சமையல் குறிப்புகள்! எள்ளுப் பொடி
உடம்பில் சதை போட வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய எள்ளுப் பொடி எள்ளுப்பொடிக்குத் தேவையான பொருள்கள்: எள்ளு - 500 கிராம் மி...
உடம்பில் சதை போட வேண்டும் என்று நினைப்பவர்கள் சாப்பிட வேண்டிய எள்ளுப் பொடி
எள்ளுப்பொடிக்குத் தேவையான பொருள்கள்:
எள்ளு - 500 கிராம்
மிளகாய் வற்றல் - 10 அல்லது 12
உப்பு ஒன்றரை மேசைக்கரண்டி - அல்லது
அவரவர் தேவைப்படி
பெருங்காயப் பொடி - ஒன்றரைத் தேக்கரண்டி
கறுப்பு எள்ளாக இருந்தால் வேலை சற்றுக் கடினமாகும். கறுப்பு எள்ளைத் தண்ணீரில் நன்றாய்க் களைந்து தூசுதும்புகளை நீக்கிய பின் ஒரு வடிகட்டியில் தண்ணீர் போக வடியவைக்க வேண்டும். நீர் முற்றாக வடிந்த பிறகு அதைத் தரையில் கொட்டி ஒரு கெட்டித் துணியால் நன்றாய்த் தேய்க்க வேண்டும். அதன் மேலுள்ள கறுப்பு அப்போது பெருமளவு நீங்கும். (ஒருகால் அது உடலுக்குக் கேடு செய்யுமோ என்னமோ. அதனால்தான் வெளித்தோல் போகத் தேய்க்கச் சொல்லுகிறார்கள் என்று தோன்றுகிறது.) பிறகு அதை இரும்புக் கடாயில் படபடவென்று பொரிகிற வரை வறுக்க வேண்டும். வெள்ளை எள்ளாக இருந்தால் இந்தச் “சிங்கிநாதம்” தேவை யில்லை. களைந்து, தூசு போக்கி, வடிகட்டிவிட்டு அப்படியே கடாயில் கொட்டி வறுக்கலாம். தரையில் கொட்டித் தேய்த்துக்கொண்டிருக்கத் தேவை யில்லை.
பிறகு மிளகாயை இரண்டு முட்டை (சிறு கரண்டி) நல்லெண்ணெய்யில் வறுக்க வேண்டும். பின்னர் இவற்றுடன் உப்பையும் பெருங்காயப் பொடியையும் சேர்த்து மின் அம்மியில் பொடிக்க வேண்டும்.
சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிடலாம். (நெய்யைவிடவும் எண்ணைய் பெரும் பாலோர்க்கு அதிகச் சுவையாக இருக்கும்.) இதனை இட்டிலி, தோசைகளுக்கும் எண்ணெய்யில் கலந்து இட்டிலி-மிளகாய்ப்பொடிபோல் தொட்டுக்கொள்ளவும் செய்யலாம்.
உடம்பு அதிகப் பருமனும் இல்லாமல், ஒல்லிக்குச்சியாகவும் இல்லாமல் நிதானமாக இருப்பவர்கள் கொள்ளுப்பொடி, எள்ளுப்பொடி இரண்டையும் ஒரு சேர உட்கொண்டால் உடம்பு பருக்கவும் செய்யாமல், இளைக்கவும் செய்யாமல் அப்படியே நிலைக்கும்தானே!
Post a Comment