மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது ஒரு எளிய உடற்பயிற்சி!! மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரா...
மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது ஒரு எளிய உடற்பயிற்சி!!
மெல்லோட்டம் (ஜாக்கிங்) என்பது விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டம். மேலைநாடுகளில் 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட வயதினர் மிகவும் அதிக அளவு இதயதாக்கத்திற்கு ஆளாகி வருவதைக் கண்டனர். இது தொடர்பாக ஆய்வு நிகழ்த்திய ஆய்வு வல்லுநர்கள், இந்த வயதில் இவர்களுக்கு போதிய உடற்பயிற்சி இல்லாததால் இரத்த ஓட்டத்திறன் குறைவதால், மிகவும் எளிதாக இதய இரத்தக் குழாய்களில் இரத்தம் உறைய வாய்ப்பு உள்ளதெனக் கூறுகின்றார்கள். நடுத்தர வயதில் இவர்கள் டென்னிஸ், கால் பந்தாட்டம் போன்ற கடுமையான உடலுழைப்பை ஈர்க்கக் கூடிய விளையாட்டுகளில் ஈடுபட இயலாது.
உடலுக்கு அதிக சிரமம் அளிக்காததும் அன்றாடம் மேற்கொள்ளக்கூடிய ஒரு எளிய உடற்பயிற்சியைக் கண்டுபிடித்தனர். அதுதான் மெல்லோட்டம் என்பதாகும். இதயதாக்கத்தின் அதிரடியைச் சமாளிக்கவும், இதயத்திற்குப் போதிய இரத்த ஓட்டத்தை அளிக்கவும் கண்டுபிடிக்கப்பட்ட எளிய உடற்பயிற்சி இது.
மெல்லோட்டத்திற்கு ஏற்ற வயது எது?
15 வயதிற்கு மேற்பட்டவர்கள் மெல்லோட்டத்தில் ஈடுபடலாம். எனவே மெல்லோட்டம் என்பது எல்லா வயதினருக்கும் ஏற்ற அதிக பொருட் செலவில்லாத எளிய உடற்பயிற்சியாகும். மேலைநாடுகளிலுள்ள பெரும்பான்மையான மருத்துவர்கள், இதயதாக்கத்திலிருந்து (Heart attacke) தங்களைப் பாதுகாத்துக்கொள்ள சிறந்த தடுப்பு முறையாகப் பயன்படுத்துகிறார்கள்.
நீங்கள் எந்த வயதினராக இருந்தாலும், மெல்லோட்டத்தை மேற்கொள்வதற்கு முன்னர் உங்கள் மருத்துவரைக் கலந்து, உங்கள் இருதயத் துடிப்பு, நாடித் துடிப்பு, இரத்த அழுத்த அளவு, இவற்றை நன்கு பரிசோதித்து, உங்கள் உடலின் தகுதியைச் சோதித்துக் கொள்ளுங்கள்.
