நவீன கல்வியின் சிற்பி--மவ்லானா அபுல் கலாம் ஆஸாத்! மாமனிதர்கள்! வரலாற்றில் ஒரு ஏடு!!

இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். தேசபக்தி திருத்தொண்டர்! இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாள...

இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். தேசபக்தி திருத்தொண்டர்! இஸ்லாமிய சமுதாயத்தின் இளைஞர் பட்டாளத்துக்குத் தேசபக்தி உணர்வூட்டும் திருத்தொண்டராக விளங்கினார் சையத் மொகய்தீன். அவரது சண்ட மாருதச் சொற்பொழிவில் இலக்கிய நயம் மிளிர்ந்தது. தத்துவ விளக்கம் தவழ்ந்தது. புரட்சிச் சூறாவளியும் சுழன்றடித்தது. ஆதலால் மக்கள் அந்த இளைஞரைப் பொங்கி வரும் பேருவகையோடு "அபுல்கலாம் " என்று அழைத்தனர். அபுல்கலாம் என்ற அரபுச் சொல்லிற்கு "சொல்லின் செல்வர்" என்று பொருள். சையத் மொகய்தீன் என்ற பெயர் மறைந்து அபுல்கலாம் என்ற சிறப்புப் பெயரே நிலைத்தது.

வங்கப்பிரிவினையை எதிர்த்து சுதந்திர ஆவேசக் கனலை எழுப்ப அரவிந்தரும் பரோடாவில் இருந்து கல்கத்தா வந்து சேர்ந்தார். 'கர்மயோகின்' என்ற வார ஏட்டைத் தொடங்கினார். "துணிந்த வாலிப உள்ளங்களே காரியமாற்றக் கனிந்த உள்ளத்தோடு வருக!" என்று அந்த ஏடு அறைகூவல் விடுத்தது. அபுல்கலாமும் அரவிந்தரும் தேசபக்த அன்பால் பிணைக்கப்பட்டனர். அபுல்கலாம் இப்போது பழுத்த விடுதலை வீரரானார். ஆனால் அவருக்கு ஒரு பெரிய மனக்குறை. "ரகசிய விடுதலை இயக்க ஸ்தாபனங்களை வங்கத்திலும் பீகாரிலும்தானே நிறுவி இருக்கிறோம்? இந்தியா முழுவதும் இதன் கிளைகள் பரவ வேண்டாமா?" - இப்படி அவர் புரட்சித் தலைவர்களுடன் வாதிட்டார். "அமைக்கலாம் அபுல்கலாம். பரந்த அளவில் ஸ்தாபனங்களை அமைக்கும்போது ரகசியத்தைக் காக்க முடியுமா?" "தூக்குமேடையே அழைத்தாலும் நமது ரகசியப் பணிகளை வெளியிடாத வீரர்களை மட்டும் சேர்த்துக் கொள்வோம்"- இது அபுல்கலாம் அளித்தபதில். அவர் ஒருவழியாகத் தலைமறைவு இயக்கத் தலைவர்களைத் தன் கருத்தை ஏற்றுக்கொள்ளுமாறு செய்து, இந்தியாவெங்கும் மாறுவேடத்தில் சென்று புரட்சி வீரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசிய விடுதலை இயக்க அமைப்புகளை அமைத்தார். செய்தி அறிந்த பல மாநில அரசாங்கங்கள் அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் நுழையக்கூடது என்று தடைவிதித்தன. 1908ம் ஆண்டு அபுல்கலாம் எகிப்திற்குச் சென்றார். விடுதலை வீரர் முஸ்தபா கமால் பாட்சாவின் ஆதரவாளர்களோடு தொடர்பு கொண்டார். அங்கே இளம் துருக்கியர்கள் தொடங்கி நடத்திய வார ஏடு அவரைப் பெரிதும் கவர்ந்தது. ஓர் ஏட்டின் மூலமாக லட்சோப லட்சம் மக்களைப் புரட்சியின் தூதர்களாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை விடி வெள்ளி முளைத்தது. அங்கிருந்து அவர் துருக்கிக்குச் சென்றார். துருக்கியின் ரகசியப் புரட்சித் தலைவர்களைச் சந்தித்தார். புரட்சி உலகக் கூடங்களில் புடம்போட்ட வீரராக, அனுபவக் களஞ்சியமாக 1912ம் ஆண்டு அபுல்கலாம் தாயகம் திரும்பினர். "அரபு நாடுகளில் நடைபெறும் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமியர்கள் முன்னணியில் நிற்கும் போது இங்குமட்டும்?" - இந்தச் சிந்தனை சுழன்று சுழன்று வந்தது. இப்போது அவரது சிந்தையில் குடியேறியிருந்த ஒரே லட்சியம் இஸ்லாமிய சமுதாயத்தை முழுக்க முழுக்க விடுதலை இயக்கத்தின் போர்ப் பாசறைக்கு அழைத்து வர வேண்டுமென்பதுதான். அதற்காக அவர் 'அல்ஹிலால்' என்ற உருது வார ஏட்டைத் துவக்கினார். ஒவ்வொரு இதழும் புரட்சி ஜுவாலையாக வெளியே வந்தது. அந்த ஏடு வெளிவந்த மூன்றே மாதங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் பெரும் பரபரப்பைத் துடிதுடிப்பை ஏற்படுத்தியது.

