உங்களுக்காக எளிமையாக ஒரு யோகா பாடம்....
செலவு -சில நிமிட ஆசனம்...வரவு -பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ! உங்களுக்காக எளிமையாக ஒரு யோகா பாடம்.... 'எப்பப் பார்த்தாலும்... கிச்சன்,...

https://pettagum.blogspot.com/2011/01/blog-post_4243.html
செலவு -சில நிமிட ஆசனம்...வரவு -பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு !
உங்களுக்காக எளிமையாக ஒரு யோகா பாடம்....
'எப்பப் பார்த்தாலும்... கிச்சன், குழந்தைகள், கணவன், சினிமா, சீரியல்கள், அலுவலகம், அரசியல் என்று அக்கறைப்பட்டுக்கிட்டே இருக்கற நாம... ஒரு நிமிஷமாச்சும் நம்மளோட ஆரோக்கியத்தைப் பத்தி அக்கறைப்பட்டிருக்கோமா...?' என்று நினைத்துப் பார்த்தால் 99.99% அளவுக்கு இல்லை என்பதே பதிலாக இருக்கும். 'கால்ல றெக்கை கட்டிக்கிட்டு பறந்துகிட்டிருக்கறப்ப... உடம்பைப் பத்தி நினைக்க எங்க நேரமிருக்கு...' என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டே இருந்தால்... ஒரு நேரம் இல்லாவிட்டாலும் ஒரு நேரம் ஒரேயடியாக ஓய்ந்து உட்கார வேண்டியதாகிவிடும்... உஷார்!
''பலர் யோகாவை ஏதோ பிரம்மச்சூத்திரமாக நினைத்து, 'நம்மால் செய்ய முடியுமா' என்று தயங்குகிறார்கள். எந்த வயதினரும் எளிமையாகச் செய்யக்கூடிய, இதயம், நுரையீரல், சிறுநீரகம் என நம் உடலின் முக்கிய உறுப்புகளின் ஆரோக்கியத்துக்கான அடிப்படை ஆசனங்கள் இவை. நாளெல்லாம் புத்துணர்வுக்கு இந்த ஆசனங்கள் கியாரன்டி! கூடவே, தினமும் சில நிமிடங்கள் இந்த ஆசனங்களுக்காக ஒதுக்குவது, உங்களின் ஆயுளை பல ஆண்டுகள் அதிகரிக்கும்!'' என்று சிரஞ்சீவி சூத்திரம் சொல்லும் கிருஷ்ணமாச்சார்யா, அவற்றை இங்கு விளக்குகிறார்!
1. காலைக் கடன்களை முடித்துவிட்டு சமதளமான தரையில் ஒரு கனமான துணியை விரித்து அமருங்கள். முதுகு நிமிர்ந்த நிலையில் கால்களை சப்பனிட்டுக் கொள்ளுங்கள் (பத்மாசனத்தில் இருந்தால் மிகவும் நல்லது). கண்களை மூடுங்கள். உங்கள் எண்ணம் முழுக்க நெற்றிப் பொட்டில் இருக்கட்டும். வெளியே இருக்கும் காற்றை நாசித் துவாரங்கள் மூலம் உள்ளிழுங்கள். முடிந்த மட்டும் இழுங்கள். பிறகு, நிதானமாக உள்ளிருக்கும் காற்றை மெதுவாக வெளியே விடுங்கள். இதை எத்தனை தடவை செய்ய வேண்டும் என்கிற எண்ணிக்கை முக்கியமல்ல. தப்பாக செய்கிறோமோ என்ற தவிப்பும் வேண்டாம். உங்கள் கவனம் முழுக்க நெற்றிப் பொட்டிலும், காற்றை உள் வாங்கி வெளியே விடுவதிலும் மட்டுமே இருக்கட்டும். பத்து நிமிடங்கள் இப்படி செய்தால் நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு, அடுத்து நீங்கள் செய்யப் போகும் எளிய பயிற்சிகளுக்கு உங்கள் மனமும் உடலும் தயாராகி விடும்.
2. எழுந்து நின்று கால்களை அழுத்தமாக தரையில் பதித்துக் கொள்ளுங்கள். உடம்பின் மேல் பகுதி தளர்வாக இருக்கட்டும். உங்கள் கவனம் தொண்டைக் குழியில் இருக்கட்டும். கழுத்தை பின்புறமாக சாய்த்துக் கொள்ளுங்கள். ஆறு முறை ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். கழுத்தை இயல்பு நிலைக்குக் கொண்டு வந்து இடது பக்கமாகத் திருப்பி ஆறு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். பிறகு வலது பக்கமாக திருப்பி மீண்டும் ஆறு முறை மூச்சை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். இப்படி செய்வதன் மூலம் காது, மூக்கு, தொண்டை பகுதிகள் தளர்ந்து நுரையீரலுக்குள் தூய்மையான காற்று சிரமமில்லாமல் செல்லும். தைராய்டு சுரப்பிகள் சிறப்பாகச் செயலாற்றும்.