மெல்லோட்டத்திற்கு தேவையான உடைகள்
மெல்லோட்டத்திற்குத் தேவையான மிகவும் அடிப்படைப் பொருட்கள்: ஒரு ஜோடி ஷூக்கள்; வெறும் காலால் ஓடுவது விரைவில் பலவகையான இன்னல்களுக்கு உங்களை ஆளாக்கக் கூடும். ஓடும் பாதையிலுள்ள முட்கள், கண்ணாடித் துண்டுகள், பழைய ஆணிகள் உங்கள் கால்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடும். எனவே நல்ல ஷூக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது மிகவும் சிறந்ததாகும். மேலைநாடுகளில் மெல்லோட்டத்திற்கு என சிறப்பான ஷூக்கள் உள்ளன. நம் நாட்டில் இத்தகைய சிறப்புக் ஷூக்கள் கிடையாது. இருந்தாலும் பந்தயத்திற்குப் பயன்படக்கூடிய தரமான ஷூக்களைத் தயாரிக்கின்றனர். இவற்றில் உங்கள் அளவிற்கு ஏற்ற நல்ல ஷூக்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
நல்ல தரமான கேன்வாஸ் ஷூக்களையும் பயன்படுத்தலாம். மெல்லோட்டத்தின் பொழுது அணியும் ஆடைகள் பருத்தியினால் ஆன ஆடைகளாக இருந்தால் மிகவும் சிறந்ததாகும். பொதுவாக வியர்வையை நன்கு உறிஞ்சும் தன்மையுள்ள பருத்தியினால் ஆன டி.ஷர்ட்களை அணிவது சிறந்ததாகும். மெல்லோட்டத்தின் போது நாம் அணியும் ஆடையானது ஓட்டத்தைத் தடை செய்யாதவாறு கொஞ்சம் தளர்ச்சியாக இருப்பது நலமாகும். உங்கள் வசதிக்கு ஏற்ப அரைக்கால் சட்டையோ, அல்லது முழுக்கால் சட்டையோ நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
அதிகாலை வேளையில் வீசும் குளிரான காற்று உங்கள் உடலை நேரிடையாகத் தாக்காதவாறு உங்கள் ஆடைகள் இருக்க வேண்டும். நீங்கள் பெண்ணாக இருந்தால் பருத்தியால் ஆன சல்வார்கம்மீஸ் ஆடை மிகவும் சிறந்த ஆடையாகும்.
மெல்லோட்டத்திற்கு ஏற்ற இடம்
அமைதியான பூங்கா, திறந்த வெளி, நன்கு செம்மைப்படுத்தப்பட்ட மைதானங்கள், நகரிலுள்ள பந்தயத் திடல் மைதானங்கள், விளையாட்டுத்திடல்கள் போன்ற இடங்கள் மெல்லோட்டத்திற்கு ஏற்ற இடங்களாகும்.
மும்பை போன்ற பெரு நகரங்களில் மெல்லோட்டத்திற்கென தனி இடம் உருவாக்கி, மிகவும் குறைவான கட்டணத்தில் மெல்லோட்டம் மேற்கொள்பவர்களுக்கு தருகின்றனர். (Joggers Paradise) மேலும் மெல்லோட்டத்திற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதையானது கரடு முரடாக இல்லாமல் சமதளமாக இருப்பது மிகவும் முக்கியமாகும். கரடு முரடான பாதைகள் சில நாட்களில் உங்கள் மூட்டுக் காலில் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடும்.
மேலும் போக்குவரத்துக்கள் அதிகமுள்ள சாலைகளும் மெல்லோட்டத்திற்கு ஏற்ற இடமல்ல. ஏனென்றால், பலவகையான ஊர்திகளிலிருந்து வெளிவரும் கார்பன்-மோனாக்ஸைடு என்ற தீய வாயு உங்கள் உடலின் நலத்தை நாளடைவில் கெடுத்து விடும். ஊர்திகள் அதிகமுள்ள சாலைகளில் நீங்கள் ஓடும் பொழுது பின்னால் ஊர்திகள் வருகின்றனவா? இல்லையா? என அடிக்கடி உங்கள் கழுத்தைத் திருப்பிப் பார்க்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவதால் உங்கள் கழுத்தில் நிரந்தர வலியை ஏற்படுத்தக் கூடும்.
சில சமயங்களில் ஊர்திகளினால் உங்களுக்கு எதிர்பாராத விபத்துகள் ஏற்படக் கூடும்.
மெல்லோட்டத்திற்கு தகுந்த நேரம்
நம் நாட்டு சூழலில் மெல்லோட்டத்திற்குச் சிறந்த நேரம், காலையில் 8 மணிக்கு முன்பும், மாலை 5 மணிக்குப் பின்பும். மாலைப் பொழுதை விட விடியல் பொழுதுதான் மிகவும் சிறந்த வேளையாகும். ஏனென்றால் காலைப் பொழுதில் வீசும் இலேசான இளம் தென்றலும், மாசுபடியாத நிலையில் இருக்கும் தூய்மையான காற்றும் உங்கள் உடலுக்கு நல்லது.