இஸ்லாமிய இளைஞர் சமுதாயம் அல்ஹிலாலுக்கு மகத்தான வரவேற்பளித்தது. மூன்றே மாதங்களில் ஏற்கெனவே வெளியிட்ட பிரதிகளையெல்லாம் மீண்டும் அச்சடித்துக் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரண்டே ஆண்டுகளில் 'அல்ஹிலால்' வாரம் இருபத்தாறாயிரம் பிரதிகள் விற்பனையாயின. இது அன்றைக்கு உருதுப்பத்திரிக்கை உலகத்தில் எவரெஸ்ட் சாதனையாகும். இந்த ஏட்டில் ஆசாத் என்ற பூனை பெயரில் வந்த கட்டுரைகளை மக்கள் கற்கண்டுச் சுவையோடு படித்தனர். ஆசாத் என்றால் சுதந்திரம் என்று பொருள். இந்தப் புனைப் பெயரில் எழுதியவர் நமது அபுல் கலாம் தான். 1915 ஆண்டு வெள்ளை அரசாங்கம் அல்ஹிலாலின் தீவிரத்தைத் தாங்க இயலாது அச்சகத்தையே பறிமுதல் செய்தது. ஐந்தே மாதங்கள் இடைவெளியில் அபுல்கலாம் 'அல்பலாக்' என்ற வார ஏட்டைத் துவக்கினார். இப்போது வெள்ளை அரசாங்கம் தனது கடைசி ஆயுதத்தை வீசியது. 1916 ஆண்டு ஏப்ரல் மாதம் அபுல்கலாம் வங்க மாநிலத்தை விட்டுவெளியேற வேண்டுமென்ற உத்தரவு பிறந்தது. ஏற்கெனவே அபுல்கலாம் தங்கள் மாநிலத்தில் அடியெடுத்து வைக்கக்கூடாதென்று பம்பாய், பஞ்சாப், டெல்லி, உத்திரப்பிரதேச மாநிலங்கள் தடை விதித்திருந்தன. எனவே அவர் (பீகார் மாநிலம்) ராஞ்சிக்குச் சென்றார். ஆறுமாதங்களுக்குப் பின்னால் அவர் அங்கே கைது செய்யப்பட்டு மூன்றாண்டுகள் சிறையிலிருந்தார். 1920ம் ஆண்டு ஜனவரி முதல் தேதி பூட்டிய இருப்புக்கூட்டின் கதவு திறக்கப்பட்டது. 1942ம் ஆண்டு ஆகஸ்ட் 7 நாள், பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி 'வெள்ளையனே வெளியேறு' என்று வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த தீர்மானத்தை வடித்தெடுத்தது. இந்தத் தீர்மானம் அன்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் தலைமையில்தான் நிறைவேற்றப்பட்டது. பம்பாயில் புலாபாய் தேசாய் அவர்களின் இல்லத்தில் தங்கியிருந்த ஆசாத் கைது செய்யப்பட்டார். 1943ம் ஆண்டு ஏப்ரல்மாதம் சிறை அதிகாரி சீட்டாக்கான் மௌனமாக வந்து ஆசாத்திடம் ஒரு தந்தியை நீட்டினார். ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த ஆசாத் தந்தியை வாங்கிப்பிரித்துப்பார்த்தார். அவருடையை அன்பு மனைவி காலமாகிவிட்டார் என்கிற துயரச்செய்தியைத் தாங்கி வந்திருந்தது அது. 1945ம் ஜுன் மாதம் அபுல்கலாம் ஆசாத் பங்குதாராவிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். மறுநாள் காலை கல்கத்தா நகரம் அவரை வரவேற்க எழுச்சிப் பெருங்குன்றாக எழுந்து நின்றது. ஹவ்ரா ரெயில் நிலையத்தை மக்கட் கடல் மூழ்கடித்துவிட்டது. ஆசாத் காரில் ஏறினார். ஆமாம் எங்கே செல்வது? அவரை வரவேற்க ரெயில் நிலையத்திற்கு இரண்டு லட்சம் மக்கள் வந்திருந்தனர். ஆனால் நாலரை ஆண்டுகளுக்கு முன்பு நோய் வாய்ப்பட்ட நிலையிலும் தள்ளாடிக் தள்ளாடிக் வாசலுக்கு வந்து பம்பாய் காங்கிரசிற்கு அவரை வழியனுப்பி வைத்த மாதர்குல மாணிக்கம் அவரை அதே வாசலில் நின்று வரவேற்க இன்று இல்லையே? இல்லம் காலியாக வெறிச் சோடிக்கிடக்கிறதே. ஆசாதின் மாதரசி நீங்காத துயில் கொண்டிருக்கும் சமாதியை நோக்கி கார் ஓடியது. கண்களில் திரையிட்டு நின்ற கண்ணீரைத் துடைத்துக்கொண்டே காரில் இருந்த ஒரு மாலையை எடுத்து சமாதியின் மீது சூட்டி அஞ்சலி(ஸலாம்) செலுத்தினார் ஆசாத். அமைதியாக 'பாத்தியா'(துஆ) ஓதினார். "அவரைக் கணவராக அடைய மாதவம் செய்திருக்க வேண்டும். இனவெறியைக் கொன்ற உயர்ந்த தேச பக்தன்தான் உண்மையான முசல்மானாக இருக்க முடியும். எனவே அவரைக் கணவராக அடைந்ததிலே நான்பெருமைப் படுகிறேன்" என்று புன்னகையோடு சொன்ன தேச பக்த திலகமல்லவா அந்த அம்மையார்