3. அடுத்து நீங்கள் செய்யும் பயிற்சி வயிற்றுக்கானது. எனவே, உங்கள் கவனத்தை வயிற்றுப் பகுதியில் மையப்படுத்துங்கள். கால்களைச் சற்று விரித்து தரையில் அழுத்தமாகப் பதித்துக் கொள்ளுங்கள். இடுப்புப் பகுதியில் உங்கள் கைகள் இரண்டையும் வைத்து உடம்பை உங்களால் எவ்வளவு பின் நோக்கி வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தபடி, ஆறு முறை காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றுங்கள். பின்பு நிமிர்ந்து இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு 'எல்' வடிவில் முன்னோக்கி குனிந்து ஆறு முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். பிறகு, பின்புறம் இருந்த கைகளை விடுவித்து தரையை நோக்கியபடி கைகளை தொங்கவிட்டு குனிந்த நிலையில் ஆறு முறை மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரையும். பல நோய்களுக்குக் காரணமாக இருக்கும் மலச்சிக்கல் ஏற்படாது. உடலில் இருக்கும் பருமன் படிப்படியாகக் குறைந்து, உடம்பில் உறுதித்தன்மை ஏற்பட்டு வயோதிகத் தோற்றத்தை விரட்டியடிக்கும். பெண்களுக்கு ஏற்படும் மாதாந்திர பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
4. இந்தப் பயிற்சியில் உங்கள் கவனத்தை இதயப் பகுதியில் மையப்படுத்துங்கள். நின்ற நிலையில் தோள் பட்டைக்கு இணையாக உங்கள் கைகளை உயர்த்துங்கள். இரு கைகளும் மிதக்கிற நிலையில் இருக்கட்டும். இந்த நிலையில் ஆறு முறை மூக்கின் வழியே காற்றை உள்ளிழுத்து வெளியேற்றுங்கள். பிறகு, கையைத் தலைக்கு மேல் கொண்டு செல்லுங்கள். மீண்டும் ஆறு முறை காற்று பயிற்சி செய்யுங்கள். அடுத்து கைகள் இரண்டையும் கீழே கொண்டு வந்து உடம்பின் பின்புறம் கொண்டு சென்று இரு கைகளின் விரல்களையும் இறுகப் பற்றி உங்களால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு மேலே முதுகை நோக்கி உயர்த்துங்கள். இப்போது உங்களின் மார்பு பகுதி விரிவடைந்து நிற்கும். கைகள் இரண் டும் பின்புறம் இருக்கும் நிலையில் கால்களைச் சற்று அகலப்படுத்திக் கொண்டு மெதுவாக முன்புறம் குனிந்த நிலைக்குச் செல்லுங்கள். இப்போது உங்கள் மொத்த உடம்பும் 'எல்' வடிவில், முகம் தரையைப் பார்த்தபடி இருக்கும். இதே நிலையில் ஆறு முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். இப்படிச் செய்வதன் மூலம் உங்கள் நுரையீரல்கள் நன்கு விரிவடைந்து காற்று வேகமாக உள்ளே சென்று, இதயத்தை நோக்கி ரத்தம் பாயும். மனதில் இருக்கும் அழுத்தங்களும், உளைச்சல்களும் தானாக வெளியேறும்.
5. உங்கள் ஒட்டு மொத்த கவனத்தையும் இந்தப் பயிற்சியின்போது அடிவயிற்றில் உள்ள உயிர்நிலைப் பகுதிக்குக் கொண்டு சென்று, ஒருநிலைப் படுத்துங்கள். நாற்காலியில் உட்காரும் நிலையில் கால்களை லேசாக மடக்கி வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் முன்பக்கம் தோள்பட்டை அளவில் நீட்டுங்கள். முட்டிகள் மடங்கிய நிலையிலேயே ஆறு முறை காற்றை உள்ளிழுத்து வெளியே விடுங்கள். பிறகு நேராக நின்று இடது காலை மட்டும் பக்கவாட்டில் நேராக நீட்டி வலது காலை மடக்குங்கள். கீழே உட்கார்ந்துவிட வேண்டாம். பாதி அமர்ந்த நிலையில், ஆறு முறை மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். பிறகு, இதே போல் வலது காலை நீட்டி இடது காலை மடக்கி மீண்டும் ஆறு முறை நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து மெதுவாக வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சி சிறுநீரகங்களுக்கு பலம் சேர்க்கும். சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை ஓட வைக்கும்.





Post a Comment