து தூவி அலங்கரித்து பரிமாறவும்.
ஸ்டஃப்டு மிளகாய் பஜ்ஜி
தேவையானவை: பச்சை மிளகாய் - 10, கடலை மாவு - ஒரு கப், புளி சட்னி - ஒரு டீஸ்பூன் (புளி + 2 காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்த விழுது), உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
ஸ்டஃபிங்குக்கு: வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கவும்), கேரட் துருவல் - அரை கப், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். ஸ்டஃபிங்குக்கு கொடுத்துள்ளவற்றைத் தனியாக கலந்து வைக்கவும். மிளகாயை நடுவில் கீறி, அதில் ஸ்டஃபிங்குக்கு கலந்து வைத்துள்ள காய்கறிக் கலவையை சிறிது வைத்து அடைக்கவும்.
இதைக் கரைத்த மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்து தட்டில் பரவலாக வைத்து, அதன் மேல் புளி சட்னி தெளித்துப் பரிமாறவும்.
வாழைப்பூ வடை
தேவையானவை: பொடியாக நறுக்கிய வாழைப்பூ - அரை கப், கடலைப்பருப்பு - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் வாழைப்பூ, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, ஒரு கரண்டி அளவு எடுத்து, கடலைப்பருப்பு கலவையில் ஊற்றிக் கலக்கவும். இதை மீதமுள்ள எண்ணெயில் சிறிய வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
வெங்காய பஜ்ஜி
தேவையானவை: பெரிய வெங்காயம் - 3, கடலை மாவு - அரை கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில், அரிசி மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை வட்டமாக நறுக்கி மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மிளகு வடை
தேவையானவை: உளுத்தம்பருப்பு - ஒரு கப், மிளகு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகு சேர்த்து பாதி மாவை கரகரப்பாகவும், மீதியை நைஸாகவும் அரைக்கவும். உப்பு, அரிசி மாவு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். இதில், ஒரு கரண்டி காய வைத்த எண்ணெயை ஊற்றிக் கலந்து, மெல்லிய வடைகளாகத் தட்டி, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பேபிகார்ன் பஜ்ஜி
தேவையானவை: பேபிகார்ன் - 5, பொட்டுக்கடலை மாவு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், சமையல் சோடா - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை மாவுடன், மிளகாய்த்தூள், அரிசி மாவு, சமையல் சோடா, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் 2 நிமிடம் போட்டு எடுத்து, வடிகட்டி, பிறகு துண்டுகளாகவோ (அ) முழுசாகவோ கரைத்த மாவில் தோய்த்து, எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
ஸ்வீட் கார்ன் வடை
தேவையானவை: பொடியாக நறுக்கிய ஸ்வீட் கார்ன் - ஒரு கப், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: அரை கப் ஸ்வீட் கார்னை கரகரப்பாக அரைத்து எடுக்கவும். இதனுடன் மீதி அரை கப் ஸ்வீட் கார்ன், உப்பு, மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள், பொட்டுக்கடலை மாவை கலந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து, மாவை வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.
உருளைக்கிழங்கு-கீரை பஜ்ஜி
தேவையானவை: உருளைக்கிழங்கு - 4, கடலை மாவு - ஒரு கப், கஸ்தூரி மேத்தி இலை - 3 டேபிள்ஸ்பூன், தனியாத்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய், உருளைக்கிழங்கைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் கடலை மாவில் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும் (உருளைக்கிழங்குடன் மாவு பிடித்துக் கொள்ளும் அளவுக்கு 'திக்' ஆக கரைத்துக் கொள்ளவும்). உருளைக்கிழங்கை தோல் சீவி, வட்டமாக வெட்டி எடுத்து மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
முப்பருப்பு வடை
தேவையானவை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா அரை கப், காய்ந்த மிளகாய் - 4 அல்லது 6, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பருப்புகளை ஒரு மணி நேரம் ஊற வைத்து மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைத்து உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
எண்ணெயைக் காய வைத்து, மாவை சிறு வடைகளாகத் தட்டி பொரித்தெடுக்கவும்.
மங்களூர் பஜ்ஜி
தேவையானவை: மைதா - ஒரு கப், கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் துண்டுகள் - தலா ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: மைதா, கடலை மாவை தயிரில் கரைத்து (இட்லி மாவை விட சற்று கெட்டியாக இருக்கவேண்டும்) இஞ்சி, பச்சை மிளகாய், சமையல் சோடா, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலக்கவும்.
எண்ணெயைக் காய வைத்து, மாவை எடுத்து ஒவ்வொரு கரண்டியாக அதில் விட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
காராமணி வடை
தேவையானவை: காராமணி - ஒரு கப், காய்ந்த மிளகாய் - 3 (அ) 5, தேங்காய் துருவல் - கால் கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: காராமணியை 2 மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
கத்தரிக்காய் மசாலா பஜ்ஜி
தேவையானவை: கத்தரிக்காய் - 4, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - கால் கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காய், எண்ணெயைத் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, தண்ணீர் விட்டுக் கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.
கத்தரிக்காயை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கி, மாவில் தோய்த்து சூடான எண்ணையில் பொரித்தெடுக்கவும்.