மெல்லோட்டத்தை எவ்வாறு துவக்குவது?
மெல்லோட்டத்தைத் துவக்குவதற்கு முன்னர் உங்கள் மலக்குடல் மிகவும் தூய்மையாக இருக்க வேண்டும். மலச்சிக்கலானது உங்கள் மெல்லோட்டத்தைப் பாதிக்கக் கூடும். காலைப்பொழுதில் மெல்லோட்டத்தைத் துவக்குவதற்கு முன்னர் வெதுவெதுப்பான ஒரு தம்ளர் நீரில் சிறிது எலுமிச்சை சாறும் ஒரு கரண்டி தூய்மையான தேனும் கலந்து பருகுவது மிகவும் சிறந்த முறையாகும். இவ்வாறு பருகுவது மெல்லோட்டத்தின் பொழுது உடலிலிருந்து வெளிவரும் பலவகையான உப்புகளின் இழப்பையும் நீரின் இழப்பையும் ஈடு செய்யும். உங்களுக்கு மெல்லோட்டம் என்பது தொடக்கநிலை என்றால், முதன் முதலாக அரை கிலோ மீட்டர் தூரம் ஓடிப் பழகிக் கொள்ளுங்கள். பின்னர் உங்கள் ஆற்றல் அளவு இவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிறிதாக ஓடும் தூரத்தை அதிகப்படுத்துங்கள். நடுத்தர வயதை எட்டிய ஆண்களும், பெண்களும் ஒரு நாளைக்கு 5 கிலோ மீட்டருக்கு மேல் ஓடுவது உடல் நலத்திற்கு உகந்ததல்ல.
வாரத்திற்கு எத்தனை நாட்கள்?
அன்றாடம் ஓடுவது என்பது உடலுக்கு மிகுந்த களைப்பைத் தரக் கூடும். எனவே ஒரு நாள் விட்டு ஒரு நாள் விட்டு ஒருநாள் ஓடுவது மிகவும் சிறந்த முறையாகும். ஓய்வு நாட்களில் நீங்கள் இழந்த ஆற்றலைத் திரும்பப் பெற முடியும். அன்றாடம் 8 கிலோ மீட்டர் தூரம் ஓடும் அளவிற்கு உங்கள் உடல் நிலையானது தயாராகி விட்டால், வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஓடினால் போதுமானது. மேலும் நீங்கள் 10 கிலோ மீட்டர் தூரம் அன்றாடம் ஓடும் திறன் பெற்றால், வாரத்திற்கு 4 நாட்கள் மட்டும் ஓடினால் மோதும். நீங்கள் இளம் வயதினராக இருந்தால், வாரத்திற்கு 4 முறை 12 முதல் 15 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடலாம்.
மெல்லோட்டமானது எவ்வாறு இதயதாக்கத்தைத் தடுக்கக்கூடும்?
1. மெல்லோட்டமானது இதயத் தசைகளை வலுவாக்குகிறது.
2. இதயம் சுருங்கி விரிவடையும் பொழுது உடலுக்கு அனுப்பும் இரத்தத்தின் அளவானது ஒவ்வொரு முறையும் அதிகமாகிறது.
3. இரத்தக் குழாய்கள் அமைப்புக்களையும், சுற்றியுள்ள திசுக்களையும் வலுவாக்குகின்றது.
4. இரத்தக் குழாய்களின் அகப்புறத்தில் ஏற்படும் சிதைவு மாற்றங்களைத் தடுக்கிறது.
5. இரத்த அழுத்த அளவைக் குறைக்கத் துணை செய்கிறது.
