எரிசேரி தேவையானவை: காராமணி & கால் கப், நறுக்கிய நேந்திரங்காய் & ஒரு கப், தேங்காய் துருவல் & கால் கப், சீரகம் & அரை டீஸ்பூ...
எரிசேரி
தேவையானவை: காராமணி & கால் கப், நறுக்கிய நேந்திரங்காய் & ஒரு கப், தேங்காய் துருவல் & கால் கப், சீரகம் & அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் & 3. தேங்காய் எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: காராமணியை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். நேந்திரங்காயை தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் அதில் வேக வைத்துள்ள காராமணி, உப்பைப் போடவும். தேங்காய், சீரகத்தை அரைத்து விடவும். கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, காய்ந்ததும் பச்சைமிளகாயைக் கீறிப் போட்டு, நேந்திரங்காய் கலவையை சேர்த்து நன்றாக கொதித்ததும் இறக்கவும். கேரள ஸ்பெஷல் எரிசேரி ரெடி!
எரிசேரி: இதேபோன்று சேனைக் கிழங்கிலும் செய்யலாம்.
________________________________________________________________________
சொஜ்ஜி அப்பம்
தேவையானவை: ரவை, தேங்காய் துருவல், துருவிய வெல்லம், மைதா & தலா ஒரு கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் & கால் டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு, உப்பு & அரை டீஸ்பூன்.
செய்முறை: அடிகனமான கடாயில் நெய் ஊற்றி ரவையை சிவக்க வறுக்கவும். அதில், தேங்காய் துருவலை சேர்க்கவும். வெல்லத்தை கால் கப் தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி அதை ரவை கலவையில் கொட்டி கிளறவும். மூன்றும் சேர்ந்து கெட்டியாக சுருண்டு வரும் பதத்தில் ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும். ஆறியதும், சிறு உருண்டைகளாக உருட்டி பூரணமாக செய்து வைத்துக் கொள்ளவும்.
மைதாவை சிறிது உப்பு சேர்த்து, கெட்டியாக பூரி மாவு போல் பிசையவும். கடைசியில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி கலந்து வைக்கவும். பிறகு, சிறு உருண்டைகளாக உருட்டி பூரிபோல் செய்து, நடுவில் பூரண உருண்டையை வைத்து வெளியில் வராத அளவுக்கு மூடவும். வாழை இலை (அ) பாலிதீன் கவரின் மேல் சிறியதாக தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
சொஜ்ஜி அப்பம்: சிறிது பாதாம், முந்திரி துருவி சேர்த்தால், சுவை கூடுதலாக இருக்கும்.
_____________________________________________________________________________
கோள வடை
தேவையானவை: அரிசி & 2 கப், வெள்ளை உளுந்து & ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் & ஒரு டீஸ்பூன், வெண்ணெய் & ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு & தேவையான அளவு.
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து 10 நிமிடம் உலர்த்தி மிக்ஸியில் மாவாக அரைக்கவும். வெள்ளை உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து மாவாக அரைத்துக் கொள்ளவும். இரண்டையும் நன்றாக சலித்து வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், எள் சேர்த்து தண்ணீர் தெளித்து முறுக்கு மாவு பதத்தில் கெட்டியாகப் பிசையவும். இந்த மாவில் சிறிது எடுத்து நீளமாக உருட்டி அதை வட்ட வடிவில் ஓரங்களை ஒட்டவும். அதிக நேரம் காயவிடக் கூடாது. இதே போன்று எல்லாவற்றையும் செய்து வைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கோள வடை: சிறிது தேங்காய் துருவலை சேர்த்துச் செய்தால் அருமையாக இருக்கும்.
__________________________________________________________________________________
கார்ஃப்ளேக்ஸ் பாயசம்
தேவையானவை: கார்ன்ஃப்ளேக்ஸ் & ஒரு கப், சர்க்கரை & அரை கப், மில்க்மெய்ட் & கால் கப், திக்கான பால் & இரண்டரை கப், ஏலக்காய்த்தூள் & கால் டீஸ்பூன், குங்குமப்பூ & ஒரு சிட்டிகை, நெய் & 2 டீஸ்பூன், துருவிய முந்திரி, பாதாம் & சிறிதளவு.
செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு அதில் கார்ன்ஃப்ளேக்ஸ் போட்டு லேசாக வறுத்து அரை கப் தண்ணீர் விடவும். பிறகு சர்க்கரையைப் போடவும். சர்க்கரை நன்றாகக் கரைந்ததும் அதில் பாலை ஊற்றி மில்க்மெய்ட் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்ததும் ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டு துருவிய பாதாம், முந்திரியால் அலங்கரிக்கவும்.
கார்ன்ஃப்ளேக்ஸ் பாயசம்: நட்ஸை அரைத்து விட்டுச் செய்தால் சுவை கூடும்.
________________________________________________________________________________________
வெல்லச் சீடை
தேவையானவை: பச்சரிசி & 2 கப், வெல்லம் & கால் கப், ஏலக்காய்த்தூள் & கால் டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு, தேங்காய் துருவல் & ஒரு டீஸ்பூன், வெள்ளை உளுந்து & 2 டீஸ்பூன், எள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & அரை டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து வடித்து, துணியில் 10 நிமிடம் உலர வைக்கவும். இதை மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்து மாவை சலித்துக் கொள்ளவும். உளுந்தை வாசனை வரும் வரை வறுத்து அரைத்துக் கொள்ளவும். அரிசி மாவு, உளுந்து மாவு, வெண்ணெய், தேங்காய் துருவல், ஏலக்காய்தூள், எள் எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை கால் கப் தண்ணீரில் நன்றாக கரைத்து வடிகட்டி, அதிரச பாகாக (கொதிக்கும்போது தண்ணீரில் போட்டு எடுத்து பார்த்தால் கண்ணாடி போல் எடுக்க வரும்) வந்தவுடன் மாவைத் தூவிக் கிளறி, உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 20 நிமிடம் நன்றாக ஆற விட்டு குறைவான தீயில் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். எடுக்கும்போது மெத்தென்று இருக்கும். ஆறியதும் கெட்டியாகிவிடும்.
வெல்லச் சீடை: வெண்ணெய் சேர்ப்பதால் மிருதுவாகவும் வாசனையாகயும் இருக்கும்.
_________________________________________________________________________________________________
சக்கவரட்டி
தேவையானவை: பாதியாக பழுத்த நேந்திரங்காய் & 1, வெல்லம் & கால் கப், ஏலக்காய்த்தூள் & கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் & ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குப்பொடி & ஒரு டீஸ்பூன், சர்க்கரை & ஒரு டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.
செய்முறை: நேந்திரங்காயை நீளவாக்கில் இரண்டாகக் கீறி, தோல் சீவி, சிறு துண்டுகளாக சற்று கனமாக வெட்டிக் கொள்ளவும். நேந்திரங் காய் துண்டுகள் ஒரு கப் இருந்தால் கால் கப் வெல்லம் அல்லது சற்று குறைத்தும் சேர்க்கலாம். துண்டுகளாக்கிய நேந்திரங்காயை எண்ணெயில் பொரித்து வைத்துக் கொள்ளவும். வெல்லத்தை சிறிது தண்ணீரில் கொதிக்கவிட்டு வடிகட்டி, இளகுப் பாகாக (அதிரசப்பாகு போல்) ஆக்கவும். வறுத்து வைத்துள்ள நேந்திரங்காயை பாகில் போட்டுக் கிளறி சுக்குப்பொடி, ஏலக்காய்த்தூள், வறுத்த தேங்காய் துருவல் சேர்க்க வும். கடைசியாக ஒரு டீஸ்பூன் சர்க்கரையை மேலே தூவவும்.
சக்கவரட்டி: தேங்காயை சிறு துண்டு களாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போட்டால் வாசனை கமகமக்கும்.
Post a Comment