ஆள்வள்ளிக் கிழங்கு வடை
தேவையானவை: ஆள்வள்ளிக் கிழங்கு துருவல் - ஒரு கப், வறுத்த வேர்க்கடலைப் பொடி - கால் கப், மிளகுத்தூள் - 2 டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் விட்டு, நன்றாகக் கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை சிறிய வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
மைசூர் பஜ்ஜி
தேவையானவை: மைதா மாவு - 2 கப், அரிசி மாவு - 3 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), முந்திரி துண்டுகள் - 2 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், இஞ்சி துருவல், சமையல் சோடா - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துண்டுகள் - 2 டீஸ்பூன், புளிப்பு தயிர் - மாவை கரைப்பதற்கு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயைத் தவிர, மற்ற எல்லா பொருட்களையும் தயிரில் சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
ஒரு கரண்டியால் மாவை எடுத்து காயும் எண்ணெயில் விட்டு, பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
உருளைக்கிழங்கு வடை-பஜ்ஜி
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப், கடலை மாவு - முக்கால் கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொள்ளவும். மசித்த உருளைக்கிழங்கில், மிளகாய்த்தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை வடைகளாகத் தட்டி, கடலைமாவு கரைசலில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
புடலங்காய் பஜ்ஜி
தேவையானவை: வட்டமாக நறுக்கிய புடலங்காய் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், அரிசி மாவு - கால் கப், சமையல் சோடா - கால் டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவுடன், அரிசி மாவு, சமையல் சோடா, மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
புடலங்காயை மாவில் தோய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
ஜவ்வரிசி வடை
தேவையானவை: வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 3, ஜவ்வரிசி - ஒரு கப், வறுத்து அரைத்த வேர்க்கடலை - அரை கப், பச்சை மிளகாய் - 4, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பவுடர் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஜவ்வரிசியை 20 நிமிடம் ஊற வைத்து, அதில் எண்ணெய் தவிர மற்ற எல்லா பொருட்களையும் கலந்து கொள்ளவும். இதை சிறிய வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
வெற்றிலை பஜ்ஜி
தேவையானவை: வெற்றிலை - 10, கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பேகிங் சோடா - ஒரு சிட்டிகை, ஓமம், மஞ்சள்தூள் - தலா கால் டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவில் ஓமம், மஞ்சள் தூள், பேகிங் சோடா, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். வெற்றிலையை காம்பை எடுத்து விட்டு இரண்டு பாதியாக எடுத்து, ஒவ்வொன்றையும் மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பீட்ரூட் வடை
தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒரு கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், கடலை மாவு - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், சோம்பு அல்லது சீரகம் - தலா அரை டீஸ்பூன், அரிசி மாவு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டுக் கலந்து கொள்ளவும். இதை வடை களாகத் தட்டி, காயும் எண்ணெ யில் போட்டு பொரித்தெடுக்க வும்.
பயத்தம்பருப்பு வடை
தேவையானவை: பயத்தம்பருப்பு - ஒரு கப், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பயத்தம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கெட்டியாக அரைக்கவும். இதில் உப்பு, மிளகாய்தூள் சேர்த்து, ஒரு கரண்டி சூடான எண்ணெயை ஊற்றி, நன்றாகக் கலந்து கொள்ளவும்.
இந்த மாவை வடைகளாகத் தட்டி, காயும் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பிரெட்-சென்னா பஜ்ஜி
தேவையானவை: பிரெட் - ஒரு பாக்கெட், பொடியாக நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி கலவை - 2 கப், தக்காளி - 1 (பொடியாக நறுக்கவும்), வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), சென்னா மசாலா - 2 டீஸ்பூன், பூண்டு - 3 பல், கொத்தமல்லி, பெருங்காயத்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடலை மாவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பிரெட்டை ரோஸ்ட் செய்து 4 துண்டுகளாக நறுக்கவும். பீன்ஸ், கேரட், பட்டாணியை வேக வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும். தக்காளியுடன் பூண்டு, பெருங்காயத்தூள் சேர்த்து விழுதாக அரைத்து வதக்கவும். இதனுடன் வெங்காயம், மசித்த காய்கறிகள், கொத்தமல்லி சேர்த்து வதக்கி, உப்பு, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், சென்னா மசாலா சேர்த்து கெட்டியாக வரும் வரை கிளறவும்.
கடலை மாவில் உப்பு, மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும். 2 பிரெட் துண்டுகளின் நடுவில் காய்கறி கலவையை சிறிது வைத்து மூடி, கடலை மாவு கரைசலில் தோய்த்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
திடீர் வடை
தேவையானவை: பொட்டுக்கடலை - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - அரை கப், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பொட்டுக்கடலை, வேர்க்கடலை, மிளகாயை சேர்த்து பொடித்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். இதை சிறு வடைகளாகத் தட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கோலி பஜ்ஜி
தேவையானவை: வறுத்த ரவை - ஒரு கப், தயிர் - கால் கப், கடலை மாவு, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் துண்டுகள், சர்க்கரை - தலா ஒரு டீஸ்பூன், சமையல் சோடா - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் தயிரில் கலந்து கெட்டியாகப் பிசைந்து, அரை மணி நேரம் ஊற விடவும். இந்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து கைகளினால் உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
பனீர் பஜ்ஜி
தேவையானவை: பனீர் துண்டுகள் - ஒரு கப், கடலை மாவு - அரை கப், சமையல் சோடா - கால் டீஸ்பூன், அரிசி மாவு - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடலை மாவுடன் சமையல் சோடா, அரிசி மாவு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.
பனீர் துண்டுகளை கடலை மாவு கரைசலில் தோய்த்து காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Post a Comment