மருத்துவக் காப்பீட்டுக் குறிப்புகள்!--இன்ஷூரன்ஸ்
மருத்துவக் காப்பீட்டுக் குறிப்புகள்! மருத்துவக் காப்பீடு பற்றிச் சொல்லும் போது ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல ஏராளமான சந்தேகங்க...



மருத்துவக் காப்பீடு பற்றிச் சொல்லும் போது ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல ஏராளமான சந்தேகங்களும் சேர்ந்தே முளைக்கின்றன. அவற்றுக் கெல்லாம் பதிலளிக்கிறார் ‘நேஷனல் இன்ஷ¨ரன்ஸ்’ நிறுவனத்தின் டிவிஷனல் மேனேஜர் வேணு கோபாலன்.
‘‘பிறந்து மூன்றே மாதமான என் குழந்தைக்கு மருத்துவக் காப்பீடு எடுத்துக்கொள்ள முடியுமா?’’
‘‘முடியும். மூன்றுமாதம் முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியும். இப்போது, அறுபது வயதைத் தாண்டியவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வந்துவிட்டது. அந்த வகையில் 60\80 வயதுள்ளவர்கள், இந்த பாலிசிகளை எடுத்துக்கொள்ள முடியும். இதில் அதிகபட்சமே, மருத்துவ சிகிச்சைக்கு ஒரு லட்சமும், கிரிடிக்கல் இல்னஸ் பாலிசியில் இரண்டு லட்சம் வரையும்தான் எடுத்துக்கொள்ள முடியும்.’’
---------------------------------------------------------------------------------------------------------------
‘‘இரண்டு வருடத்துக்கு முன்பு, 50,000 ரூபாய்க்கான மெடிக்ளைம் பாலிசி எடுத்தேன். எனது வருமானம் உயரும்போது, அதே பாலிசியின் தொகையை அவ்வப்போது அதிகரித்துக்கொள்ள முடியுமா?’’
‘‘மருத்துவக் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ள முடியும். ஆனால், அது அவரது வயது மற்றும் உடல் நிலையைப் பொறுத்தது.
உதாரணமாக, இந்த பாலிசியை எடுத்தவர் ஏற்கெனவே, ஏதாவது ஒரு சிகிச்சைக்காக (ஹார்ட் அட்டாக்) இதைப் பயன்படுத்தியிருந்தால், அந்த நோய்க்கான காப்பீடுத் தொகை உச்சவரம்பாக ஒரு லட்சம் வரைதான் கிடைக்கும். இந்த நோய்க்காக மறுபடியும் ஒரு லட்சம் வரை மட்டும்தான் எடுத்துக் கொள்ள முடியும். இதுதவிர, மற்ற நோய்களுக்கான காப்பீட்டு உச்ச வரம்பை உயர்த்திக்கொள்ள முடியும்.’’
-------------------------------------------------------------------------------------------------------------
‘‘ஒருவர் அதிகபட்சமாக எத்தனை மெடிக்ளைம் பாலிசிகளை எடுத்துக்கொள்ள முடியும். நான்கு ஐந்து பாலிசிகள் எடுத்திருந்தால், ஒரே சமயத்தில் அத்தனை பாலிசிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியுமா?’’
‘‘ஒருவர் எத்தனை மெடிக்ளைம் பாலிசிகள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அதிகபட்சமாக ஐந்து லட்சம் முதல் 25 லட்சம் வரை பாலிசிகளை வழங்குகிறார்கள். வெவ்வேறு நிறுவனங்களில் பாலிசிகளை வைத்துக்கொள்வதைவிட, ஒரே நிறுவனத்தில் வைத்துக்கொள்வது நல்லது. ஒரு நோய்க்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கும்போது, உங்களது எல்லா பாலிசிகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். அவ்வாறு குறிப்பிடும் போது, சிகிச்சைக்கான தொகையை அத்தனை பாலிசிகளில் இருந்தும் சமமாகப் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.’’
----------------------------------------------------------------------------------------------------------------
‘‘ஒரு நிறுவனத்தில் வேலைபார்க்கும்போது மெடிக்ளைம் குரூப் பாலிசியில் சேர்ந்தேன். அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறும்போது, இந்த பாலிசியை தனியாகத் தொடரமுடியுமா?’’
‘‘குரூப் பாலிசியிலிருந்து வெளியேறும்போது, அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறியதும் அந்த இன்ஷ¨ரன்ஸ் நிறுவனத்தில் தெரிவித்து தனியாக பாலிசியைத் தொடரலாம். குரூப் பாலிசியில் இருக்கும்போது, பாதி பிரீமியத் தொகையை நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தினர் செலுத்தி வருவார்கள். தனியாக வந்த பிறகு முழு பிரீமியத் தொகையையும் சேர்த்தே செலுத்த வேண்டும்.’’
-------------------------------------------------------------------------------------------------------------
‘‘தனித்தனியான நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள தனிப்பட்ட மருத்துவக் காப்பீடுகள் இருக்கிறதா?’’
‘‘நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்வதற்காகவே கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசி என தனியான பாலிசிகள் உள்ளன. இவற்றை பெனிஃபிட் பாலிசிகள் என்கிறார்கள். கேன்சர், கிட்னி மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரகக் கல் அடைப்பு, ஹார்ட் அட்டாக் போன்ற நோய்களுக்கு என இந்த பாலிசியை எடுத்துக் கொள்ள முடியும். இந்த பாலிசி எடுத்திருந்து, இந்த நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்த பாலிசிக்கான முழுத்தொகையைக் கொடுத்து விடுவார்கள். மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் கிடைக்கும் என்று கிடையாது. மெடிக்ளைம் பாலிசியும் இதுவும் தனித்தனியானது.’’
--------------------------------------------------------------------------------------------------------------
‘‘டாக்டரின் ஆலோசனையின்படி, என் அம்மாவை, நர்ஸ் ஒருவர் வீட்டில் கவனித்து வருகிறார். இந்தச் செலவுகளை மருத்துவக் காப்பீடு ஏற்றுக்கொள்ளுமா?’’
‘‘மருத்துவமனை சிகிச்சை முடிந்த பிறகு, அறுபது நாட்கள்வரை போஸ்ட் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிறது. ஆனால், அந்த மொத்தச் செலவுகளும் ஒருவர் எடுத்துள்ள காப்பீட்டுத் தொகைக்குள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் மேற்சொன்ன செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படும்.’’
-----------------------------------------------------------------------------------------------------------------
‘‘கிட்னி பாதிப்புக்கான சிகிச்சையில், டயாலிஸிஸ் செய்து, அன்றய தினமே வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இந்தச் செலவுகளை மருத்துவக் காப்பீடு ஏற்றுக்கொள்ளுமா?’’
‘‘மருத்துவமனையில் 24 மணிநேரம் அனுமதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவக் காப்பீடு அந்தச் செலவுகளை ஏற்றுக்கொள்ளும். ஆனால், இன்று அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. முன்பு போல் ஒரு நோய்க்கு பல நாட்கள் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, சில மருத்துவ சிகிச்சைகளுக்கு சில மணி நேரங்களே போதுமானது. எனவே, மருத்துவ பாலிசிகளை வழங்கும் நிறுவனங்களும் அவற்றில் மாறுதல் செய்துள்ளன. அதன்படி கிட்னி டயாலிஸிஸ், ஹீமோதெரபி, காட்ராக்ட் போன்ற பல நோய்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறது. இவற்றுக்கு 24 மணிநேரம் மருத்துவமனை யில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.’’
Post a Comment