நன்றி: சோலை, ஆனந்தவிகடன்(25-02-09)

********************************************************************

நவீன கல்வியின் சிற்பி--அபுல் கலாம் ஆஸாத்!

நமது நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்குப் பெரும் பங்குண்டு. மவ்லானா என்றழைக்கப் பட்டு, சுதந்திர இந்தியாவின் முதல்கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழிநடத்திச் சென்றார்.

ஆசாத் அவர்கள்தான் தேசக்கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர். தேசக்கல்வி கொள்கைக்கு (1986) இதுதான் அடிப்படையாக விளங்குகிறது. இந்தக் கொள்கை 1992இல் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும், சாதி, மத இட,பால் பாகுபாடின்றி தரமான கல்வியைக் குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.

அனைத்துக் கல்வித் திட்டங்களும் மதச்சார்பற்ற மதிப்பீடுகளுக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பிற்கும் ஏற்றவாறு இருக்க வேண்டும் என்பதில் ஆசாத் உறுதி காட்டினார்.

10+2+3 என்ற பொதுவான கல்வி முறையை இந்தியா முழுவதிலும் பரவலாக்க அவர் விரும்பினார்.

இலவசக் கல்வி உரிமை மசோதா மத்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இத்தருணத்தில் மௌலான ஆசாத் இருந்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இந்த மசோதா இலவச, கட்டாயக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது.

"நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை; ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது" என்று சொன்னவர் அவர்.

1888ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி, மௌலானா கைருதீனுக்கும் அலியா அம்மையாருக்கும் மகனாக, மெக்காவில், மௌலான அபுல் கலாம் ஆசாத் பிறந்தார். 10 வயதிலேயே குரானைக் கற்றுத் தேர்ந்தார்.

17 வயதில் இஸ்லாமிய உலகில் பயிற்சி பெற்ற ஆன்மீகவாதியாக அறியப் பட்டார்.