6. இரத்த ஓட்டம் அதிகமாவதால் குறிப்பாக இதயத்தைச் சூழ்ந்துள்ள இரத்தக் குழாய்களில் ஓடும் இரத்தத்தின் அளவு அதிகமாவதால் - இதய இரத்தக் குழாய்களில் குருதி உறைந்து இதயத்தாக்கம் ஏற்படுவது தடுக்கப்படுகின்றது.
7. இரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் அளவை மட்டுமல்ல டிரைகிளிசிராய்டு அளவையும் குறைக்கத் துணைபுரிகின்றது. இதனால் இதயத் தாக்கத்திற்கு ஆளாகும் வாய்ப்பு பெரிதும் குறைகின்றது.
மெல்லோட்டத்தால் உடலுக்கு ஏற்படும் மற்ற பயன்கள்
1. நுரையீரலை வலுவாக வைக்கவும், நுரையீரல்களில் ஆக்ஸிஜனை ஈர்க்கும் கொள்ளளவை அதிகரிக்கவும் துணை செய்கின்றது.
2. உங்கள் உடலின் எடையைச் சீராக வைக்க துணைபுரிகின்றது.
3. இரவில் ஆழ்ந்த நிம்மதியான உறக்கத்திற்கு வழி வகுக்கின்றது.
4. எலும்புகளிலுள்ள சுண்ணாம்புச்சத்தின் அளவு குறைந்து எலும்புகள் மென்மையாவதைத் தடுக்கின்றது.
5. உடலிலுள்ள பலவகையான தசைகளை வலுவாக்குவதோடு அல்லாமல் அவற்றை மெருகேற்றுகின்றது.
6. மன இறுக்கத்தை அகற்றி உள்ளத்திற்கு புத்துணர்ச்சியும் மனமகிழ்ச்சியும் அளிக்கின்றது.
7. தன்னம்பிக்கையை வளர்க்கின்றது.
8. கெண்டைக்கால், தொடை, இடுப்பு, புட்டம் போன்ற தசைகளுக்கு நல்ல வடிவம் கொடுக்கின்றது.
9. உங்கள் உடலின் பிணி தடுக்கும் ஆற்றலை அதிகப்படுத்துவதோடு அல்லாமல் முதுமையைத் தள்ளிப்போடவும் துணைபுரிகின்றது.
10. இப்பூமியில் நீங்கள் நீண்ட நாட்கள் வாழ துணைபுரியும்.
மெல்லோட்டத்தின் பொழுது கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்:
1. வயிறு புடைக்க உணவு உண்ட பின்னர் மெல்லோட்டம் மேற்கொள்ளாதீர்கள்.
2. வெயில் அதிகமுள்ள வேளையும், மதிய வேளையும் மெல்லோட்டத்திற்கு ஏற்ற நேரமல்ல.
3. மெல்லோட்டத்தின்போது வாய் வழி மூச்சு விடுவதைத் தவிருங்கள்.
3. நீங்கள் குழுக்களாக ஓடும் பொழுது மற்றவர்களுடன் பேச்சுக் கொடுக்காதீர்கள். இது உங்களை விரைவில் களைப்படையச் செய்யும்.
5. குழுக்களாக ஓடும் பொழுது மற்றவர்களை முந்த முயற்சி செய்யாதீர்கள். ஏனென்றால், நீங்கள் மேற்கொள்வது உடற்பயிற்சிதானே தவிர ஓட்டப் பந்தயம் அல்ல.
6. உங்கள் வயது, உடலின் அமைப்பு, ஆற்றல் இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஓட்டத்தைச் சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
7. மெல்லோட்டத்தின் பொழுது உங்களுக்கு மயக்கமோ அல்லது தளர்ச்சியோ ஏற்பட்டால், மேற்கொண்டு ஓட முயலாமல், அப்படியே அந்த இடத்திலேயே உட்கார்ந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு நிலைமை சீரான பின்னர் மறுபடியும் ஓட முயலுங்கள்.
Post a Comment