சிறு நன்மையாவது செய்யுங்கள்--அமுத மொழிகள்
சிறு நன்மையாவது செய்யுங்கள் ஒரு சிறு நன்மை பெரிய நரகத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும். அதற்கு உதாரணம் ஹஜ்ரத் மாலிக் இப்னு தீனார் (ரஹ...

சிறு நன்மையாவது செய்யுங்கள்
ஒரு சிறு நன்மை பெரிய நரகத்தில் இருந்து உங்களைக் காப்பாற்றும். அதற்கு உதாரணம் ஹஜ்ரத் மாலிக் இப்னு தீனார் (ரஹ்) என்பவரின் கதை. இவர் ஒரு மகான்.
சிப்பாயாக பணிபுரிந்த தீனார், இளமையில் கெட்ட வழக்கங்கள் கொண்டவராக இருந்தார். பலமணி நேரம் போதையிலேயே உழல்வார். பேரழகு கொண்ட அடிமைப் பெண்ணுடன் உறவு வைத்திருந்தார். அவளுக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையின் மீது தீனாருக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. தீனார்மது அருந்த ஆரம்பித்ததும், அந்தக் குழந்தை கோப்பையை பிடுங்கி அவர் மீது ஊற்றிவிடும். அதன் மீது கொண்ட அன்பால் தீனார் குழந்தையைத் திட்டுவதில்லை. குழந்தைக்கு இரண்டு வயதானபோது,திடீரென இறந்துவிட்டது. குழந்தையின் மரணம், தீனாரை கடுமையாகப் பாதித்தது.
ஒரு ஷஅபான் மாதத்தின் 15ம் நாள்... அந்த நாளில் தொழுகை முக்கியம். அன்று இரவில் அளவுக்கதிமாக குடித்த தினார் தொழாமலேயே உறங்கி விட்டார். கனவு வந்தது. அந்தக் கனவில், தினாரின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது. அவர் இறந்தவர்கள் நுழையும் "மஹஷர்' என்ற மைதானத்தில் நுழைந்தார். அப்போது பெரும் சப்தம் எழுந்தது. தினார் திரும்பிப் பார்த்தார். ஒரு கருநாகம் அவரை விரட்டி வந்தது. பயந்த தினார், ஓட ஆரம்பித்தார். பாம்போ துரத்தியது. அப்போது வெண்ணிற உடை அணிந்த ஒரு பெரியவர் வந்தார்.
தினார் அவரிடம், "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்யுங்களேன்,''என்றார். அந்த பெரியவர், ""அது மிகவும் வலிமை மிக்கது. அதை எதிர்க்குமளவுக்கு என்னிடம் சக்தி இல்லை. இதோ! அந்த மலை மீது ஏறு. ஒருவேளை தப்பிக்கலாம்,'' என சொல்லிவிட்டு போய்விட்டார்.
மீண்டும் ஓடினார் தினார், மலையில் ஏறினார். அங்கே நரகம் இருந்தது. அதன் விளிம்பைத் தொட்டபோது, ""நீ பின்னால் போ! நீ நரகவாசிகளில் ஒருவன் அல்ல,'' என்று ஒரு குரல் கேட்டது. திரும்பி ஓடினார் தினார். பாம்பும் விடாமல் துரத்தியது. மீண்டும் அந்தப் பெரியவர் எதிர்ப்பட்டார். இப்போதும் அவரிடம் தன்னைக் காப்பாற்ற வேண்டினார் தினார். அவர் அழுதபடியே, ""நான் பலவீனமானவன். உன்னை என்னால் காப்பாற்ற இயலாது. எதற்கும் இதோ தெரியும் இன்னொரு மலை மீது ஏறு,'' என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.
தினார் அந்த மலை மீது ஏறி ஓடினார். அம்மலையில் கதவுகளும், திரைகளுமாய் இருந்தன. அதில் ஏறியதும் மலக்குகள் (இறைவனுக்குரியவர்கள்)
""கதவைத் திறங்கள், திரைகளை விலக்குங்கள். இதோ, ஓடிவரும் இந்த மனிதன் செய்த நல்ல செயல்களில் பலன் இங்கே ஏதாவது இருக்கலாம், அது இவருக்கு அபயமளிக்கலாம்,'' என்றனர். அதன்படி கதவுகள் திறக்கப்பட்டன. உள்ளிருந்து பல குழந்தைகள் வந்தனர். அவர்களில் தினாரின் இறந்துபோன மகளும் இருந்தாள்.
அவள் தினாரைக் கண்டதும், ""அல்லாஹ் மீது சத்தியமாக இவர் என் தந்தை,''என்றாள். தினார் அவளை அணைத்துக் கொண்டார். அவள் தன் தந்தையை துரத்தி வந்த பாம்பை துரத்தியதும் அது ஓடிவிட்டது. தினார் தன் மகளிடம், ""என்னைத் துரத்திய பாம்பு எங்கே?'' என்றார்.
""தந்தையே! அது நீங்கள் செய்த பாவத்தின் வடிவம். அதுவே பாம்பாய் வடிவெடுத்து உங்களைத் துரத்தியது,'' என்றாள்.
""நான் பார்த்த முதியவர் யார்?'' என்றதும், ""அவர் உங்களின் நற்செயல்களின் வடிவம். இருந்தாலும், உங்களின் பாவச் செயல்கள், நீங்கள் செய்த நல்லதை பலவீனமாக்கி விட்டது. இருப்பினும், அந்த நல்ல செயல்கள் பாவத்தில் இருந்து தப்பிக்கும் வழியை உங்களுக்கு காட்டியது,'' என்றாள்.
""நீங்கள் இந்த மலையில் என்ன செய்கிறீர்கள்?'' என்ற தினாரின் கேள்விக்கு, ""நாங்கள் உங்களின் இறுதிக்காலம் வரும் வரை இங்கே காத்திருப்போம். நீங்கள் மஹ்ஷர் மைதானத்திற்குள் நுழைந்தவுடன் நாங்கள் அல்லாஹ்விடம் உங்களுக்காக சிபாரிசு செய்வோம்,'' என்றாள். இத்துடன் கனவு கலைந்து எழுந்தார் தினார். அதன்பிறகு தீய பழக்கங்களை விட்டுவிட்டார். மாபெரும் மகான் ஆனார். ஒரு சிறுநன்மை கூட நம்மை நரகத்தில் இருந்து காப்பாற்றிவிடும் என்பது மகான் தீனாரின் வாழ்க்கை சரிதத்தில் இருந்து தெரிகிறதல்லவா!
Post a Comment