அளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா? - அமுத மொழிகள்
அளவுக்கு மீறிய சுமையை இறைவன் சுமத்துகிறானா? ""இறைவன் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது சக்தியை மீறி எந்த சுமையையும் கொடுப்பதில்லை. ...


""இறைவன் என்றுமே மனிதர்களுக்கு அவர்களது சக்தியை மீறி எந்த சுமையையும் கொடுப்பதில்லை. இறைவனுக்கு கட்டுப்பட்டு அஞ்சி நடக்கும் விஷயத்தில் கூட மனிதனை இறைவன் சிரமப்படுத்தவில்லை,'' என்கிறார் நபிகள் நாயகம். இறைவன் நம் மீது பாரத்தை சுமத்துகிறான். ஆனால், ஏன் சுமத்தினான் என்ற அடிப்படையை ஆராய வேண்டும். காலில் முள் குத்தினால் கூட அதை ஒரு சோதனையாக கருதுகிறோம். சிலர் மகனுக்கு வேலை இல்லை என மனசங்கடத்தில் ஆழ்கின்றனர். சிலர் மகளுக்கு வாழ்க்கை இல்லை என்று அழுகின்றனர். இந்த பாரத்தை இறைவன் அவர்கள் மீது ஏன் சுமத்தினான்? அவர்கள் என்றோ, யாருக்கோ செய்த கெடுதல் செய்திருக்கிறார்கள். அதன் விளைவை இன்று அனுபவிக்கிறார்கள். மகளும், மருமகனும் பிரிந்திருக்கிறார்கள் என்றால், என்றோ அவர்கள் யார் குடும்பத்தையோ பிரித்திருக்க வேண்டும். இது இப்பிறவியிலும் இருக்கலாம். சென்ற பிறவியிலும் இருக்கலாம். அதனால் தான் இஸ்லாம் மறுமையைப் பற்றி மிக அதிகமாகவே வற்புறுத்திச் சொல்கிறது. ஆனாலும், இறைவன் கருணை மிக்கவன். இப்படிப்பட்டவர்களை அவன் உயிரோடு விட்டு வைத்திருப்பதே பெரிய விஷயம். இம்மையில் நன்மை செய்வதின் மூலம் மறுமையிலாவது இதுபோன்ற இக்கட்டான நிலையில் இருந்து தப்பிக்கலாம்.
மகனின் பாவத்தை பெற்றவர்கள் சுமக்க முடியுமா?
மகன் குடிகாரனாகி விட்டான். கெட்ட பெண்களிடம் சென்று சீரழிந்து வந்து விட்டான். அவனை நோய் ஆட்டிப் படைக்கிறது. செய்த பாவத்திற்குரிய தண்டனையே நோயாக மாறும் என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. இந்த வாக்கை மதிக்காததால், அவன் இப்போது படுக்கையில் கிடந்து அழுந்துகிறான். எழுந்து நடக்க முடியாத நிலையில், படுக்கையிலேயே மலஜலம் கழிக்கிறான். தன்னைத்தானே வெறுக்கிறான். அழுகிறான்.
இந்தக் கொடுமையை பெற்றவர்கள் பார்க்கின்றனர். மகனுக்காக அழுகின்றனர்.
""அல்லாஹ்! என் மகனை விட்டுவிடு. அவன் வாழ வேண்டியவன். அவனது நோயை எங்களுக்கு கொடுத்து விடு. எங்கள் ஆயுளை எடுத்துக் கொள். அதை அவனது ஆயுளுடன் கூட்டிவிடு,'' என்று கதறுகின்றனர்.
குர்ஆன் என்ன சொல்கிறது தெரியுமா?
""பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது. ஓர் ஆத்மாவின் பாவச்சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது'' என்று. குர்ஆன் இறைவனால் அருளப்பட்ட வார்த்தைகளை உள்ளடக்கியது. இறைவனே இப்படி தீர்ப்பளித்த பிறகு மனிதனால் என்ன செய்ய முடியும்? பாவம் செய்துவிட்டு பின்னர் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை.
எந்த நாடு என்ற பேதமில்லை
நமது பூர்வீகத்தை ஆராய்வோம். நம் தாத்தா..தாத்தாவுக்கு தாத்தா...இப்படி அடுக்கிக் கொண்டே போனால், என்றோ ஒருநாள் ஒரே ஒரு ஆணும், ஒரே ஒரு பெண்ணும் மட்டும் இருந்திருப்பார்கள். இவர்கள் தான் இறைவனால் படைக்கப்பட்டவர்கள். இவர்களில் முதல்வர் தான் ஆதம். இவரிடமிருந்தே எல்லா மனிதர்களும் பிறக்க ஆரம்பித்தனர். எண்ணிக்கை அதிகமாகியதும், நாடு,மொழி, நிறம் என்ற பேதங்களெல்லாம் ஏற்பட்டன. மொத்தத்தில் எல்லோரும் சகோதரர்கள் தான். ஆனால், ஏன் இந்த பேதம் ஏற்பட்டது. இதற்கு விடை தருகிறது குர்ஆன்.
""அல்லாஹ் இந்த பூமியின் அனைத்துப் பகுதியில் இருந்தும் மண்ணைச் சேகரித்து, அதன் ஒரு பிடியில் இருந்து ஆதமைப் படைத்தான். அதனால் தான் பூமியின் பலதரப்பட்ட தன்மைக்கேற்ப ஆதமின் மக்கள் வந்துள்ளனர். அம்மக்களில் கருப்பர், வெள்ளையர். சிவப்பு நிறத்தவர் என பல பலதரப்பட்ட நிறமுடையவர்களும், நல்லவர், கெட்டவர், மிருதுவானவர்கள், கவலை கொள்பவர்கள் என பலதரப்பட்ட பண்புகளை உடையவர்களும் உள்ளனர்,'' என அதில் சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் பூமியின் எல்லாப்பகுதிகளிலும் மண்ணைச் சேகரித்ததால், அந்த மண்ணின் நிறத்திற்கேற்ப மனிதனின் நிறம் அமைந்தது. பண்புகளும் மாறுபட்டன. நிறமும், பண்பும் மாறுபட்டிருந்தாலும், எல்லாரும் இறைவனின் குழந்தைகளே என்பதை நினைவில் கொண்டு, பேதங்களை மறந்து ஒற்றுமையாகவும். அமைதியாகவும் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.
Post a Comment