கவியரசு வைரமுத்து கேள்வி? பதில்! உபயோகமான தகவல்கள்
மனிதகுலத்தைத் திசைமாற்றிய மாற்றங்கள் என்னென்ன? கைகளும் விரல்களுமே மனிதகுலத்தைத் திசைதிருப்பிய முதற்பெரும் நிகழ்வு. முன்னங்கால்கள் கைகளாகி...

கைகளும் விரல்களுமே மனிதகுலத்தைத் திசைதிருப்பிய முதற்பெரும் நிகழ்வு. முன்னங்கால்கள் கைகளாகி கைகளில் ஒட்டியிருந்த விரல்கள் விடுதலை பெற்று நரம்புமண்டலம் சுயமாய் இயங்கத் தொடங்கிய பிறகுதான் உலகம் உருமாறத் தொடங்கியது.
சிக்கிமுக்கிக் கல்லிலிருந்து நெருப்பை உண்டாக்கியது மனிதகுலத்தின் முதல் தொழில் நுட்பம். நெருப்பை இரும்பில் நுழைத்தது முதல் தொழிற்புரட்சி.
டைகிரிஸ் நதியில் உருண்டுவந்த உருண்டைப் பாறையிலிருந்து கண்டுபிடித்த ‘சக்கரம்’_
சித்திரக் குறியீடுகளில் தொடங்கி வரிவடிவத்தில் முடிந்த ‘எழுத்து’ _
காற்றில் பறந்த இலவம்பஞ்சுகள் படிந்து படிந்து ஆடைகட்டிக்கொண்ட மரங்களைப் பார்த்து சீனாவில் தொடங்கிய ‘நெசவு’ _
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் கண்டறியப்பட்டு ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்ட ‘வெடிமருந்து’ _
சூரியன் பூமியை அல்ல _ பூமிதான் சூரியனைச் சுற்றுகிறது என்று வானத்தைப் புரட்டிப்போட்ட கலீலியோவின் துணிவு _
தரையில் வீழும் ஆப்பிள் பழத்திலிருந்து ஐசக் நியூட்டன் கண்டறிந்த ‘புவியீர்ப்பு’ _
கொதிக்கும் உலையிலிருந்து ஜேம்ஸ் வாட் கண்டறிந்த ‘நீராவி எந்திரம்’_
மனித உடலில் ரத்தம் தேங்கிக் கிடக்கவில்லை அது சுழல்கிறது என்று ஹார்வே கண்டுபிடித்த பிறகு மருத்துவ உலகத்தில் நேர்ந்த புரட்சி _
ஒரு மரம் எரிந்து போனதிலிருந்து பெஞ்சமின் பிராங்க்ளின் மின்னலால் கண்டறிந்த ‘மின்சாரம்’_
மின்விளக்கு உட்பட தாமஸ் ஆல்வா எடிசன் கண்டுபிடித்த 1033 கண்டுபிடிப்புகள் _
ஒலி உலகப் புரட்சிக்கு மூலமாக மார்க்கோனி வடிவமைத்த ‘வானொலி’_
தகவல் தொழில் நுட்பத்தின் முதல் புரட்சியாய் கிரகாம்பெல் கண்டறிந்த ‘தொலைபேசி’_
ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த பேரண்டத்தின் நான்காம் பரிமாணம்.
விண்வெளியில் நகரும் பொருளுக்குப் புவிஈர்ப்பு இல்லை என்று ஜார்ஜ் கெய்லி கண்டறிந்ததும் விண்ணாய்வில் நேர்ந்த விழிப்புணர்வு_
உறவுகளின் மரபுகளை கேள்விக்கும் கேலிக்கும் உள்ளாக்கும் வகையில் ஃபிராங்க் ஆல்பர்ட் கண்டறிந்த கர்ப்பத்தடை மாத்திரை _
இத்தனை பெரிய மாற்றங்களையும் குப்பையில் கூட்டி எறிந்துவிடக் கூடும், பூமியைப் புரட்டிப் போடப் போகும் நேனோ தொழில்நுட்பம்.
வாக்கிங்’ பற்றி ஒரு நடைச்சித்திரம் தீட்டுங்களேன்...
