ரமளான் தரும் படிப்பினை சங்கைமிக்க ரமளான் நம்மை விட்டுக் கடந்து சென்றுவிட்டது. நன்மையின் திறந்த வாயில் கதவுகளின் மூலம் நல்லமல்கள் ச...
சங்கைமிக்க ரமளான் நம்மை விட்டுக் கடந்து சென்றுவிட்டது. நன்மையின் திறந்த வாயில் கதவுகளின் மூலம் நல்லமல்கள் செய்து நன்மையை அள்ளிக் கொண்டுவிட்டோம். பசி, தாகத்தைத் துறந்து நோன்பு நோற்றோம். வீண் பேச்சுக்களை குறைத்து இறைநினைவுடன் குர்ஆன் ஓதினோம். இரவு தொழுகைகளை சங்கையாய் நிறைவேற்றினோம். கடைசி பத்து இரவுகளின் அருமை, பெருமைகள் அறிந்து ஆர்வம் காட்டி நடு இரவுகளில் நின்று வணங்கினோம்.
நம்மில் பெரும்பாலானோர் கண்டு களித்துக் கொண்டிருந்த தொலைக்காட்சிகள், ஆபாச சேனல்கள், சினிமா சி.டி போன்ற ஷைத்தானிய ஊடகங்களுக்கு ஓய்வு கொடுத்து தீமையைத் தடுத்துக்கொண்டோம். ரமளானின் அருள் வளங்கள், லைலத்துல் கத்ர் இரவின் மாட்சிமை, நோன்பாளிகளின் மறுமைப் பதவிகள் ஆகியவை பற்றி ஆங்காங்கே நடைபெற்ற பயான்களைக் கேட்டு நன்மைகளில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டோம்.
புகைப்பழக்கம் கொண்ட பல சகோதரர்கள் புகைமைக்குப் பகைமையானார்கள். ஜும்மா தொழுகையை மட்டும் தொழுது வந்த பலர் துயில் துறந்து சுபுஹு தொழுகைகள் தொழுவதும், கால் வலிக்க இரவுத்தொழுகைகள் தொழும் அதிசயமும் இம்மாதத்தில் காண முடிந்தது. பள்ளிவாசல்கள் விஸ்தரிக்கப்பட வேண்டுமா? என்ற அளவிற்கு பள்ளிகள் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தன. இசையும், பாடல்களும் ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் இடமெல்லாம் குர்ஆன் ஒலிக்கும் சப்தங்கள்.
ஒரு வழியாக நோன்புகள் எல்லாம், ஒன்று இரண்டு என மெல்ல நகர்ந்தது பிறை பார்த்து புத்தாடை அணிந்து சங்கையான பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, இனிப்பு பதார்த்தங்கள் பரிமாறி, சுகந்த பிரியாணி மணம் கமழ ரமளானை வழியனுப்பிவிட்டோம்.
இனி நாம் செய்யப்போவது என்ன? சற்று கண்மூடி கடந்த பல வருடங்களாய் நம் மக்களிடம் நிகழ்ந்த நிகழ்வுகளை நம் மனதில் ஓடவிட்டுப் பார்ப்போம். முப்பது நாட்கள் நோற்ற நோன்பு நம்மை எந்த அளவிற்குப் பக்குவப்படுத்தியுள்ளது என்பதை நாம் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து பார்ப்போம்...
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)
ரமளான் நோன்பு நம்மைத் தூய்மைப் படுத்தியுள்ளதா?
நம்மில் பெரும்பாலோருக்கு நிச்சயமாக இல்லை! ரமளானில் முப்பது நாட்களில் நாம் இறை நினைவில் திளைத்தோம். ஆனால் ஷவ்வால் ஆரம்பம் ஆனதும் நம் நிலைமை என்ன? நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்.
நிரம்பி வழிந்த பள்ளி வாயில்களில் விரல் விட்டு எண்ணும் தொழுகையாளிகளே. விசாலமான காலியிடங்கள். சுபுஹு தொழுகை இழந்து, அலாரங்கள் நேரம் மாற்றப்பட்டு ஏழு மணிக்கு எழுந்து சோம்பல் முறிக்கும் பழையநிலை. பெருநாள் கொண்டாட்டத்தில் திளைத்து புத்தாடை கசங்குமுன் துடைத்துப் புத்துயிரூட்டப்படும் தொலைக்காட்சிகள், ஜன்னல் கதவுகள் வழியாக நுழைந்த கேபில் கம்பிகளில் ஆபாச அலைவரிசைகள் அரங்கேறும் அவலக்காட்சிகள். வீடியோ கடைகளில் அலைமோதும் மக்கள் வெள்ளம். இது எதைக் காட்டுகிறது?
எந்த நோன்பு நம்மைத் தூய்மைப்படுத்தும் என்று இறைவன் கூறினானோ, அந்த நோன்பை நாம் சம்பிரதாயமாக நோற்றோம். விளைவு அது நம்மைப் பக்குவப்படுத்தவில்லை. ரமளானின் நன்மைகளைத் தெரிந்த நாம் செய்த பாவங்களின் பட்டியல் அதிகமானதால் அதைக் குறைத்துக் கொள்ளும் சாதனமாகவே நாம் அணுகியிருக்கிறோம்.
நாம் தீமையிலிருந்து நிரந்தரமாக விடுபடவேண்டும் என்று மனதில் சபதம் எடுத்து ரமளானை ஓர் பயிற்சி மாதமாக நாம் அணுகியிருந்தால் நோன்பு நம்மைப் பக்குவப்படுத்தியிருக்கும். ஷைத்தானின் சூழ்ச்சி வலைகள் கிழிக்கப்பட்டிருக்கும். இறைவன் திருமறையில் கூறுகின்றான்....
قَالَ رَبِّ بِمَا أَغْوَيْتَنِي لَأُزَيِّنَنَّ لَهُمْ فِي الْأَرْضِ وَلَأُغْوِيَنَّهُمْ أَجْمَعِينَ إِلَّا عِبَادَكَ مِنْهُمْ الْمُخْلَصِينَ
என் இரட்சகனே! நீ என்னை வழிகேட்டில் விட்டுவிட்டதனால் இவ்வுலகில்(வழிகேடு தரும் அனைத்தையும்) நாம் அழகானதாகக் காட்டி மனிதர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்! உளத்தூய்மையுடைய உன் நல்லடியார்களைத் தவிர. (அல்குர்ஆன் 15:39,40)
ஆக நாம் உளத்தூய்மையுடையோராய் மாறாதவரை, நோன்பை இறையச்சத்துடன் நோற்காதவரை ஷைத்தானின் சூழ்ச்சி வலைகளிலிருந்து நாம் தப்பவே முடியாது. முழுக்க முழுக்க இறைவனை பயந்து ரமளான் மாதம் மட்டுமல்லாது நிரந்தரமாக நல்லமல்கள் செய்து இறைவனின் திருப்பொருத்தத்தைப் பெற்ற நல்லடியார்களாக நாம் மாறிவிட்டால், இறைவனின் தண்டனைகளை நம் மனக்கண் முன் கொண்டுவந்து தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் போன்ற இறைத் தொடர்பு சாதனங்களில் நம் நேரத்தைச் செலவிட்டால் ஷைத்தானின் சூழ்ச்சியை வென்று இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக ஆகலாம். இறைவன் உதவி புரிவானாக!.
Post a Comment