கெய்ரோவில் உள்ள அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் அவர் கற்ற கல்வி அவரது அறிவை விசாலமாக்கியது. அவரது குடும்பம் கல்கத்தாவில் குடியேறிய பின்பு லிசான்-உல்-சித்க் என்ற இதழைத் துவக்கி நடத்தினார்.

காந்தி மற்றும் நேரு ஆகியோருடன் மௌலானா ஆசாத்

1905இல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார். நடுத்தரவர்க்க இஸ்லாமிய சமூகத்தினர் பிரிவினையை ஆதரித்த போது, அவர் கடுமையாக எதிர்த்தார். அரவிந்த கோஷ், சியாம் சுந்தர் சக்கரவர்த்தி ஆகியோருடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார்.

இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்குப் பிறகு, "இந்தியா விடுதலையை வெல்கிறது' (இண்டியா வின்ஸ் ஃப்ரீடம்) என்ற பிரசித்தி பெற்ற நூலை எழுதினார். சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத், சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் முக்கிய தலைவராக விளங்கினார். 1920இல் திலகரையும் மகாத்மா காந்தியையும் சந்தித்தார். இச்சந்திப்பு அவர் வாழ்க்கையின் திருப்புமுனையாக இருந்தது. காந்தியடிகள் கிலாபத் இயக்கத்தைத் துவக்கினார்.

முஸ்லீம் லீக் கட்சி காந்தியின் உண்ணாவிரதத்தைப் புறக்கணித்தபோது ஆசாத் காந்தியுடன் இணைந்து முனைப்புடன் பணியாற்றினார்.

35வது வயதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக உயர்ந்தார். அக்கட்சியின் இளம் வயது தலைவரும் அவரே.

1942இல் "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிம்லாவில் 1946இல் நடைபெற்ற கேபினட் மிஷன் பேச்சு வார்த்தைகளிலும் முக்கியப் பங்காற்றினார்.

காங்கிரஸ் கட்சியின் பல தலைவர்கள் 1947இல் நடைபெற்ற இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தபோது, அதற்கு எதிராக ஆசாத் உண்ணாவிரதம் இருந்தார்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்விஅமைச்சராகப் பொறுப்பேற்றார்.

1947 முதல் 1958 வரை அவர் இந்தப் பதவியில் இருந்தார். சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.

ஆங்கிலேய ஆட்சியில் இந்தியக் கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்யப் பரிந்துரைத்தார்.

14 வயதுவரை அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கல்கத்தாவில் உள்ள ஆசாத் அருங்காட்சியகம்

பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைப் பரிந்துரைத்தார். "பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது" என்று கூறினார். வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.

உருது, பார்சி, அரபு மொழிகளைக் கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார்.

எகிப்தில் உள்ள கலாச்சார மையம்

1951இல் காரக்பூரில் இந்தியத் தொழில்நுட்பப் பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பம்பாய், சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐ.ஐ.டி.கள் அமைக்கப்பட்டன. தில்லியில் 1955இல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது. "மதவாதத்தை ஒரேடியாகக் குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். மாணவர்களின் ஒழுக்கமின்மை குறித்து அவர் வேதனைப்படுவார்.

1954இல் கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியக் கூட்டத்தில் பேசும்போது, எந்தக் காரணமுமின்றி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து மிகவும் வேதனைப்படுவதாகவும் இத்தகைய போராட்டங்கள் தேசத்தின் கலாச்சார வேரை அசைத்துப் பார்ப்பதாகவும் அவர் வருத்தப்பட்டார்.

இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத்.

அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார். குர் ஆனை அரபு மொழியிலிருந்து பார்சி மொழிக்கு மொழி பெயர்த்தார்.

1977இல் சாகித்திய அகாடமி இதனை ஆறு பகுதிகளாகப் பிரசுரித்தது. மௌலான அபுல் கலாம் ஆசாத் அற்புதமான ஒரு மனிதர். தனது வாழ்வின் இறுதி வரை இந்து -முஸ்லீம் ஒற்றுமைக்காக அரும்பாடுபட்டார்.


Related

வரலாற்றில் ஒரு ஏடு 2569782836709267437

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

Monday - Mar 17, 2025 2:05:14 AM

No. of Posts

8665 Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

16,132,128

Advertisement

Contributors

Popular PostsBlog Archive

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item