செலவைக் குறைக்கும் ஃப்ளோட்டர் பாலிசி! இன்ஷூரன்ஸ்
செலவைக் குறைக்கும் ஃப்ளோட்டர் பாலிசி! கு றைந்த பிரீமியத்தில் ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் மெ...

எப்படி என்கிறீர்களா?
ஒரு காலத்தில் பணம் போடுவது மற்றும் எடுப்பது மட்டுமே வங்கிச் சேவையாக இருந்தது. அந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான அனைத்து நிதி திட்டங்களையும் விநியோகிக்கத் தொடங்கி இருக்கின்றன. அதில் முக்கியமானவை இன்ஷூரன்ஸ் பாலிசிகள். குறிப்பாக, மெடிக்ளைம் பாலிசிகள்!
மெடிக்ளைம் பாலிசியில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பாலிசி எடுப்பதற்கு பதில், குடும்பத்துக்கும் மொத்தமாக ஃப்ளோட்டர் பாலிசி எடுத்தால் பிரீமிய செலவை கணிசமாக மிச்சப்படுத்த முடியும்.
ஃப்ளோட்டர் பாலிசி பற்றி சிறிய விளக்கம்...
இந்த ஃப்ளோட்டர் பாலிசியில் குடும்பத்தினர் சுழற்சி முறையில் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அதாவது, மொத்த கவரேஜ் ஐந்து லட்சம் ரூபாய் என்று வைத்துக்கொள்வோம். இதில் குடும்பத் தலைவர் இரண்டு லட்ச ரூபாய்க்கு ஆண்டு ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்றால், மீதியுள்ள மூன்று லட்சத்துக்கு குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் சிகிச்சை எடுக்க முடியும்.
பிரீமியம் எவ்வளவு மிச்சம்?
கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் கணவனின் அப்பா, அம்மா கொண்ட குடும்பத்துக்கு 5 லட்சத்துக்கு ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க பொதுக் காப்பீடு நிறுவனத்துக்குச் சென்றால், சுமார்
20,000 பிரீமியம் இருக்கும். இதுவே வங்கிகள் அளிக்கும் ஃப்ளோட்டர் பாலிசியில் சுமார்
12,000 தான் பிரீமியம் இருக்கும்.

எப்படி சேருவது?
இந்த பாலிசியை வங்கிகள், அவற்றின் சேமிப்பு மற்றும் நடப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகின்றன. வாடிக்கையாளரின் வயது 18-க்கு மேல் இருந்தால் சேர்ந்துகொள்ளலாம். குழந்தைகளுக்கு மூன்று மாதத்துக்கு பிறகு கவரேஜ் கிடைக்கும். இந்த பாலிசியை அளிக்க, வங்கிகள் பொதுத் துறை மற்றும் தனியார் பொதுக் காப்பீடு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்திருக்கின்றன.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் பாலிசிக்கு ஆள் பிடிக்க அலைய வேண்டியதில்லை என்பதால், குறைந்த பிரீமியத்தில் வங்கிகளுடன் சேர்ந்து இந்த வகை பாலிசியை அளித்து வருகின்றன.
சாதக அம்சங்கள்:
வங்கியில் கணக்கு இருந்தாலே இந்த பாலிசியை எடுத்துவிட முடியும்.
தனித் தனி பாலிசியோடு ஒப்பிடும்போது மொத்த கவரேஜூக்கு பிரீமிய செலவில் சுமார் 40-50% குறைவு.
அதிக வயது என்றாலும் பல பாலிசிகளில் மருத்துவ பரிசோதனை தேவையில்லை.
பெரும்பாலான திட்டங்களில் அனைத்து வயதினருக்கும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பிரீமியம் இருக்கின்றன.
சற்று கூடுதல் பிரீமியத்தில் வயது முதிர்ந்த பெற்றோரையும் பாலிசியில் சேர்த்துக் கொள்ள முடியும்.
வங்கியின் வாடிக்கையாளர் 80 வயது வரை பாலிசியை புதுப்பித்து வரலாம்.
கவனிக்க: வங்கிக்கு வங்கி மெடிக்ளைம் பாலிசிக்கான பிரீமியம் வேறுபடுகிறது. கூடவே பாலிசி நிபந்தனைகளும் மாறுபடுகின்றன. இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்து உங்கள் குடும்பத்துக்கு எந்த ஃப்ளோட்டர் பாலிசி சரியானது என்பதை தேர்ந்தெடுத்து குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் பெறுங்கள்.
Post a Comment