நடைப்பயிற்சிக்குப் பெரிதும் உகந்த நேரம் காலைதான். அது ஓசோன் நிறையும் நேரம்; அதிக ஆக்சிஜன் கிடைக்கும் நேரம். படுக்கையில் அசைவற்றுக் கிடந்த உங்கள் மூட்டுகள் விறைத்திருக்கும். காலை நேர நடைப்பயிற்சியால் மூட்டுகள் முடிச்சவிழும். அடுத்த வீட்டு நண்பரை அழைத்துக் கொண்டு அடுத்த தெருவில் காப்பி சாப்பிட்டு ஒரு மணிநேரத்தில் வீடுவந்து சேர்வதே நடைப்பயிற்சி என்று பலர் நம்புகிறார்கள்; தவறு. நடைப்பயிற்சியில் முக்கியமானது நேரமல்ல; தூரம். குறைந்த நேரத்தில் அதிக தூரம் நடப்பது நல்ல பயிற்சி.
பூமிக்கு வலிக்குமென்று பொடி நடைபோவதெல்லாம் ஒரு நடையா? கைவீசி நடக்க வேண்டும்; காற்று கிழிபடும் ஓசை கேட்க வேண்டும். 63 தசைகள் இயங்கினால்தான் நீங்கள் நன்றாய் நடந்ததாய் அர்த்தம். நடைப்பயிற்சியின்போதே லாகவமாய்ச் சுழற்றிக் கழுத்துக்கு ஒரு பயிற்சி தரலாம். தோள்களை மெல்ல மெல்ல உயர்த்திக் காதுகளின் அடிமடல் தொடலாம். விரல்களை விரித்து விரித்துக் குவிக்கலாம்.
நடைப்பயிற்சியில் பேசாதீர்கள். உங்கள் ஆக்சிஜனை நுரையீரல் மட்டுமே செலவழிக்கட்டும். ஒருபோதும் உண்டுவிட்டு நடக்காதீர்கள். சாப்பிட்டவுடன் உடம்பின் ரத்தமெல்லாம் இரைப்பைக்குச் செல்ல வேண்டும்; இரைப்பையின் ரத்தத்தைத் தசைகளுக்கு மடைமாற்றம் செய்யாதீர்கள்.
உங்கள் விலாச் சரிவுகளில் திரவ எறும்பு போல் ஊர்ந்து வழியட்டும் வேர்வை. அதை இயற்கைக் காற்றில் மட்டுமே உலர விடுங்கள்.
இருக்கும் சக்தியை எரிக்கத்தானே நடந்தீர்கள். எரித்ததற்குமேல் வழியிலேயே நிரப்பிக் கொண்டு வந்துவிடாதீர்கள். 60 ரூபாய் செலவழித்து ஏன் 70 ரூபாய் கடன் வாங்குகிறீர்கள்?
உங்கள் எல்லாப் பாடல்களையும் ரசிகர்கள் அறிந்துவைத்திருக்கிறார்களா?
இல்லை. சேற்றில் புதைந்த முத்துக்களாய் ஆயிரமாயிரம் வரிகள் கேட்பாரற்றுப் போயிருக்கின்றன.
‘‘மூங்கிலுக்குள் நுழைகின்ற காற்று
முக்தி பெற்றுத் திரும்புதல் போல
உன் மடியில் சொல்லாய் விழுந்தவன்
கவியாய் முளைத்தெழுந்தேன்’’
இது எந்தப் பாட்டுக்குள்?
‘‘மொட்டுகள் வெடிக்கும் தேசமிது
குண்டுகள் வெடிக்கும் வாசனையோ?
மகரந்தப் பொடிகள் கலக்கும் காற்றில்
மாமிசத் தூள்கள் பறப்பதுவோ?
கடவுள் பேரில் இங்கு
போர்கள் போர்கள் எனில்
மனிதர்கள் கதைமுடிந்து போகாதோ?
மனிதர் தீர்ந்துவிடில்
வணங்க யாருமின்றிக்
கடவுள் கதைமுடிந்து போகாதோ?’’
இந்தச் சரணத்தின் பல்லவி என்ன?
‘‘விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணிச் சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை
எட்டுநாள் வாழும் பட்டாம் பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடம் வாழவுமில்லை
நாளை என்பதில் நம்பிக்கை வைத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்துப்
புன்னகை அணிந்து போரை நடத்து’’
இது எந்தப் பாடலின் சரணம்?
மூன்றுக்கும் சரியான விடை எழுதினால் பத்தாயிரம் ரூபாய் பணிவோடு பரிசு தருவேன்..
Post a Comment